Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
ஹரிமொழி
எதை விடுவது, எதைப் பிடிப்பது
- ஹரி கிருஷ்ணன்|ஜனவரி 2008|
Share:
Click Here Enlargeஅன்பு, ஆசை என்ற இரண்டு சொற்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இரண்டும் ஒரே தன்மையைத்தான் குறிக்கின்றனவா அல்லது இரண்டும் சுட்டுவது வேறுவேறு குணங்களையா என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம். மேலோட்டமாகப் பார்த்தால், இரண்டு குணங்களும் ஒன்றே என்பது போலத்தான் தோன்றுகிறது. 'ஆசை முகம் மறந்து போச்சே, இதை ஆரிடம் சொல்வேனடி தோழி' என்ற பாரதி கவிதை நினைவில் நிழலாடுகிறது. ஆசைமுகம் என்று எதைச் சொல்ல வருகிறான் பாரதி? அந்த முகத்துக்கு உரியவனிடம் அன்பு இருக்கத் தானே செய்யும்? அன்பனுடைய முகம்தானே ஆசைமுகம்? அது எப்படி அன்பும் ஆசையும் வேறுவேறாக இருக்க முடியும் என்றெல்லாம் தோன்றுகிறது, இல்லையா?

மின்னஞ்சல் வந்திராத அந்தக் காலங்களில் பெரும்பாலான கடிதங்கள் 'அன்பும் ஆசையும் பாசமும் நேசமும் கொண்ட....' என்ற முதல் வரியோடுதான் தொடங்கும். மின்னஞ்சல் வந்த பிறகு இந்த முதல் வரியும் இருப்பதில்லை, 'தங்கள் உண்மையுள்ள' என்பது போன்ற இறுதி வாசகமும் இருப்பதில்லை. அது வேறு கதை. தனக்கு நெருக்கமானவரை 'அன்பும் ஆசையும் பாசமும் நேசமும்' கொண்ட ஒருவராகவே பார்ப்பது பொதுவான வழக்கம். அன்பு என்பதும் ஆசை என்பதும் ஒன்றையே குறிக்கின்றன என்றால், அவற்றை எதற்காக வலியுறுத்திச் சொல்வதுபோல் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்! ஆகவே இரண்டும் வேறுவேறுதானோ என்றும் ஓரெண்ணம் தலையெடுக்கிறது.

அது சரி; எதற்காக இப்படி இரண்டும் ஒன்றா, இல்லை வேறு வேறா என்ற ஆராய்ச்சி என்று கேட்கவும் தோன்றுகிறது அல்லவா? 'ஆசையை ஒழி; ஆசையை விட்டுவிடு; ஆசையே பிறவிச் சுழலுக்குக் காரணம்' என்று நம்மைச் சுற்றி அடிக்கடி பெரியவர்களுடைய வாய்மொழி ஒலிக்கக் கேட்கிறோம்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து (361)

எல்லா உயிர்களையும், எல்லாக் காலங்களிலும் பிறவி என்ற ஓயாச் சுழலில் விழுந்து விழுந்து முளைக்க வைப்பதற்கான விதை எது என்றால், ஆசைதான் என்கிறார் வள்ளுவரும். அவா அறுத்தல் என்று ஒரு அதிகாரமே தனியாகச் செய்த பின்னரும் அங்கே சொல்லியிருப்பது போதாது என்ற கருத்தை உடையவராக,

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (35)

என்று அறன் வலியுறுத்தலிலும் மற்ற அதிகாரங்களிலும் 'ஆசை அறத்துக்கு மாறானது; விட்டுவிடத் தக்கது' என்று விடாமல் வலியுறுத்துகிறார். 'ஆசையை விட்டுவிட்டால் எப்படி வாழ்வது' என்று நமக்குத் தோன்றுகிறது. வாழ்க்கையின் ஆதார ஊற்றே ஆசையை அடிப்படையாகக் கொண்டதுதானே என்ற கேள்வி ஒன்று மனத்தில் எழுகிறது. 'நிலத்தை உழ எண்ணி அடியெடுத்து வைக்கும் உழவன், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற ஆசையோடு தானே தன் வேலையைத் தொடங்குகிறான்? அவனிடம் அந்த ஆசை அற்றுப் போய் விட்டால் அடுத்ததாக அவனால் இயங்க முடியுமா? ஒண்ணும் வேணாம். நாளைக்கு எனக்கு வருவாய் கிட்டும்; ஊதிய உயர்வு கிடைக்கும்' என்றெல்லாம் நமக்கு ஆசை இருப்பதால்தானே தொடர்ந்து கடினமாய் உழைக்கிறோம்? அது இல்லாவிட்டால் எப்படி வாழ்க்கை என்னும் இழை தொடரும்?' என்றெல்லாம் ஓரன்பர் கேள்விகளை எழுப்பினார், நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த சமயத்தில்.

