சுருதி அரவிந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம் கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா கனெக்டிகட் இந்திய சுதந்திர தின விழா வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம் டெலவர் பெருநில வேலி தமிழ்ச் சங்கம் (TAGDV) கோடைச் சுற்றுலா மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம் டொரோண்டோவில் பாபநாசம் சிவன் இசைவிழா ரம்யா, அஞ்சலி சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம் டொராண்டோ வரசித்தி விநாயகர் கோவில் அருணா சாய்ராம் ஆடிப்பூரக் கச்சேரி மிசௌரி தமிழ்ச்சங்கம் வசந்த விழா
|
|
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் பேரா. சுப. வீரபாண்டியன் உரை |
|
- |செப்டம்பர் 2008| |
|
|
|
|
ஜூலை 12, 2008 அன்று, சுபவீ என்று அறியப்படும் பேராசிரியர் சுப. வீரபாண்டியனின் சொற்பொழிவு டெட்ராய்ட் நகர் (மிச்.) அருகில் உள்ள புளூம்பீல்ட் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மிச்சிகன் தமிழ்ச்சங்கமும், தமிழ் மறுமலர்ச்சி இயக்கமும் இணைந்து நடத்தின.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது நிகழ்ச்சி. தமிழ்ச்சங்கத் தலைவர் காந்தி சுந்தர் தலைமை வகித்தார். புகழ்பெற்ற பட்டிமன்ற, மேடைப் பேச்சாளரான உமையாள் முத்து அறிமுக உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய சுபவீ சுமார் ஒரு மணி நேரம் சொல்விருந்து படைத்தார். தெளிவான நடையும், கருத்தாழமும் கொண்ட அவரது பேச்சு அங்கிருந்த அனைவரையும் ஈர்த்தது. 'மொழியும் சிந்தனையும்' என்ற ஆழமான தலைப்பில் அவர் ஆற்றிய உரை, சிந்தனைக்கு அரியதொரு விருந்தாய் அமைந்தது.
சுபவீயின் தந்தையார் காரைக்குடி சுப்பையா அவர்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து சிறை சென்றவர். சுபவீயின் அண்ணன் எஸ்.பி. முத்துராமன் பிரபல திரைப்பட இயக்குநர். சுபவீ தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். பணிக்காலம் முடியும் முன்பே விருப்ப ஓய்வு பெற்று தமிழ் மொழி, இனப்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திராவிடத் தமிழ் தேசியப் பேரவையின் பொதுச்செயலாளர். இரு நாவல்கள் உட்பட பதினாறு நூல்கள், ஒலிநாடாக்கள், குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார். பெரியாரின் கொள்கைகளில் தீவிரப்பற்றுக் கொண்டவர். பெண் விடுதலை பற்றி அவர் சமீபத்தில் அமெரிக்க மண்ணில் ஆற்றிய உரை எல்லோராலும் போற்றப்படுகிறது.
இனி அவருடைய உரையின் சாராம்சம்: 'முதலாவதாக, மொழியும் சிந்தனையும் என்று இரு வார்த்தைகளால் சொல்லப் பட்டாலும் கூட, அவை ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதது. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. மொழி என்பது வெறும் கருவியே என்பதை ஏற்க முடியாது. எண்ணங்களின், சிந்தனைகளின் வெளிப்பாடே மொழியாக மலர்கிறது. மொழியைத் தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாக மட்டுமே கருத முடியாது. மொழி ஒரு கலாசாரத்தின் விளைபொருள். அக்கலாசாரத்தின் மொத்த அனுபவங்களையும் சுமந்து செல்கிறது. எனவே மொழியை வெறும் கருவியாக மட்டுமே பார்ப்பது அறிவுக்குப் புறம்பானது. எந்தக் கருவியுமே புறவயமானது. மொழி மட்டும் தான் அகவயமானது. ஒரு கலாசாரத்தின், இனத்தின் இயற்கையான விளைபொருளான மொழி, அக்கலாசாரத்தின் முதலும், முடிவுமான அடையாளமாகத் திகழ்கிறது. எனவே ஒரு மொழியின் சிதைவு, அழிவு என்பது அக்கலாசாரத்தின் சிதைவு, அழிவே என்பதில் சிறிதும் ஐயமில்லை. மொழியைப் புறக்கணித்த இனங்கள் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. மொழியைப் போற்றிய இனங்கள் வீழ்ந்ததுமில்லை. |
|
அடுத்ததாக, எந்த மொழியும் ஒன்றுக் கொன்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை. தமிழ்மொழி மிகப் பழமையான மொழியாக இருக்கலாம். அதற்காக பின்னர் தோன்றிய மொழிகளை புறக்கணிக்கத் தேவையில்லை. பழையதைப் போற்றும் அதே வேளையில் புதியனவற்றை வரவேற்கவும் வேண்டும். அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் உலகமே ஒரு சிற்றூர் போல ஆகிவிட்ட நிலையில், மக்களின் தற்காலிக அல்லது நிரந்தர இடப்பெயர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. புலம்பெயர்ந்த நிலங்களின் மொழியையும் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது அந்த மற்றுமொரு மொழியும் தாய்மொழி போலாகிறது. சமூக அறிஞர்கள் இதனை சமூகத் தாய்மொழி என்று குறிப்பிடுகின்றனர்.
சாதி என்பது உடைத்தெறியப்பட வேண்டிய ஒரு பொய்ச்சுவர். பிறப்பால் தீர்மானிக்கப்படும் சாதி, இறந்த பின்னும் தொடர்கிறது. சாதியின் படிநிலைகள் மனிதனை மனிதன் அடக்கவும், அடிமைப்படுத்தவும் துணைபோகின்றன. மதம் என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. கட்டுப்பாடுகள் இருந்தாலும் கூட ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாற வாய்ப்புண்டு. ஆனால் சாதி என்பது பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்படுவது. யாரும் சாதி மாறியதாகச் சரித்திரம் இல்லை. எனவே சாதியை அழித்தாலொழியச் சமூகம் முன்னேறாது.
இன்று உலகில் ஆறு மொழிகள் செம்மொழிகளாகக் கருதப்படுகின்றன. அவை கிரேக்கம், லத்தீன், ஹிப்ரூ, சீனம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகியன ஆகும். செம்மொழிகளில் இரண்டை இந்தியா பெற்றுள்ளதற்காகப் பெருமைப்பட வேண்டும். யாரும், தேவை மற்றும் திறமைகளைப் பொறுத்து எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். அதில் தவறேதுமில்லை. ஆனால் தாய்மொழியைப் புறக்கணித்து விட்டு பிற மொழிகளைப் பயில்வது சரியன்று.'
அவர் உரையாற்றிய பின், கேள்வி-பதில் பகுதியாக நிகழ்ச்சி தொடர்ந்தது.
எஸ்.கோபால்சாமி |
|
|
More
சுருதி அரவிந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம் கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா கனெக்டிகட் இந்திய சுதந்திர தின விழா வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம் டெலவர் பெருநில வேலி தமிழ்ச் சங்கம் (TAGDV) கோடைச் சுற்றுலா மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம் டொரோண்டோவில் பாபநாசம் சிவன் இசைவிழா ரம்யா, அஞ்சலி சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம் டொராண்டோ வரசித்தி விநாயகர் கோவில் அருணா சாய்ராம் ஆடிப்பூரக் கச்சேரி மிசௌரி தமிழ்ச்சங்கம் வசந்த விழா
|
|
|
|
|
|
|