|
தென்றல் பேசுகிறது |
|
- |மே 2008| |
|
|
|
பதின்மூன்று என்ற எண்ணைக் கண்டாலே வெள்ளைக்காரருக்கு ஒவ்வாது. அதிலும் பதின்மூன்றாம் தேதி வெள்ளிக் கிழமையாகி விட்டால் அவ்வளவுதான்! டீ.வி. திரையில் ரத்தம் சொட்டும் கோரைப்பல்லும், அரிவாள் நகமும், பனிவெள்ளை ஆடையும் சாம்பல்பூத்த உடலுமாய் மிதக்கும் பேய்களும், ரத்தக் காட்டேரிகளும், ஓநாய்களும் இரவெல்லாம் உலா வரும்.
ஆனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு (ISRO) அதன் 13வது ஏவல் மிகச் சிறப்பானதாக அமைந்தது. ஒரே மூச்சில் 10 துணைக்கோள்களை வானில் அனுப்பி ஓர் உலக சாதனை செய்தது. ஏப்ரல் 28, 2008 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எய்யப்பட்ட PSLV-C9 ஏவு வாகனத்தில் ரிமோட் சென்ஸிங் துணைக்கோளான CARTOSAT-2Aவைத் தவிர ஒரு இந்தியக் குறுந்துணைக் கோள் (IMS-1), 8 நேனோ துணைக்கோள்கள் ஆகியவை இருந்தன. இந்த நேனோ துணைக்கோள்கள் பிறநாடுகளின் சார்பாக அனுப்பப்பட்டவை. இது பாரதத்தின் குறிப்பிடத்தக்க சாதனை என்பதில் தென்றல் பெருமை கொள்வதோடு, இத்துடன் தொடர்புள்ள விஞ்ஞானிகளையும், தொலைநோக்குடன் நமது விண்வெளித் திட்டத்தை வகுத்த வானவியல் முன்னோடி களையும் பாராட்டுகிறது. ***** இப்போதைக்கு இந்தியாவின் போதைமருந்து கிரிக்கெட். அதிலும் T20 முழுக்க முழுக்க ஒரு சர்க்கஸ்தான். வேகம், ஜொலிப்பு, ஏராளமான பணம் என்று இவை போதாததற்கு ஒவ்வொரு பவுண்டரிக்கும் விக்கெட்டுக்கும் உடல்தெரியக் கவர்ச்சி நடனம் ஆடும் இறக்குமதி ஆன சியர் லீடர்கள். 'இது கிரிக்கெட் அல்ல, கேளிக்கை' என்கிறார்கள் சிலர்; 'இதுவும் ஒரு புதுமை. எல்லாப் புதுமையும் வந்தவுடன் எதிர்க்கப்படும். நாளாவட்டத்தில் சரியாகிவிடும்' என்பது இன்னும் சிலரின் விடை. ஆனால் இருபதே ஓவர்களில் 240 ரன்வரை கூட எடுத்துவிடுகிற ஆட்டம் நிச்சயமாகப் பொறி பறக்கத்தான் செய்கிறது.
ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் பல லட்சம் டாலர்களைக் கொடுத்து ஏலத்தில் எடுத் திருக்கும் அம்பானி, விஜய் மல்லய்யா, ப்ரீத்தி ஜிண்டா, ஷாருக் கான் ஆகியோர் கிரிக்கெட் மீது கொண்ட பாசத்தினால் மட்டும் இதைச் செய்யவில்லை. தமது அணியின் வெற்றி தோல்வி அவர்களுக்கு ஏற்படுத்துவது சுக துக்கங்களை மட்டுமல்ல. வணிகரீதியான லாப நஷ்டத்தையும்தான். எனவே, விளையாட்டு வீரர்கள் மீது அதன் விளைவு உடனடியாகப் பாயும். இதனால் ஏற்படும் மன அழுத்தம் கொஞ்சநஞ்சமல்ல. தமது திடீர் கோபங் களுக்கும், களத்தில் அவமதிப்பான நடத்தைக் கும் பிரசித்தி பெற்ற ஹர்பஜன் சிங் அவருக்குக் கொஞ்சமும் குறைவில்லாத ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்ததைப் பார்க்க நமக்கு வேதனையாக இருக்கிறது. மேத்யூ ஹேடன் 'Obnoxious little weed' என்று ஹர்பஜனை வர்ணித்தது சரிதான் என்றுகூடத் தோன்றாமல் இல்லை. இவ்விருவரும் தென்னா·ப்ரிக்க வீரர்களைச் சென்ற தொடரில் மிகவும் இழிவுசெய்ததாக அதன் கோச் இப்போது கூறியிருக்கிறார். ஆடுகளத்தில் எதையும் பெருந்தன்மையாக எடுத்துக்கொள்வதை sportsmanship என்று கூறுவார்கள். இப்போது அந்தச் சொல்லுக்குப் பொருளே எதிர்மறையாக ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ***** |
|
கிரிக்கெட்டுக்கு இணையான மற்றொரு போதை சினிமா. சின்னத் திரையிலும் சினிமாவும் சினிமா நபர்களும் பெரிய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறார்கள். ஏன், தமிழுக்கு விழா என்று சொல்லும் இடங்களிலும் தமிழக சினிமாக் காரர்கள் வந்தால்தான் கூட்டம் சேர்கிறது. ஆனால், அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துள்ள சிலர் இங்கே சினிமாத் துறையில் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளனர். மொழி, பெரிய தயாரிப்புச் செலவு, கலாசார வேறுபாடு ஆகிய பலவகை இடைஞ்சல்களுக்கு நடுவில் அவர்கள் சவாலான கருத்துகளுக்குத் திரை வடிவம் கொடுத்து வருகிறார்கள். கானிலும் பிற திரைப்பட விழாக்களிலும் பெறும் கோப்பைகள் அவர்களுக்கு ஆத்மதிருப்தியைத் தரலாம். ஆனால் வணிக ரீதியான வெற்றிதான் மேலும் இதே துறையில் தொடர்ந்து சாதிக்க ஏதுவாகும். ஆற்றலும், ஊக்கமும் கொண்ட மூன்று தயாரிப்புக் குழுக்களை காந்தி சுந்தர் இந்த இதழில் சித்திரித்திருக்கிறார். இரத்தினம் சூரியகுமாரனின் 'யாழினி', அம்புஜவல்லி தேசிகாச்சாரியின் 'அன்னையர் தினம்' ஆகிய கதைகள் நெஞ்சைத் தொடுபவை. ஹேமா ராமநாதனின் 'அம்மாவுக்கு ஒரு கடிதம்...' நீங்களோ நானோ எழுதியதாகக்கூட இருக்கலாம். வழக்கம்போல என்.சுவாமி நாதனின் 'டின்னர்' உங்கள் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கத் தவறாது. 'ஒரு வேலையிழப்பும் தற்கொலையும்' என்ற செய்தித் துணுக்கு சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. விரைந்து சரிந்துகொண்டிருக்கும் பொருளாதாரச் சூழலில் இன்னும் வேலை யிழப்புகள் வரலாம் என்கிற அபாயநிலையில், தமது சமுதாயத்தின் தனிநபர்களை சிலகால மாவது தாங்கிப் பிடிப்பதற்கான அமைப்புகளை இந்தியர்கள் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அது சுட்டிக்காட்டுகிறது. ***** தென்றல் வாசகர்களுக்கு அன்னையர் தின, மே தின வாழ்த்துகள்.
மே 2008 |
|
|
|
|
|
|
|