|
''இயலிசைத் தமிழோடு நாடகத் தமிழும்'' - 'லாஸ் ஏஞ்சல்ஸ்' ராம் |
|
- ஸ்ரீகாந்த் ராமபத்ரன், கணபதி சுப்பிரமணியம்|நவம்பர் 2001| |
|
|
|
தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொகுத்தவர்: ஸ்ரீகாந்த் ராமபத்ரன் தொகுப்புதவி: கணபதி சுப்பிரமணியம்
கடல் கடந்து சென்றாலும் நம்மால் ஒரு போதும் நம்முடைய வேர்களைத் தொலைத்துவிட முடியாது. விரிந்த வானம் போல நம்முள் நாம் வாழ்ந்த வாழ்க்கை, நம்முடைய பண்பாடு, நம்முடைய கலைகள் எல்லாமும் நீக்கமற நிறைந்திருக்கும்.
கடந்த பல ஆண்டுகளாக தொழில் நிமித்தமாகப் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கடல்கடந்து அமெரிக்க மண்ணில் கால்பதித்து இன்று வேர்விட்டு வளர்ந்த நிலையிலிருக்கின்றனர். அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து தொழில் நிமித்தமாக இங்கு தங்கியிருந்தாலும், தம்முடைய வேர்களை மறந்து விடாமல் அங்கேயும் அதை நிறுவி தங்களுக்கென்ற சுயமான ஒரு உலகத்தைப் படைத்தே வாழ்கின்றனர்.
ஊறுகாயிலிருந்து பரத நாட்டியம் வரை நம்முடைய வாழ்க்கை அமெரிக்காவிலும் தொடர்கிறது. அமெரிக்கத் தமிழர்கள் இங்கிருந்தபடியே தமிழகத்திலுள்ள பத்திரிகைகளுக்கு எழுதுகிறார்கள்; அல்லது தங்களுக்குள்ளே தங்களுக்கென்று பத்திரிகைகள் நடத்துகிறார்கள்.
இசை விழாக்கள் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டின் பிரபல பாடகர்களை அழைத்து வந்து இங்கு மேடையேற்றி மகிழ்கிறார்கள். இயல் தமிழையும், இசைத் தமிழையும் தொடர்ந்து அவர்கள் பேணிக் காத்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் என்னவோ நாடகத் தமிழில் மட்டுமே குறைவான பங்களிப்புகள் நிகழ்கின்றன. தமிழகத்திலும் கூட இயலிசைக்குக் கொடுக்கின்ற இடத்தை நாடகத் தமிழுக்குக் குறைவாகவே கொடுத்து வருகிறார்கள். தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக நாடகம் என்பது நம்முடன் தொடர்ந்து பயணித்து வருகிறது.
அமெரிக்கத் தமிழர்களும் இந்தப் போதாமையை ஓரளவு உணர்ந்திருப்பார்கள். இருந்தும் நாடகத் தமிழை வளர்ப்பதற்கும் அவர்கள் முயற்சிகள் மேற்கொள்ளாமலில்லை. தமிழகத்திலிருந்து எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன், விசு, மெளலி........ போன்ற விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே நாடகங்கள் போடுவதற்காக அமெரிக்க மண்ணுக்கு விமானம் ஏறியவர்கள்.
மேற்கண்டோரில் 'லாஸ் ஏஸ்சல்ஸ்' ராம் என அழைக்கப்படும் எல்.ஏ.ராம் குறிப்பிடத்தக்கவர். இவர் அமெரிக்காவில் வாழ்ந்தபடியே நாடகத் தமிழுக்கும் தன்னால் இயன்றபடி சேவையாற்றி வருகிறார்.
எல்.ஏ.ராமின் இயற்பெயர் ராம் ராமச்சந்திரன். இவர் Cisco, IBM, Boeing போன்ற முன்னோடி நிறுவனங்களில் பணியாற்றியபின் தற்போது என்.ஆர். சாப்ட்வேர் சிஸ்டம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி (C.E.O.) ஆகப் பணியாற்றி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸில் வசிப்பதால் எல்.ஏ.ராம் ஆகிவிட்டவர்.
நாடகாசிரியராக மட்டுமல்லாமல், கவிஞர், நடிகர், சிறுகதை ஆசிரியர், மெல்லிசைப் பாடகர், இயக்குனர் என்று பலமுகங்களைக் கொண்டவர் 'லாஸ் ஏஸ்சல்ஸ்' ராம். கிட்டத்தட்ட இவர் அமெரிக்கா வந்து குடியேறி பதினேழு வருடங்கள் ஆயிற்று. கடந்த எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன்பிலிருந்து அமெரிக்க பிரஜையாகவும் மாறிவிட்டார். சுமார் நான்கு வருடங்களாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
'ப்ரியஸகி' என்னும் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பைக் கடந்த 1993 ஆம் வருடம் சென்னையில் வைத்து வெளியிட்டார். தற்போது 'எதற்கு வேதங்கள்' என்ற அடுத்த தொகுப்பும் தயாராகிக் கொண்டிருக்கிறது.