அவர் சொல்வதைக் கேட்டால் அதுவும் உண்மைதானே என்று தோன்றுகிறது. 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்று வலியுறுத்துகிறாரா, சரி கேட்டுக் கொள்கிறேன். ஆனால் மற்ற எந்தப் பற்றையும் விடாமல் மட்டும்தான் அவர் சொல்லும் அப்பற்றைப் பற்றுவேன்' என்ற நிபந்தனையுடன்தானே இப்படிப்பட்ட எந்த ஒரு சிந்தனையையும் மேற்கொள்ளவே தொடங்குகிறோம்! பற்றுவிடு என்று சொல்லத் தொடங்குவார். சரி என்று கேட்டுக் கொண்டால், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ஏதேதோ சொல்லி, 'இதை விடு, அதை விடு' என்றெல்லாம் நம் வாழ்வின் ஆதாரங்களின் மீதே கைவைக்கத் தொடங்கிவிடுவார். பின்னே? மனிதன் வாழ பொன்--பொருள்--வேண்டாமா, கையகலம் நிலமாவது வேண்டாமா, பெண்ணை விட்டுவிட்டால் மனிதகுலம் தழைக்கத்தான் முடியுமா என்றெல்லாம் நமக்கு மனம் அலைபாயத் தொடங்கிவிடும். 'பொன்னை உயர்வை புகழை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத் தகாது என்று' நின்னைச் சரண்புகுந்தேன் என்று பாரதி பாடினால் அது இதமாக இருக்கிறது; அதை விடு, இதை விடு என்ற அறிவுரைகள் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கின்றன என அடிமனம் சொல்லத்தான் செய்கிறது. பொருள் ஈட்டாமல் எப்படி வாழ்வதாம், இல்லையா? ஆனால், பொருள் ஈட்டுவது தவறு என்று திருவள்ளுவர் சொல்லவே இல்லை. மாறாக, 'செய்க பொருளை' (759) என்றுதான் வலியுறுத்துகிறார். அதற்கும் மேலாக,

அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு (787)
என்று வேறு சொல்கிறார். 'அன்பு என்ற தாய் பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை எப்படி வளரும் எனில், பொருள் என்ற தாதியின் உதவியால்' என்று அன்பைத் தாயாகவும், அருளைக் குழந்தையாகவும், பொருளைச் செவிலித் தாயாகவும் உருவகிக்கிறார் என்றால் 'பொருள் ஈட்டச் சொல்கிறார்; அதுவும் அன்பு ஈன்ற குழந்தையான; அன்புக்கு ஒருமாற்று உயர்ந்ததான அருள் என்பது தழைப்பதே பொருளின் துணையால்தான்' என்றுவேறு சொல்கிறார். அதிலும், 'நான் குறிப்பது இதைத்தான்' என்று வலியுறுத்துவதுபோல 'பொருள் என்னும் செல்வச் செவிலி' என்னும்போது, 'பொருள், செல்வம்' என்று ஒரே பொருளுள்ள இரண்டு சொற்களைப் பயன்படுத்துகிறார். இவரா பொருளை வேண்டாம் என்று சொல்வார்? சற்று குழம்புகிறது, இல்லையா? அறத்துக்கு இழுக்காக அமைவன என்று இவர் பட்டியலிடும் நான்கனுள் (அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல்) 'ஆசை' என்பதும் இருக்கத்தானே செய்கிறது? ஒருபக்கத்தில் 'ஆசை அறத்துக்கு ஊறு விளைவிப்பனவற்றுள் ஒன்று' என்கிறார். இன்னொரு பக்கத்தில் 'ஆசைகளுள் ஒன்று எனக் கருதத் தக்க செல்வத்தையோ, அன்புக்கும் சற்று மேலான அருள் தழைப் பதற்கான செவிலித்தாய்' என்று சொல்கிறார். முரண்படுகிறாரோ?

ஆசை என்பது அன்பின் வடிவத்தை மேற்கொள்ள முடியும். அன்பு என்பதும் ஆசையின் வடிவத்துக்குள் புகுந்து தன்நிலை அழியவும் கூடும். ஆசையாகத் தொடங்குவது அன்பாகப் பரிணமிக்கலாம். அன்பாகத் தொடங்குவது, தன் கட்டுப்பாடு தவறும்போது ஆசையாகவும் மாறலாம்.
வள்ளுவர் முரண்படமாட்டார். முரண்பாடு ஏதும் தோன்றுமேயானால் அது நம்முடைய அணுகுமுறையாலும் நாம் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தாலும் ஏற்படும் ஒன்றாகத்தான் இருக்க முடியுமே ஒழிய, அவரிடத்தில் முரண்பாடுகள் ஏதும் இருக்காது. இது என்றென்றும் சத்தியம். அவரிடத்தில் பிழை இருக்கவே முடியாது. அரசருக்கெல்லாம் அரசர் என்பதைப் போல், கலங்கரை விளக்கங்களின் கலங்கரை விளக்கமல்லவா அவர்? அப்படி யானால், இந்த ஆசை என்ற சொல்லை நாம் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா, அதை விலக்கச் சொல்லி வள்ளுவர் உள்ளிட்ட அனைத்து ஞானிகளும், பெரியவர்களும் வலியுறுத்துகிறார்களே, அது ஏன் என்பதனை முதலில் பார்க்க வேண்டும். ஆசை என்ற சொல்லின் பொருள் வரையறை இன்னது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் எதை விலக்கச் சொல்கிறார்கள், எதை மேற்கொள்ளச் சொல்கிறார்கள் என்பது தெளிவாகும்.

'ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்; ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்' என்று சொன்னார்களே தவிர, 'அன்பை அறுமின் கள், அன்பை அறுமின்கள்; என்பினோடா யினும் அன்பை அறுமின்கள்' என்று சொல்லியிருக்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? திருமூலர் அதையும் சொல்கிறார். 'ஆசையும் அன்பும் அறுமின். அறுத்தபின், ஈசன் இருந்த இடம் எளிதாமே' (திருமந்திரம் 2613) என்றுதான் அவர் பேசும் 'அவாவறுத்தல்' தொடங்கு கிறது. ஆனாலும் கூட, 'அன்பின் வழியது உயிர்நிலை' என்றும், அப்படி இல்லாதவர்கள் எல்லோரும் வெறும் எலும்பால் வேய்ந்து தோலால் போர்த்தப்பட்ட கூடுகள்; நடைபிணங்கள் என்றும் சொல்கிறார் அல்லவா வள்ளுவர் அவரும்; 'உயிர்களிடத்து அன்பு வேணும்' என்று பாடும் பாரதியும் சொல்லும் அன்பும், திருமூலர் அறுக்கச் சொல்லும் அன்பும் ஒன்றில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உயிர்களிடத்து அன்பு செய்யாதே என்று சொல்லும் அளவுக்குத் திருமூலர் அன்பிலா அகத்தர் அல்லர். ஆங்கிலத்தில் passion என்று எதைச் சொல்கிறோமோ அதைத்தான் இங்கே திருமூலர் குறிப்பிடுகிறார்; love என்பதனை அன்று என்பது உணரத்தக்கது. அது இன்னொரு திறக்குறள். அதற்குள் இப்போது புகவேண்டாம்.

என்ன சொல்லவந்தேன் என்றால், ஆசை என்பது விடத்தக்க ஒன்று என்பதனை ஓயாமல் வலியுறுத்தும் அறநூல்களும் சரி; அறிஞர்களும் சரி; வள்ளுவனைப் போன்ற பேராசான்களும் சரி, அன்பைக் கைவிடு என்று ஒருபோதும் சொன்னதில்லை. திருமூலர் சொல்வது வேறு பொருளில் என்பதையும் பார்த்தோம்.

ஆசை என்பது அன்பின் வடிவத்தை மேற்கொள்ள முடியும். அன்பு என்பதும் ஆசையின் வடிவத்துக்குள் புகுந்து தன்நிலை அழியவும் கூடும். ஆசையாகத் தொடங்குவது அன்பாகப் பரிணமிக்கலாம். அன்பாகத் தொடங்குவது, தன் கட்டுப்பாடு தவறும்போது ஆசையாகவும் மாறலாம். குழப்புகிறேனோ? குழப்பம், தெளிவின் முதற்படி.

'ஆசை என்பதே பிறவிச் சுழல் தொடர்ந்து கொண்டே இருப்பதற்காக ஊன்றப்படும் விதை' என்று திருவள்ளுவர் சொல்வதை மேலே பார்த்தோம். ஆனாலும், அன்பாக வடிவெடுத்து ஊற்றம் பெற்ற ஒன்றே ஒரு மாமுனிவர் திரும்பத் திரும்ப பிறப்பதற்கான காரணியாகவும் இருந்தது என்றும் கதைகள் நமக்குச் சொல்கின்றன. அப்படிப்பட்ட கதைதான் ஜடபரதரின் கதை. அன்பு வேறு; ஆசை வேறு என்பதை இனம்பிரித்துக் காட்டும் கதை. எப்போது ஒரு குணம் அன்பு என்ற வடிவத்தைக் கொண்டிருக்கிறது; எந்தக் கட்டத்தில் அதுவே ஆசை என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது என்பதைக் குறிப்பாகச் சுட்டிச் செல்லும் கதை. ஜடபரதருடைய கதையை நம்முடைய அணுகுமுறைக்கு உட்படுத்திச் சற்றே பரிசீலித்துப் பார்ப்போம்.

இன்னும் வரும்...

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline