Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது
- |ஜூன் 2008|
Share:
Click Here Enlargeஜூன் மாதம் வந்ததும் ஒரு நிம்மதி. ஒரு வழியாக ஜனாதிபதி போட்டிக்கான பிரதிநிதித் தேர்தல்கள் முடிவடைந்துவிடும் என்று. தனது கட்சியையே சேர்ந்த ஹிலரி கிளிண்டனை ஒபாமா நடத்திய விதம் அவ்வப்போது நெருடத்தான் செய்தது. ஒபாமாதான் ஜனாதிபதி வேட்பாளராகப் போகிறார் என்பது கிட்டத்தட்ட நிச்சயமாகிவிட்ட நிலையிலும், சில புள்ளி விவரங்கள் ஹிலரி தொடர்ந்து போரிடுவதை நியாயப்படுத்துகின்றன. ஒருவேளை நாளைக்கே ஒபாமா ஜனாதிபதியாகிவிட்டாலும், கட்சியின் சக-போட்டியாளரை லாகவமாகக் கையாளத் தெரியாத இவர் பன்னாட்டு அரசியல் நிலவரத்தை எப்படி லாகவமாகக் கையாளப் போகிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாமலில்லை.

***


சர்வதேச எண்ணெய் விலையும் இந்தியாவில் நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணும் கைகோத்துக் கொண்டு மேலேறி வருகின்றன. அரசு செய்வதறியாமல் விழிக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு அரிசி ஏற்றுமதியைத் தடை செய்தது. இதன் எதிரொலி அமெரிக்காவில் கேட்டது. உடனே சிறுபிள்ளைத்தனமான கருத்து வழங்கலுக்குப் பிரபலமான ஜார்ஜ் புஷ் 'இந்தியாவிலும் சீனாவிலும் வருமானம் அதிகரித்துவிட்டது. எல்லோரும் நிறையச் சாப்பிடத் தொடங்கி விட்டார்கள். அதனால் உணவுப் பொருள்களின் விலை ஏறிவிட்டது' என்று திருவாய் மலர்ந்தார். ஏதோ வளரும் நாடுகள் பட்டினி கிடந்தால்தான் அமெரிக்காவுக்கு நல்லது என்பதுபோல இது தொனித்தது. ஓர் இந்தியர் உட்கொள்ளும் உணவைப் போல ஐந்து மடங்கு உணவை ஓர் அமெரிக்கர் உட்கொள்கிறார் என்ற புள்ளிவிவரம் அதே நேரத்தில் வெளியானது.

***


புவிச் சூடேற்றம் காரணமாக உலகின் பல பகுதிகளில் நிகழும் இயற்கைப் பேரழிவுகள் மக்களையும், மிருகங்களையும், விளைபொருள்களையும் நிர்மூலம் செய்கின்றன. பருவகாலம் தப்பி மழையும், சூறாவளியும், வெள்ளமும், வெப்பமும், பனிப்பொழிவுமாக இயற்கை கட்டவிழ்த்து விடுகின்றது. இதையும் வழக்கமானதுதான் என்பதுபோல ஏற்கும் நிலைக்கும் நாம் வந்துவிட்டோம். 'இல்லை, நாம் செய்த தவறுகளுக்கான தண்டனை இது. தனக்கென்று சட்டதிட்டங்களோடு இயங்கும் இயற்கையை நாம் அவமதித்தால், அது நம்மைத் துன்புறுத்துகிறது. நம் வழிகளைத் திருத்திக்கொண்டு பரிகாரம் தேட வேண்டும்' என்ற எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். சுற்றுச்சூழல் ஏதோ அரசுகளின் பொறுப்பு என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நாம் நம்மாலானதை உடனடியாகச் செய்ய வேண்டும்.

***
அன்பு, அரவணைப்பு, மனிதநேயம், பரிவு, என்பதாகப் பேசுகிறவர், செய்கிறவர் மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள். அவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் இந்த நேரத்தில் அவரது திருவுருவத்தை அட்டையில் தாங்குவதில் தென்றல் பெருமையடைகிறது. அவரைப் பற்றிய சிறப்புக்கட்டுரை ஒன்று அவரது வாழ்க்கை, சாதனைகள், போதனைகள் ஆகியவற்றை விவரிக்கின்றது.

இந்த இதழில் நேர்காணப்பட்டிருக்கும் மிச்சிகன் டாக்டர் கிருஷ்ணகுமாரும் ஓர் ஆன்மீகவாதியே. தனது பலகுரல் பாட்டுத் திறனால் 22 ஆண்டுகளாக அமெரிக்க ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐங்கரனின் ஒரு குறு நேர்காணலும் உள்ளது. தவிர, டாக்டர் C.சந்திரமௌலி (IT செயலர், தமிழக அரசு) தமிழ்க் கணினிப் பயன்பாட்டைத் தகுதரப்படுத்தல் பற்றிக் கூறியுள்ள கருத்துகளும் சிந்திக்கத்தக்கன. திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரின் தலவரலாறு, 'புன்னகைக்கும் எந்திரங்கள்' என்ற அறிவியல் கதை என்று இந்த இதழ் மிகச் சுவையான கதம்பமாக உருவாகியிருக்கிறது. வழக்கம்போல அறிவுக்குச் சவால்விடும் குறுக்கெழுத்துப் புதிர் உள்ளது.

***


அக்ஷய் ராஜகோபால் என்ற சிறுவர் புவியியல் தேனீ (Geography Bee) பரிசைத் தட்டிச் சென்றிருக்கிறார். மதுரையைச் சேர்ந்த அரவிந்த் கண் மருத்துவமனை 'Gates Award for Global Health' விருதாக ஒரு மில்லியன் டாலரை வென்றிருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் தென்றல் இன்னும் முழுமையான தகவல்களைத் தரவேண்டியுள்ளது. தமிழர்கள் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள் என்பதற்கு இவை சான்று. வேலை கூடிவிட்டது தென்றலுக்கு. மகிழ்ச்சிதான்.

***


பெரிய மைய அமைப்புகளான தமிழ்நாடு அறக்கட்டளையும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையும் தத்தமது வருடாந்திரத் தமிழ் விழாக்களை அடுத்த மாதம் நடத்துகின்றன. இரண்டிலும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு முத்தமிழ் விருந்துகளை வழங்குகிறார்கள். இவ்விழாக்கள் வெற்றிபெறத் தென்றல் வாழ்த்துகிறது. படைப்பாளிகளும் வாசகர்களும் தென்றலுக்குத் தொடர்ந்து எழுதுங்கள்.


ஜூலை 2008
Share: 




© Copyright 2020 Tamilonline