Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நூல் அறிமுகம்
அய்ன் கார்ஸன் - விஜய் வைத்தீஸ்வரன் எழுதிய Zoom - The Global Race To Fuel the Car of the Future
- சுந்தரேஷ்|ஜனவரி 2008|
Share:
Click Here Enlargeஎரிசக்தித் தட்டுப்பாடு, எண்ணெய்சார் பொருளாதாரம், சூழல் மாசுபடுதல் ஆகியவை இன்று உலகத்தை எதிர் நோக்கியுள்ள மாபெரும் சவால்கள் ஆகும். இரண்டாம் உலகப்போரில் நேசநாடுகளின் வெற்றியைத் தீர்மானித்ததில், அந்நாடு களிலும் அவற்றின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நிலப்பரப்பிலும் கிட்டிய எண்ணெய் வளத்துக்குப் பெரும்பங்கு உண்டு. இன்றும் உலக நாடுகளுக்கிடையேயான சச்சரவு களுக்கும், போர்களுக்கும், பயங்கர வாதத்துக்கும் மத்திய கிழக்கு எண்ணெய் வளத்துக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. எண்ணெய் விலையுயர்வு உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்த வல்லதாய் ஆகிவிட்டிருக்கிறது. அமெரிக்காவின் எண்ணெய் நுகர்வில் கார்களும், வேன்களும் பிற போக்குவரத்து வாகனங்களுமே மிகப் பெரும்பங்கு வகிக்கின்றன. மூன்று சதவீதம் எண்ணெய் வளம் மட்டுமே தன்னிடத்தில் இருந்த போதும், உலக எண்ணெய் உற்பத்தியில் 25 சதவீதத்தை அமெரிக்கா உபயோகிக்கிறது. இந்நிலையில், எண்ணெய்ச்சார்பு என்பதே இல்லாத எதிர்காலம் ஒன்று - விரும்பக் கூடியதாய் இருப்பினும் - நடைமுறையில் சாத்தியமா? எதிர்கால வாகனங்கள் எந்தெந்த மாற்று எரிசக்தியில் இயங்கும்? கார் கம்பெனிகள் இவ்விஷயத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றன? இந்த மாற்று எரிசக்திகளை நடைமுறை உபயோகத்தில் கொண்டு வருவதில் கலி·போர்னியா - குறிப்பாக உலக மின்னணு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தின் முக்கிய கேந்திரமாய் விளங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் பங்கு என்னவாக இருக்கும்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு, அய்ன் கார்ஸனும் விஜய் வைத்தீஸ்வரனும் இணைந்து எழுதியுள்ள 'Zoom- The Global Race To Fuel the Car of the Future' என்ற புத்தகம் விடைகாண முயல்கிறது.

கார்களின் உபயோகத்தைக் குறைத்துக் கொண்டு mass transit வாகனங்களை அதிகம் உபயோகப்படுத்த வேண்டும் என்று சிலர் சொன்னாலும், பொருளாதார ரீதியில் வாழ்க்கைத் தரம் என்ற அளவில் அது பின்னோக்கிய இயக்கமாகத்தான் இருக்கும். கார்கள் மனிதனுக்கு இயக்க சுதந்திரம் தருபவை. அந்த சுதந்திரத்தைப் பறித்துவிட்டு வைக்கப்படும் எந்தத் தீர்வும் இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீர்வைத் தருவதாக அமையாது என்று யதார்த்தமான பார்வையை முன்வைக்கிறார்கள் இந்நூலின் ஆசிரியர்கள். இதன் அடிப்படையில் 'பிரச்னை கார்கள் அல்ல, கார்களுக்குத் தக்க எரிசக்தியே' என்று தெளிபடுத்துகிறார்கள். இந்த அணுகுமுறையே தொடக்கத்திலிருந்து இறுதிவரை புத்தகத்தை எடுத்துச்செல்கிறது.

