Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
கு. அழகிரிசாமி
- மதுசூதனன் தெ.|ஜூலை 2003|
Share:
Click Here Enlargeநவீன தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்கள் பலர். அதில் ஒருவர் எழுத்தாளர் கு. அழகிரிசாமி (1923-1970). இவர் சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை எனப் பல துறைகளிலும் அழுத்தமாகத் தடம் பதித்தவர். மேலும், இதழியலாளராகவும் பணிபுரிந்தவர். 1923 - ல் திருநெல்வேலியில் உள்ள 'இடைச்சேவல்' எனும் கிராமத்தில் பிறந்தவர். 1940களில் எழுத்துலகில் நுழைந்தவர்.

இவர் காலத்து எழுத்தாளர்களுக்கேயுரிய ஆழ்ந்த தமிழ் இலக்கிய றிவும் பன்முகத்தன்மையும், இவரிடமும் அதிகம் என்றே கூறலாம். 'மணிக்கொடி' பரம்பரை எழுத்தாளர்களின் கடைசிக் கொழுந்துகளில் ஒருவர் கு. அழகிரிசாமி. 'சக்தி' பத்திரிகையில் கடமையாற்றிவிட்டு மலேசியா சென்று 'தமிழ்நேசன்' என்னும் பத்திரிகையின் இலக்கிய ஆசியராகவும் பணிபுரிந்தார். பின்னர் 1960களில் இந்தியாவிற்குத் திரும்பி வந்து 'நவசக்தி'யில் பணிபுரிந்தார்.

''தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு இருந்த ஆவல் எனக்கு ஒரு பிரமிப்பையே தந்தது. எவ்வளவுதான் கற்றாலும் தமது அளவிலே காலிப்பிரதேசங்கள் பலவும் இருக்கத்தான் இருக்கும் - அதைத் தவிர்க்க முடியாது என்கிற ஒரு நினைப்பில் நான் என் அறிவுப் பொத்தலங்களை மூட எதுவும் தேடி அலையமாட்டேன். அழகிரிசாமி அப்படியல்ல. அறிவிலே பொத்தல் இருந்தால், தெரியாத பகுதி இருந்தால் அதைத்தேடி, அந்த அறிவுத்துறை பற்றிய நூல்களைப் படித்துப் பொத்தலை அடைத்து விடலாம் என்று அவர் நூல்களைத் தேடிப்போவார்''.

''இலக்கிய அனுபவங்களைப் புதுசு புதுசாகப் பெறுவதற்காக நான் லைப்ரரிகளைத் தேடிப் போவேன். ஆனால் அழகிரிசாமி அநேகமாக பழைய புஸ்தகக் கடைகளை நாடித்தான் போவார். எங்கேயாவது அவசரமாகப் போய்க் கொண்டிருக்கின்ற போது, எதிரில் ஒரு பழைய புஸ்தகக்கடை கண்ணில் பட்டுவிட்டால் போதும், போய்க் கொண்டிருக்கின்ற காரியத்தை மறந்துவிட்டு, புஸ்தகங்களைப் புரட்டிக் கொண்டு நின்று விடுவார்''.

இவ்வாறு அழகிரிசாமி குறித்துப் பதிவு செய்திருப்பவர் சகபடைப்பாளியாக இருந்த க.நா. சுப்பிரமணியம். இது அவரது மிகையான கூற்று அல்ல. அழகிரிசாமியின் இலக்கியத் தாகம், வாசிப்புத் தீவிரம், புத்தகங்கள் மீதான தேடல் ஆகியவற்றை நன்கு புலப்படுத்துகின்றன. இவ்வாறு அழகிரிசாமி அறிவுத் தேடலுடனும், வாசிப்புடனும் வாழ்ந்ததால் தான் படைப்பிலக்கியத்தில் அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படக் கூடியதாக இருந்தது.

கு. அழகிரிசாமி புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பராக இருந்தார். அவரது இலக்கிய நோக்கமும் கலையாக்கமும் என்னவென்று புரிந்து இருந்தார். ஆனால் புதுமைப்பித்தனின் பாணியைப் பின்பற்றாமல் தனக்கான தனி நடையை உருவாக்கிப் பயணம் செய்தவர். வெறும் வார்த்தைகள் மூலம் மிரட்டவும் மயக்கவும் பிரமிப்பூட்டவும் தெரியாதவர் அழகிரிசாமி. வெறும் அலங்காரங்கள் எதிலும் மூழ்காமல் வெளிப்படையான கதையின் உள்ளடக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதத் தொடங்கினார். குறிப்பாக சிறுகதைக்கான சூட்சுமத்தையும் நவீனத் தன்மையையும் வசப்படுத்திக் கொண்டார். டால்ஸ்டாய், மக்ஸிம் கார்க்கி, ஆன்டன் செகாவ் போன்ற பிறமொழி இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளுடன் ஆழ்ந்த பரிச்சயமும் வாய்க்கப் பெற்றிருந்தார். இந்தப் புலமை இலக்கிய ஆக்கம் பற்றிய தெளிவான புரிதலை அவருக்கு வழங்கியது.

