Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு...
- வற்றாயிருப்பு சுந்தர்|டிசம்பர் 2008|
Share:
Click Here Enlargeபாகம் 3

தலைவர்களை அவமதிக்கச் சிலைகள்!

ராஜகோபுரத்திலிருந்து மேலூர் செல்லும் சாலை புதுசாகப் போட்டிருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு மழை பெய்தபோது மக்கள் படகில் போய்வந்த சாலை அது! பொதுவாகவே மோசமான சாலைகள் குறைந்திருக்கின்றன.

பாதாள பைரவியின் அருளால் பாதாளச் சாக்கடை வேலையெல்லாம் முடித்து விட்டார்கள். அப்படியே சாலையோரச் சாக்கடைகளையும் மூடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். திறந்து போட்டு வைத்திருப்பதால் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகவும் கொசு உற்பத்திச் சாலைகளாகவும் அவை மாறி விடுகின்றன. எல்லாக் குப்பைகளும் அதில் விழுந்துகொண்டேயிருக்க கொஞ்ச நாளில் அடைத்துக்கொண்டு சாலையைத் தோண்டி மூடியைத் திறந்து நிறைய NaCl-லுடன் இறங்குவார்கள். கமல் வந்து கட்டிப்பிடித்து நன்றி சொல்வார். கொசுக்கடி யெல்லாம் மக்களுக்குப் பழகிவிட்டது. கொசுவைத் துரத்த விதவிதமாகக் கடைகளில் விற்கிறார்கள்.

கோபுரத்திலிருந்து சற்று தூரத்திலிருக்கும் காவல் நிலையத்தின் முன்பு பெரியார் சிலை ஒன்றை எழுப்பிப் பெரிய தகராறெல்லாம் நடந்ததே என்று நெரிசலில் தேடியதில், அவரைச் சுற்றி ஏழெட்டு காவலர்கள் நாற்காலி போட்டு அமர்ந்து தினத்தந்தி படித்துக்கொண்டிருந்தார்கள்.
எவ்வளவோ தவிர்த்தும் கடைசியில் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. கண்களைத் திறந்துவைத்துக் கொண்டு எந்தப் புகழ்பெற்ற கோவிலுக்கும் செல்வது எனக்குச் சாத்தியமேயில்லை. அம்பல அரட்டையில் இதைப் பற்றிச் சொன்னபோது 'கோவிலுக்குள் போவதற்குமுன் செருப்பையும், வெறுப்பையும் கழற்றி வைத்துவிட்டுச் செல்லுங்கள்' என்று சுஜாதா சொன்னது நினைவில் மறுபடியும் மோதியது. ராஜகோபுரத்தின் நுழைவிலேயே பெரிய வாகனங்கள் நுழையாதிருக்க நல்லி சில்க்ஸ் விளம்பரத்துடன் குறுக்கே தடுப்பு போட்டு வைத்திருக்கிறார்கள் - இரு சக்கர, முச்சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் இடைவெளி விட்டு. அவரவர் சர்க்கஸ்காரர்கள் மாதிரி இடுப்பை வளைத்து நெளித்து உள்ளே புகுந்து யார் காலிலாவது ஏற்றிச் செல்லவேண்டியிருக்கிறது. பெரிய இடைஞ்சலான, நெரிசலை அதிகப்படுத்தும் தடுப்பு அது.