பலர் தங்களது புலம் பெயர் வாழ்க்கை எழுதுவதில் தடையாக வந்து நிற்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கையில், ''இல்லை மாறாக அதுதான் என்னுடைய advantage. இவ்வளவு தொலைவில் இருக்கும் இந்தத் தமிழர்களின் கஷ்ட நஷ்டங்கள், நடை, உடை பாவனைகள் இவற்றை நான் எழுதுகிறேன். மயிலாப்பூரைப் பற்றி எழுதத்தா அங்கு பத்தாயிரம் பேர் இருக்கிறார்களே'' என்று தன்னுடைய தற்போதைய வசிப்பிடம் எந்த வகையிலும் தன்னுடைய எழுத்தையும் இயக்கத்தையும் பாதிக்கவில்லை என்று கூறுகிறார்.
'லாஸ் ஏஸ்சல்ஸ்' ராம் நாடகத் துறையைச் சார்ந்தவராக அறியப்பட்டதை விட திரைப்பட நடிகராகவே இங்குள்ளவர்களால் அதிகமாக அறியப்பட்டிருக்கிறார்.
1975 வாக்கில் சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்தளித்தபடி நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தவரை திரைப்படத்தின் பக்கமாய்த் திசை திருப்பி விட்டவர் நடிகர் சாருஹாசன். (கமலஹாசனின் அண்ணன்).
விளைவு: 'பன்னீர் புஷ்பங்கள்' படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் நாயக, நாயகி படிக்கும் பள்ளியின் பிரின்சிபாலாக நடித்தார். 'லாஸ் ஏஸ்சல்ஸ்' ராமின் இரண்டாவது படம் 'எங்கேயோ கேட்ட குரல்'. அதில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். முதல் ஹீரோ ரஜினிகாந்த். தொடர்ந்து இப்போது வெளியான 'ஜீன்ஸ்' படம்வரை நடித்திருக்கிறார். (இதில் 'பர்தேஷ்' என்னும் ஒரு தெலுங்குப் படமும் அடக்கம்)
ரஜினிகாந்துடன் தான் பணியாற்றிய அனுபவத்தையும் ரஜினி தனக்குச் செய்த உதவியையும் பற்றிக் குறிப்பிடுகையில், ''ஒரு நாள் நானும், சினிமா போட்டோகிராபர் பாபுவும் ஏ.வி.எம். ஸ்டூடியோடிவில் பேசிக்கிட்டிருந்தப்ப 'இந்த ரோல் உனக்கு எப்படிக் கிடைச்சது தெரியுமா?'' என்று கேட்டார்.
'தெரியலையே. எஸ்பிஎம் சார் கூப்பிட்டு சொன்னார். அவ்வளவு தான் எனக்குத் தெரியும்' என்றேன்.
'இல்லை' என்றார் பாபு.
'தேங்ஸ் பாபு. நீங்கள் தான் சொன்னதா?'' என்று கேட்டேன். இல்லையென்று தலையை ஆட்டினார். தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலமா என்று கேட்டதற்கும் இல்லையென்றே பதில் வந்தது.
'அதோ அங்கே உட்கார்ந்து தம் அடித்துக் கொண்டிருக்கிறார் பார், அவருடைய முடிவு தான் நீ இதில் நடிப்பது' என்றார்.
பார்த்தால்ர அது ரஜினிகாந்த். எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஏனெனில் அப்போதே ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து வரத் தொடங்கி விட்டது. துணிந்து எனக்கு அடுத்த ஹீரோ ரோல் கொடுத்திருக்கிறாரே என்று நன்றி சொல்லலாமென்று பார்த்தால் அவர் பொருட்படுத்தவே இல்லை. அவரிடமிருந்த பெரிய குணம் அது என்று புரிந்து கொண்டேன். உதவி செய்வார், ஆனால் நன்றி சொல்லப் போனால் அதைப் பெரிதுபடுத்த மாட்டார். எப்ப அவர்கிட்டே நன்றி சொல்லப் போனாலும், 'அதை விடுப்பா' என்று சொல்லி ஊர்க்கதையெல்லாம் பேசத் தொடங்கி விடுவார். அப்புறம் ஏ¦ழுட்டு வருஷம் கழிச்சு அவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனப்போ தான் என்னாலே நன்றி சொல்ல முடிஞ்சது. அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதுமட்டும் இல்லை. அவர்கிட்டே பழகினப்ப தான் எனக்கு அவர் எவ்வளவு நல்ல மனிதர், விளம்பரம் செய்யாமலே உதவி செய்யும் குணம் உள்ளவர் என்பதெல்லாம் எனக்குப் புரிந்தது.
