Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
ஆகஸ்டு 2009: வாசகர் கடிதம்
- |ஆகஸ்டு 2009||(1 Comment)
Share:
தென்றல் பத்திரிகை படித்து மிகவும் மகிச்சியடைந்தேன். அது எல்லா விஷயங்களையும் விவரமாக விவரிக்கிறது. சிறுகதைகள், நிகழ்வுகள், நடந்தவை, மருத்துவம், தெய்வீகம், நேர்காணல், ஹரிமொழி முதலியவை தரம் நிறைந்தவைகளாக உள்ளன. நமது கலாசாரம் நிரந்தர வாசம் செய்ய இது மிகவும் உதவும். டிசம்பர் 2008 இதழில் என் பழைய நண்பர் இலந்தை இராமசாமி அவர்களின் நேர்காணல் படிக்க நேர்ந்தது. நானும் சென்னை தொலைபேசித் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன். பேரா. அ. சீனிவாச ராகவன் அவருடைய ஆசான் என்று படித்தபோது என் நினைவு பாலிய பருவத்திற்கே போய்விட்டது. பேராசியர் என் தகப்பனாருக்கு நல்ல நண்பர். வ.உ.சி. கல்லூரிக்கு அவர் முதல்வராகப் போனபிறகு சந்திக்கச் சந்தர்ப்பம் கிட்டவில்லை.

ஆக்கூர். வரதராஜன், டிராய், மிச்சிகன்

*****


ஜூலை மாதத் தென்றல் இதழுடன் 'ரமண சரிதம்' புத்தகமும் கிடைத்தது. என் நன்றிகள். சித்ரா வைத்தீஸ்வரன் அவர்கள் மாமியார்களுக்குத் தந்த குறிப்புகள் அட்சர லட்சம் பெறும். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கட்டுரை. மைக்கல் ஜாக்ஸன் பற்றிய கட்டுரை கனகச்சிதமாக அவரது வாழ்க்கையைச் சித்திரித்திருந்தது. எதை எழுதுவது எதை விடுவது என்றே தெரியவில்லை, எல்லாமே நன்றாக இருந்தது.

தனம் கோச்சாய், எட்மன்டன், கனடா

*****


ஜெயமோகன் பதில்கள் புதிய கோணத்தில் சிந்திக்க வைப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், உங்கள் கேள்விகள் மிகச் சுவையாக, சிந்தனை மிக்கவையாக உள்ளன. பெரும்பாலான இந்தியர் மத்தியில் குடிமைப் பண்புகள் குறைவாக இருப்பது ஏன் என்பதற்கான அவரது கருத்துகளை நான் முழுமையாக ஏற்கிறேன்.

அதேநேரம், எழுத்தாளரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்து அவர்களது எழுத்துக்களை வாசிக்கும்படியாக வாசகர்களை அவரது பார்வை தூண்டிவிட வாய்ப்பு உள்ளது. எழுத்து நன்றாக இருந்தால் எழுத்தாளர் யாராக இருந்தாலும் வாசித்துப் பயனடைய வேண்டும். ‘பெரியோர்களின் அறிவுரையைக் கேள், அவர்களது பழக்கத்தைப் பார்க்காதே' என்று காந்தி கூறினார்.

கண்ணன் ராகவன், சான் டியேகோ

*****


தென்றலில் வந்த கணக்குப் புதிர் ஒன்றைப் படித்தேன். அறுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரியவர் சொன்ன அப்புதிர் அடங்கிய பாடல் என் நினைவுக்கு வந்தது:

"கட்டியால் எட்டுக் கட்டி
கால் அரை முக்கால் மாத்தி
செட்டியார் சென்று விட்டார்
சிறு பிள்ளை மூன்று பேர்கள்
கட்டியும் புக்கொணாது
கணக்கிலும் பிசகிராது.”

கணக்கை மிக நேர்த்தியாகப் போட்டுக் காட்டிய அரவிந்த் மற்றும் தென்றல் இதழுக்கு நன்றி.

முனைவர் கு. கோவிந்தசாமி, அட்லாண்டா.