மூன்று பகுதிகளாக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் முதல் பகுதியில் கார்களும், எண்ணெய்க் கம்பெனிகளும் 20-ஆம் நூற்றாண்டு அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியின் ஆதாரப் பங்கை வகித்த விதமும் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலை ஆட்டம் கண்டதும் விவரிக்கப்படுகிறது. இரண்டாம் பகுதியில், டொயோட்டா எவ்வாறு ப்ரையஸ் மூலம் இப்பிரச்னையைத் தீர்க்க முதலடி வைத்தது என்பதும் அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளுமே எண்ணெய்ப் போதையில் ஆழ்ந்திருக்கும் நிலையும் இதன் விளைவாக உலக அளவில் உருவாகியுள்ள சிக்கல்களை அமெரிக்கா உணரத் தொடங்கியதும் விளக்கப்படுகிறது. கடைசிப்பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் வேகமான ஆனால் காலதாமதமான வளர்ச்சியும் அதுவே இந்த நாடுகளுக்கு மாசு குறைந்த புதிய தொழில்நுட்பங்களை உபயோகிக்கும் வாய்ப்பை எளிதாக்குவதும் விவரிக்கப்படுகிறது.

மேலும், கார்களுக்கான மாற்று எரிசக்தி தொடர்பான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் எவ்வாறு சிலிக்கன் பள்ளத்தாக்கை இவ்விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தாக்குகிறது என்பதும் விளக்கப்படுகிறது. டீசல், ஹைட்ரஜன், சூரிய சக்தி, பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்கள், எத்தனால் எரிபொருள், ஹைப்ரிட் கார்கள் என்று பலவகை மாற்று எரிசக்தி முயற்சிகளும் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. கூகுளின் லாரி பேஜ் என்பவரின் முயற்சியில் X-PRIZE என்ற நிதிக்கொடை அமைப்பு ஒரு காலனில் 100 மைல்களுக்கு அதிகம் ஓடும் காரை உருவாக்குபவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசு கிட்டும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலதுறைகளும் பல குழுக்களும் வெவ்வேறு சார்புகளுள்ள பலரும் ஒன்றாக இணைந்து இப்பிரச்னைக்குத் தீர்வு காணத் தீவிரமாகச் சிந்திக்க முற்படுவதற்கு முக்கியக் காரணம் உள்ளது.