அந்தப் படம் 150 நாள் ஓடிச்சு. அந்தப் படத்திற்காக எனக்கு சினிமா எக்ஸ்பிரஸின் 'சிறந்த துணை நடிகர்' விருது கிடைத்தது'' என்று தன்னுடைய பழைய நாள்களை நினைவு கூர்கிறார். |
|
அவருடைய ஒட்டு மொத்த நாடக முயற்சிகளைப் பற்றி.....
''என்னுடைய முதல் நாடகம் 'Help Unwanted'. ஆங்கிலத் தலைப்பில் தமிழ் நாடகம். அதுவே ஒரு பாணியாகி விட்டது. நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்தது 'One Wife Too Many'. அதுவும் காமெடி தான். அரங்கம் நிரம்பிய காட்சிகள் நடந்தன.
மூன்றாவது வித்தியாசமான முயற்சி. சுஜாதாவின் 'யாகம்' என்கிற சிறுகதையை நாடகமாக எழுதி அவரிடம் காட்டினேன். அவருக்கு ரொம்பப் பிடித்து விட்டது. 'நீயே மேடையேற்றேன்' என்றார். 'ஐந்திர கண்டத்தில் அதிருத்ர மஹா யாகம்' என்ற தலைப்பில் மேடையேற்றினேன்.
சுஜாதாவின் வலைத்தளத்தில் இந்த நாடகத்தைப் புகழ்ந்து அவர் எழுதிய குறிப்பு இன்னமும் இருக்கிறது'' என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து இவருடைய இயக்கத்தில் 'சம்பவாமி யு.எஸ்.ஏ' என்ற நாடகம் நடத்தப்பட இருக்கிறது. அந்த நாடகத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், ''சம்பவாமி யு.எஸ்.ஏ. யு.எஸ்.ஏ.' பகவத் கீதையில் நல்லதை நிலை நாட்டவும், தீயதை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் வருவேன் (சம்பவாமி யுகே யுகே) என்று சொன்னதைக் கொஞ்சம் poetic license எடுத்துக் கொண்டு இப்படி மாற்றி இருக்கிறேன். தீபாவளியை ஒட்டி நவம்பர் 17-இல் அந்த நாடகம் அரங்கேற இருக்கிறது.
இன்றைய தேதியில் மகாவிஷ்ணு அமெரிக்காவில் அவதாரம் எடுத்தால், என்ன நடக்கும் என்பதை நகைச்சுவையோடு அந்த நாடகத்தில் சொல்லியிருக்கிறேன்'' என்று குறிப்பிடுகிறார்.
தன்னுடைய நாடகங்களை நடத்துவது மட்டுமல்லாமல் இங்கு நாடகம் போடுவதற்காக வரும் மற்ற குழுவினருக்கும் உதவிகளைச் செய்து தருகிறார். ''விசு இங்கே வந்திருந்த போது என்னை அவருடைய நாடகத்தில் ஒரு சின்ன காமெடி ரோல் பண்ணச் சொன்னார். அவர் என்னுடைய பழைய நண்பர். அவர் தன்னுடைய குழுவுடன் அமெரிக்கா முழுவதும் வரச் சொன்னார். அட்லாண்டா, சிகாகோ, நியூயார்க் உட்பட கிட்டத்தட்ட 12 இடங்களக்குச் சென்றேன். அப்போது என்னால் இங்குள்ள தமிழர்களுக்கு எது பிடிக்கிறது எது பிடிக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய நாடகங்களை அரங்கேற்ற இந்த அனுபவம் மிக உதவியாக இருந்தது'' என்று பிறர் நாடகங்களில் நடித்தாலும், அது தனக்கு நல்ல அனுபவத்தைத் தந்தாகக் கூறுகிறார்.
'லாஸ் ஏஞ்சல்ஸ்' ராம் தன்னுடைய நாடகத்திற்குத் தேவையான நடிகர்களைத் தானே பயிற்சியளித்து தயார் செய்கிறார். தொழில் முறைக் கலைஞர்களை விட இப்படி புதிதாக நடிக்க வருபவர்களைத் தயார் செய்வதில் நிறையக் கஷ்டங்கள் இருக்கின்றன. அப்படி நடிகர்களைத் தயார் செய்த போது ஏற்பட்ட கஷ்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், ''ஆரம் காலத்தில் 'என்னை விட்டுருப்பா, நான் போறேன்' என்று சொல்லுவார்கள். ஏனென்றால் எனக்கு மட்டும் தான் நடிப்புப் பின்புலம் இருந்தது. அவர்களுக்கெல்லாம் வசன உச்சரிப்பு, பாவனைகள், timing, அசைவுகள் என்று எல்லாத் துறைகளிலும் பயிற்சி கொடுத்தேன். இப்ப ரொம்ப பிரமாதமாகச் செய்கிறார்கள். 'தமிழ்நாட்டிலிருந்து வருகிற குழுவினருக்கு எந்த வகையிலும் இவர்கள் குறைந்தவர்கள் அல்லர்' என்று சொல்லுமளவுக்கு சிறப்பாக நடிக்கிறார்கள்'' என்று வேடிக்கையுடன் குறிப்பிட்டாலும் தயார் செய்த மனநிறைவு அவரிடம் அதிகமாக ஒட்டிக் கிடக்கிறது.
''நிறையப்பேர் என்னை நாடகம் போடச் சொல்லி அணுகியிருக்கிறார்கள். நியூ ஜெர்சியிலிருந்து அடிக்கடி அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. அருகருகிலிருக்கும் ஹ¥ஸ்டன், ஆஸ்டின் மற்றும் டல்லாஸ் ஆகியவற்றுக்கு ஒரு ரவுண்டு வாருங்கள் என்று கூப்பிட்டிருக்கிறார்கள். நிச்சயம் போவோம். தேதி முடிவாகவில்லை. அடுத்தாற்போல சான் டியாகோ போகப்போகிறோம்'' என்று நாடகக் குழுவினருக்கு அமெரிக்க ரசிகர்கள் அளிக்கின்ற ஆதரவுகளைப் பட்டியலிடுகிறார்.
'லாஸ் ஏஸ்சல்ஸ்' ராம் கவிஞர். நாடகாசிரியர் என்பதையும் மீறி இசைக் குழு ஒன்றையும் இங்கு நடத்தி வருகிறார். தன்னுடைய இசைக்குழு பற்றி, ''நான் முறையாக இசை பயின்றதில்லை. என் குரல் நன்றாக இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். இசைக்குழு ஒன்று தொடங்கியிருக்கிறோம். ஒரு ஜாலிக்காகத் தான். போன வாரம் கூட ஒரு நிகழ்ச்சி கொடுத்தோம். ஒரு மாறுதலாகவும் இருக்கிறது. ஆனால், நாடகமோ இசையோ எதுவானாலும் செய்வதைத் தொழில்ரீதியாகச் செய்யும் அக்கறையோடு சிறப்பாகச் செய்கிறோம். அதனால் தான் மக்கள் எங்களை ரசிக்கிறார்கள்'' என்று குறிப்பிடுகிறார்.
''சமீபத்தில் ஒரு கனடா காட்டு டி.வி. கம்பெனியிலிருந்து என்னுடைய நாடகங்களை வீடியோத் தொடர்களாக மாற்றிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். செய்யப் போகிறேன். இங்கே இப்போது கணிசமான தமிழர்கள் இருப்பதனால் அமெரிக்கக் கம்பெனிகள் கூட தமிழ் நிகழ்ச்சிகளை sponsor செய்ய விரும்புகிறார்கள். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று தன்னுடைய அடுத்தக்கட்ட முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஒரு திரைப்படத்தை கதை, வசனம் எழுதி இயக்கும் திட்டமும் 'லாஸ் ஏஸ்சல்ஸ்' ராமுக்கு இருக்கிறது.
தொடர்ந்து கவிதைகள், கதைகள், நாடகங்கள், திரைப்படங்கள் எனப் பல துறைகளிலும் சலிப்பில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற 'லாஸ் ஏஸ்சல்ஸ்' ராமுக்கு இங்குள்ள தமிழர்கள் நல்ஆதரவை எப்போதும் வழங்கி வருவதையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ், திரைத் தமிழ் என அனைத்து வகைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 'லாஸ் ஏஸ்சல்ஸ்' ராமும் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
''இங்கிருந்தபடியே தமிழ்நாட்டின் நாடித் துடிப்பைக் கணித்து வைத்திருக்கிறேன்'' என்று சொல்லும் எல்.ஏ.ராமை தொடர்ந்து இதுமாதிரி தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை விடாது கணித்து வரவேண்டும் என வாழ்த்த கடைமைப்பட்டிருக்கிறோம்.
எல்.ஏ.ராமைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் losangelsram@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொகுத்தவர்: ஸ்ரீகாந்த் ராமபத்ரன் தொகுப்புதவி: கணபதி சுப்பிரமணியம் |
|
|
|
|
|
|
|