*****


தென்றலில் வெளியாகும் நிகழ்வுகள் பகுதியில் இந்நாட்டில் நடைபெற்ற இயல், இசை, நாடகம் போன்ற மிக முக்கியமான நிகழ்ச்சிகளைப் பற்றி அறிய முடிகிறது. அது மிகவும் பயனுள்ள பகுதிதான். ஆனால் அவற்றை நேரில் கண்டு எழுதும் வாசகர்கள் மிகவும் பாராட்டி எழுதுகிறார்கள். அபூர்வமாகத்தான் குறைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. ‘ஷொட்டுக்கள்' தேவைதான். ஆனால் சிறிது 'குட்டு'க்களும் இருந்தால் தான் நடுநிலையானதாக ஏற்றுக் கொள்ள முடியும்.

இந்திரா காசிநாதன், சன்னிவேல், கலிபோர்னியா

*****


வற்றாயிருப்பு சுந்தர் (‘மூன்றாண்டுகளுக்குப் பிறகு') தன் கருத்தை தைரியமாக வெளியிட்டதைப் போல தமிழகத்தில் முடியுமா? மனதில் வைத்து மன உளைச்சல் படலாம். இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நடந்த ஊழலை ஊடகங்கள் மூலமாகத் துல்லியமாக உணர்ந்தாலும், சிறுசிறு குரல்களை அழுத்திக் கொண்டு பேரிரைச்சலாக எழுந்த வன்முறைகளைப் பார்த்துக்கொண்டு சாமான்யர்களாக, கண் இருந்தும் குருடாக, கையாலாகாத கபோதிகளாகத் தானே இருக்க முடிந்தது. வன்முறைக்கு அஞ்சியே பத்திரிகைத் துறை செயல்பட வேண்டிய சூழ்நிலை. எழுத்துச் சுதந்திரம் இருந்தாலும் அதிலும் தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயம், சூழ்நிலை கருதிச் செயல்பட வேண்டிய நிலை பத்திரிகைகளுக்கு இருப்பதை மறுக்க முடியாது. உங்கள் பணி மிகவும் சிறப்பானது. அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சத்தையும் இலவசங்களையும் மக்கள் நிராகரித்தால் ஒழிய அப்துல் கலாம் கண்ட கனவாகிய இந்தியாவை வல்லரசாக்குவதென்பது முடியவே முடியாது என்பதுதான் உண்மை.

ஜயலக்ஷ்மி சேஷாத்ரி, அகூரா ஹில்ஸ், கலிபோர்னியா

*****


‘இடப்பெயர்ச்சி' அருமையான கதை. நல்ல ஓட்டம், ஆற்றொழுக்கான நடை.

வி. ஜயராமன், சிங்கப்பூர் (மின்னஞ்சலில்)

*****


‘நிலாவுடன் நான்' கதையைக் கொண்டுபோன விதமும் அதன் உச்சமும் அருமை. பாராட்டுகள்.

கவிதா (மின்னஞ்சலில்)

*****


சிறுவர் சிறுமியரின் வெற்றிகளைத் தென்றலில் படித்தது மகிழ்வூட்டியது. சுப்புத்தாத்தா கதை சூப்பர். ‘நிலாவுடன் நான்', ‘இடப்பெயர்ச்சி', ‘இரக்கம்' என எல்லாச் சிறுகதைகளும் சிறப்பு. குறிப்பாக ‘இரக்கம்' தத்ரூபமாய் இருந்தது. ‘கிச்சன் கில்லாடி'யை கிழக்குக் கடற்கரை நகரங்களிலும் நடத்தினால் நன்றாக இருக்கும்.

லதா சந்திரமௌலி, கலேஜ்வில், பென்சில்வேனியா.

