இணையில்லாப் பாரதம் நல்ல புத்தகங்கள் - நல்ல நண்பர்கள் ! வண்ண வண்ண கூடாரங்களில் காய்கறிகளின் அணிவகுப்பு அறிவொளி-[செப்டம்பர் 09 - உலக எழுத்தறிவு தினம்] கீதாபென்னெட் பக்கம்
|
|
பிரமாண்டமாய்த் தயாராகிவரும் மணிமண்டபம் |
|
- ஜானகி|செப்டம்பர் 2001| |
|
|
|
காஞ்சி மகா சுவாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில், காஞ்சிபுரத்திலிருந்து 5 கி.மீட்டர் தூரத்தில் பாலாற்றாங் கரையோரத்தில் ஏழு ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக ஜுவாலையாக மணி மண்டபம் உருவமைக்கப்பட்டு வருகிறது.
அடியார்கள் வணங்கும் காஞ்சி மாமுனிவர் தமது பதிமூன்றாவது வயதிலேயே துறவு பூண்டவர். காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தெட்டாவது பீடாதிபதியாகத் தலைமையேற்றவர். எண்பத்தேழு ஆண்டுகள் பீடாதிபதியாக வாழ்ந்து சரித்திரம் படைத்த சுவாமிகளின் பெருமையை, சேவையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இம்மண்டபப் பணியைச் செதுக்கி வருகின்றனர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மாத்ருபூதேஸ்வரர் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள்.
அடியார்கள் புகழ் போற்றும் இம்மணி மண்டபமானது 'ஓரிக்கை' எனும் இடத்தில் 1997 ஜுன் மாதம் 9-ஆம் தேதி கால்கோள் விழாவான 'சங்கு ஸ்தாபனம்' நடத்தப்பட்டு தொடர்ச்சியாக மண்டபத்தின் வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன.
மணி மண்படத்தின் சிறப்பு அம்சங்கள் எனக் கூற எவ்வளவோ இருப்பினும், அம்மண்டபம் எழும் இடத்திற்கே சில புராதன சிறப்பும், தகுதியும் உண்டு எனும் அளவில் அதன் பெருமையை விளக்கிய டிரஸ்ட்டின் உறுப்பினரான ஆத்மநாதன் அவர்கள்,
''திருமழிசை ஆழ்வாரும் அவரது நண்பர் கணிகண்ணரும் காஞ்சியில் பெருமாளுக்குச் சேவை செய்து வருகையில், அதனைக் கண்ட ஒரு மூதாட்டியும் தன்னால் முடிந்த துப்புரவுப் பணிகளைச் செய்து வந்ததைக் கண்ட கணிகண்ணர், நாள்தோறும் அந்தக் கிழவியின் முதுகைத் தடவி விட்டார். ஆழ்வாரின் அருளால் அந்தக் கிழவி குமரி ஆகிறாள். இதைக் கண்ட அரசன், தன்னையும் குமரனாக்க வேண்டுமென்று கணிகண்ணரை வேண்டுகிறான். அதற்கு அவர் மறுத்து விடுகிறார். எனவே அரசன் கணிகண்ணரை நாடு கடத்தி விடுகின்றான். இந்தச் செயலைக் கண்ட ஆழ்வாரும், பெருமாளும் கணிகண்ணருடன் உடன் சென்று ஓரிக்கையில் ஓர் இரவு தங்கிய காரணத்தால், அந்த இடத்தில் 'ஓர் இரவு இருக்கை' என்ற பெயர் வரக் காரணமாயிற்று என்றும் அதுவே பிற்காலத்தில் சுருங்கிய பெயரில் ஓரிக்கை என்றழைக்கப்படுகிறது'' என்று கூறினார்.
இது மட்டுமன்றி காஞ்சி மகா சுவாமிகளும் பலமுறை இங்கு தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இம் மணிமண்டபம் அமைய பிரதோஷம் வெங்கட்ராமய்யர் என்பவரே காரண கர்த்தாவாக இருந்துள்ளார். ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் தவறாமல் மகாசுவாமிகளைத் தரிசிப்பவர் வெங்கட்ராமய்யர். ஒவ்வொரு பிரதோஷம் அன்றும், பிரதோஷம் வந்தாயிற்றா? என சுவாமிகள் கேட்பாராம்! வெங்கட் ராமய்யர் வந்து விட்டாரா? பிரதோஷம் வந்து விட்டதா? என்கிற கேள்விகளை உள்ளடக்கியதாகவே அந்த வினா அமைந்திருக்கும் என நிகழ்வுகளை நினைவுப்படுத்தினார் ஆத்மநாதன்.
மகாசுவாமிகளுக்கான மண்டபம் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று முதலில் மனதிற்குளூளேயே திட்டமிட்டவர் பிரதோஷம் வெங்கட்ராமய்யர். இம்மண்டபத்தைக் கட்டுவதற்கான நிலத்தை வாங்கித் தந்தவர் டிரஸ்டின் உறுப்பினர்களுள் ஒருவரான விநாயக் ராம் என்பவர்.
