Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
முன்னோடி
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
- மதுசூதனன் தெ.|செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeதமிழ்ச் சூழலில் கிறிஸ்தவக் கம்பன், மீட்புக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஏச்.ஏ. கிருஷ்ணபிள்ளை. இவர் கிறிஸ்தவத் தமிழ் இலக்கியத்துக்குப் பெருவளம் சேர்த்த முன்னோடிக் கவிஞர்களுள் முதன்மையானவர். இன்றுவரை இவர் தமிழ் உலகில் இரட்சணிய யாத்திரிகம் படைத்த காப்பியக் கவிஞராகவே அறியப்படுகிறார்.

தென்பாண்டி நாடான திருநெல்வேலியில் பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள இரட்டையாபட்டி எனும் கிராமத்தில் சங்கரநாராயணபிள்ளை-தெய்வநாயகி அம்மாள் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சங்கரநாராயண பிள்ளை சிறந்த தமிழ்ப் புலவர். வைணவ பக்தர். இராமாயணம், மகாபாரதம், நாலாயிர திவ்வியபிரபந்தம், அஷ்டப் பிரபந்தம் முதலிய நூல்களை முழுமையாகக் கற்றுணர்ந்தவர். தெய்வ நாயகி அம்மாள் இராமாயணக் கவிகளைப் பாடுவதிலும் அவற்றுக்குப் பொருள் கூறுவதிலும் திறமை பெற்றிருந்தார். இத்தகைய தம்பதியினருக்கு 1827 ஏப்ரல் 23ஆம் நாள் கிருஷ்ணபிள்ளை பிறந்தார்.

பதினான்காவது வயதிலேயே கம்பராமாயணப் பாடல்களைச் சொல்லவும் அதற்குப் பொருள் கூறவும் கிருஷ்ணபிள்ளை திறமை பெற்றிருந்தார். இளமையில் பெற்ற இந்தப் பயிற்சியே பின்னர் இவர் கவிஞர் ஆவதற்குத் துணை புரிந்தது
கிருஷ்ணபிள்ளைக்கும் அவரது தம்பி முத்தையாபிள்ளைக்கும் தந்தையே முதல் குருவாக இருந்து தமிழ் கற்பித்தார். திருவரங்கக் கலம்பகம், திருவாய்மொழி, சடகோபரந்தாதி முதலிய நூல்களைச் சிறுவர்களாக இருக்கும்போதே மனப்பாடம் செய்தனர். சங்கரநாராயணபிள்ளை கம்பராமாயணச் சொற்பொழிவாளர். சொற்பொழிவு நடத்தும் பொழுது கிருஷ்ணபிள்ளையையும் உடன் வைத்துப் பழக்கி வந்தார். பதினான்காவது வயதிலேயே கம்பராமாயணப் பாடல்களைச் சொல்லவும் அதற்குப் பொருள் கூறவும் கிருஷ்ணபிள்ளை திறமை பெற்றிருந்தார். இளமையில் பெற்ற இந்தப் பயிற்சியே பின்னர் இவர் கவிஞர் ஆவதற்குத் துணை புரிந்தது. தமிழ் இலக்கண, இலக்கிய மரபுகளில் ஆழந்த ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவராக வளர்ந்து வந்தார். பிலவணர் எனும் பிராமண குருவிடம் சென்று வடமொழி அறிவையும் வளர்த்து வந்தார்.

தமது பதினாறாம் வயதில் தமது தந்தையைக் கிருஷ்ணன் இழந்தார். பின் பாளையங்கோட்டையை வந்தடைந்தார். அங்கு வள்ளல் வெங்கு முதலியார் வீட்டிலிருந்த தமிழ்ச்சுவடிகளைப் பெற்றுப் பயின்று வந்தார். பாளையங்கோட்டை வண்ணாரப் பேட்டையிலிருந்த திருப்பாற் கடல்நாதக் கவிராயரிடம் தமது ஐயங்களைக் கேட்டு விளக்கம் பெற்றுவந்தார்.

சாயர்புரம் திருமன்றப் பயிற்சிக் கல்லூரியின் தமிழாசிரியர் பணியில் 1852இல் இணைந்தார். கால்டுவெல் போன்றவர்களது அன்புக்கும் உரியவரானார். தமது தந்தையாரைப் போலவே வைணவ நெறிகளை மிகுந்த பற்றுதலோடு கடைப்பிடித்து வந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் கிறிஸ்தவப் பரவல் நடந்து வந்தது. இந்தச் சமய ஊடுருவலை உறுதியுடன் எதிர்த்துக் கலகம் செய்தார் கிருஷ்ணபிள்ளை.

சாயர்புரப் பள்ளித் தலைவராயிருந்த மறைத்திரு ஹக்ஸ்டபிள் தமிழ் கற்கக் கிருஷ்ணனின் துணையை நாடினார். ஹக்ஸ்டபிள் தொடர்பு கிருஷ்ணனின் போக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது. படிப்படியாகக் கிறிஸ்தவ நம்பிக்கையாளராக மாறத்தொடங்கினார். இதனால் கிருஷ்ணன் சென்னைக்குச் சென்று 1858ஆம் ஆண்டு முப்பத்தோராம் வயதில் திருமுழுக்குப் பெற்று முழுமையான கிறிஸ்தவரானார். பின்னர் 'ஹென்றி ஆல்ஃபிரட் கிருஷ்ணபிள்ளை' என அழைக்கப்பெற்றார்.

இவரது குடும்பமும் கிறிஸ்தவத்துக்கு மாறியது. 1864 முதல் 1875 வரை சாயர்புரத்தில் பணியாற்றினார். பின்னர் 1876இல் பாளையங்கோட்டையிலுள்ள திருச்சபைத் தொண்டர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஓய்வு நேரத்தில் சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் பாடி வந்தார்.
தமிழ் இலக்கியத்துக்கு சுதேசியக் கிறிஸ்தவர்களது பணிகள் பற்றியும் கிறிஸ்தவ இலக்கியத்துக்குத் தமிழ்ப் புலமையாளர்களது பணிகள் பற்றியும் ஆய்வார் எவரும் கிருஷ்ணபிள்ளையைத் தவிர்த்துச் சிந்திக்க முடியாது.
கிருஷ்ணன் கிறிஸ்தவராக மாறுவதற்கு முன்னர் ஜான் பனியனின் 'Pilgrim's Progress'ஐப் படித்துள்ளார். இந்நூல் தமது சொந்த அனுபவங்களையும் நிலைமையையும் வெளிப்படுத்துவதுபோல் இவருக்கு இருந்தது. இந்நூலை அடிப்படையாகக் கொண்டு 'இரட்சணிய யாத்திரிகம்' எனும் பெருங்காப்பியத்தைப் பாடத் தொடங்கினார். இது பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த 'நற்போதகம்' எனும் இதழில் பகுதி பகுதியாக வெளிவந்தது. இதைப் படித்துவந்த பலர் கிருஷ்ணனுக்கு ஊக்கம் கொடுத்தனர். பல்வேறு சோதனைகள், இழப்புக்கள் ஏற்பட்ட பொழுதும் காவியப் பணி தொடர்ந்தது. 1880க்குப் பின்னர் கல்லூரி பாளையங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு மாறியது. தினமும் ஒற்றை மாட்டு வண்டியில் கல்லூரிக்குச் சென்று வந்தார். ஆனால் காவியம் எழுதும் பணி தொடர்ந்தது.

1887இல் திருவனந்தபுரத்திலுள்ள மகா ராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அக் கல்லூரியில் தத்துவத்துறையில் பணியாற்றி வந்த மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை நெருங்கிய நண்பரானார். ஒருநாள் கிருஷ்ணன் இல்லத்துக்குப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை சென்றிருந்தார். தாம் எழுதிக் கொண்டிருந்த இரட்சணிய யாத்திரிகத்தைக் கிருஷ்ணபிள்ளை சுந்தரம்பிள்ளையிடம் தந்து, 'ஏதோ என்னால் முடிந்தவரை எனக்கிருக்கும் சிற்றறிவின் துணை கொண்டு தமிழ்த்தாயின் திருவருளை நம்பி இந்தக் காப்பியத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்' என்றார் பணிவோடு.

நிறைவுபெறாத காப்பியத்தைக் கரத்தில் ஏந்திய சுந்தரம்பிள்ளை ஆர்வத்தோடு படித்துப் பார்த்துவிட்டு 'இந்த இரட்சணிக யாத்திரிகம் உங்களுக்கு நீடிய புகழையும் நிலையான பெருமையையும் அளிக்கும்' என்று கிருஷ்ணபிள்ளையின் கைகளைப் பற்றிக்கொண்டு கூறினார். சுந்தரம் பிள்ளையின் வாக்கும் வாழ்த்தும் இரட்சணிய யாத்திரிகம் அரங்கேறியபோது பலித்தன. தமிழ் இலக்கியத்துக்கு சுதேசியக் கிறிஸ்தவர்களது பணிகள் பற்றியும் கிறிஸ்தவ இலக்கியத்துக்குத் தமிழ்ப் புலமையாளர்களது பணிகள் பற்றியும் ஆய்வார் எவரும் கிருஷ்ணபிள்ளையைத் தவிர்த்துச் சிந்திக்க முடியாது.

