Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
நலம்வாழ
மருத்துவக் காப்பீட்டுச் சீரமைப்பு
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|அக்டோபர் 2009|
Share:
அமெரிக்க அதிபர் ஒபாமா தற்போது ஓதிவரும் தாரகமந்திரமான மருத்துவக் காப்பீட்டுச் சீரமைப்பு (Health Insurance Reform) பற்றிக் கொஞ்சம் பார்க்கலாமா? தற்போது அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார பிரச்சனையும், சிகிச்சைக்கான செலவுகள் கூடி வருவதும் நாம் அறிந்ததே. காப்பீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை 40 மில்லியனுக்கு மேல் வளர்ந்துள்ளது. இதில் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்து தங்கும் சுற்றுலாப் பயணிகளைச் சேர்க்காத எண்ணிக்கை. இதைத் தவிர காப்பீடு எடுத்தவர்களுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் பல தடைகளை விதிக்கும் அவலம் தொடர்கிறது. முன்னொரு இதழில் குறிப்பிட்டது போல் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் பாலமாக இருக்க வேண்டிய காப்பீட்டு நிறுவனங்கள் சீனப் பெருஞ்சுவராக வளர்ந்து வருகின்றன. இதைத் தலையாய பிரச்சனையாகக் கொண்டு தீர்க்கும் முயற்சியில் அதிபர் இறங்கியிருப்பது பாரட்டத் தக்கதே. தனது சமீபத்திய உரை ஒன்றில் இந்தப் பிரச்ச்னையை தீர்க்கும் முயற்சியில், தான் முதலாவது அதிபராக இல்லாவிடினும் கடைசி அதிபராக இருக்க உறுதி கொண்டுள்ளதாகச் சொன்னார். முதலில் பிரச்சனைகள்:

- காப்பீடு வாங்கும் வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவம் மறுக்கப்படுகிறது.
- காப்பீட்டின் விலை விகிதம் அதிகமாகி வருகிறது. அதிகமான நோயாளிகளைச் சேர்த்தால், பெரிய நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் காப்பீடு கிடைக்கிறது. ஆனால் சிறிய நிறுவனங்களுக்கு இந்த வசதி இல்லை.
- பொருளாதாரப் பிரச்சனையில் வேலை வாய்ப்புக் குறைவதால், பலருக்கு மருத்துவக் காப்பீடு வாங்க முடிவதில்லை.
- காப்பீட்டு நிறுவங்களுக்கும் காப்பீட்டு வகைகளில் பலவிதச் சட்டதிட்டங்கள். குறிப்பாக முன்னரே இருக்கும் நோய்களுக்குக் காப்பீடு மறுக்கப்படுகின்றது. அப்படியே வழங்கப்பட்டாலும் அதன் குறைந்தபட்ச கட்டணம், வரித் தள்ளுபடி, விரும்பிய மருத்துவர்களைக் காணத் தடை போன்ற சட்ட திட்டங்கள்.
- பலவிதப் பரிசோதனைகளுக்கும், மருந்துகளுக்கும் முன்னனுமதி என்ற பெயரில் மருத்துவர்கள் நியாயப்படுத்த வேண்டி இருக்கின்றது. இதனால் நோயை உடனடியாகக் கண்டு பிடிக்க முடியாமல் அல்லது குணப்படுத்த முடியாமல் போகும் அபாயம்.
உலகிலேயே அதிக மருத்துவச் செலவு, குறைந்து வரும் மருத்துவத் தரம் இவையிரண்டும் வளர்ந்த நாடாகிய போதும் அடிப்படை மருத்துவ வசதி இல்லாத குடிமகன்களைக் கொண்ட நாடாக அமெரிக்காவை ஆக்கிவிட்டது.
- காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு காரணங்கள் காட்டி மருத்துவர்களின் கட்டணத்தை நிராகரிக்கின்றன. இதை அரசு சார்ந்த காப்பீடுகள் (Medicare, Medicaid) அதிகம் செய்வது குறிப்படத் தக்கது. இதனால் பல மருத்துவர்கள் இந்த வகைக் காப்பீடுகள் உடையவரைச் சிகிச்சைக்கு எடுத்துக்கொள்வதில்லை.
- காப்பீடு இருந்தும், வேலை போனதால் அதை இழந்தவருக்கு 'COBRA' என்ற வசதி உள்ளது. ஆனால் இதற்குப் பல மடங்கு கட்டணம் கட்ட வேண்டி இருப்பதால் பலரால் இந்த வசதியை உபயோகிக்க முடிவதில்லை.
- காப்பீடு இல்லாதவர்களை கவனித்துக்கொள்ள அரசு மருத்துவமனைகளும், clinic என்ற அமைப்புகளும் இருந்தாலும் இவற்றில் சம்பளம் குறைவானாதால், எப்போதும் குறைந்த அளவு மருத்துவர்கள், செவிலியர்களே இங்கு வேலை செய்கின்றனர். இதனால் உடனடி சிகிச்சை என்பது கனவாகிவிடுகிறது.
- அவசர சிகிச்சைப் பிரிவில் இதனால் ஏற்படும் கூட்டமும், கால தாமதமும் சொல்லில் அடங்காது.
- புதிய மருந்துகள் உற்பத்தி செய்வது, புதிய மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் உருவாக்குவது, மருத்துவர்களை மகிழ்விப்பது போன்ற செலவுகளும் மாத்திரைகளின் விலையில் விழுவதால், மொத்தத்தில் மருத்துவச் செலவு அதிகமாகி வருகின்றது. உலகிலேயே அதிக மருத்துவச் செலவு, குறைந்து வரும் மருத்துவத் தரம் இவையிரண்டும் வளர்ந்த நாடாகிய போதும் அடிப்படை மருத்துவ வசதி இல்லாத குடிமகன்களைக் கொண்ட நாடாக அமெரிக்காவை ஆக்கிவிட்டது.
இதில் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் பல உள்ளன. அதையும் மீறி அமெரிக்க அதிபர் உருவாக்கியிருக்கும் மருத்துவ மறுமலர்ச்சியில் குறிப்பான சில அம்சங்களைப் பார்க்கலாம்:

1. மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் முன்பே இருக்கும் நோயைக் காரணம் காட்டி காப்பீடு மறுப்பதைச் சட்டபடி குற்றமாக்குதல்: இது வரவேற்கத் தக்க முயற்சி. ஒருவர் நோய் இருப்பதால்தான் மருத்துவரை நாடுகிறார். அவருக்கு காப்பீடு மறுப்பது அபத்தமானது. ஆனால் இதனால் காப்பீடு நிறுவனங்களின் இலாபம் கணிசமாகக் குறையும் அபாயம் உள்ளது. இதனால் இதற்கு எதிர்ப்பு பலமாக உள்ளது.

2. சிறிய நிறுவனங்கள் காப்பீடு வழங்கவில்லை எனில், மருத்துவ வசதிகளுக்காகத் தனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும்: கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது. தற்போதைய பொருளாதர நிலையில் பல ஆரம்ப நிறுவனங்கள் தத்தளித்து வரும் நிலையில் இது நடைமுறை சாத்தியமாகத் தெரியவில்லை.

3. பெரிய நிறுவனங்கள் நோயாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கவில்லையெனில், சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மருத்துவ வசதிகளுக்காகப் பணிசெய்வோருக்கு அளிக்க வேண்டும்: இது நிறுவனத்தின் பார்வையில் தவறாகவும், பணியாளரின் பார்வையில் சரியாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் பணியாளர் இதைத் தவறாகப் பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது.