மத்திய கிழக்கின் மீதான எண்ணெய்ச் சார்பு இன்றைய நிலையில் அமெரிக்கா வுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. எண்ணெய் வளம் என்பதே ஒரு நாட்டில் ஜனநாயகம் தழைக்க எதிரான சாபமாகி விடுகிறது என்று IMF-இன் அரவிந்த் சுப்பிரமணியம் ஆராய்ந்து சொல்லியிருப்பதை இப்புத்தகம் விவரிக் கிறது. எண்ணெய் தரும் அபரிமிதமான செல்வ வளம் கஜானாவை நிரப்ப, எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரி விதிப்பே அவசியமில்லாமல் போகிறது. வரி செலுத்தாத மக்களுக்கோ கொடுங்கோல் அரசை எதிர்த்துப் பணிய வைக்க வல்ல, வரிமறுப்பு என்ற அரசியல் ஆயுதம் பயனற்றுப் போகிறது. செல்வத் தேவைகள் அனைத்தையும் எண்ணெய் நிரப்பிவிடவே, விவசாயம், நவீன கல்வி, உள்ளூர்த் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற அடிப்படைப் பொருளாதார விஷயங்களை பலப்படுத்த வேண்டிய அவசியம் எண்ணெய் வள அரசுக்கு இல்லையென்று ஆகிறது. இதன் விளைவாக நாட்டின் எந்தக் குழுவையும் அரசியல் ரீதியாகச் சார்ந்திருக்க அவசியமின்றி, போலீஸ் அல்லது ராணுவத்தின் பலத்துடன் எதேச்சாதி காரமாக அரசு நடத்துவது ஆட்சியாளர்களுக்கு வசதியாகிவிட, மக்கள் பங்கேற்கும் ஜனநாயக அமைப்புகள் ஒடுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜனநாயகக் குரல் மறுக்கப்படும் மக்களின் கோபங்களுக்கும் குமுறல்களுக்கும், பயங்கரவாதமும் உள்ளூர்ப்போர்களும் வடிகால் ஆகின்றன. ஒரு நாட்டின் வளம் என்பதே அந்நாட்டு மக்களுக்கு சாபமாகும் விபரீதம் - குறிப்பாக வலுவான ஜனநாயகக் கட்டமைப்பு பலமிழந்த நாடுகளில் - இவ்வாறு நடைமுறை ஆகின்றது. வளங்களற்ற சில ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளூர்க் கலகம் நிகழும் வாய்ப்பு 1 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க, வளமிக்க பிற ஆப்பிரிக்க நாடு களிலோ இந்த சதவீதம் ஏறத்தாழ 25 சதவீதம் ஆகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பால் காலியர் சொல் வதை இதற்குச் சான்றாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
Click Here Enlargeஎனவே மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் என்பது அமெரிக்காவுக்கு மட்டுமன்றி உலக அமைதிக்கே இன்றைய நிலையில் அவசியம் ஆகின்றது. ஆனால், எந்தப் புதிய எரி பொருள் தொழில்நுட்பமும் முதலில் எண்ணெயை விட விலையுயர்ந்ததாகவே இருக்கும். புதிய எரிபொருள் தொழில்நுட்பம் தலையெடுக்கையில் சவுதி அரேபியா போன்ற நாடுகள் எளிதாக எண்ணெய் விலையை வெகுவாகக் கீழிறக்கி, மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை நசுக்க முற்படலாம். (இதனை எதிர்நோக்கித்தான் எத்தனால் எரிபொருளில் முதலீடு செய்து வரும் பிரபல புதுமுயற்சி முதலீட்டாளர் (வெஞ்ச்சர் காபிடலிஸ்ட்) விநோத் கோஸ்லா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 40 டாலரை விடக் கீழிறங்கினால், அதன்மீது வரிவிதிக்க வேண்டும் என்கிறார்). மேலும், எண்ணெயின் நியாயமான விலை என்று பார்த்தால், பல காரணிகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்: 1990-களில் அமெரிக்கா வின் மத்திய கிழக்கு எண்ணெய் இறக்குமதி யின் மதிப்பு ஒரு வருடத்துக்கு 10 பில்லியன் டாலர்; அதே காலகட்டத்தில் அமெரிக்கா மத்திய கிழக்கு எண்ணெய் வளத்தின் பாதுகாப்புக்காகச் செலவழித்த தொகையோ வருடத்திற்கு 30லிருந்து 60 பில்லியன் டாலர்கள் ஆகும்! எண்ணெய்ப் பாது காப்புக்காக (பென்டகன் பட்ஜெட் உள்ளிட்ட) செலவு ஒரு வருடத்துக்கு 78லிருந்து 158 பில்லியன் ஆகிறது என்கிறார்கள் ஆசிரியர்கள். மட்டுமன்றி, எண்ணெய்க் கம்பெனிகளுக்கு பிற துறைகளுக்கு இல்லா வண்ணம், எண்ணெய் தேடுதல் (exploration), எண்ணெய் உற்பத்தி (production) ஆகிய செலவுகளுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. 1968-2000 இடைப்பட்ட காலத்தில் இந்த வரிச் சலுகையின் நிகர மதிப்பு 134 பில்லியன் டலர் என்று அமெரிக்காவின் தேசிய எரிசக்திக்கொள்கை அமைப்பு சொல்கிறது.

