|
|
|
அன்புள்ள சிநேகிதியே,
எங்களுக்கு மூன்று பெண்கள். பெரியவளுக்கு ஏதோ காரணத்தால் திருமணம் தட்டிக் கொண்டே போயிருந்தது. சிறியவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து செட்டில் ஆகி விட்டார்கள். பெரியவள் இங்கே கம்பெனி வேலையாக ஆறு மாதம் வந்திருந்தாள். நாங்கள் இந்தியாவில் மாப்பிள்ளை பார்த்து, அந்தப் பையன் இங்கிருப்பதாகக் கண்டுபிடித்து, அவர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி, ஒரு வழியாக இருவரும் தொடர்பு கொண்டு, பிடித்துப் போய் கல்யாணமும் நடந்து விட்டது.
ஜூன் வந்தால் இரண்டு வருடம் ஆகப் போகிறது. திடீரென்று எங்களைக் கிளம்பி வரச் சொன்னாள். ‘ஏதோ நல்ல செய்தி. ரகசியமாக வைத்துக் கொள்கிறாளாக்கும்' என்று நினைத்தால், இங்கே எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. அவள் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். கேட்டால், ‘அவனுக்கு மனநிலை சரியாக இருப்பதில்லை. ஏதோ கோளாறு. நீங்கள் ஜாதகம் என்று பார்த்துப் பார்த்து, என்னை சந்திக்க வைத்து தலையில் கட்டி விட்டீர்கள். என்னால் முடியவில்லை. விவாகரத்து கேட்டிருக்கிறேன். இங்கே தான் எனக்கு நல்ல வேலை கிடைத்து விட்டதே. என் கூட துணைக்கு இருங்கள். நான் இப்படியே இருந்து விடுகிறேன்' என்பது போல பதில். எவ்வளவோ விவாதம், சண்டை, அழுகை எல்லாம் முடிந்து ஓய்ந்தாகி விட்டது.
| அவர்களுக்குள்ளே என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை. எப்படித் தீர்ப்பது என்பதும் புரியவில்லை. சாப்பிட்டு, சாப்பிட்டு நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். | |
இந்த டிராமாவுக்கு நடுவில் இன்னும் ஒன்று. நாங்கள் இங்கே வந்தது இந்தப் பையனுக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை. ஒருநாள், இவள் ஆபிஸ் போன பிறகு அவன் வந்து நிற்கிறான். எப்படியாவது அவளை கன்வின்ஸ் செய்து திரும்பி ஒன்றாகச் சேர்த்து வைக்கும்படி எங்களைக் கெஞ்சினான். எங்களுக்கே பாவமாக இருந்தது. எங்கள் பெண் பெயரில் தான் தப்பு என்று நினைக்க ஆரம்பித்தோம். அவளிடம் முதலில் சொல்ல பயமாக இருந்தது. பிறகு எங்கள் கருத்தைத் தெரிவித்தோம். அவளுக்குக் கோபம் உச்சத்தில். ‘முதலில், அவனை ஏன் உள்ளே சேர்த்தீர்கள், அவன் என்னை எப்படித் துன்புறுத்தினான் என்பது உங்களுக்குத் தெரியுமா, அப்படியே சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ள முடியாது. உங்கள் உலகத்தின் விதிமுறைகளை என்னிடம் திணிக்கப் பார்ப்பீர்கள். உங்கள் பெண்ணை நம்புவீர்களா, இல்லை அவனை நம்புவீர்களா? நான் உங்களை வரவழைத்ததே அவனிடமிருந்து என்னை காத்துக் கொள்ள. ஆனால் நீங்களோ எனக்கே எதிராக வேலை செய்கிறீர்களே' என்று வார்த்தைகளைக் கக்கினாள். அவனை மிகவும் வெறுக்கிறாள். அவனோ அவ்வப்போது எங்கள் வீட்டிற்கு வந்து வாசல் மணியை அழுத்துகிறான். நாங்கள் திறப்பதற்கு பயந்து கொண்டு இருக்கிறோம்.
