|
|
|
வயதானால் வரும் பல வியாதிகளில் ஒன்று ஆஸ்டியோபோரோஸிஸ் (Osteoporosis). ஏதோ வாயில் நுழையாத வியாதி என்று ஒதுக்கிவிட வேண்டாம். இது நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கக் கூடும். ஆனால் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம். உடலில் இருக்கும் எலும்புகளில் குறிப்பாக முதுகுத் தண்டு மற்றும் கால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானமே இந்த வியாதி. இதனால் எலும்பு முறிவு எளிதில் ஏற்பட்டுவிடும்.
எலும்பு வளர்ச்சியும் தேய்மானமும்
சின்னக் குழந்தைகளுக்கு எலும்பு முறிவு ஏற்படுவது மிகவும் சுலபம். ஏனெனில் இவர்களது எலும்புகளில் போதுமான உலோகச் சத்து இருப்பதில்லை. வளர, வளர எலும்புகளில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) சேர்ந்து அதன் வலு கூடுகிறது. இதற்கு உடலில் இருக்கும் சில ஹார்மோன்கள் அவசியமாகின்றன. பூப்பெய்தும் காலத்திலிருந்து இந்தக் கால்சியம் எலும்புகளில் சேர்ந்து வலுவைத் தருகின்றது. இதற்கு 'Estrogen' என்ற பெண்மைக்கான ஹார்மோன் துணை போகிறது. அதே நேரத்தில் மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் இந்த ஹார்மோன் குறைந்து விடுவதால் எலும்புகளின் சக்தி குறையத் தொடங்குகிறது. இதையும் தவிர ஆண்களுக்கும் வயது கூடக்கூட எலும்புகளில் சுண்ணாம்புச் சத்து குறைகிறது.
நிலவு வளர்ந்து தேய்வது போல் தினம் தினம் எலும்பில் உலோக உற்பத்தியும், சேர்க்கையும், தேய்மானமும் நடக்கிறது. ஏதாவது ஒன்று அதிகமாகவோ அல்லது மற்றொன்று குறையவோ செய்தால் சமநிலை சாய்ந்து எலும்பு தேயும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
யாரைத் தாக்கும்?
| 65 வயதுக்கு அதிகமானவர்கள் பரிசோதனை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு 2 வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனை செய்வதின் மூலம் நோயின் தீவிரம் உணர முடியும். | |
* மாதவிடாய் நின்ற பெண்கள் * வயது முதிர்ந்த ஆண்கள் * குடும்ப வரலாறு உடையவர்கள். * சிறுநீரகக் கோளாறு உடையவர்கள். * ஸ்டெராய்டுகளை உட்கொள்வோர்கள். ஆஸ்துமா, ரூமடாய்டு ஆர்த்ரைடிஸ், லூபஸ் (Lupus) என்று பலவித வியாதிகளுக்கு ஸ்டெராய்டு மருந்தாக உட்கொள்ளப்படலாம். * தைராய்டு குறைவாக இருப்பவர்கள் அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போது இந்த தேய்மானம் அதிகமாகலாம். * Heparin என்று சொல்லப்படும் இரத்த மருந்து அதிக நாட்கள் உபயோகித்தல். * வேறு சில மருந்துகள். * ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள். * மிகவும் ஒல்லியாக குட்டையாக இருப்பவர்கள்.
நோயின் அறிகுறிகள்
இந்த நோய் பெரும்பாலும் அறிகுறிகள் குறைவாக உடையது. எலும்பு தேய்ந்து தேய்ந்து ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம். பெரும்பாலும் எலும்பு முறிவே இந்த நோயின் முக்கிய அறிகுறி.
சின்ன அடி பட்டதும் பெரும் எலும்பு முறிவு ஏற்பட்டால் இந்த நோய் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். உதாரணத்திற்கு சின்ன சருக்கலில் காலில் பெரும் முறிவு ஏற்படுவது ஓர் அறிகுறி.
உயரம் குறைவது மற்றோர் அறிகுறி. முதுகுத் தண்டில் முறிவு ஏற்பட்டால் உயரம் குறையக் கூடும்.
எலும்புகளில் எக்ஸ் ரே எடுத்தால் எலும்பு தேய்ந்து இருப்பதைக் கண்டு பிடிக்கலாம்.
நோய் கண்டுபிடிப்பு முறைகள்.
இந்த நோய் குறைந்த அறிகுறிகளையே கொண்டதாக இருந்தாலும், பெருத்த செலவும், தொந்தரவும் ஏற்படுத்தக் கூடியது. ஆகையால் அமெரிக்க ஆஸ்டியோபோரோஸிஸ் கழகம் தடுப்பு முறைகளையும் சில பரிசோதனைகளையும் வகுத்துள்ளது.