கோபுரத்திலிருந்து சற்று தூரத்திலிருக்கும் காவல் நிலையத்தின் முன்பு பெரியார் சிலை ஒன்றை எழுப்பிப் பெரிய தகராறெல்லாம் நடந்ததே என்று நெரிசலில் தேடியதில், அவரைச் சுற்றி ஏழெட்டு காவலர்கள் நாற்காலி போட்டு அமர்ந்து தினத்தந்தி படித்துக்கொண்டிருந்தார்கள். வெயில் மழையென்று எந்நேரமும் அங்கு காவல் காக்கும் காவலர்களிடம் "உங்கள் மனதில் இப்போது இப்படி நிற்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஒளிக்காமல் சொல்லுங்கள்" என்று கேட்கவேண்டும் போலத் தோன்றிற்று. கேட்கவில்லை. பெரியாருக்கும் கோபுரத்திற்கும் இடையில் - கோபுரத்திலிருந்து இருபது அடி தூரத்திலேயே காந்தி சிலை ஒன்றிருப்பது யாருக்காவது நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. பக்தி, பகுத்தறிவு மோதலில் காந்தியை மறந்து விட்டார்கள். பாவம் அவர். கோபுரத்திற்கு முதுகைக் காட்டிக்கொண்டு இருக்கிறார். அவரால் எதையும் பார்க்க முடியாதபடி முன்னால் இருக்கும் மண்டபத்தில் தூண்களை இணைத்துச் சுவரெழுப்பிக் கடைகள் நிறைந்திருக்கின்றன. மொத்தத்தில் சந்து ஒன்றுக்குள் கோபித்துக்கொண்டு நிற்கும் தாத்தாவைப் போல இருந்தார் காந்தி. உயிரோடு இருந்தாலும் இப்போதைய நிலையில் அப்படித்தான் ஏதாவது சந்துக்குள் சென்று நின்றுவிடுவார்.

சிலைகளைத் தான்தோன்றித்தனமாக இப்படி கண்ட கண்ட இடங்களில் வைப்பதைத் தடைசெய்ய வேண்டும். சிலை என்றால் கம்பீரமாக, பார்த்ததும் மரியாதை வரும் வண்ணம் அமைக்கவேண்டும். ஒவ்வொரு நகரிலும் பிரதானமாக ஓரிடத்தை ஒதுக்கி எல்லாச் சிலைகளையும் அங்கே சுத்த பத்தமாக நிறுவி, இஸ்கான் கோவில் மாதிரி பளிங்காகப் பராமரித்தால் உள்ளூர், வெளியூர் மக்கள் எல்லாம் ஆவலாக வந்து பார்த்துத் தெரிந்துகொள்வார்கள். சுற்றுலாத் தலமாகக்கூட அது மாறிவிடும். மேடம் துஸ்ஸாத் மெழுகுச்சிலை அரங்கம் இருப்பதுபோல, தலைவர்களின் சிலைகளை ஒன்றுகூட்டி ஓரிடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். இப்படி காக்கா ஆய் போய், வெயில், மழையில் கருத்து, தூசு படிந்து, வருடாவருடம் பிறந்த இறந்த நாளன்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டே தலைவர்கள் மாலை போடுவதற்காக சிலைகளை நினைத்த இடத்தில் நிறுவுவதை எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை. தலைவர்களை அவமானப்படுத்த அரசியல்வாதிகள் செய்யும் ஒரே காரியம் இம்மாதிரி சிலைகள் வைப்பதுதான் என்று நான் தீவிரமாக நம்புகிறேன்.