சமூகநோக்கம் உடையவர்கள் சொந்தச் சகோதரர்கள் அடிப்படை மருத்துவ வசதியின்றித் தவிப்பதை மாற்ற வேண்டும்.மருத்துவச் செலவுகளைக் குறைத்து, நல்ல தரமான மருத்துவம் வழங்கப்பட வேண்டும்.
4. தேசிய காப்பீட்டுச் சந்தை (National Insurance Exchange) என்ற பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தி இதில் தனியார் மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது காப்பீட்டின் விலையைச் சந்தையில் காய் விற்பதுபோல் விற்கலாம். வாங்குவோர் இதில் தங்களின் தேவை, வசதிக்கேற்பக் காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இது மிகவும் நல்ல முயற்சியாகத் தோன்றுகிறது. ஆனால் அரசு சார்ந்த காப்பீடுகள் தற்போது சரியாக மருத்துவர்களுக்குச் சரியான முறையில் கட்டணங்களை அளிப்பதில்லை. நோயாளிகளுக்குத் தேவையான பரிசோதனைகள், மருந்துகள் போன்றவற்றை அளிப்பதில்லை. இந்த அழகில் மேலும் பலருக்கு அரசுக் காப்பீடு விரியுமானால் மருத்துவர்கள் அவர்களைச் சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்ளத் தயங்கலாம்.

5. அரசு சார்ந்த மருத்துவக் காப்பீடுகள் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை, அமெரிக்க மக்கள் அனைவருக்கும் விரிவாக்கும்.

6. நோய் தவிர்க்கும் மருத்துவர்களுக்கு அதிகக் கட்டணமும், பல சிறப்பு மருத்துவர்களுக்கு கட்டணக் குறைப்பும் ஏற்படலாம்.

இதற்கு 900 பில்லியன் டாலர்கள் செலவாகலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்தப் பணம் எங்கிருந்து கிடைக்கும்? இதை ஆண்டுக்கு 250,000 டாலருக்கு மேல் வருமானம் உள்ளவர்களிடமிருந்து வரியாக வசூலிக்கப் போவதாக அதிபர் கூறியிருக்கிறார். இது மிகுந்த சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு வழங்கும் முயற்சி. ஆனால் இது தன்னிச்சையாக இல்லாமல் 'வரி' என்ற பெயரில் வசூலிக்கப்படுவது அமெரிக்கக் கலாசாரத்திற்கு முற்றிலும் மாறுபாடானது. நன்றாக உழைப்பவர்களுக்கு நல்ல வசதியான வாழ்க்கை என்பதே அமெரிக்க முதலாளித்துவ (Capitalist) தத்துவம். இதில் பல்வேறு காரணங்களால் சோம்பேறிகளாக, படிக்காமல், உழைக்காமல் இருக்கும் மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக, உழைக்கும் வர்க்கத்திடம் இருந்து வரி என்ற பெயரில் அரசு வசூலிப்பதைப் பலரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

இந்தத் தீராத பிரச்சனையில் ஏன் அரசு தனிமனித சுதந்திரத்தில் நுழைய வேண்டும் என்ற கேள்வியும், கண்டிப்பாகக் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும், வழங்க வேண்டும் என்று சட்டம் வைப்பதும், அதைச் செய்யாதவர்களுக்குத் தண்டனை என்பதும், பலரால் நியாயப்படுத்த முடிவதில்லை. நோயாளிகளுக்குச் சாதகமாக இல்லாமல் ஒரு கண்டிப்பான தகப்பன் போல அமெரிக்க அதிபர் தனது கருத்துக்களை வைப்பதைப் paternalist ரீதியான நோக்கமாக இவர்கள் காண்கிறார்கள். அதே நேரத்தில் சமூகநோக்கம் உடையவர்கள் சொந்தச் சகோதரர்கள் அடிப்படை மருத்துவ வசதியின்றித் தவிப்பதை மாற்ற வேண்டும் என்று தவிக்கிறார்கள். மருத்துவச் செலவுகளைக் குறைத்து, நல்ல தரமான மருத்துவம் வழங்கப்பட வேண்டும், ஒரு திறந்த புத்தகமாக காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவர்களும் செயல்பட வேண்டும் என்று கனவு கொண்டவர்கள் இந்த மறுமலர்ச்சியை வரவேற்கிறார்கள்.

பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சி பாராட்டத் தக்கதே. இந்த மறுமலர்ச்சியினால் மேற்கூறிய பிரச்சனைகள் தீருமா அல்லது புதிய பிரச்சனைகள் கிளம்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பேச்சுத் திறனில் வல்லவரான அதிபர் தனது ஆலோசகர்களிடமும், மக்களிடமும் பேசிப்பேசித் தீர்வு காண்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்
Share: 




© Copyright 2020 Tamilonline