Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நூல் அறிமுகம்
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் ''அன்புள்ள சிநேகிதியே....''
- சுந்தரேஷ்|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlargeதென்றல் இதழில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களது 'அன்புள்ள சிநேகிதியே' என்ற ஆலோசனைத் தொடர் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளிவந்துள்ளது.

அமெரிக்கா வாழ் தமிழ்மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் பலவிதமானவை. நாடு விட்டு நாடு வந்து வேற்று மண்ணில் வாழ முற்படும்போது சொந்த மண்ணின் குடும்பம் மற்றும் பண்பாட்டுப் பின்னணி, உறவுகளின் எதிர்பார்ப்புகள் ஆகியவை ஒருபுறமும் புதிய மண்ணின் கலாசாரம், வேலை மற்றும் பொருளாதாரத் தேவைகள் ஆகியவை மறுபுறமும் அழுத்த, பிரச்னைகள் எழுகையில் ஆறுதல் சொல்ல நெருங்கிய உறவோ நட்போ உடனடியாக அருகில் இல்லாத நிலையில் இருட்கடலில் சிக்கிய படகாக நாம் சிலசமயம் உணர்வது உண்மை. அத்தகைய சந்தர்ப்பங்களுக்கு டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் பதில்கள் நம்பிக்கை விளக்காக அமைந்திருக்கின்றன.

இந்தத் தொகுப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் பலவும் அமெரிக்கத் தமிழர் அனைவர் மனதிலும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு கால கட்டத்தில் எழக்கூடிய கேள்விகள் தாம். கணவனை இழந்த நிலையில், மனித உறவுகளுக்காக ஏங்கி மகனையும் மருமகளையும் விட்டுவிட்டு இந்தியா சென்றுவிடலாமா எனக் குழம்பும் பெண்மணி; பொறாமைக்கார உறவுகள்; அமெரிக்கா வந்தாலும் விடாமல் இருக்கும் மருமகள்-மாமியார் பிரச்னை என்பவற்றில் தொடங்கி, டாலர்களைக் குறிவைத்து மட்டுமே பேசும் இந்திய உறவுகள்; புதிய துணை தேடுவதில் உள்ள உறவுக் குழப்பங்கள்; 55 வயதுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அமெரிக்காவில் வளர்ந்த பிள்ளைகளின் வெளிப்படையான சுயநலம் கண்டு அதிர்ச்சியடையும் தாய்; அடித்துத் துன்புறுத்தும் 'அப்யூஸிவ்' கணவனைக் கையாள வழிதேடும் மனைவி ஆகியவை வரை பலதரப்பட்ட பிரச்னைகளுக்கும் நேசத்துடன், அன்புள்ள சிநேகிதியாய், கறாராய் அதே சமயம் உறவுகளின் உன்னதம் புரிந்தவராய் அழுத்தமான பதில்களை அளித்திருக்கிறார் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்.

பதில்களைப் படிப்பவரிடம் சிலநேரம் 'இவரென்ன எல்லாவற்றுக்கும் அனுசரணையாய் அரவணைத்தே போகச் சொல்கிறார்?' என்ற கேள்வி எழலாம். அப்படிப்பட்ட கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு பதிலளிக்கையில் 'எனக்கு முக்கியம் 'உறவுகளின் மேம்பாடு'' என்று டாக்டர் சித்ரா அழுத்தமாகச் சொல்கிறார். நாம் வாங்கும் வீட்டில் வரக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை நாம் உடனுக்குடன் பழுதுபார்த்துச் சரிசெய்து அந்த வீட்டிலேயே வாழ முற்படுகையில், வாழ்நாள் பந்தமான திருமண வாழ்க்கையில் ஏன் இதைச் செய்யக்கூடாது என்று அவர் கேட்கையில் உறவுகளின் மீது அவருக்கு இருக்கும் மதிப்பும் மகத்தான நம்பிக்கையும் வெளிப்படுகின்றன. உறவுமுறைகளின் தன்மை குறித்து அவர் கூறும் கீழ்க்கண்ட வரிகள் இதனை உறுதி செய்கின்றன: 'உறவுமுறைகள் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் மனித இயல்புகளின் வேறுபாடுகள் தாம் உறவுகள் வளரவோ முறியவோ காரணமாகின்றன. நம்மைச் சரியாகப் புரிந்து கொள்ளாத, நம்மைக் கேவலமாக நடத்துகிற மனிதர்களை நாம் பரிவுடன் நடத்தும்போது, நாம் அவர்களைவிட ஒருபடி உயர்ந்து நிற்கிறோம். இந்த உணர்வு வந்தால் அங்கே பகைமையோ பழி வாங்கும் உணர்ச்சியோ இருக்காது. மனம் சுருங்கியவர்கள் பிறரை வேதனைப்படுத்துவார்கள். பரந்தமனம் உடைய நாம் விட்டுக்கொடுத்து, தட்டிக் கொடுத்து ஒரு வாய்ப்புக் கொடுக்கிறோம். இதன் பொருட்டு நாம் குனியும்போது இன்னும் உயர்ந்துதான் போகிறோம் என்ற விழிப்புணர்வு இருந்தால் போதும்'.

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் சமூகவியல் மற்றும் மக்கள் தொடர்புச் சாதனங்களில் மேல்நிலைக் கல்வி பயின்றவர். இந்தியாவில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றி, பின் கனெக்டிகட் மாகாணத்தில் குடியேறி வசித்து வருகிறார். அவரைப்பற்றிய அறிமுகத்தில் 'சமூக ஏணியில் ஏறும்போது ஒரு கையால் ஏணியைப் பிடித்துக்கொண்டு மறு கையைக் கீழே நீட்டி இன்னொருவரை உயர இழுக்க வேண்டும்' என்பது இவரது குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் குறிக்கோளை நோக்கிய அவரது பயணத்தில் இந்தப் புத்தகத்துக்கும் தென்றலில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் அவரது கேள்வி-பதில் பகுதிக்கும் ஒரு மகத்தான பங்கு உண்டு.

நம் வாழ்க்கையில் இதில் வருவது போன்ற தீவிரப் பிரச்னைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், இந்தப் புத்தகத்தில் வந்திருக்கும் பிரச்னைகளையும் தரப்பட்டுள்ள தீர்வு களையும் வாசிக்கும்போது, உறவுகளை மதிக்கும், விட்டுக் கொடுக்கும், நேசிக்கும் மனிதர்களாக நாம் வாழ நமக்குள்ளே ஓர் உந்துதல் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
நேர்த்தியான வடிவமைப்பில் உயர்ந்த தரத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகத்தை வாங்க 'தென்றல்' பதிப்பாளர்களைக் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்:

374 St. Mary Ave
Sunnyvale, CA-94086
Ph: 408.245.0193
Fax: 408.715.2545

வலைதளம் :http://www.tamilonline.com/thendral
மின்னஞ்சல் :thendral@tamilonline.com

சுந்தரேஷ்
Share: 
© Copyright 2020 Tamilonline