முழுக்க முழுக்க கிரானைட் கற்களைக் கொண்டே மண்டபத்தைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம் மண்டபம் கட்டுவதற்குத் தேவையான கற்களை வாங்குவத தொடர்பாக இராமகிருஷ்ணன் பரமஹம்சருக்கும் காஞ்சி மகா சுவாமிகளுக்கும் இடையே 'தெய்வீக ஒப்பந்தம்' ஏற்பட்டிருந்ததோ என எண்ணும் வகையிலே, மண்டபப் பணிக்குத் தேவையான கற்களை மயிலை இராமகிருஷ்ண மடப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்த கற்களையே டிரஸ்டினர் வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர். |
|
பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளைப் பெற்று எஸ்.எம். கணபதி ஸ்தபதி அவர்களின் மேற்பார்வையிலேயே 100 ஸ்தபதிகள் மற்றும் மேலும் 12 பேர் உட்பட இம்மண்டபம் பணிக்கான சிற்பங்களைச் செதுக்குவதில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரமாண்டமன மணி மண்டபமானது மொத்தம் 258 அடி நீளம் 58 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். மொத்தம் நான்கு மண்டபங்கள் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளது.
உள் மண்டபம் பதுக்க மண்டபம் என்றும், நடு மண்டபம் வேதபாட சாலையாகவும் அமைக்கப்படவுள்ளது. ஒரே கல்லில் சங்கிலி போன்ற அமைப்புகள், உத்திராட்ச மண்டபம் என சோழ, பாண்டிய, நாயக்கர் கால சிற்பக் கலை நுட்பங்கள் பலவும் சேர்ந்த வகையில் சிற்ப வேலைப்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. காஞ்சி மண்டபத்தின் ஆதரவில் நடைபெறும் சிற்பக் கல்லூரி மாணவர்கள் இங்கு பயிற்சி பெற ஜயேந்திர சரசுவதி சுவாமிகள் அனுமதித்துள்ளார்.
மணி மண்டபத்தில் காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஆதிசங்கரர் தொடங்கி, ஒவ்வொரு பீடாதிபதியின் திருவுருவமும் அவர்களது அருளாட்சிக் காலமும் பொறிக்கப்பட இருப்பதால் கடந்த நூற்றாண்டுகளின் வரலாறு, தத்துவம் இவைகளின் பெருமை பேசும் வரலாற்றுக் கருவூலமாக விளங்கவிருக்கிறது.
கிட்டத்தட்ட ரூ. 12 கோடி செலவில் நடைபெறவிருக்கும் இப்பிரமாண்டப் பணியில் இதுவரை சுமார் 2 கோடி செலவில் வேலைகள் முடிந்துள்ளதாக டிரஸ்டி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
வேத சாலை, வேத பாட சாலை, கோஷ ஆலை, வேத மண்டபம் கொண்டதாக அமையவிருக்கும் இம்மண்டபம் பிற்காலத்தில் தேவாரம், திருவாசகம், திருமுறை போன்றவைகள் ஒலிக்கும் பாட சாலையாகவும், உலகின் பல்வேறு மதம் சார்ந்த ஆய்வாளர்களும், வேதாந்த தத்துவாசிரியர்களும் அடிக்கடி சந்தித்து உரை நிகழ்த்தும் இடமாகவும் விளங்கும் என இதன் தனித்துவம் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.
இந்த மண்டபமானது வெறும் மதம் சார்ந்ததாக, வேதத்தை வலியுறுத்தும் இடமாக மட்டும் அமையாது. மனிதனுக்குத் தேவையான அடிப்படை ஒழுக்கத்தை, தர்மத்தை எடுத்துச் சொல்லும் பாடசாலையாக விளங்கும் என்று இதன் முக்கியத்துவம் பற்றி ஆத்மநாதன் எடுத்துக் கூறுகிறார்.
இந்திய ஆன்மீக வரலாறு, இந்துமத வரலாறு, இந்தியக் கலாச்சாரம் என எவ்விதத்திலும் மணி மண்டபமானது தனது தனித்துவப் பங்கை வரலாற்றில் பதிய வைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
மணி மண்டபத்திற்கு அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிதியுதவியும் கிடைக்கவில்லை. காஞ்சி மடம் இதற்கு ஸ்ரீமுகம் கொடுத்துள்ளது. இதுவரை நடைபெற்ற பணிகளுக்கான நிதியுதவி பெரும்பாலும் பணமிருந்து கொடுத்தவர்களை விட மனமிருந்து கொடுத்தவர்களிடமிருந்தே கிடைத்துள்ளது என்று உறுப்பினர்கள் கூறுகின்றனர். முக்கியமாக இசைக் கலைஞர் எம்.எஸ். அவர்கள் தனது பாடல்களின் ராயல்டி தொகையாக வந்த பல இலட்சங்களை வாரி வழங்கியிருக்கிறார். இது மட்டுமன்றி, மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்து உதவிகள் கிடைத்துள்ளன.
இந்திய ஆன்மீக வரலாறு, இந்திய கலாச்சாரம் என இந்தியர்களின் கலை நுட்பத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் அமையவிருக்கும் இம்மணி மண்டபத்தைப் பற்றிய தகவல்களை மேலும் அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : -
ஸ்ரீ ஸ்ரீ மஹாலக்ஷ்மி மாத்ரு பூதேஸ்வரர் அறக்கட்டளை, எண் 11 சிவம் - சுபம் முதல் பிரதானச் சாலை கோட்டூர்புரம், சென்னை - 600 085. தொலைபேசி : 4474114
ஜானகி |
|
|
More
இணையில்லாப் பாரதம் நல்ல புத்தகங்கள் - நல்ல நண்பர்கள் ! வண்ண வண்ண கூடாரங்களில் காய்கறிகளின் அணிவகுப்பு அறிவொளி-[செப்டம்பர் 09 - உலக எழுத்தறிவு தினம்] கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|