*****


தென்றல் தென்றலாகவே வீசுவது அல்லாமல் மிகச் சிறந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் வெளிநாடு வாழ் எழுத்தாளர்களின் சிறந்த கதைகளையும் அள்ளித் தருகின்றது. மூளைக்கு வேலை கொடுக்கும் குறுக்கெழுத்துப் புதிர் மற்றும் சுடோகு படுஜோர். பலவகையான உணவுகளைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள், செயல்முறை ஆகியவற்றை மாயாபஜார் தருகின்றது. வாழ்க்கையில் ஏற்படும் மன வேதனைகளுக்கு அன்புள்ள சிநேகிதியே பகுதியில் டாக்டர் கூறும் ஆலோசனைகள் வரவேற்கத்தக்கன. ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நாட்குறிப்பு பொக்கிஷமாக உள்ளது. பிரபலமானவர்களின் நேர்காணல் பாராட்டத்தக்கது. இதுபோன்ற நேர்காணல் அவர்களை மேலும் அந்தந்தத் துறையில் ஊக்குவிப்பதாக உள்ளது. சுப்புத்தாத்தா கதைப்பகுதி சிறுவர்களுக்கு கதைமூலம் நீதியை அள்ளித் தருகின்றது. பல கோணங்களில் சிறந்து விளங்கும் தென்றல் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்.

எம்.எஸ்.ராஜேஸ்வரி, சான் ஹோசே, கலிபோர்னியா

*****
‘இடப்பெயர்ச்சி' எளிமையான, யதார்த்தமான கதை. ஆயிரக்கணக்கான முதியோர்கள் இளந்தலைமுறையினருக்காகச் செய்யும் தியாகத்தைச் சித்திரிக்கிறது.

நாகராஜன் (சிங்கப்பூர்), மின்னஞ்சலில்

*****


தென்றல் மாத இதழைப் படித்து பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். எல்லாமே மிக மிக அற்புதம். அறுசுவை விருந்து அருந்தியது போல் உணர்வு.

ராதா மோஹன், பிளேனோ, டெக்ஸாஸ்

*****


'தென்றல்' செப்டம்பர் 2008 இதழைப் படித்தேன். எல்லா விதங்களிலும் மிகத் தரமான பத்திரிகை. தற்காலத்தில் சென்னையில்கூட இம்மாதிரியான இதழ்களைப் படிக்க முடிவதில்லை. கடல்கடந்து வந்து செய்யும் தங்களது தமிழ்ப் பணி மென்மேலும் சிறந்திட எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

க. இராமகிருஷ்ணன், சிகாகோ.

*****


கடந்த சில இதழ்களில் இலங்கையில் அல்லலுறும் தமிழ் அகதிகளுக்கு உதவிகோரி நீங்கள் வெளியிட்ட கட்டுரைகளுக்கு நன்றி. ஆனால் நீங்கள் அந்த நாட்டை ஸ்ரீலங்கா என்று அழைப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அந்த நாட்டின் உத்தியோகபூர்வமான தமிழ்ப் பெயர் இலங்கைதான். ஈழம் என்பதுகூடப் பண்டைக் காலத்திலிருந்தே வழக்கில் இருக்கும் இலங்கையின் ஒரு மறுபெயர்தான். எனவே தமிழில் இலங்கை அல்லது ஈழம் என்று குறிப்பிடுவதே சரி. அதுவே அங்குள்ள தமிழரின் விருப்பமும்கூட.

இரத்தினம் சூரியகுமாரன், சான் ஹோசே, கலி.

*****


‘அமெரிக்காவில் இந்தியர்கள்' பகுதியில் ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா என்பதை விட இருக்கும் இடத்தை சொர்க்கமாக மாற்றிக் கொள்வதும் நம் கையில்தான்' என்பது - Punch of this month. புத்திசாலி மாமியாருக்கான கையேடு அருமை. சின்னச் சின்ன விஷயங்களும் பெரிய பிரளயத்தையே ஏற்படுத்திவிடக் கூடிய சக்தி படைத்தவை என்பது முற்றிலும் உண்மை. மைக்கல் ஜாக்ஸனுக்குத் தென்றலின் அஞ்சலி அவர் ஓர் பாப் கிங் என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டது. ஜாக்சனைப் பற்றிய பல தெரியாத தகவல்களும் கிடைத்தன.

ரத்தினவேலு, சன்னிவேல், கலிபோர்னியா

*****


இன்றைய தினம் நாம் கவனம் கொள்ளவேண்டிய மிகப்பெரிய இலக்கியவாதி செயமோகன் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை. அவரது வெளிப்படைத் தன்மை, ஆழ்ந்த அறிவு, நுட்பமாக வாழ்வை உற்றுநோக்கும் பாங்கு, இவற்றுடன் நேர்மையாக தன் சகாக்களை நேசிக்கும் மனிதநேயம் - எனக்கே சற்று வெட்கமாக இருக்கிறது, புகழ!