இப்படிப்பட்ட சலுகைகளால்தான் அமெரிக்க எண்ணெய் விலை குறைவாக (ஆமாம், குறைவுதான்!) வைக்கப்பட்டுள்ளது என்று நூலாசிரியர்கள் வாதிடுகிறார்கள். எனவே, மாற்று எரிசக்தித் துறைகளுக்கு கிடைக்காத இப்படிப்பட்ட சலுகைகளைச் சமன் செய்யும் விதத்திலும், மாற்று எரிசக்தி முயற்சிகளை வளர்க்கும் பொருட்டும் கேஸலீன் எண்ணெய் மீது 'கார்பன் வரி' என்ற ஒரு புது வரியைக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு தீர்வை - தேர்தல் நேரத்தில் அமெரிக்காவின் இருகட்சிகளும் அரசியல் ரீதியாகத் தொட பயப்படும் ஒரு தீர்வை - துணிந்து முன்வைக்கிறார்கள். இந்த வரியால் கிடைக்கும் பணத்தை Patriot Tax Refund என்ற பெயரில், எரிசக்தித் திறன் (fuel efficiency) குறைந்த, சுற்றுச்சூழலைப் பெரிதும் பாதிக்காத வாகனம் உப யோகிக்கும் குடும்பங்களுக்கு அதிகமாகவும் எண்ணெய் குடிக்கும் வாகனம் வைத்துள் ளவர்களுக்குக் குறைவாகவும் என்று திருப்பியளித்தால் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இத்திட்டத்துக்குக் கிடைக்கும் என்றும் பரிந்துரைக்கின்றனர். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் என்பதால் அதனைக் குறிவைத்தே இந்த யோசனை வைக்கப்பட்டுள்ளது என்றாலும், டெமாக்ரடிக் கட்சியோ ரிபப்ளிகன் கட்சியோ ஓட்டு வங்கிக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த தீர்வைக் குறித்து மூச்சு விடக்கூடத் தயங்குவார்கள் என்பதுதான் எதார்த்த நிலை. தேர்தலுக்குப்பிறகு ஒருவேளை பரிசீலிக்கப்படலாம்.

இந்தப் புத்தகத்தில் சில குறிப்பிடத்தக்க குறைகளும் உள்ளன. முக்கியமாக, புள்ளி விவரங்கள் மற்றும் பல செய்தி அம்சங் களுக்கு அந்தந்தப் பக்கங்களிலேயே உடனடியாக அடிக்குறிப்பு தருவது அவசியம். ஒட்டு மொத்தமாக ரெ·பரன்ஸ் நூல்கள் பெயர்களும் கடைசியில் தரப் பட்டுள்ள அமைப்பு மைக்கேல் க்ரைட்டன் எழுதும் அறிவியல் புனைகதைகள் போன்ற வைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆராய்ச்சி நூல்களுக்குப் பொருந்தாது. மேலும், சுவாரஸ்யத்துக்காக என்று தரப் பட்ட, ஆனால் எழுதும் பிரச்சனைக்குத் தொடர்பற்ற, துணுக்குத்தோரணங்கள் ஆங்காங்கே இருப்பது ஒரு முக்கியப் பிரச்னையைப் பேசும் புத்தகத்தில் அநாவசிய விலகல்களாகவே தெரிகின்றன (உதாரணம்: டாட்டாவைப்பற்றியும் டாட்டா இண்டிகா காரைப்பற்றியும் பேசும் இடத்தில், அவரது பார்ஸி பின்புலமும், பார்ஸிக்கள் இறந்த உடலைக் கழுகுக்குப் படைப்பார்கள் என்ற செய்திக்கும் என்ன நேரடி அவசியம் உள்ளது?) மட்டுமன்றி, பல இடங்களில் சொல்லப்பட்ட விஷயமே வெவ்வேறு இடங்களில் (சில இடங்களில் அதே சொல்லாடல்களுடன் கூட) மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது ஆயாசம் அளிக்கிறது.

மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் பற்றி விளக்குவதிலும், வாகனத்துறை, எண்ணெய்த்துறை என்ற இரு அசுரத் துறைகளின் நிழலில் மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் வளர வேண்டிய சூழல்கள், அதிலுள்ள சவால்கள் ஆகியவற்றை விவரித்து சில தெளிவான யோசனைகளை முன்வைத்து வாசகர்களைச் சிந்திக்கவைப்பதில் இப்புத்தகம் வெற்றியையே பெற்றுள்ளது.
இந்தப்புத்தகம் பேச எடுத்துக்கொண்ட களம் மிகப் பரந்தது. எரிசக்தி, கார், சுற்றுச்சூழல் மாசுறுவது, அமெரிக்கத் தொழில்நுட்பம், ஆசியாவின் வளர்ச்சி என ஒவ்வொரு துறையும் இதுபோன்ற பல தனிப் புத்தகங்களால் நிரப்பப்படக் கூடியது. அதனாலேயே இவை அனைத்தையும் பேசும் இப்புத்தகம் மேலோட்டமாக, பெரும்பாலும் பத்திரிகைச் செய்திகளையே அடிப்படை யாக்கி எழுதப்பட்டுள்ளது போலத் தோற்றம் தருவது தவிர்க்க இயலாததாகி விட்டது. இவையெல்லாம் இருந்த போதிலும், மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் பற்றி விளக்குவதிலும், வாகனத்துறை, எண்ணெய்த்துறை என்ற இரு அசுரத் துறைகளின் நிழலில் மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் வளர வேண்டிய சூழல்கள், அதிலுள்ள சவால்கள் ஆகியவற்றை விவரித்து (விவாதத்திற்குரிய என்றாலும்) சில தெளிவான யோசனைகளை முன்வைத்து வாசகர்களைச் சிந்திக்க வைப்பதில் இப்புத்தகம் வெற்றியையே பெற்றுள்ளது.

'பிரிட்டனின் கண்முடித்தனமான தொழில் மயமாக்கல் என்ற பாதையை இந்தியாவும் தேர்ந்தெடுத்திருந்தால் எத்தனை கிரகங்கள் அதற்கு தேவைப்பட்டிருக்கும்' என்ற மகாத்மா காந்தியின் கேள்வியுடன் (பிரிட்டன் என்பது 'பணக்கார நாடுகள்' என்றும், இந்தியா என்பது 'ஆசியா' என்றும் இப்புத்தகத்தில் மாற்றப்பட்டுள்ளது) இப்புத்தகம் முடிவுக்கு வருகின்றது. தொழில்மயமாக்கல் என்ற தவிர்க்கவியலாத பாதையில் இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும்பான்மை நாடுகளும் பயணிக்கத்தொடங்கி விட்ட காலம் இது. இந்நிலையில், ஜனநாயகம் இல்லாத மத்திய கிழக்கின்மீதும், சவுதி அரேபியாமீதும், தொடர்ந்து எண்ணெய்ச்சார்பு கொண்டிருப் பது எல்லா நாடுகளுக்கும் பிரச்னைகளையே விளைவிக்கும் என்ற நிலையில், மாற்று எரிபொருளைத் தேடவேண்டிய வாழ்வியல் கட்டாயத்தில்தான் அனைத்து நாடுகளுமே இருக்கின்றன. அவ்வகையில் இப்புத்தகம் ஓர் ஆக்கபூர்வத் தீர்வை நோக்கி அடியெடுத்து வைக்க அனைத்து மக்களுக் கும் - குறிப்பாக தேர்தலை அடுத்த வருடம் சந்திக்க இருக்கும் அமெரிக்க மக்களுக்கு - சில முக்கிய ஆலோசனைகளை அளிக்கிறது. அவ்விதத்தில் இப்புத்தகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது.

அய்ன் கார்ஸன் The Economist பத்திரிகையில் எடிட்டராக இருந்து பல தொழில்துறைகளைக் குறித்தும் எழுதிப் பங்களிப்பு செய்துள்ளவர். BBC தொலைக் காட்சியிலும் பணியாற்றியுள்ளார். விஜய் வைத்தீஸ்வரன் (தென்றலில் 'அன்புள்ள சிநேகிதியே' தொடர் எழுதும் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களது மகன்) எம்.ஐ.டியில் பயின்று, The Economist பத்திரிகையில் சுற்றுச்சூழல், எரிசக்தி குறித்த துறைகளில் எழுதிப் பங்களிப்புச் செய்துள்ளவர். Power to the People என்ற நூலையும் எழுதியுள்ளார்.

சுந்தரேஷ்
Share: 
© Copyright 2020 Tamilonline