|
|
|
அன்புள்ள சிநேகிதியே,
என் அம்மா எங்களுடன் தங்கியிருக்கிறார். வந்து 6 மாதம் ஆகிறது. என் அம்மா டயாபிடிக். எனக்கு ஒரு அண்ணா, ஒரு தம்பி. பெரிய மன்னி வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார். அப்பா காலமாகி 7-8 வருடம் ஆகிறது. அம்மா 2 பிள்ளைகள் வீட்டிலும் மாறி, மாறி இருந்து கொண்டிருந் தார். Adjustment problem இருந்து கொண்டு தான் இருந்தது. 2 மாட்டுப் பெண்களைப் பற்றியும் குறை சொல்லிக் கொண்டேதான் இருப்பார். நான் அப் பெண்களுடன் அதிகம் பழகியதில்லை. திருமணம் ஆகி நான் இங்கே வந்த பிறகுதான் பெரியவனுக்குக் கல்யாணம் நடந்தது. என் அம்மா அவர்களைப் பற்றி வர்ணிக்கும் போதெல்லாம், இப்படியும் பெண்கள் இருப்பார்களா என்று தோன்றும். நான் எவ்வளவு ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்தாலும் என் அம்மா தன் புலம்பலை விடமாட்டாள். அம்மாவை அழைத்து வைத்துக் கொண்டு நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால் மாமியார் எங்களுடன் தங்கிக் கொண்டிருந்தார். அவருக்கும் உடல்நலம் சரியாக இருந்ததில்லை. மாமனார் 6 மாதம் இங்கே, 6 மாதம் இந்தியா, பெண், பிள்ளைகள் வீடு என்று மாறி மாறி இருந்து கொண்டிருக்கிறார். மாமியார் சமீபத்தில்தான் தவறிப் போனார்.
| அம்மாவுக்கு இங்கிலீஷ் சரியாகப் பேசத் தெரியாது. அதனால் தவறான வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறாள். மிகவும் ஆசை பாட்டிக்கு, பேரன் என்றால் - என்று சொல்லிச் சமாளித்தோம். | |
அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். பகுதிநேர வேலை தான் எடுத்துக் கொண்டேன். முதலில் 2 வாரம்வரை சரியாக இருந்தாள். பின் வழக்கம்போல எல்லாவற்றைப் பற்றியும் குறை சொல்லும் படலம் ஆரம்பித்து விட்டது. ஐஸ்க்ரீம் பிடிக்கிறது. சாக்லேட் பிடிக்கிறது. சுகர் அவுட் ஆஃப் கண்ட்ரோலாகப் போய்க் கொண்டிருக்கிறது. நான் பாதிநேரம் வீட்டில் இருப்பதால், ஏதேனும் அறிவுரை சொன்னால் ஒரே அழுகை. வாக்குவாதம். சின்னச் சின்ன விஷயங்கள். என் அம்மா என்பதற்காக நான் பொறுத்துக் கொள்கிறேன். என் குழந்தைகளுக்கு அவ்வளவு பொறுமை இல்லை. அவருக்கு அவ்வளவு கோபம் வராது. ஆனாலும் சில சமயம் என் அம்மா ஏதாவது ஏடாகூடமாகப் பேசும்போது ஏதாவது ஷார்ப்பாகச் சொல்லி விடுகிறார். என் சின்னப் பையனை வேறு ஏதோ மிரட்டியிருக்கிறாள்.
இந்த ஊரில்தான் பிறந்த குழந்தை கூட ‘911'ஐக் கூப்பிட்டு விடுமே! அன்று பெரிய ரகளை. அம்மாவுக்கு இங்கிலீஷ் சரியாகப் பேசத் தெரியாது. அதனால் தவறான வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறாள். மிகவும் ஆசை பாட்டிக்கு, பேரன் என்றால் - என்று சொல்லிச் சமாளித்தோம்.
ஏதாவது ஏன், எப்படி என்று கேள்வி கேட்டால் அவ்வளவுதான். எனக்கு வயதாகி விட்டது. உங்கள் மூன்று பேருக்கும் அம்மா என்றால் கிள்ளுக்கீரை. என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள் என்கிறாள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தக் கலாசாரம், இந்த வாழ்க்கை எதற்குமே அட்ஜஸ்ட் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாள். புரியவும் இல்லை. ‘கண் பார்வை' சரியில்லை. படிக்க முடிவதில்லை. ஒரு தடவை சர்க்கரைக்குப் பதிலாக, உப்பைச் சேர்த்து பாலைக் கொடுத்திருக்கிறாள் என் பையனுக்கு. அவன் அதை அப்படியே அங்கணத்தில் கொட்டி விட்டான். அதற்கு ஒரு கோபம். வேண்டுமென்றே செய்தான், பாட்டியைப் பிடிக்கவில்லை என்று வாதம். இப்போது எனக்குப் புரிகிறது, என் மன்னியும், தம்பி மனைவியும் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்று. என்னதான் செய்வது இந்த நிலையில்?