ரவி (மின்னஞ்சலில்)

*****


‘இடப்பெயர்ச்சி' நன்கு சொல்லப்பட்ட நெகிழ வைக்கும் கதை. ஆசிரியரின் மொழியும் இலக்கியத் திறனும் கதைக்கு மெருகூட்டுகின்றன.

சசி சிவகுமார், சிங்கப்பூர் (மின்னஞ்சலில்)

*****


மைக்கேல் ஜாக்ஸனுக்குப் புகழ் அஞ்சலியைப் பதிவு செய்ததுடன், "வெற்றியும் புகழும் நீடித்த மகிழ்ச்சியைத் தருமா? என்ற இந்தியத் தத்துவப் பிரச்னைக்கு விடை தேடுபவர்கள், மைக்கேல் ஜாக்ஸனின் வாழ்க்கையைப் பரிசீலனை செய்வது பலன் தரும்” என்று ‘தென்றல் பேசுகிறது' பகுதியில் கூறியிருப்பது சிந்திக்க வேண்டிய ஆக்கபூர்வமான ஆலோசனை. ‘மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு' தொடர் கட்டுரையில், வற்றாயிருப்பு சுந்தர், "தண்ணீர் பிரச்னையை ஏன் நம் அரசாங்கங்கள் போர்க்கால அடிப்படையில் தீர்க்க முன் வரவில்லை” என்றும், "அது எப்படி எந்தச் சொரணையும் இன்றி அரசு இயந்தரத்தால் இருக்க முடிகிறது என ஆச்சரியமாக இருக்கிறது” என்றும் நமது ஒவ்வொருவரின் ஆதங்கத்தையும் எதிரொலித்திருக்கிறார்.

ஜெயமோகனின் நேர்காணலில், "பொதுவாகவே தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு ‘மிகமிகமிகக்' குறைவு” என்று கூறியிருப்பது வியப்பையும், ஏமாற்றத்தையும், ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது. அதற்கும் மேலாக, ஜாதியைப் பற்றி, கடவுளைப் பற்றி, மதத்தைப் பற்றி, சாப்பாட்டைப் பற்றிப் பேசுவதை - கிண்டல் செய்வதை, ஒருவருடைய உணர்வுகளைக் காயப்படுத்துவதை, நகைச்சுவை என்று அவர் வர்ணிப்பது ஆச்சரியமளிக்கிறது. இந்த விதமான நகைச்சுவை தமிழர்களுக்கு மட்டுமல்ல, எவருக்கும் இருக்கக் கூடாது. திரைப்படங்களில் கலைவாணர் முதல் இன்றைய நடிகர்களும், ஆன்மிகத்துறையில் கிருபானந்த வாரியார், பேச்சாளர்களில் ‘திருக்குறள்' முனுசாமி முதல் இன்றைய கு, ஞானசம்பந்தம் போன்றோரும் அரசியலில் நெடுஞ்செழியன், எழுத்தாளர்களில் தேவன், விந்தன் எனப் பல துறைகளிலும் பலர் தரமான நகைச்சுவையை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அதே சமயம் யாரையும் புண்படுத்தாமல் வழங்கியிருக்கிறார்கள். சிரிக்கவும், சிந்திக்கவும் செய்து, சமுதாயத்தில் விழிப்புணர்வை உருவாக்குவதில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.

சென்னிமலை பி. சண்முகம், நியூயார்க்

*****


‘இடப்பெயர்ச்சி' சிறுகதை அருமை. ‘நிலாவுடன் நான்' சிறுகதை வெகுநாட்களுக்குப் பிறகு விரைவாக ஓடும் நல்ல கதை.

