Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
ரிங்டோன் என்ற இம்சை
- |நவம்பர் 2008||(1 Comment)
Share:
Click Here Enlargeரிங்டோன் என்ற இம்சை போதாதென்று யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று காலர் டோன் என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். கைப்பேசியில் காலர் டோனும் ரிங்டோனும் சினிமாப் பாடல்களை வைத்துக் கொள்ளாதவர்கள் கற்காலத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் மட்டுமே. 'பேரக் கேட்டா அதிருதுல்ல' என்பதிலிருந்து 'You're the south end of the north side facing horse' என்பதுவரை பல்வேறு காலர் டோன்கள். அழைப்பவர் காலரைப் பிடித்து யார்ரா என்னைக் கூப்பிட்றது என்று கேட்பது போல இருந்தது சிலவற்றைக் கேட்க. பால்ய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் மத்தியில் இருந்த டேபிளில் இருந்த காப்பிக் கோப்பைகளின் எண்ணிக்கையில் கைப்பேசிகளும் இருந்தன. திடீரென்று நாய் குரைக்கும் சத்தம் கேட்க ஒருத்தன் அவனது போனை லாவிக்கொண்டு 'வீட்லருந்துடா' என்று சொல்லிவிட்டு வாயருகில் கையை வைத்துக்கொண்டு பவ்யமாகப் பேசிக் கொண்டே எழுந்து அறையைவிட்டு வெளியே சென்றான். பெரிசுகள் கந்த சஷ்டி கவசமும் சுப்ரபாதமும் வைத்துக் கொண்டிருக்கின்றன.

சிலரை அழைத்தால் முழுப்பாடலே ஓடுகிறது. ரீமிக்ஸே இல்லாத அசல் 'பொதுவாக என் மனசு தங்கம்' என்று மலேசியாவின் கணீர்க்குரல் பாடலைக்கூட இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். குழந்தையின் குரல், காதலி சிரிப்பது என்று வித்தியாசமான காலர் டோன்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் சில நேரங்களில் மகா இம்சை. தொலைபேசியில் இன்டர்வ்யூ செய்வதற்காக விண்ணப்பித்தவரை அழைத்தாலும் முழுப்பாடல் ஒலித்ததும்தான் 'அலோ யாருங்க' கேட்கிறது. எரிச்சல்! 1980-களின் இறுதியில் வேலை தேடி நிறுவனங் களை எம்மாதிரி அணுகவேண்டியிருந்தது என்பதையும் இப்போது நிறுவனங்கள் நல்ல வேலையாட்களை எவ்வாறு தாஜா செய்து அணுகவேண்டியிருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன்.

நான்கூட பொதுக்கழிப்பறையில் எனக்கு முன் நின்றவரின் எண்ணை வாங்கிக் கொண்டு ஐந்து நிமிடம் கழித்து ஒரு மிஸ்டு கால் விட (ஆச்சா?), ஐந்தாவது நொடியில் ஒரு மிஸ்டு கால் (ஆயிக்கிட்டே இருக்கு). 30வது நொடியில் இன்னொரு மிஸ்டு கால் (ஆச்சு) - ஆசாமி கதவைத் திறந்து வெளியேறிப் போனார்
முக்கியமான சந்திப்புகளில்கூட கைப் பேசியை அணைத்தோ அல்லது ம்யூட் செய்தோ வைக்கும் நாகரிகம் 90% உபயோகிப்பாரிடம் இல்லை. கல்வியகங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், ஆலயங்கள் என்று எல்லாவிடங்களிலும் கைப்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சிலர் இரண்டு மூன்று கைப்பேசிகளைக்கூட வைத்திருக்கிறார்கள். இருசக்கர வாகனத்தில் கழுத்தைச் சாய்த்துக்கொண்டோ அல்லது ஒரு கையால் வண்டி ஓட்டிக் கொண்டே, பேசிக்கொண்டோ செல்பவர்களைப் பார்த்தால் எனக்குத்தான் பயமாக இருந்தது. அலட்சியம்.

ஆனால் கைப்பேசி இன்று ஊடுருவியிருக்குமளவுக்கு வேறெந்த மின்னணுச் சாதனமும் எல்லாத்தட்டு மக்களிடமும் ஊடுருவவில்லை என்று அடித்துச் சொல்வேன். தொலைத்தொடர்பில் இது சந்தேகமில்லாமல் ஒரு மாபெரும் புரட்சி. கூலித் தொழிலாளியிலிருந்து கோடீஸ்வரன் வரை எல்லாரும் கைப்பேசி வைத்திருக் கிறார்கள். வற்றாயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலைப்பற்றி குமுதம் பக்தியிலோ எதிலோ விஸ்தாரமான கட்டுரை வந்திருந்தது. அதில் மலையின் கீழேயிருந்து மேலே வயதானவர்கள் செல்ல டோலி சேவை புரியும் மூன்று கூலித்தொழிலாளர்களின் போட்டோக்களை வெளியிட்டு அவர்களது கைப்பேசி எண்ணையும் (முன்கூட்டியே அழைத்து ஏற்பாடு செய்ய) வெளியிட்டிருந்தார்கள். இது கைப்பேசி எந்த அளவு பயன்பாட்டில் இருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்.

மிஸ்டு கால் மாஃபியா
'மிஸ்டு கால் மாஃபியா' என்றொரு கூட்டம் இருக்கிறது. கைப்பேசிச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த மி.கா.மா. பெரிய தலைவலியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். மிஸ்டு கால்களுக்குக் கட்டணம் கிடையாது என்பதை வைத்துக்கொண்டு நம்மாட்கள் பேயாட்டம் ஆடுகிறார்கள். காலையில் எழுந்ததும் காதலிக்கு ஒரு மிஸ்டு கால். அதிலும் ஏகப்பட்ட சங்கேதங்கள். ஒரு தடவை, இரண்டு தடவை என்று மிஸ்டு கால்களின் எண்ணிக்கை அடிப்படையில் சங்கேத வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அலுவலகத்தை அடைந்ததும் ஒரு மிஸ்டு கால் வீட்டுக்கு. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் மிஸ்டு கால். காரியம் முடிந்ததும் மிஸ்டு கால் என்று ஒரு நூறு காரியங்களுக்கு மிஸ்டு கால் பயன்படுத்துவது நம்மூரில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்கிறேன்.

நான்கூட பொதுக்கழிப்பறையில் எனக்கு முன் நின்றவரின் எண்ணை வாங்கிக் கொண்டு ஐந்து நிமிடம் கழித்து ஒரு மிஸ்டு கால் விட (ஆச்சா?), ஐந்தாவது நொடியில் ஒரு மிஸ்டு கால் (ஆயிக்கிட்டே இருக்கு). 30வது நொடியில் இன்னொரு மிஸ்டு கால் (ஆச்சு) - ஆசாமி கதவைத் திறந்து வெளியேறிப் போனார்.
Click Here Enlargeசெவிட்டுத் தலைமுறை உருவாகிறது
அபார்ட்மெண்ட் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்தும் இன்னும் சத்தம் அதிகமாக இருக்கக் கவனித்தால் சத்தம் பக்கத்து வீட்டிலிருந்து வந்துகொண்டிருந்தது. எதிர் வீட்டில் வேறு ஒரு சானல் பார்க்கிறார்கள் போல -- அதையும் எங்கள் வீட்டிலேயே கேட்க முடிந்தது. 'பக்கத்து வீட்டுல வயசானவங்க - காது சரியாக் கேக்காது' என்று அவ்வளவு உரத்த ஒலிக்கு விளக்கம் சொன்னார்கள். இரண்டு வீடுகளிலும் ஒரே சானல் ஓடும் பட்சத்தில் எங்கள் வீட்டில் ஒலியைச் சுத்தமாகக் குறைத்துவிடுவார்களாம்!

கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து வருடங்களில் அதிவேகத்தில் காற்று மாசடைந்து வருவது தெரிந்த சங்கதிதான். இம்முறை நான் இருந்த நாட்களில் கவனித்தது உயர் ஒலியினால் ஏற்படும் ஒலி மாசு (Noise Pollution). பொதுவாகவே எல்லாரும் உரக்கத்தான் பேசுகிறார்கள். யாரிடமும் பேச்சுக்கொடுத்தாலும் இரண்டு வாக்கியங்களுக்கு மேல் தாங்காது நாசூக்காக மெதுவாகப் பேசச் சொல்ல வேண்டி யிருந்தது. சாதாரணமாக இருவர் பேசிக் கொண்டிருந்தாலும் பார்ப்பதற்கு உரத்து வாய்ச் சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நினைக்குமளவுக்குச் சத்தமான பேச்சு. இது காது மந்தத்தில் கொண்டு விடும் - விட்டிருக்கிறது. எந்தக் குழந்தையிடம் எதைக் கேட்டாலும் முதல் முறையிலேயே பதில் வருவதில்லை. 'ம்?' அல்லது 'ஆ?' என்று பதில் கேள்வி - நான் முதலில் கேட்டதை இன்னும் நிதானமாக மறுபடியும் கேட்க பதில் சொன்னார்கள். சிலது என்னருகில் வந்து நிஜமாகவே காதைக் காட்டி 'என்ன கேக்கறீங்க?' என்றதில் ஆடிப்போய்விட்டேன். மெள்ளமாக உருவாகி வருகிறது செவிடாகிவரும் தலைமுறை.

திரையரங்கம் பக்கமே 20-30 வருடங்களாக வந்திராத என் தந்தையையும் 'பெருமாள் படம் முழுக்க வர்றாரு' என்று சொல்லி அழைத்துச் செல்ல, அவர் படம் முழுதும் காதுகளை அழுந்த மூடிக்கொண்டு பார்க்க நேர்ந்தது
தசாவதாரத்தை பாஸ்டனில் வெளிவந்த நாளன்றே பார்த்துவிட்டேன். நம்மூரில் திரையரங்கத்துக்குச் சென்று வருடக் கணக்காகிறதே என்று திருவானைக் கோவிலில் இருக்கும் திரையரங்கத்துக்கு 20 டிக்கெட்டுகள் வாங்கி மொத்தக் குடும்பத்தையும் கூட்டிச் சென்றேன். திரையரங்கம் பக்கமே 20-30 வருடங்களாக வந்திராத என் தந்தையையும் 'பெருமாள் படம் முழுக்க வர்றாரு' என்று சொல்லி அழைத்துச் செல்ல, அவர் படம் முழுதும் காதுகளை அழுந்த மூடிக்கொண்டு பார்க்க நேர்ந்தது. அவ்வளவு அதிபயங்கர ஒலியளவை வைத்திருந்தார்கள். நாங்கள் அமர்ந்திருந்தது Box-இல். Sound Effects என்பதைத் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இம்மாதிரித் திரையரங்குகளில் அதிக ஒலியளவில் நான்கைந்து முறை பார்த்தாலே காது மந்தமாகிவிடுவது நிச்சயம். நல்லவேளை அந்த அரங்கத்தில் படத்தில் ஆழ்ந்து இருக்கையில் ஏஸியை அணைத்து விடவில்லை.

பீங்க் பீங்க் வன்முறை
வாகன ஓட்டிகள் ஓயாது ஒலிப்பானை ஒலித்துக்கொண்டே இருக்கிறார்கள். கிளம்பும்போது பீங்க். பின்பு சாலையில் செல்கையில் பீங்க் பீங்க். சிக்னலில் பீங்க். முன்னால் வண்டி போனால் பீங்க். நின்றால் பீங்க். நகர்ந்தால் பீங்க். செல்லுமிடம் சேர்ந்ததும் பீங்க். வீட்டிலுள்ளவர்களுக்கு வந்ததைத் தெரிவிக்க பீங்க். வண்டியே ஓட்டாமல் சும்மா உட்கார்ந்திருந்தால் அவர்களது விரல்கள் காற்றில் ஒலிப்பானை அமுக்கிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அல்லும் பகலும் ஹாரனை ஒலித்துக்கொண்டு இருந்தால் பாம்புக்கும் காது இப்போதெல்லாம் மந்தமாகியிருக்கும்! எதையாவது சொன்னால் 'ஆ ஊ ன்னா அமெரிக்கா ஆப்பிரிக்கான்னு அலட்டிக்கிறான்யா' என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் தயங்கியே இருக்க வேண்டியிருந்தது. வரைமுறையற்ற சாலைப் போக்குவரத்தில் எவ்விதிகளும் கடைபிடிக்கப்படாமல் சர்க்கரையைக் கண்ட பிள்ளையார் எறும்புகளைப்போல வாகனங்கள் எல்லாத் திசைகளிலும் பறக்கின்றன. விபத்துகள் அனுதினமும். மக்கள் கொத்து கொத்தாகச் சாகிறார்கள். இதைப்பற்றி எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மாம்பழச் சாலையைத்தாண்டி காவிரிப் பாலத்தில் நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்க நடுப் பாலத்தில் இருக்கும்போது எதிர் திசையில் வந்த காரோட்டி என்ன செய்தார் என்பதைப் கீழே பாருங்கள்! இம்மாதிரி இருந்தால் ஏன் விபத்து நடக்காது?

