Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
கிரிக்கெட்: இந்தியாவுக்கு மீண்டும் உலகக் கோப்பை
- மதுரபாரதி|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlargeஜோஹன்னஸ்பர்க். இருபது20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம். ஆடுவதோ இந்தியாவும் பாகிஸ் தானும். அரங்கம் நிரம்பி வழிகிறது. முதலில் விளையாடிய இந்திய 157 ரன்களே எடுத்துள்ளது. இரண்டாவதாக பாகிஸ்தான் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இறுதி ஓவர் ஆரம்பம். யார் பந்து வீசப் போகிறார்கள்? எல்லோரும் மூச்சைப் பிடித்துக் கொண்டு பார்க்கிறார்கள். மிகப் புதியவரான ஜோகிந்தர் ஷர்மா வருகிறார். 13 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் சாம்பியன். பாகிஸ்தானுக்கு இதெல்லாம் ஜுஜுபி. இரண்டே பந்துகளில் 7 ரன் எடுத்துவிடுகிறார் மிஸ்பா. மீதி 4 பந்துகளில் 6 எடுக்க வேண்டும். கடினமல்ல. ஜோகிந்தர் பந்து வீசுகிறார். மிஸ்பா அதை கில்லிதாண்டு போலக் கெந்திப் பின்புறம் அனுப்புகிறார். பந்து துள்ளி மிக உயரமாகப் போகிறது. அது கீழே வரும்போது சரியாக அங்கே இருக்கும் ஸ்ரீசாந்த் அதைப் பிடிக்கிறார்.

இந்தியா இருபது20 உலக சாம்பியன்!

அது நம்ப முடியாத ஒரு கணம்.

1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. அதற்குப் பிறகு உலகக் கோப்பை இந்தியாவைப் பொறுத்தவரை எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. அதிலும் கடந்த பிப்ரவரி-மார்ச்சில், வெஸ்ட் இண்டீஸில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டித் தொடரில் கோப்பையைக் கைப்பற்றாவிட்டாலும் இறுதிச் சுற்று வரையாவது இந்தியா முன்னேறும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதுவும் நிராசையாகிப் போனது. விளையாட்டு வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டன; கொடும்பாவிகள் எரிக்கப் பட்டன; கிரிக்கெட் மீதே மக்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த இருபது20 உலகக் கோப்பையை, அதுவும் பாகிஸ்தானைத் தோற்கடித்து வென்றது, ஒரு சாதனைதான். புதிதாக அணித்தலைமை ஏற்றிருக்கும் மஹேந்தர் சிங் டோனியைப் புகழாதவர்கள் இல்லை.

மூன்று மணி நேரத்தில் முடிந்து விடக் கூடிய இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இந்திய ரசிகர்களுக்கு அதில் அவ்வளவு ஆர்வம் இருந்ததாகச் சொல்ல முடியாது. முதல் ஆட்டத்தை மழை இல்லாமல் செய்துவிட்டது. என்றாலும் அடுத்தடுத்த ஆட்டங்களில் அடித்து ஆடி 'சூப்பர் 8' தகுதிச் சுற்றுக்குள் இந்திய அணி நுழைந்ததும் விறுவிறுப்பு ஏற்பட்டது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து பிரமிக்க வைத்தார். தொடர்ந்து, பலம் மிக்க தென் ஆப்பிரிக்காவையும், அரை இறுதியில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா வையும் தோற்கடித்தது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இறுதி ஆட்டம் பாகிஸ்தானோடு என்றதும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவியது. டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கில் இறங்கியதும் அது பன்மடங்காகியது. ஆனால் ஆசி·ப், குல், தன்வீர், அ·ப்ரீடி, ஹ·பீஸ் ஆகியோரின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்தியாவின் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. முந்தைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங் அவுட் ஆனதும் இந்தியா கோப்பையை வெல்வது கடினம் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனாலும் தொடக்க ஆட்டக்காரர் காம்பிரும், ரோஹித் ஷர்மாவும் சளைக்காமல் அடித்து ஆடி ரன் குவித்தனர். 20 ஓவர்களின் இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

158 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் ஆட்டத்தில் நுழைந்தது பாகிஸ்தான். ஆரம்ப ஓவரிலேயே முகமது ஹ·பீஸின் விக்கெட்டைப் பறி கொடுத்தது. ஆனாலும் இம்ரான் நசீர் அடித்து ஆடித் தனது அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார். மிஸ்பாவும் சளைக்காமல் ரன் குவிப்புக்கு உதவினார். ஆட்டத்தில் இந்தியா வென்று, கோப்பையைக் கைப்பற்றியது சரித்திரம்.

புதிய சாதனை படைத்த டோனி தலைமையிலான இளம் வீரர்கள் இன்றைய இந்தியாவின் ஹீரோக்களாகப் பார்க்கப் படுகிறார்கள். நாடெங்கிலும் உற்சாகம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியா வெற்றி பெற்றவுடன் களத்துக்குள்ளே ஓடிச் சென்று வீரர்களைக் கட்டியணைத்து வாழ்த்தியவர்களில் பிரபல இந்தித் திரைப்பட நட்சத்திரம் ஷாருக் கானும் இருந்தார்.

