|
|
அந்தச் சிறுவன் மிகவும் புத்திசாலி. எதையுமே எளிதில் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அவனுக்கு இருந்தது. அவன் பெற்றோருக்கு அது குறித்து மிகவும் பெருமை. இந்தியப் பாரம்பரிய முறைப்படி குழந்தையை வளர்க்க வேண்டும் என்று தாய் மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் தந்தையோ அதனை மறுத்தார். ஆங்கில மோகம் கொண்ட அவர், குழந்தை நாகரிகமாக, மேல்நாட்டுப் பாணியில் வளர வேண்டுமென விரும்பினார். ஆகவே அவன் சிறுவனாக இருக்கும்போதே படிக்க இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டார். 'சிறுவன் இந்தியர்களோடு பழகக்கூடாது, முற்றிலும் ஐரோப்பிய பாணியிலேயே அவன் வளர்க்கப்பட வேண்டும்' என்று சிறுவனைப் பாதுகாக்கும் தன் இங்கிலாந்து நண்பருக்குக் கடிதமும் எழுதி விட்டார்.
சிறுவனும் படித்தான். ஆங்கிலத்திலேயே அனைத்தையும் படித்துத் தேர்ச்சி பெற்றான். வளர்ந்தான். ஸ்பானியம், கிரேக்கம், ஜெர்மன் எனப் பல மொழிகளைக் கற்றாலும் தன் தாய்மொழியே தெரியாமல் இருந்தான். முற்றிலும் அந்நிய நாட்டவனாகவே வளர்ந்தான். ஆனாலும் நாளடைவில் தன் நாடு அந்நியர் பிடியில் சிக்கியிருப்பதையும், அதனால் மக்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதையும் உணர்ந்தான். அதற்குப் புரட்சி மூலம் விடுதலை காண்பதே முக்கியம் என்பதாக உணர்ந்து அது தொடர்பான கூட்டங்களில் கலந்து கொண்டான். இந்தியா திரும்பிய பிறகும் தன்னுடைய பேச்சாலும், எழுத்தாலும், செயலாலும் ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினான்.
சதி வழக்கில் கைது செய்யப்பட்டு நிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் மெய்யுணர்வு பெற்ற அவர், நாளடைவில் தனது விடுதலைப் பணிகளைக் குறைத்துக் கொண்டு, தியான யோக முறைகளில் ஈடுபட ஆரம்பித்தார். தன்னைச் சந்திக்கும் அனைவரிடமும் இந்தியா விரைவில் விடுதலை பெற்றுவிடும், அதில் எவ்வித ஐயமுமில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார். அதேபோன்று இந்தியா விடுதலை பெற்றது அவரது பிறந்த நாளிலேயே! இந்திய சுதந்திர தினமும், அவரது பிறந்த நாளும் ஒரே நாளில் கொண்டாடப்படும் சிறப்பும் கிடைத்தது.
யார் அவர்? |
|
விடை
சுதந்திரப் போராட்ட வீரராகவும், யுகபுருஷராகவும் விளங்கிய மகா யோகி ஸ்ரீஅரவிந்தர். அவர் பிறந்த நாள் 15 ஆகஸ்டு, 1872.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|