கோபுரத்தின் உட்சுவர் முழுதும் வெற்றிலைக் கறை, எச்சில், சிகரெட் துண்டுகள் என்று பளபளப்பாக இருக்க, ஓரத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. தரையில் அமர்ந்து பூ விற்றுக் கொண்டிருக்கும் வயதான பெண்மணிகளைத் தாண்டி, சூடம் எரியும் திசையெல்லாம் சட்டென நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டு நகர்கிறார்கள் ஜனங்கள். இருபுறமும் நடைபாதை என்று ஒன்றிருப்பதை உணரவே முடியாதபடி கடைகள், கடைகள், எங்கு நோக்கினும் கடைகள். வெஜிடபிள் பிரியாணியிலிருந்து உட்பாடி, பாவாடை வரை படம் போட்டு விளம்பரங்கள் எங்கும். எல்லாமே கிடைக்கிறது அங்கு! அது ஒரு நெடுஞ்சந்தை. மக்கள் நடக்க இடமில்லாமல் தெருவில் வாகனங்களோடு நகர, ஓயாத இரைச்சல். மேலும் நகர்ந்து கோவிலுக்குள் - காவலர்களின் மெட்டல் டிடெக்டர் சோதனைகளைத் தாண்டி - உள்நுழைந்தேன். இடதுபுறம் மூடப்பட்டிருந்த ஏதோ ஒரு அம்மன் கோவிலைப் புதுப்பித்துத் திறந்திருக்கிறார்கள். நிறையச் சிற்பங்கள் - இதுவரை பார்த்திராத சிற்பங்கள். அவற்றைப் பார்த்துவிட்டு ரங்கநாதர் சந்நிதியை நோக்கி நகர்ந்தேன்.
தலைவர்கள் சிலையோ தெய்வங்களின் சிலையோ - சிலை வைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் மனிதர்களால் அனுதினமும் அவமானப்பட்டுக் கொண்டே யிருக்கிறார்கள்
முன்பெல்லாம் வரிசையில் செல்ல விருப்பமில்லாவிட்டால் தூரத்திலிருந்தே இறைவனைத் தரிசித்துவிட்டு நகர்ந்து விடலாம். சில வருடங்களுக்கு முன்பு அதைச் செய்ய விடாமல் பெரிய திரை ஒன்று மண்டப வாயிலிலேயே தொங்க விட்டு, 'இலவச தரிசனம்', 'சிறப்பு தரிசனம்' எனறு இரண்டு வரிசைகளை உருவாக்கி, அரங்கனைத் தரிசிக்க வேண்டுமென்றால் ஏதாவது ஒரு வரிசையில் கட்டாயமாகச் சென்றாகவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள். இப்போது அந்த இடத்தில் பல வரிசைகள் உருவாகியிருக்கின்றன. திரையரங்கத்தில் பால்கனி, சேர், பெஞ்ச், தரை டிக்கெட் இருப்பது போல, உங்கள் வசதிக்கேற்ப வரிசையைத் தேர்ந்தெடுத்துக் காசு கொடுத்துவிட்டுச் செல்லலாம். கோவிலின் வரைபடங்கள், சாட்டிலைட் புகைப்படங்களை பெரிதாக்கி நுழைவில் மாட்டிவைத்திருக்கிறார்கள். தடுப்புக் கம்பிகளில் அப்போதுதான் பெயிண்ட் அடித்திருந்தார்கள். ஆனால் அதைப்பற்றிய அறிவிப்பு எதுவும் வைக்காததால் கம்பியைப் பற்றியதும் அது கையைப் பற்றிக்கொண்டது.

வரிசையில் - உள்ளே நரகம் மாதிரியான புழுக்கம் - மெதுவாக நகர்ந்தேன். சுவரில் பொருத்தியிருக்கும் ஸ்பிலிட் ஏஸி இயந்திரங்கள் இயங்காமல், ராட்சத விசிறிகளை வைத்திருந்தார்கள். விசிறியிலிருந்து காற்று வரும் இடத்தை அடைந்ததும் வரிசை சற்றுத் தயங்கி நகர்ந்தது. தூண்களுக்குப் பதில் கருப்பு மார்பிள் கற்களில் சுவரே எழுப்பியிருந்தார்கள். கேட்டதற்கு தூண்கள் பலவீனமடைந்ததால் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு கல்லறைக்குள் நடப்பது போன்ற உணர்வு எழுந்தது. தலைவர்கள் சிலையோ தெய்வங்களின் சிலையோ - சிலை வைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் மனிதர்களால் அனுதினமும் அவமானப்பட்டுக் கொண்டே யிருக்கிறார்கள் என்று தோன்றியது. ஒரு வழியாக அரங்கன் முன்னால் நின்றால் அவர் தலையை மட்டும்தான் பார்க்க முடிந்தது. உடலைப் பார்க்க இயலாதவாறு மஞ்சள் திரையைப் போட்டு மறைத்திருந்தார்கள். அன்று ஏதோ ஒரு விசேஷ நாளாதலால், அந்த மறைப்பாம். 'நகரு நகரு' என்று விரட்டிக் கொண்டேயிருந்தார் ஒரு மாமா. கண்களை மூடி ஒன்றும் நினைக்காமல் மனதில் வெறுமையை நிரப்பிக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