இளமை, வேகம், தைரியம்--இவைதாம் இந்த ஆட்டத்தின் புதிய மந்திரங்கள். காங்குலி, திராவிட், சச்சின் என்று சீனியர் வீரர்கள் யாருமே இல்லாத இந்த அணியின் சராசரி வயது 24 தானாம்! சற்றும் எதிர்பாராமல் முந்தைய சுற்றுக்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளைத் தோற் கடித்த பங்களாதேஷ் அணி இன்னும் இளமையானது.

இந்திய அணியின் கேப்டன் டோனி 'இந்த வெற்றி எனது வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம். எனது தனிப்பட்ட வெற்றி அல்ல. வீரர்கள் அனைவரது கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். குறிப்பாக ஜோகிந்தர் சர்மா நிலைமையை உணர்ந்து சிறப்பாகப் பந்து வீசினார். தற்போது இந்திய அணி பேட்டிங், ·பீல்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் சிறப்பாக உள்ளது. எதிர்காலத்திலும் இது போன்று தொடர்ந்து வெற்றி பெறுவோம்.' என்று தெரிவித்துள்ளார். சிறப்பாகப் பந்து வீசி மூன்று மிக முக்கிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இர்·பான் பதான் ஆட்ட நாயகனாக அறிவிக்கப் பட்டார். தொடர் நாயகன் விருதை பாகிஸ்தானின் சையத் அ·ப்ரீடி பெற்றார்.

இந்தியாவில் இப்பொழுதே தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கி விட்டது போல இருக்கிறது. அவ்வளவு உற்சாகம். இந்நிலையில் இந்த மாதம் 29ஆம் தேதியன்று பெங்களூரில் நடைபெற உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரே நாளில், அதுவும் சில மணி நேரங்களுக்குள்ளேயே விற்றுத் தீர்ந்து விட்டன. இந்திய அணியின் வெற்றிகள் தொடர வேண்டும் என்பதே நமது வாழ்த்தும் பிரார்த்தனையும்.
Click Here Enlargeபரிசு மழை

வெற்றிபெற்ற அணியிலுள்ள வீரர் களுக்கு பரிசுமழை கொட்டுகிறது. யாருக்கு எவ்வளவு என்னும் விவரம் இங்கே. (கொடுப்பது யார் என்ற விவரம் அடைப்புக்குறிக்குள்)...

  • மொத்த அணிக்கும் - 490,000 டாலர் (போட்டிப் பரிசு)


  • மொத்த அணிக்கும் - 2 மில்லியன் டாலர் (BCCI) இறுதிப் போட்டியில் வென்றதற்காக


  • மொத்த அணிக்கும் - 1 மில்லியன் டாலர் (BCCI) இறுதிப் போட்டி நிலையை எட்டியதற்காக


  • வீரர் ஒவ்வொருவருக்கும் ஒரு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள சொகுசு வீடு (சஹாரா பரிவார்)


  • யுவராஜ் சிங் - ரூ 1 கோடி - ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்ஸ் அடித்ததற்காக (BCCI)


  • அஜித் அகர்கார், ரோஹித் ஷர்மா - தலா ரூ. 10 லட்சம் (மஹாராஷ்டிரம்)


  • ஜோகிந்தர் ஷர்மா - ரூ. 21 லட்சம் (ஹரியானா)


  • ஆர்.பி. சிங் - ரூ. 10 லட்சம் (உத்திரபிரதேசம்)


  • ராபின் உத்தப்பா, வெங்கடேஷ் பிரசாத் - தலா ரூ. 5 லட்சம் (கர்நாடகம்)


  • ஸ்ரீசாந்த் - ரூ. 5 லட்சம் (கேரளம்)


  • வீரேந்தர் செவாக், கௌதம் கம்பீர் - தலா ரூ 5 லட்சம் (டில்லி)

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் மது கொடா, டோனிக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறார் என்பதை ரகசியமாக வைத்துக் கொண்டுள்ளார். 'அது எதிர்பாராததாக இருக்கும்' என்கிறார். நவம்பர் 15ஆம் தேதி 'ஜார்க்கண்ட் ரத்னா' விருதை வழங்கும் போது பரிசும் தரப்படுமாம்.

வெற்றிபெற்ற அணியில் டோனி, யுவராஜ் உட்பட 6 வீரர்கள் ஏர் இந்தியாவில் பணிபுரிகிறார்கள். 'அவர்களுக்கு உடனடியாகப் பதவி உயர்வு தருவோம். பாராட்டு விழாவும் உண்டு' என்கிறார் வான்பயணத் துறை அமைச்சர் பிர·புல் படேல். தவிர வெற்றிபெற்ற அணியின் உறுப்பினர்கள், மானேஜர், கோச் மற்றும் இவர்களின் குடும்பத்தினருக்கு ஏர் இந்தியாவில் பயணம் செய்ய உபரியாகச் சலுகைகள் உண்டு என்கிறார்.

6 சிக்ஸர்களை விளாசித் தள்ளிய யுவராஜுக்கு BCCI உபதலைவர் லலித் மோடி போர்ஷ் கார் ஒன்று தருவதாக அறிவித்திருக்கிறார்.

பல வணிக நிறுவனங்கள் இவர்களை பிராண்ட் அம்பாஸடர்களாக நியமிப்பதுடன், விளம்பர ஒப்பந்தங்களும் செய்து கொள்ளும் போது பணமழையோ மழைதான் போங்கள்.

ம.பா.
Share: 




© Copyright 2020 Tamilonline