உயிரைக் கையில்பிடித்துக்கொண்டுதான் சாலையில் இறங்க வேண்டியிருக்கிறது. ஆனால் என்னைத் தவிர எல்லாரும் சாதாரணமாகத்தான் போய் வந்துகொண்டு இருக்கிறார்கள். எல்லாருக்கும் பழகிவிட்டது. நான் அங்கு இருந்தால் ஓரிரு மாதங்களில் எனக்கும் பழகிவிடும். ஆனால் ஏன் இப்படி இருக்கவேண்டும்? முன்பு இருந்ததைவிடச் சாலைகள் எல்லா இடங்களிலும் இப்போது நன்றாகவே இருக்கின்றன. திருச்சியிலிருந்து மதுரைக்கு அனைத்துச் சாலை வேலைகளையும் மிஞ்சி இரண்டரை மணிநேரத்தில் சென்றுவிடமுடிகிறது. சாலை வேலைகள் நிறைவு பெற்றால் ஒன்றரை மணிநேரத்தில் சென்றுவிடலாம். திருச்சியிலிருந்து சென்னைக்கு ஐந்து அல்லது ஆறரை மணிநேரத்தில் சென்றுவிட முடிகிறது. முன்பெல்லாம் 8-9 மணி நேரம் ஆகும்.

பிரச்சினை அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள். அதையும் மிஞ்சி முறைப்படி ஓட்டாத, ஓட்டக் கற்றுக்கொள்ளாமல் ஓட்டுனர் உரிமத்தை 'வாங்கி' வண்டி யோட்டும் பொதுஜனங்கள். எல்லாரும் ஒரே ஒரு விதியைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். அது "முன்னால் செல்லும் வாகனம் - சிறிதோ, பெரிதோ - அதை உடனடியாக முந்திச் செல், பின்னால் வருபவனுக்கு வழிவிடாதே" என்பதுதான். இந்தியச் சாலைகளின் போக்குவரத்தைப் பற்றி ஏகப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள், ஒலி, ஒளித் துணுக்குகள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் பார்த்துச் சிரிக்க முடியவில்லை. அவமானமாகத்தான் ஒவ்வொருமுறையும் உணர நேரிடுகிறது. 'ஏழை நாடு', 'வளரும் நாடு' என்று நிரந்தரமாக ஜல்லியடித்துக் கொண்டே குட்டிச்சுவராக விட்டுக் கொண்டிருக்கிறார்கள். RTO அலுவலகம் என்றொரு செவ்வாய் கிரகம் இருக்கிறதே - அங்குதான் பிரச்சினையின் ஊற்று துவங்குகிறது. ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வுகளைக் கடுமையாக்கி அதில் முறைப்படித் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மட்டுமே உரிமம் என்பதைக் கடுமையாக அமல்படுத்தினாலே சில வருடங்களில் முன்னேற்றம் கண்டுவிடலாம் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன்.

ஒழுங்காகச் சாலை விதிகளை மதித்து ஓட்டினால் இவ்வளவு 'பீங்க்' தேவையில்லை - ஏன் தேவையே இல்லை. எனது 10 வருட வெளிநாட்டு அனுபவத்தில் அதிகபட்சமாக பத்து முறைக்குள்ளேதான் ஒலிப்பானை உபயோகித்திருப்பேன் - அதுவும் மற்ற ஓட்டுனர்களை ஏதாவது விஷயத்துக்காக எச்சரிக்கத்தான். இதைப்பற்றி விவாதித்து நேரத்தை விரயம் செய்து கடைசியில் நண்பனை உட்காரச்சொல்லிவிட்டு, ஸ்ரீரங்கத்திலிருந்து ஜங்ஷனுக்குச் சென்று திரும்ப வீட்டுக்கு வரும்வரை ஒருமுறை கூட ஹாரனை ஒலிக்காது ஓட்டிச் சென்று வந்து காட்டியதும்தான், அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

இன்னும் வரும்...

வற்றாயிருப்பு சுந்தர்
Share: 




© Copyright 2020 Tamilonline