50-65 வயது வரையில் இருக்கும் பெண்கள் ஒரு முறையாவது எலும்பு அடர்த்தி ஸ்கேன் (Bone Density Scan) செய்து கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனையில் எலும்புகளின் தேய்மானம் முதுகுத் தண்டிலும் கால் எலும்புகளில் கணிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப 2 வருடத்திற்கு ஒருமுறை இந்த பரிசோதனை செய்ய வேண்டி வரலாம். 65 வயதுக்கு அதிகமானவர்கள் இந்தப் பரிசோதனை கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு 2 வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனை செய்வதின் மூலம் நோயின் தீவிரம் உணர முடியும். |
|
எலும்பு அடர்த்தி ஸ்கேன்
இந்தப் பரிசோதனையின் முடிவுகள் Osteopenia அல்லது Osteoporosis என்று வரலாம். இது ஒருவித கணிப்பின்படி நிர்ணயிக்கப்படுகிறது. WHO இதை -2.5க்குக் குறைவாக இருப்பவர்களை Osteoporosis என்று நிர்ணயிக்கிறது. -2.0 முதல் -2.5 இருப்பவர்களை Osteopenia என்று கணிக்கிறது. மற்றவர்களை 'இயல்புநிலை' அல்லது normal என்று கணிக்கிறது. அவரவர் வயதுக்கேற்ப இந்தக் கணிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சில இனத்தாருக்கு இந்த நோய் அதிகமாகவும், மற்றவர்களுக்குக் குறைவான தீவிரமும் உடையதாக இருக்கிறது. அதிருஷ்டவசமாக ஆசியர்களுக்கு இது குறைவான தீவிரம் உடையது. இது நமது மரபணுக்களாலா அல்லது பழக்க வழக்கத்தினாலா என்று தெரியவில்லை. மேற்கத்திய வாழ்க்கை வாழும் ஆசிய இனத்தவர்களுக்கு இது எந்தத் தீவிரத்தில் தாக்கும் என்பது இன்னும் கேள்விக்குறியே.
தடுப்பு முறைகளும் தீர்வுகளும்.
கால்சியம் - ஒரு நாளைக்கு 1200 முதல் 1500 mEq கால்சியம் தேவைப்படுகிறது. இது பால், தயிர், பாலாடைக்கட்டி போன்ற உணவுப் பொருட்கள் மூலமாகவோ அல்லது கால்சியம் சேர்க்கப்பட்ட ஆரஞ்சுச் சாறு மூலம் கிடைக்கலாம். இதையும் தவிரக் கால்சியம் மாத்திரைகள் மூலம் சேரலாம். கால்சியம் கொண்ட உணவுப் பொருட்களைக் குறைவாக உண்பவர்கள் இந்த மாத்திரைகள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். 500 மி.கி. அல்லது 600 மி.கி. அளவில் இந்த மாத்திரைகள் மருத்துவரின் சீட்டு இல்லாமலேயே கிடைக்கின்றன. இப்போது இதை Caramel, Chocolate போன்ற சுவைகளிலும் கிடைக்கின்றன. 30 வயது ஆன பெண்கள் இந்தக் கால்சியம் மாத்திரைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் பிற்காலத்தில் தேய்மானம் குறைவாக ஆக ஏதுவாகிறது.
வைடமின் D
| சிறிய அடி பட்டாலும் வலியோ வீக்கமோ அதிகம் ஆகிவிட்டால் உடனடியாக மருத்துவரை நாடவேண்டும். இதையும் மீறி எலும்பு முறிவு ஏற்பட்டால் முறிந்த எலும்பின் தன்மைக்கேற்ப மாவுக்கட்டு அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம். | |
ஒரு நாளைக்கு 400 முதல் 800 IU வைடமின் D தேவைப்படுகிறது. இது சூரியன் உடல் தோலில் படும்போது ஏற்படும் இரசாயன மாற்றத்தில் கிடைக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் இது மேற்கொண்டு உருமாறிக் கால்சியம் உடலில் சேர உதவுகிறது. D வைடமின் குறைவாக இருந்தால் உடலில் கால்சியம் சத்துச் சேர முடியாது. ஆகையால் கால்சியம் எடுத்துக் கொள்பவர்கள் அதை வைடமின் D உடன் சேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது மாத்திரைகளாகக் கிடைக்கிறது. குளிர் அதிகமான இடங்களில் வாழ்பவர்களும், சூரிய வெளிச்சம் உடலில் படாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களும் இதைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
Fossamax மற்றும் Actonel: இதைத் தவிர ஆஸ்டியோபோரெசிஸ் இருப்பவர்களுக்கு இந்த மருந்து தேவைப்படுகிறது. இது தினமும் உட்கொள்ள வேண்டி வரலாம். இதை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளும் சௌகரியமும் இப்போது இருக்கிறது.
Boniva: இது ஒரு புதிய சரக்கு. மாதம் ஒருமுறை எடுத்துக் கொள்ளப்படும் மருந்து.
PTH ஊசிகள்: நோய் தீவிரம் அதிகமானவர்களுக்கு இந்த வகை ஹார்மோன் ஊசிகள் தேவைப்படலாம்.
எலும்பு முறிவு ஏற்படாமல் இருக்க என்ன செய்வது?
சிறிய அடி பட்டாலும் வலியோ வீக்கமோ அதிகம் ஆகிவிட்டால் உடனடியாக மருத்துவரை நாடவேண்டும். இதையும் மீறி எலும்பு முறிவு ஏற்பட்டால் முறிந்த எலும்பின் தன்மைக்கேற்ப மாவுக்கட்டு அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம். எலும்புகளில் முறிந்த நிலையில் இரத்தம் கட்டும் தன்மை அதிகமாகக் கூடும். இதற்கும் வேறு சில சிகிச்சைகள் தேவைப்படலாம். தடுப்பு முறையே தலை சார்ந்தது.
இதனால், கீழே விழாமல் கவனமாக நடப்பது அவசியம். தள்ளாட்டம் அதிகமோனோர், தடி அல்லது Walker உபயோகிப்பது நல்லது. தவறாமல் கால்சியம், வைடமின் D உட்கொள்ள வேண்டும். மிதியடி, அல்லது சின்னப் பொருட்கள் கால் தடுக்காமல் கவனமாக நடக்க வேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எலும்புகளையும், அதைச் சுற்றிய தசை நார்களையும் வலுவாக்கும் வகையில் உடற்பயிற்சி செய்வதின் மூலம் வலுக் கூடுகிறது.
மேலும் விவரங்களுக்கு www.nlm.nih.gov
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |
|
|
|
|
|
|
|