வீட்டுக்கு வீடு கால்டாக்ஸி

இந்தியாவில் மக்கள் தொகைக்கு அடுத்தபடியாகப் பெரும் எண்ணிக்கையில் இருப்பது கால்டாக்ஸி என்று சொல்லலாம். ஆட்டோவில் போகச் சொத்தையே எழுதிக் கேட்பதால் இப்போது வீட்டுக்கு வீடு கால்டாக்ஸி வைத்திருக்கிறார்கள். சொந்த வண்டியையே சும்மா நிற்கும் தருணங்களில் கால்டாக்ஸியாக ஓட்டுகிறார்கள். ஸ்ரீரங்கத்திலிருந்து ஜங்ஷன் செல்லவேண்டுமானால் ஆட்டோவில் போனாலும் கால் டாக்ஸியில் போனாலும் ரூ.150 ஆவதால், கால்டாக்ஸியில் வசதிகள் ஆட்டோவைவிட அதிகமிருப்பதால் மக்கள் அதையே நாடுகிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்ததை விட கிட்டத்தட்ட 100 மடங்கு கால்டாக்ஸிகளின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. வேலைவாய்ப்பும் கணிசமாகப் பெருகியிருக்கிறது. அரும்பு மீசைகூட முளைக்காத இளைஞர்கள் கால்டாக்ஸி ஓட்டி கெளரவமாகச் சம்பாதிக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம்.

மாருதி நிறுவனத்தின் விற்பனையில் 90 சதவீதம் கால்டாக்ஸிக்காக விற்கப்படும் மாருதி ஆம்னி வண்டிகளின் மூலமாகத் தான் போலிருக்கிறது. மீதம் டாடா இண்டிகாக்கள். ஆனால் சென்னை மாதிரி இன்னும் திருச்சி கால்டாக்ஸிகளில் மீட்டர் போடுவது அமலுக்கு வரவில்லை. ஆட்டோ அளவு கேட்பதால் மக்கள் ஏறிப் போகிறார்கள். மீட்டர் போட்டால் இன்னும் கட்டணம் குறைவாக வாய்ப்புண்டு. ஆம்னி என்பது செவ்வக வடிவப் பெட்டி, நான்கு சக்கரங்கள், இஞ்சின், ஸ்டியரிங் சக்கரம், ரேடியோ, டேப், ஸிடி ஏதாவது ஒன்று, இருக்கைகள், பின்னால் சமையல் வாயு உருளைகள் அவ்வளவுதான். வேறு உபரியாகவோ, உதிரியாகவோ எதுவும் இல்லை. எளிமையாக, மலிவாகத் தயாரித்துத் தள்ளுகிறார்கள். அவரவர் வாழ்க்கையை கால்டாக்ஸி போல ஆடம்பரங்கள் இன்றி அமைத்துக்கொண்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. எந்த டாக்ஸியின் கதவைத் திறந்தாலும் சமையல் வாயு வாசனை அடிக்கிறது. உள்ளே அமர்ந்து ஒழுங்காகக் கதவை இழுத்து மூடினாலும் ஓட்டுனர் இறங்கி வந்து, ஒருமுறை திறந்து பிறகு அறைந்து இன்னொரு முறை மூடிவிட்டுத்தான் புறப்படுகிறார். எல்லா ஓட்டுனர்களும், திருச்சி, மதுரை, சென்னை என்று எல்லா இடங்களிலும், சொல்லி வைத்தாற்போல இதைச் செய்வது வினோதமாக இருந்தது!

வற்றறாயிருப்பு சுந்தர்,
பாஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline