|
|
|
அன்புள்ள சிநேகிதியே, வருமுன் காப்பது என்று சொல்வார்கள். எப்படி என்பதற்கு உங்கள் உதவி தேவையாகிறது.
என்னுடைய நாத்தனார் (மூத்தவர்) 2 முறை விசா மறுக்கப்பட்டு, எப்படியோ மறுபடியும் கிடைத்து, எங்களுடன் வந்து தங்கி விட்டுச் சமீபத்தில் ஊருக்குத் திரும்பினார். என் கணவரைத் தான் தாய்போல வளர்த்ததாகச் சொல்லிக் கொண்டிருப்பார். இருக்கலாம். என் கணவர் அதிகம் பேசும் டைப் இல்லை. யாரையும் எதிர்த்துப் பேசியதும் இல்லை. 14 வயதில் அம்மா போய்விட்டாள். 16 வயதில் படிப்பதற்கு dorm வாசம். அப்புறம் மேலே படிக்க இங்கே வந்து விட்டார். என்ன காரணத்தினாலோ இந்த நாத்தனாருக்கு கல்யாணம் ஆகவில்லை. கேரளாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் ‘ரிடையர்' ஆகி அங்கேயே இருந்து விட்டார். இந்த 20 வருடத்தில் ஒரு 5 - 6 முறை பார்த்திருப்பேன். அவ்வளவுதான். அமெரிக்க வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். நானும் மிக ஆசையாகத்தான் வரவழைத்தேன். இங்கே வந்த பிறகுதான் அவருடைய குணாதிசயங்கள் தெரிகிறது. அனுசரித்துப் போக விரும்பாத ஒரு கேரக்டர். சில்லறை சமாசாரங்கள்தான் என்றாலும் நாளுக்கு நாள் வெறுப்புத்தான் கூடிக் கொண்டிருந்தது. நீங்களே சொல்லுங்கள், இந்த அமெரிக்க இயந்திர கதியில் யார் மூன்று வேளை சமைத்துக் கொண்டிருக்க முடியும், எத்தனை பேர் தினமும் சமையலில் தேங்காய் சேர்த்துக் கொள்கிறார்கள்? எத்தனை பேருக்கு சும்மா தமிழ் டி.வி. சேனல்கள் பார்க்க நேரம் கிடைக்கிறது, எத்தனை பேருக்கு மூன்று வாரத்திற்கு மேல் சுற்றுலா செல்ல முடியும்?
| பார்ட்டிக்கு எங்காவது கூட்டிக் கொண்டு போனால், அங்கே யாராவது உரக்கச் சிரித்துப் பேசினால், அவர்களைக் குறை சொல்லிக்கொண்டே வருவார். வீட்டிலேயே விட்டு விட்டுச் சென்றால் எங்களை வீணாகக் குறை சொல்லிக் கொண்டிருப்பார் | |
எதற்கெடுத்தாலும் கேரளாவோடு ஒப்பிட்டுப் பேசி கொண்டிருப்பார். நான்தான் சமையலுக்கு இருக்கிறேனே, உனக்கு வேலைக்குப் போக வேண்டுமென்றால் போ என்று சொல்லி, தடாமுடாவென்று சமையலறையைப் போர்க்களமாக்கி, இருக்கிற தேங்காயை அள்ளிப் போட்டு சமையல். மாலையில் வீட்டுக்கு வந்தால் எனக்கு மூன்று பங்கு வேலை காத்திருக்கும். இவருக்குத் தேங்காய், உப்பு என்று எல்லாமே மிகக் கட்டுப்பாடு. குழந்தைகள் முதலிலேயே நம் உணவைச் சாப்பிட யோசிப்பார்கள். அடுக்களை அங்கணத்தில் அத்தனை பாத்திரங்களும் போட்டது போட்டபடி கிடக்கும். ஒரு வாரம் தான் செய்த அவியலையும், துவையலையும் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார். ஒருநாள் பொறுமை இழந்து நான் ஏதோ சொல்லி விட்டேன். உடனே சுயபச்சாதாபம். கோபம். ‘அம்மா இல்லாத சின்னப் பையனை தாய்போல வளர்த்து என் வாழ்க்கையையே தியாகம் செய்தேன். அதற்கு இதுதான் பலன்' என்று புலம்ப ஆரம்பித்து விடுவார்.