விஸ்வநாதன், இந்தியா (மின்னஞ்சலில்)

*****


ஏறத்தாழ 9 வருடங்களாகத் ‘தென்றல்' இதழைத் தவறாமல் படித்து வருகிறேன். அருமையாக இருக்கிறது. ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், கலைமகள் போன்ற இதழ்களின் தரத்தை விட அதிகத் தரத்துடன் தென்றல் இருக்கிறது. நான் லிபியாவில் 21 வருடங்கள் வேலை பார்த்தவன். என்னைப் போன்று வெளிநாடுகளில் தமிழ் இதழ்களையே பார்க்காதவர்களுக்குத்தான் ‘தென்றல்' இதழின் அருமை தெரியும்.

ஜூலை 2009, இதழில் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்கள் எழுதியிருந்த ‘புத்திசாலி மாமியாருக்கான கையேடு' மிக நன்றாக இருந்தது. அமெரிக்காவுக்கு முதன்முறையாக வருகின்றவர்களுக்கு அது மிகப் பயனுள்ளதாக இருக்கும். இதே போன்று ‘மெத்தப்படித்த மருமகளுக்கான கையேடு' ஒன்றும் எழுதலாமே! நான்கு அல்லது ஆறு மாதங்கள் இருக்கப் போகும் மாமியார்களை எப்படி அனுசரித்துச் செல்வது என்பது தெளிவாக இருக்கும்.

ஜி. ராமானுஜம், மிச்சிகன்

*****


இப்போதெல்லாம் தமிழ்ப் பத்திரிகைகளில் வரும் சில விஷயங்களைப் படிக்கும்போது அலுப்பு மேலிடுகிறது. காரணம், இந்தியாவின் முன்னேற்றத்தை கடிவாளம் கொண்டு பார்க்கும் கண்ணோட்டம். இந்தியா முன்னேறிக் கொண்டு இருக்கும் நாடு என்பதை அவ்வப்போது மறந்து விடுகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள், அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் வசதிகளில் இன்னும் பின்தங்கி உள்ளோம்தான், இங்குள்ள அரசு அலுவலகங்களில் உரையாட நேரும் போதெல்லாம், இங்குள்ள சாலைகளில் பயணிக்கும் போதெல்லாம், நூலகங்களுக்குள் நுழையும் போதெல்லாம் மனதினுள் ஒரு ஏக்கம் உருவாவது என்னவோ உண்மைதான். அதற்காக இந்தியாவில் எல்லாவற்றையும் குறையாகச் சொல்லும்போது மனது வலிக்கிறது.

சென்ற ‘தென்றல்' இதழில்கூட ஜெயமோஹன் அவர்களின் பேட்டியில், சில கருத்துக்கள் இதே வலியை உண்டு பண்ணின. இவரது எழுத்துக்கள் பற்றி உயர்ந்த அபிப்ராயம் உண்டு எனக்கு. ஆனால், சில விடயங்களை இன்னும் ஆழமாக அவர் கவனிக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்கள் பலரது உள்ளத்திலும் ஆழமாகப் பதியக்கூடியது என்பதோடு பெரிய பொறுப்பு இவரைப் போன்ற எழுத்தாளர்களுக்கு உள்ளது என்பதால் எனது கருத்தைச் சொல்ல முற்படுகிறேன். நிறையப் படித்து, அனுபவித்து தைரியமாகத் தனது கருத்தைச் சொல்லும் இவரது எழுத்து என்னையும் சேர்த்து பலரையும் கவருவது உண்மைதான். ஆனால், இவரது அனுபவத்தில் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் குடிமைப் பண்பாடு இல்லை என்பது, அவ்வளவு சரியான கருத்தாகத் தோன்றவில்லை.

கூர்ந்து கவனித்திருந்தால் பாங்காக் விமான நிலையத்தில் வேறு விதமாக நடந்துகொண்ட மக்கள் நடுத்தர வயதினராய் இருந்திருக்க வேண்டும். அதாவது முந்தைய தலைமுறை அல்லது படிக்காத பாமர மக்கள். ஏனெனில் இந்த இரு பிரிவிலும் பெரும்பாலானவர்களுக்கு உலக அளவினாலான ‘குடிமைப் பண்பாடு' பற்றிய அறியாமை இருக்க வாய்ப்பு அதிகம். எனது வெளிநாட்டுப் பயணங்களில் இதுபோல அனுபவித்தது ஒருமுறை அரபு நாட்டுக்குச் சென்றபோது மட்டுமே. பலரும் கூலித் தொழிலாளிகள். தமது வயிற்றுப்பாட்டைத் தவிர வேறு எந்த பண்பாடும் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. சமீபத்திய தென்றல் இதழில், மிளகாயைச் சாப்பிட்டுவிட்ட ஒரு அமெரிக்கப் பெண்மணிக்குத் தான் தயிர் அளித்தபோது, தனது மகன், ‘இது போலெல்லாம் செய்யாதே அம்மா' என்றதாக ஒரு பெண்மணி எழுதியிருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். மகன்மீதும், அவர் பயப்படுவதிலும் தப்பில்லை, இந்நாட்டைப் பொறுத்தவரை. பிறரது கண்ணிற்கு இந்த பெண்மணி ‘குடிமைப் பண்பாடு' இல்லாதவராகத் தெரியலாம். குடிமைப் பண்பாட்டின் வரம்பும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் யாரேனும் சென்னையிலிருக்கும் பாஸ்போர்ட் அலுவலகம் சென்றிருந்தால் என் கருத்துடன் ஒத்துப் போவர். சில வருடங்களுக்கு முன் முதன்முதலில் நான் பாஸ்போர்ட் எடுத்த சமயம் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. நான்கு மாதங்களுக்கு முன்பு அதில் சில மாற்றங்கள் செய்யச் சென்றபோது உண்மையில் அதிசயித்துதான் போனேன். அழகாக ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு, அவர்கள் சொல்லும் சமயம் சென்று வாரிசையில் நின்றால் போதும். விஷயத்திற்கேற்ப ஒரு வாரத்திலிருந்து, இரு மாதங்களுக்குள் வேலை முடிந்து விடுகின்றது. அதிகாரிகளும் மிக கண்ணியத்துடன் பேசி நடத்துகிறார்கள். இதுபோலப் பல அரசு அலுவலங்களில் பலவிதமான முன்னேற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த முறைகளை பற்றி அறியாதவர்கள், ஏஜெண்டுகளிடம் இன்னும் ஏமாந்து போகிறார்கள். இந்தியாவில் இப்போதைய அவசிய, அவசரத் தேவை பல விடயங்களில் மக்களின் அறியாமையைப் போக்குவதுதான்.

வெற்றிலை எச்சிலை என் தாத்தா எல்லா இடத்திலும் துப்புவார். என் பெற்றோரோ, சகோதர, சகோதரிகளோ வெறும் எச்சிலைக்கூடத் தெருவில் துப்பியதில்லை. நாங்கள் பிறந்து வளர்ந்த இடம் ஒரு சிற்றூர்தான். இன்றைய தலைமுறை மாறிவரும் நிலையில் பழைய கதையையே சொல்லிக் கொண்டிருப்பது ரசிக்கும்படி இல்லை. பரிட்சை சமயத்தில் யாரும் கவனிக்கவில்லை என்று எல்லா மாணவரும் காப்பி அடித்து விடமாட்டார்கள். அதற்காக மேற்பார்வையில்லாமல் செய்வதோ, மேற்பார்வையுடன் தேர்வு நிகழும் பள்ளியை, அதன் மாணவர்களை குறை சொல்வதோ சரியாகுமா?

சில வருடங்களுக்கு முன்புவரை மற்ற நாட்டுக் கல்வியுடன் ஒப்பிட்டு நமது பாடதிட்டத்தைக் குறைகள் மட்டுமே பலரும் சொன்னார்கள். முன்னேற வேண்டிய சமயம் அதிக உழைப்புத் தேவை என்பது புதிதான விடயமல்லவே. இன்று உலகே வியந்து பார்க்கும் அமெரிக்காவே, இந்தியர்களின் படிப்பாற்றலையும், உழைக்கும் திறனையும் பார்த்து பயப்படுகிறது. இங்கிருக்கும் கடைமகனிலிருந்து முதல் குடிமகன் வரை இந்தியர்களை நல்ல படிப்பாளிகளாக, உழைப்பாளிகளாகப் பார்க்கிறார்கள். நம்மால் ஏன் அப்படிப் பார்க்க முடியாது?

எல். சுபா, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline