|
|
|
ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை
மாலை நேரங்களில் நகரின் மையத்தில் உள்ள கடைகளைச் சுற்றி வருவோம். அங்குள்ள 14, 15ம் நூற்றாண்டு கட்டிடங்கள் கடையமைக்க வசதியானவை. அதனால் அங்கு ஏராளமான கடைகள் இருக்கின்றன. அகல வீதியின் ஒரு மூலையில் அடுக்கு மாடியில் 'தில்லான்ஸ்' புத்தக நிலையம் இருக்கிறது. தாண்டிச் சென்றால் சாலையின் எதிர்ப்புறத்தில் Discount Book shop. அடுத்த கட்டிடத்தில் புகழ்பெற்ற, அநேகமாக உலகிலேயே மிகப்பெரியதான பிளாக்வெல்ஸ் புத்தக நிலையம். பூமிக்கடியில் ஐந்து கி.மீ. நீளம் புத்தக அலமாரிகள் வைக்க இடம் கொண்டது என்ற பெருமை அந்நிலையத் திற்கு உண்டு. இது நகர மையத்தில் பாதிதூரம் நீள்கிறது. அரிய புத்தகங்கள், தேசப்படங்கள், புராதன நூல்கள் ஆகிய வற்றை விற்பனை செய்யும் பழைய கடைகள் பலவும் இங்கு உண்டு. ஆக்ஸ்பாம் கடையில் பழைய புத்தகங்களும் வாங்கலாம்.
இங்கு பல ஆண்டுகள் தங்கி இருந்த மாணவர்கள், அந்தத் தெருவில் கிடைக்கும் பல நினைவுப் பொருட்களில் சிலவற்றை வாங்கிச் செல்வர். அதே தெருவில் 'ஆகஸ்போர்ட் ஸ்டோரி' என்ற மற்றொரு கவர்ச்சிகரமான இடம் உள்ளது. அது ஆக்ஸ்போர்ட் வரலாற்றுச் சுற்றலாவுக்கு நம்மை இட்டுச் செல்லும். அங்கிருந்து மிக அருகில் 'ஆக்ஸ்போர்ட் ரிக்ஷா' நிறுத்தம் உள்ளது. (ஆக்ஸ்போர்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நகரமையத்தில் கார்களுக்குப் பதிலாக ரிக்ஷாக்கள் பயன்படுத்துவதை விரும்புகின்றனர்.) ஒருநாள் ஆக்ஸ்போர்ட் மேயரும், அவரது துணைவியாரும் மிக சாவதானமாக ரிக்ஷாவில் சவாரி போவதைப் பார்த்தபோது நான் நம் நாட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்.
உண்மையில் ஆக்ஸ்போர்ட் ஒரு சங்கீத மண்டலம். அங்கு ஏராளமான மாதா கோவில்கள் உள்ளன. அவற்றிலிருந்து எப்போதும் சேர்ந்திசைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அங்குள்ள சங்கீதக் கல்லூரிகளில் புகழ்பெற்ற 'ஆகஸ்போர்ட் சிம்போனி ஆர்க்கெஸ்ட்ரா' நடந்து கொண்டிருக்கும். எல்லாவற்றையும் விடச் சிறப்பு அங்கிருக்கும் தெருப்பாடகர்கள்தாம். நாம் அவ்வழியாக நடந்து செல்லும்போது தெருவின் ஒவ்வொரு மூலையிலும், சந்திப்பிலும் தெருப்பாடகர்களைக் காண முடியும். ஆக்ஸ்போர்டைத் தவிர வேறு எங்கும் தெருக்களில் இவ்வளவு சங்கீதம் இசைக்கப் படுவதை நான் பார்த்ததில்லை. ஆக்ஸ் போர்டின் இசை கலந்த இந்த இயற்கை அழகை என் நினைவில் நிறுத்திக் கொள்ள, இந்தப் பாடகர்களைப் பலமுறை நான் படம்பிடித்துள்ளேன். பார்க்க அழகாக இருந்த ஒருவன் நகர மண்டபத்திற்கு அருகில் பேக்பைப்பரை இசைத்துக் கொண்டிருந்தான். இன்னொருவன் வழக்கமான பட்டாணிய ஆடை, தலைப்பாகையுடன் ஆக்ஸ்பாம் அருகில் நின்று கொண்டிருந்தான். சான்ஸ்பரி அருகில் உள்ள ஒரு சதுக்கத்தில் வாத்தியக் குழு ஒன்று முழுமையான இசையை முழக்கிக் கொண்டிருந்தது. ஒரு இளைஞன் கால்சட்டை அணிந்து மற்ற வாத்தியங்களுடன் வயலினில் வாசித்துக் கொண்டிருந்தான். கடைகளில் சாமான்கள் வாங்கிக் கொண்டு சோர்வுடன் வெளியே வந்ததும் வாத்தியக் குழுவின் இசை புத்துணர்ச்சி ஊட்டியது. ஜிப்ஸிகளைப் போலத் தோற்றம் அளித்த கூட்டத்தினர் பொதுநூலகத்துக்கு வெளியே வண்ண மயமான உடை அணிந்து பேரிகையுடன் நீண்ட புதுமையான மரக்குழாய் வாத்தியத்தில் இசை எழுப்பினார்கள்.
கிறிஸ்துமஸ் சமயத்தில் பொருட்கள் வாங்க கடைத் தெருவில் கூட்டமாக இருக்கும். அப்போது தெருப்பாடகர்கள் அதிகமாகக் கூடி விடுவார்கள். அவர்களுடைய பெட்டிகள் காசுகளால் நிறையும். தெருப்பாடகர்களின் கீதம் நகர மையத்தின் கூச்சல் குழப்பத்தை அதிகரித்துச் சுறுசுறுப்பை உண்டாக்கும். கல்லூரிக்குள் இருந்த தீவிர வாழ்க்கைக்கு ஒரு நிம்மதியான மாற்றாக இந்தச் சங்கீதம் இருந்தது. அடுத்தமுறை நீங்கள் பிரிட்டனுக் குச் செல்லும்போது ஆக்ஸ்போர்டு சங்கீதத்தின் ஒலியைக் கேட்டு ரசிக்க மறவாதீர்கள்.
ராணி எலிசபெத் இல்லம்
ராணி எலிசபெத் இல்லம் செயிண்ட் கில்ஸ் 21ல் இருந்தது. உண்மையில் இதை அசல் காமன்வெல்த் கழகம் என்று வர்ணிக்கலாம். எலிசபெத் முடிசூட்டிக் கொண்டு இங்கிலாந்தின் ராணியானதும், அவரே இதன் தலைவியானார். இது இப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இயங்கி வருகிறது. இந்தக் கழகத்தின் இயக்குநர் ·பிரான்ஸிஸ் ஸ்டூவர்ட் என்ற கூர்த்த அறிவுகொண்ட பெண்மணி; புகழ்பெற்ற அறிஞர். ஆப்பிரிக்காவைப் பற்றி அனைத்தும் ஆராய்ந்த திறமைசாலி. ஆராய்ச்சியாளர்களின் திட்ட ஒருங்கிணைப் பாளர். பேராசிரியர் ஜார்ஜ் பீட்டர்ஸ், ராணி எலிசபெத் இல்லத்தின் உதவி இயக்குநர். இவர் வேளாண்மைத் துறை அறிஞர்.
1997-98ல் நடந்த கருத்தரங்கில் ஒரு விவாதப்பொருள் 'சுற்றுலாவும் பெண்களும்' என்பது. 'சுற்றுலா செல்லும் ஆங்கிலப் பெண்கள் துருக்கிய ஆண்களை மணந்து கொள்ள துருக்கியிலேயே தங்கிவிடுகிறார்கள்' என்று கூட விவாதம் இருக்கும். இந்த அரங்கத்தில் தமிழ்நாட்டில் 'தரங்கம்பாடியில் பெண்கள் நடத்திய சுற்றுலா' என்ற கட்டுரையை நான் படித்தேன். எனது தோழி மரியா 'கம்யூனிஸ்ட் சீனாவில் முஸ்லிம் பெண் இமாம்கள்' என்ற தலைப்பில் கவர்ச்சிகரமான ஆய்வுக் கட்டுரையைப் படித்தாள். அதற்கு ஈடான ஆர்வத்தைத் தூண்டும்படி, 'பாகிஸ் தானில் கெளரவப் பெண்கொலைகள் பற்றி பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் கட்டுரை படித்தார்.
உண்மையில் ஆக்ஸ்போர்டைச் சுற்றி எவ்வளவோ நடந்து கொண்டுதானிருக்கிறது. அவைகளைப்பற்றி அதிகம் வெளியே தெரியாது. ஆக்ஸ்போர்ட் யூனியனில் நடைபெறும் இரவு நேரப் பேச்சுக்கள்தாம் எனக்குப் பிடித்தவை. அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் 'துப்பறியும் முதல் தலைமைப் பெண் நிபுணரை' சந்தித்தோம். அவர் ஒரு குற்றவாளியை கொடூரமான கொலைகாரன், பெண்களைக் கற்பழித்தவன் என்று சந்தேகப்பட்டு அவனைத் தன் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டிருந்ததைப் பற்றி விவரிக்கக்க் கேட்டோம். அது மன உறுதியும் அபாயமும் நிறைந்த ருசிகரமான கதை. |
|
மறக்க முடியாத ஷர்லி
'அரசியலில் பெண்களுக்கு அதிகாரம்' என்னும் பொருள் பற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய எனக்கு ராணி எலிசபெத் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. எனது வழிகாட்டியாக ஒரு சிறந்த கல்வி நிபுணரைத் தேடிக் கொண்டிருந்தேன். பெண்களுக்கான பன்முக கலாசார ஆராய்ச்சி மையத்தின் (பெ.ப.க. மையம்) நிறுவன இயக்குனரும், மானுடவியல் அறிஞருமான ஷர்லி ஆர்ட்னரைச் சந்தித்தேன். இந்த மையம் 1972ல் மகளிர் மானுடவியல் கருத்தரங்கமாக அமைக்கப் பட்டது. பிறகு 1983ல் இது முன்னர் குறிப்பிட்ட பெயரில் (C.C.C.R.W - Centre for the Cross-Cultural Research for Women) மாற்றப்பட்டு அவரே அதன் இயக்குனரானார். பின்னர் பொறுப்பைத் தன் சகாக்களிடம் ஒப்படைத்துவிட்டு, மையத்தின் இணை ஆய்வாளராகப் பணியில் ஈடுபட்டார்.
புகழ்பெற்ற சமூக மானிடவியல் அறிஞரும் தமது கணவருமான எட்வின் ஆர்ட்னருடன் சேர்ந்து ஷர்லி, கேமரூனில் ஏற்றுக்கொண்ட வேலையைப் பற்றியே அவருடைய இதயம் சிந்தித்துக் கொண்டிருந்தது. மானுடவியல் பற்றிய அவருடைய ஆய்வுக்குப் பதக்கம் கிடைத்தது. பிறகு ஆராய்ச்சி மையத்தில் அவர் ஆற்றிய அரும்பணிக்காக Order of the British Empire விருது அவரை அலங்கரித்தது.