கிருஷ்ணபிள்ளை பெரும்பாலும் இலக்கியச் செறிவுமிக்க இறைக்காப்பியமாகவும் முத்தமிழ்க் காப்பியமாகவும் படைத்த இரட்சணிய யாத்திரிகத்தாலேயே பெரிதும் அறியப்படுகின்றார். ஆனால், இவரது படைப்புப் பணிகளும் பதிப்புப் பணிகளும் பலதிறப்பட்டவை. இதுவரை செய்யுள் நூல்கள் 3 (போற்றித்திரு அகவல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம்), உரைநடை நூல்கள் 3 (இலக்கண சூடாமணி, நான் கிறிஸ்துவைக் கண்ட வரலாறு, இரட்சணிய சமய நிர்ணயம்), தொகுப்பு நூல் 1 (காவிய தரும சங்கிரகம்) எனச் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. கிடைக்காத சில நூல்களும், குறிப்பாக இரட்சணியக்குறள், இரட்சணிய பாலபோதனை போன்றன, உண்டு. தேம்பாவணியும், இரட்சணிய யாத்திரிகமும் கிறிஸ்தவ இலக்கியத்தின் இரு கண்களாகப் போற்றப்படுகின்றன.

இரட்சணிய யாத்திரிகத்தின் மூலநூலான 'பில்கிரிம்ஸ் பிராகிரஸ்' என்பதை இங்கிலாந்து நாட்டினரான ஜான் பனியன் (1628-1688) எழுதினார். இதன் இரண்டு பாகங்களையும் சேர்த்து முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் அருள்திரு. எல். ஸ்பால்டிங்கு. பின்னர் திருநெல்வேலி மெய்ஞானபுரத்திற்கு அருகிலுள்ள பாட்டக்கரையைச் சார்ந்த அருள்திரு. சாமுவேல் பவுல் (1844-1900) 1882ஆம் ஆண்டு மொழிபெயர்த்து கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின்மூலம் 'பரதேசியின் மோட்சப் பிரயாணம்' எனும் தலைப்பில் வெளியிட்டார்.

கிருஷ்ணபிள்ளைக்கு இந்நூல் 1857இல் தனுக்கோடி ராஜூ மூலம் கிடைத்தது. இந்நூல் கிருஷ்ணபிள்ளை கிறிஸ்தவராக முழுமையாக மாறுவதற்கும் இரட்சணிய யாத்திரிகம் எழுதுவதற்கும் மூலமாக அமைந்தது எனலாம். கிருஷ்ணபிள்ளை தம் காலத்தில் கிடைத்த மொழிபெயர்ப்பு நூல்களை அடிப்படையாகக் கொண்டு இரட்சணிய யாத்திரிகத்தை எழுதத் தொடங்கினார். 1878 ஏப்ரல் முதல் 'நற்போதகம்' எனும் இதழில் இரட்சணிய யாத்திரிகம் வெளிவரத் தொடங்கி, 1891இல் காப்பியம் நிறைவுற்றது. 1891 நவம்பர் மாதம் இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு பாடல்களைத் தொகுத்து நூலாக அச்சிட்டுப் பலருக்கு அனுப்பினார். மிகுந்த முயற்சியின் பேரில் 1894ஆம் ஆண்டு மே மாதம் இரட்சணிய யாத்திரிகம் முழுமையாகக் கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தால் வெளியிடப்பட்டது.

கிருஷ்ணபிள்ளை தம் காலத்து ஆளுமைகளான வேதநாயகம்பிள்ளை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோரிடம் நட்புக் கொண்டவராக விளங்கினார். சிறந்த கிறிஸ்தவராக, சிறந்த பண்பாளராக விளங்கி வந்தார்.

1899 டிசம்பர் மாதம் நோய்வாய்பட்டார். 1900 பிப்ரவரி 3ம் நாள் இவரது உயிர் பிரிந்தது. 73ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமாக அடையாளம் காணும் முன்னோடி ஆளுமையாக எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை உள்ளார். தமிழ் கிறிஸ்தவ இலக்கிய மரபில் இவர் பெரும் சாதனையாளராவே உள்ளார்.

மதுசூதனன் தெ.
Share: 




© Copyright 2020 Tamilonline