அவனுக்கும் வேலையில்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால், காலை வேளையில் ஏன் வருகிறான்? அதிரடியாகப் பேசினால், தொந்தரவு செய்தால் ‘போலிஸை' கூப்பிடலாம். அவன் சாதுவாகத் தான் இருக்கிறான். எங்களுக்கு அவர்களுக்குள்ளே என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை. எப்படித் தீர்ப்பது என்பதும் புரியவில்லை. சாப்பிட்டு, சாப்பிட்டு நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
இப்படிக்கு... ................................. |
|
அன்புள்ள சிநேகிதியே,
ஒன்றும் புரியவில்லை என்ற காரணத்தினாலேயே ‘உள் விஷயம் இருக்கிறது' என்பது மட்டும் எனக்குப் புரிகிறது. உங்கள் நிலைமை நன்றாகவே புரிகிறது. உங்கள் உலகம், அதன் விதிமுறைகள், அவளிடமிருந்து வேறுபட்டது என்பதும் புரிகிறது. ஏதோ ஆழ்ந்த காயம் உள்மனதில் வாங்கியதால் உங்கள் பெண்ணிற்கு இருக்கும் வெறுப்பும் புரிகிறது. ‘எதனால், ஏன், எப்போது, எப்படி' என்று சம்பவங்களின் உண்மை தெரியாததால், நானும் சஜெஷன் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.
உங்கள் பெண் வயதிலும், படிப்பிலும் முதிர்ச்சி பெற்றவள். அவளுக்கு இப்போது உங்களுடைய அரவணைப்பு தேவைப்படுகிறது. ரண சிகிச்சை அல்ல. காயத்தைக் கிளறும் நேரம் அல்ல இது. ஒத்தடம் கொடுங்கள். இவள் செய்தது தவறா, அவன் செய்தது தவறா என்று கண்டுபிடித்து, மறுபடியும் ஒன்று சேர்த்து வைப்பதுதான் எல்லோருடைய நல்ல குறிக்கோளாக இருக்கும். ஆனால் நடைமுறையில் அவர்களே நம்மை அணுகினால் ஒழிய, உதவி செய்ய இயலாத நிலைமையில் தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.
| உங்களைக் குறை சொன்னாலும், அது நியாயமில்லையென்று உங்களுக்குத் தெரியும். அவளுடைய கசப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறாள். புரிந்து கொள்ளுங்கள். | |
ஒரு விபத்து நடக்கிறது. யாரால், ஏன் என்று கேட்டுக் கொள்வோமே தவிர, விபத்து அடைந்தவர் நம் மக்களாக இருந்தால், உடன் இருந்து கவனித்து, உடல் தேறி, வருவதைத் தான் முதலில் செய்கிறோம்.
ஒரு காலகட்டத்தில் உங்கள் பெண், மனம் திறந்து உங்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கும். அதுவரை நாம் காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
வீட்டிற்கு வந்தால் தனிமையில் தன்னுடைய வேதனைகளைச் சுமந்து கொண்டு இருப்பாள். நீங்கள் இருப்பதால் கொஞ்சம் தனிமை விலகும். வீட்டுக்குள் நுழையும் போது இரண்டு அன்பு நெஞ்சங்கள் தனக்காகக் காத்திருக்கிறது என்று வருவாள். உங்கள் மௌனமே அவளுக்கு அனுசரணையாக இருக்கும். அதுவே நீங்கள் அவளைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்ற உணர்வைக் கொடுக்கும்.
அந்தப் பையன் நல்லவனாக இருக்கலாம். அல்லது சாடிஸ்ட் ஆகக் கூட இருந்திருக்கலாம். இப்போது புரியாவிட்டால் பரவாயில்லை. உங்களைக் குறை சொன்னாலும், அது நியாயமில்லையென்று உங்களுக்குத் தெரியும். அவளுடைய கசப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறாள். புரிந்து கொள்ளுங்கள்.
அவளுக்கு எந்த அளவு மனநிலை ஒரு நிலையாக இருப்பதில்லை என்பது தெரியாத நிலையில், என்னால் இதற்கு மேல் எழுதத் தெரியவில்லை.
சீக்கிரம் எல்லாம் நல்லவிதமாக முடிய வாழ்த்துக்கள்!
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|