அவரைச் சந்திப்பதற்கு முன்பே கட்டுக் கட்டாக காகிதங்களுடன் ஆராய்ச்சி மையம் நோக்கி அவர் நடந்து செல்வதைப் பார்த்தேன். அவரது தோளில் இந்தியத் துணிகளால் தைக்கப்பட்ட வண்ணமயமான ஒரு பை தொங்கிக் கொண்டிருந்தது. காதில் நீண்டதோடும், கழுத்தில் மணிமாலையும் அணிந்திருந்தார். அவர்ஆழ்ந்த சிந்தனை யுள்ள ஒரு பேரறிஞர். பெண்மையில் பெருமிதம் கொள்ளும் ஒரு பெண்ணியவாதி. மதிநுட்பமும் நாகரிகப் பண்பும் உள்ளவர். எதையும் தன் மனத்தில் உள்வாங்கிக் கொண்டு விரைந்து வினையாற்றும் விவேகி. ஆயினும் அவருடைய கண்களில் பாசமும் கருணையும் தவழும். தன்னை அலங்கரித்துக் கொள்வதில் நாட்டமுள்ளவர். தான் ஒரு பெண் என்பதை ஒவ்வோர் அங்கத்திலும் எடுத்துக்காட்டும் வயதுக்கு மீறிய அழகுள் ளவர். அவரால் நான் வசீகரிக்கப் பட்டுவிட்டேன். எனது வேலைக்கு வழி காட்டுமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். நான் சொல்லியதை ஆர்வத்தோடு கேட்டார். ஆனால் இந்தியாவைப் பற்றிய ஆய்வு எதிலுமே இதுவரை ஈடுபட்டதில்லை என்று சொன்னார். அவரது வேலையின் எல்லை 'காமரூன்' பகுதிக்குள் அடங்கியது என்றார். தன் கைகளில் வேலைகள் நிறைந்து விட்டதாகவும் மேற்கொண்டு எதையும் ஒத்துக்கொள்ள இயலாதென்றும் தெரிவித்து விட்டார்.
பேரா. பீட்டர்ஸையும் எனது தோழி மரியாவையும் அணுகி எனக்காக ஷர்லியிடம் பேசிச் சம்மதிக்க வைக்கும்படிக் கேட்டுக் கொண்டேன். இறுதியாக அவர் சம்மதித்தார். ஆக்ஸ்போர்டில் எனது எஞ்சிய காலமும், ஆய்வும் அம்மையாரின் பாதுகாப்பில் பத்திரமாகவும், அன்பான, அக்கறையான வழிகாட்டுதலுடனும் தொடர்ந்தது.
எப்போதும் மேஜையருகில் அமர்ந்திருக் காமல், வெளியில் சென்று முக்கியமான பதவிகளில் உள்ளோரை நேர்காணும்படி வற்புறுத்துவார். அவரது செல்வாக்கினால் மேயர்கள், உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், அரசு அல்லாத தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மந்திரிகளையும்கூட என்னால் சந்திக்க முடிந்தது. நான் இங்கிலாந்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குப் பயணம் செய்தேன். தொழிலாளர், பெண்கள் மாநாடுகளுக்கும் சென்றேன். அங்கு பிரதான விருந்தினராக வந்திருந்த பிரிட்டிஷ் அரசின் அயல்துறைச் செயலர் ராபின் குக் அவர்களிடம் நேர்காணல் நடத்தினேன். இறுதியாக டுனீஷியாவில் நடந்த ஒரு மகாநாட்டிற்கு வந்திருந்த பிரிட்டன், கனடா நாடுகளின் தலைவர்கள் மற்றும் அறுபது பேர்களைப் பேட்டி கண்டு முந்நூறு பக்கங்கள் எழுதினேன். தெருமுனை அரசியல் கூட்டங்களில் பெண்கள் பங்கு கொள்வதை என்னை கவனிக்கும்படிச் செய்தார். நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களுக்கும், பிரபுக்கள் சபைக்கும், காமன்ஸ்சபையில் பிரதமரின் கேள்வி பதில் நேரத்திற்கும் சென்று கவனித்து வரும்படிச் செய்தார்.