''டால்ஸ்டாய் எவ்வளவு ஆழமான விஷயங்களை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறார்'' என்று அழகிரிசாமி அடிக்கடி வியந்து பேசுவார். இது வியப்பாக அவரிடம் இருந்தாலும் மறுபுறம் தனது எழுத்து நடை மிகுந்த எளிமையாக, தான் கூறிவரும் கருத்தைத் தெளிவாக உணர்த்தும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். தமிழில் வளர்ந்து வந்த வசனநடை பற்றிய வரலாற்று ரீதியான ஆழ்ந்த புரிதல் வாய்க்கப் பெற்றவராகவும் இருந்தார். இதற்கு அவர் எழுதிய ''வழிவழிவந்த வசனநடை'' எனும் கட்டுரை நல்ல உதாரணம்.

மனித உறவுகளையும், அவற்றின் பிரச்சனைகளையும் வாழ்வியல் கோலங்களையும், மனித மதிப்பீடுகளில் ஏற்படும் சரிவுகளையும், மனித நேயத்தையும் தனது கதைகளின் ஆதாரக் களங்களாகக் கொண்டிருந்தார். தனது சமகால எழுத்தாளர்கள் கையாண்ட அதே கோணத்தில் பிரச்சனைகளை அணுகாது வேறுபட்ட பரிமாணம் கிடைக்கும் வகையில் தனது படைப்புலகத்தை அமைத்துக் கொண்டார்.
கு. அழகிரிசாமி தனது குரத்தை வேகத்துடனும் வன்மையுடனும் கூற முனைவதில்லை. மாறாக தான் கூற விரும்புவனவற்றைத் தனது கதைகள் கூற வேண்டுமெனக் கருதுபவர். இது ஒரு பண்பாக அழகிரிசாமியின் கதைகளில் இருந்தது. கதைப்பொருளான சம்பவத்தையும், அச்சம்பவத்தை விவரிக்கும் முறையாலும் தான் அழகிரிசாயின் கருத்து வெளிப்படும். மனிதாயப் பண்பினையே தனது இலக்கிய நோக்காகக் கொண்டு செயற்பட்டார்.

இவருக்கிருந்த ஆழ்ந்த தமிழிலக்கியப் பரிச்சயமும், அறிவும் கம்பராமாணத்தின் முதல் ஐந்து காண்டங்களையும், அண்ணாமலை செரட்டியால் காவடிச் சிந்தனையும் பதிப்பிக்கும் வாய்ப்பை நல்கியது. மேலும் இலக்கியச் சுவை, இலக்கியத் தேன், இலக்கிய அமுதம், இலக்கிய விருந்து, இலக்கிய ஆய்வு என்ற கட்டுரைத் தொகுதிகள் அவரது தமிழறிவையும் ரசனைச் சிறப்பையும் புலப்படுத்துவன.

சிறுகதையாக்கச் சிறப்பால் தமிழ் இலக்கிய வரலாறு இவருக்கு முக்கியமான இடத்தை வழங்குகிறது. 'அழகிரிசாமி கதைகள்', 'காலகண்டி', 'தெய்வம் பிறந்தது', 'தவப்பயன்', 'வரப்பிரசாதம்' உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் இவருக்கான இலக்கியத் தகுதிப்பாட்டை நிர்ணயிக்கும்.

தற்போது கு. அழகிரிசாமியின் முழுக் கதைகளும் எழுத்தாளர் கி. ராஜநாராயணனால் தொகுக்கப்பட்டு சாகித்திய அகாதெமின் வெளியீடாக வெளி வந்துள்ளது. ''படைப்பு, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவுவதாகவும், உண்மையான மனித வாழ்க்கைக்குப் பாதை காட்டும் மணி விளக்கங்களாகவும் விளங்க வேண்டும்'' என்று கு. அழகிரிசாமி குறிப்பிடுவார். இதுவே அவரது படைப்பின் வெளிப்பாடாகும்.

தெ. மதுசூதனன்
Share: 
© Copyright 2020 Tamilonline