எங்கேயாவது இரண்டு நாளைக்கு பீச்சுக்குப் போகக் கூப்பிட்டால், 'நான் பார்க்காத ரிசார்ட்டா, இந்தியாவிலே இல்லாத விஷயமா? நீங்கள் போய்விட்டு வாருங்கள்' என்று மென்மையாகப் பேசுவார். அதை நம்பி நாங்கள் போய்விட்டு வந்தால், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது கேலி பேசுவார். பார்ட்டிக்கு எங்காவது கூட்டிக் கொண்டு போனால், அங்கே யாராவது உரக்கச் சிரித்துப் பேசினால், அவர்களைக் குறை சொல்லிக்கொண்டே வருவார். வீட்டிலேயே விட்டு விட்டுச் சென்றால் எங்களை வீணாகக் குறை சொல்லிக் கொண்டிருப்பார். எப்படி அவரைத் திருப்தி செய்வது என்று தெரியாமல் பலமுறை குழம்பிப் போயிருக்கிறோம்.
அவ்வப்போது, "போதும் போதும். இந்த அமெரிக்கப் பயணம். ஏன் வந்தேன் என்று இருக்கிறது. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நச்சரிக்கிறார்கள் எப்போது திரும்பி வருவாய் என்று" என்றெல்லாம் சொல்லி சலித்துக் கொள்வார். நாங்கள் இவ்வளவு சிரமம் எடுத்து, டிக்கட் எல்லாம் வாங்கி வரவழைத்து எல்லா இடங்களிலும் கொண்டு காட்டியதற்கு இதுதான் அவர் ரியாக்ஷன். சரி இன்னும் 20 நாள், 15 நாள், 10 நாள் திரும்புவதற்கு என்று நாங்களும் மிகப் பொறுமையாக இருந்தோம்.
புறப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, அவர் வேலை செய்த ஊரிலிருந்து வந்திருந்த ஒரு மாமியை, நாங்கள் கூட்டிச் சென்ற பார்ட்டியில் பார்த்துப் பேசி நட்பாகி விட்டார். அவ்வளவுதான். தினம் அந்த மாமியுடன் 3 மணி நேரம் பேச்சு. அவர் இருந்த இடம் எங்கள் வீட்டிலிருந்து நடக்கும் தொலைவுதான். அவரும் புதிதாக வந்திருந்தார். அவருக்கும் சௌகரியமாய் இருந்திருக்கும்.
என் நாத்தனார் திரும்பிப் போகும்போது கலகலப்பாகத் திரும்பினார். குழந்தைகளை உச்சி முகர்ந்தார். தம்பியை உடம்பை கவனித்துக் கொள்ளச் சொன்னார். என்னை, அதிகம் அலைய வேண்டாம். வீட்டு வேலை செய்ய வேண்டாம் (வேறு யார் இருக்கிறார்கள், செய்வதற்கு) என்று அறிவுரை சொன்னார். நிறைய சாமான்களாக வாங்கி 2 சூட்கேஸ்களில் அடைத்து விட்டு, தன்னுடைய புடவைகளை அப்படியே விட்டு விட்டார். நானும், ‘யாரும் இங்கிருந்து அங்கு கொண்டு வருவதற்கில்லையே. ஏதேனும் கனமான சாமானை வைத்து விட்டு, புடவைகளை எடுத்துக் கொண்டு போய் விடுங்கள்' என்றேன். அவருடைய பதில்தான் எனக்கு அதிர்ச்சி. "வேண்டுமென்றே தான் விட்டுவிட்டுப் போகிறேன். அடுத்த மார்ச்சில் திரும்பி வருவேனே. அப்போது பயன்படுத்திக் கொள்வேன்" என்றார். நான் தட்டுத் தடுமாறி அடுத்த மார்ச்சில் நாங்களே இந்தியாவிற்கு வரும் பிளான் இருக்கிறதே என்று சொன்னேன். "அதனால் என்ன மேயில் வருகிறேன். எனக்கு என்ன வேலை வீணாகப் போகிறது, ரிடையர் ஆகி விட்டேன். மல்டிபிள் எண்ட்ரி விசா 10 வருடம் இருக்கிறதே! நீங்கள் செலவு செய்ய வேண்டாம். ஒரு ப்ராப்பர்டி செட்டில்மெண்ட் இருக்கிறது. நான் ஒரு டிக்கட் வாங்குவதற்கு இல்லாமல் எதற்கு அந்தப் பணம், இந்தக் குழந்தைக்கு (என் கணவர்) யார் இருக்கா, என்னை விட்டா?" என்றாரே பார்க்கலாம். எப்படியோ அனுப்பி விட்டோம். "அடுத்த வருஷம் வரும்போது கவலைப்படலாம். இப்போ என்ன?" என்கிறார் என் கணவர். அடுத்த வருடம் நாளைக்கே வந்துவிடுவது போல மனதில் ஒரு பயம். அவருடைய மனதை வருத்தாமல் இதை எப்படித் தடுப்பது?