என்னால் சந்திக்க முடிந்தது. நான் இங்கிலாந்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குப் பயணம் செய்தேன். தொழிலாளர், பெண்கள் மாநாடுகளுக்கும் சென்றேன். அங்கு பிரதான விருந்தினராக வந்திருந்த பிரிட்டிஷ் அரசின் அயல்துறைச் செயலர் ராபின் குக் அவர்களிடம் நேர்காணல் நடத்தினேன். இறுதியாக டுனீஷியாவில் நடந்த ஒரு மகாநாட்டிற்கு வந்திருந்த பிரிட்டன், கனடா நாடுகளின் தலைவர்கள் மற்றும் அறுபது பேர்களைப் பேட்டி கண்டு முந்நூறு பக்கங்கள் எழுதினேன். தெருமுனை அரசியல் கூட்டங்களில் பெண்கள் பங்கு கொள்வதை என்னை கவனிக்கும்படிச் செய்தார். நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களுக்கும், பிரபுக்கள் சபைக்கும், காமன்ஸ்சபையில் பிரதமரின் கேள்வி பதில் நேரத்திற்கும் சென்று கவனித்து வரும்படிச் செய்தார்.
ஒரு மாணவி என்ற முறையில் நான் ஷர்லிக்குக் கடன்பட்டவளாக இருந்தேன். எனது ஆங்கில அறிவு போதுமானதாக இல்லை. மீண்டும் அத்தகைய பிழைகளைச் செய்யமாட்டேன் என்ற நம்பிக்கையுடன் எனது தவறுகளைத் திருத்த மணிக்கணக்கில் நேரம் செலவிட்டார். நான் நேர்காணலுக்குச் செல்லும்போது பெண்களிடம் நேரடியாகச் சொந்த விஷயங்களை பற்றிக் கேட்டு விடுவேனோ என்று கவலைப்பட்டார். எப்படிப் பேச வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். வெறுப்பை உண்டாக்கிவிடாமல், தேவையான தகவல்களைச் சாமர்த்தியமாகக் கிரகித்துவிட வேண்டும் என்று விளக்கினார். சுருக்கமாக, சுற்றி வளைத்துப் பேசி எப்படி வாயைப் பிடுங்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார். சமயங்களில் உரக்கத் திட்டுவார். ஆனால் பின்னர் எனக்குமாகச் சேர்த்து சமையல் செய்து அன்புடன் பரிமாறுவார். எனக்கு வீட்டு நினைவு வந்து சோர் வுற்றிருக்கும் போது என்னை தன் வீட்டுத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று தேநீரும் பிஸ்கட்டும் கொடுத்து உற்சாகமூட்டுவார். தன்னுடைய வண்ணச் சித்திரங்களைக் காட்டி என்னை மகிழ்வித்து ஆறுதல் கூறுவார்.
μர் இந்தியப் பெண் என்ற முறையில் என் நெஞ்சத்தை நெகிழ வைத்தது தன் கணவர் எட்வின் ஆர்ட்னர் மீது அவர் வைத்திருந்த மெய்க்காதல்தான். எட்வின் ஆக்ஸ்போர்டிலுள்ள செயின்ட் ஜான் கல்லூரிவிரிவுரையாளர். லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் பட்டம் பெறுவதற்கு முன்னரேஇருவரும் சந்தித்து, பின் ஒன்றாகக் கேமரூனில் பணிபுரிந்தனர். 1987ல் அவரைஇழந்தார். ஆயினும் அவரைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு முறையும் ஷர்லியின் கண்கள் பனித்துவிடும். ஒரு பெண்ணியவாதி தன் கணவரிடம் இப்படிப்பட்ட அர்ப்பணிப்புக் காட்டுவதை அர்த்தமற்றது என்று பலர் கருதலாம். ஆனால் அவர் 'துணைவர்கள்' என்ற காலத்துக்கு முற்பட்ட, பண்டைக்கால சம்பிரதாயமான மனைவி.
ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|