இப்படிக்கு ............................ |
|
அன்புள்ள சிநேகிதியே,
எனக்கு 2 முக்கியமான பிரச்சினைகள் எப்போதும் வந்து கொண்டே இருக் கின்றன. ஒன்று முதியோர்களுக்கு ஏற்படும் துன்பங்களும், அவர்களால் பிறருக்கு ஏற்படும் துன்பங்களும். இரண்டாவது, இளம் தம்பதியினருக்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளும், அதனால் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் ஏற்படும் வெறுப்புகளும், கசப்புகளும், பின்விளைவுகளும். ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரித்திரமும் வேறு மாதிரியாக இருந்தாலும், எல்லாவற்றுக்கும் பின்னணியின் 4 - 5 முக்கியக் காரணங்கள் தான் இருக்கின்றன. இதைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் அடிக்கடி மூழ்கிப் போகிறேன்.
| முதுமை என்பது ஒரு உணர்வு. உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஏதேனும் வியாதி நம்மைத் தாக்கும்போது நமக்கு அந்த உணர்வு வந்து விடுகிறது.உயிரைப் பற்றியும், உடைமைகளைப் பற்றியும் ஒரு பாதுகாப்பின்மையும், பயமும் வந்து விடுகிறது. | |
இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் முதியோர்களின் வயது ஒரு காரணம் என்றாலும் அதில் ஸ்தானம் என்பது பெரும் பங்கு வகிக்கிறது. 50 வயதுக்குள் மாமியார், மாமனார் ஆனவர்களும் இருக்கிறார்கள். 70 வயது ஆகியும் பெண்கள், பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளாமல் அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். 50 வயதிலே உடல் நலிந்து தங்களுக்கு வயதாகி விட்டது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். 70 வயதிலும் தங்களுக்கு ஏற்படும் உடல் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, அவர்கள் வழியில் வாழ்க்கையை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள்.
முதுமை என்பது ஒரு உணர்வு. உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஏதேனும் வியாதி நம்மைத் தாக்கும்போது நமக்கு அந்த உணர்வு வந்து விடுகிறது. அதுவும் பிறரை நம்பி இருக்கும் நிலை வந்தால், சுய பச்சாதாபமும் சேர்ந்து விடுகிறது. உயிரைப் பற்றியும், உடைமைகளைப் பற்றியும் ஒரு பாதுகாப்பின்மையும், பயமும் வந்து விடுகிறது. இதனால், எப்போதும், எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் ஒரு சந்தேகம். உறவுகளை முறிக்கக் கூடிய சக்தி சந்தேகத்திற்கு இருக்கிறது. இதனால், ஆத்மார்த்தமான அன்பையோ, அக்கறையையோ அவர்கள் உணர்வதில்லை. தனிமையைத் தான் உணர்வார்கள். அந்தத் தனிமையால் ஏற்படும் வெறுமையை வெளிப்படுத்த அவர்கள் அறிந்தோ, அறியாமலோ தேர்ந்தெடுக்கும் வழிகளில் ஒன்று குறை கூறுதல். நிறைவை வெளிப்படுத்தும்போது மனம் அன்பில் திளைக்கும். அன்பில் வார்த்தைகள் அடக்கமாக வரும். குறையை வெளிப்படுத்தும்போது அதிரடியாக வரும். மற்றவருக்கு எங்கோ சிறிதாவது குற்ற உணர்ச்சியைக் கொடுக்கும். இது ஒரு கவன ஈர்ப்பு வழி (Attention seeking method). மனதில் ஏற்படும் வெறுமைக்கு தாமேதான் பொறுப்பு என்பதைப் பல முதியவர்கள் உணர்வதில்லை.
உடல் முதுமையடையலாம். ஆனால் உள்ளம் இளமையாக இருக்க சேவையுணர்வு, ஆன்மீக உணர்வு (Service, Spirituality) தான் ரொம்ப ரொம்ப முக்கியம். இடத்தில் தனிமையாக இருக்கலாம். ஆனால் மனதில் தனிமை இருந்தால் வாழ்க்கையில் இழப்புகளை மட்டுமே நினைத்துக் கொண்டு, சுய சிந்தனையிலேயே ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். பிறரிடம் எதிர்பார்ப்புகளும் அதிகம் இருக்கும். (அப்பாடா, ஒரு வழியாக வியாக்கியானத்தை முடித்து விட்டேன். இனி உங்கள் பிரச்சனைக்கு வருகிறேன்).
உங்கள் அம்மாவின் அமெரிக்க வருகை - இதுதான் முதல் தடவையாக இருந்தால், கலாசார அதிர்ச்சிகளுக்கு (முக்கியமாக, குழந்தைகளுடன் நடந்து கொள்ளும் விதம், இங்கே இருக்கும் விதிமுறைகள்) அவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வது சிறிது சிரமமாக இருந்திருக்கும். ‘குறை சொல்வது' என்பது நம்முடைய எதிர்பார்ப்புகளைத் தெரிவிக்கிறது. நாம் எல்லோருமே, யாரிடமோ, எதைப் பற்றியோ அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அதுவே ஒருவருடைய அடையாளமாக மாறிவிட்டால் இழப்புகள்தான் பெருகும். சிறுவயதில் இருந்து இது உங்கள் அம்மாவின் இயல்பாக இருந்தால் அது ஒரு தீராத நோய் 'Chronic Illness' - டயாபிடிஸ் போலத்தான். வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் சகிப்புத் தன்மையைக் காட்டியிருக்கிறோம் - நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், பொது இடங்கள் என்று. உங்கள் அம்மாவைச் சகிக்க வேண்டும். வேண்டித்தான் இருக்கிறது. பெண் என்ற உரிமையில் எங்கே அதிகாரம் வேண்டியிருக்கிறது, எங்கே ஆசையைக் காட்டுவது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். High maintenance தான். நல்லவேளை, நீங்கள் பெண்தானே. உங்களைப் பற்றிக் குறை சொன்னாலும் பிறர் புரிந்து கொள்வார்கள். அம்மா, அம்மா தானே. அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சுங்கள்.
வாழ்த்துக்கள்! சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|