இப்படிக்கு .......... |
|
அன்புள்ள சிநேகிதியே, எல்லாமே புதுமையாக இருக்கிறது - புரியாமை. அக்கம்பக்கம் நம்மவர்கள் இல்லை - தனிமை. எங்கும் வெளியிடம் செல்லாமல், புது மாந்தர்களை பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்ததில்லை - அனுபவமின்மை. இது ஒரு பக்கம்.
| இவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போகும்போது, ‘அமெரிக்காவில் Cereal, Bread - என்று எவ்வளவு ஹெல்தி டயட் தெரியுமா, ஒவ்வொரு இடமும் எவ்வளவு க்ளீன் என்று அமெரிக்கா புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள் | |
வாழ்க்கையில் சின்னச் சின்ன, பெரிய பெரிய சந்தோஷங்கள், எதிர்பார்ப்புகள், சஞ்சலங்கள் ஏதும் இல்லாமல் தனிமரமாக ஒரு சின்ன வளையத்துக்குள்ளேயே சுழன்று சுழன்று வரும்போது, அடிமனத்தில் ஏற்படும் சுய பச்சாதாப உணர்ச்சிகள், எதிர்காலப் பாதுகாப்பின்மை - அது மறுபக்கம். எல்லாம் சேர்ந்து அவருடைய பேச்சு, நடவடிக்கைகள் முரண்பாடாக, முள் குத்துவதுபோல அமைந்திருக்கிறது.
இந்த யூ.எஸ். பயணம் அவருக்கும் ஒரு கலாசார அதிர்ச்சி இல்லையா, ஆனால் முதல் பயணம் செய்பவர் எல்லோரும் இப்படி cranky ஆக நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குப் பிடிக்காத அனுபவங்கள் இருந்தாலும் அழகாக அனுசரித்துக் கொண்டு விடுவார்கள். காரணம், பெண், பிள்ளை, பேரக் குழந்தைகள் என்ற பாசம். உங்கள் நாத்தனாருக்கு அந்த sense of belonging இருப்பதற்குச் சிறிது கஷ்டமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும்,
1. ஒரு வருடம் என்பது 365 நாட்கள். வரப்போகும் சுமைக்கு அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும். எதற்கு இப்போதே அதைத் தாங்கிக் கொள்ள விரும்புகிறீர்கள்? அந்தச் சுமை - வியாதி, மணம், வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல, preventive care எடுத்துக்கொள்ள.
2. அவர் விரும்பி, தன் கைப்பணம் செலவழித்து வருவாரா என்பதுகூட இப்போது தெரியாது. இது சுமையா என்று கூடத் தெரியவில்லை.
3. அப்படியே வந்தாலும் இந்த அளவுக்கு க்ரிடிகல் ஆக இருக்க மாட்டார்.
இவரைப் போன்றவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போகும்போது, ‘அமெரிக்காவில் Cereal, Bread - என்று எவ்வளவு ஹெல்தி டயட் தெரியுமா, ஒவ்வொரு இடமும் எவ்வளவு க்ளீன் என்று அமெரிக்கா புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள்.
ஆகவே இது, இப்போது ஒரு சுமையல்ல. கவலையை விடுங்கள்.
வாழ்த்துக்கள்! சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|
|