|
|
தமிழில் சிறுகதை என்ற வகைமை செழித்த போது மிக முக்கிய பங்காற்றியவர்களுள் பிச்சமூர்த்தியும் ஒருவர். தமிழ்ச்சிறுகதை முன்னோடிகளுள் ஒருவராகவே அவர் முகிழ்த்துள்ளார். அவர் எழுதிய கதைகள் அவரது தனித்தன்மையை நன்கு புலப்படுத்தும். கலை இலக்கியம் பற்றிய அவரது தேடல் வாழ்க்கை, பிரபஞ்சம் மீதான தத்துவத் தேடலின் நீட்சியாகத்தான் பரிணமித்தது.
இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. ''இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ...'' என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே ந.பி.யின் படைப்புகள் வெளிப்பட்டன.
கும்பகோணத்தில் வாழ்ந்து வந்த நடேச தீட்சிதர் காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிச்சமூர்த்தி 15.08.1900 இல் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீட்சிதர் பரம்பரையினர் சித்த வைத்தியம், சைவ சித்தாந்தம் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர்களாக இருந்துள்ளார்கள்.
தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா கலாட்சேபம் செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர். நடேச தீட்சிதர்-காமாட்சியம்மாள் தம்பதியருக்குப் பிறந்த முதல் மூன்று குழந்தைகளில் இரண்டு இறந்து விட்டன. இதனால் வேங்கட மகாலிங்கம் என்ற குழந்தையைப் 'பிச்சை' என்று அழைத்து வந்தார்கள். (அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்தால் காலன் அவர்களை அழைத்துச் செல்ல மாட்டான் என்பது ஒரு நம்பிக்கை.) பிச்சை, பிச்சமூர்த்தி ஆனார்.
பிச்சமூர்த்தி கும்பகோணத்திலேயே பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்பும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக்கல்லூரியிலும் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார். 'நவஇந்தியா' பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார்.
'ஸ்ரீராமானுஜர்' என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார். 1922களில் ஆங்கிலத்தில் இரண்டு கதைகளை எழுதிப் பார்த்தார். அக்காலத்தில் பாரதியாரைத் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு ஆங்கிலத்தில் எழுதும் வழக்கத்தை விட்டார். இந்தத் திருப்புமுனை அவரது இலக்கியப் பயணத்தில் வேறொரு பரிமாணம் வெளிப்படக் காரணமாயிற்று. தமிழில் கதைகள் எழுதத் தொடங்கினார். 'முள்ளும் ரோஜாவும்' என்ற கதையை குமரன் பத்திரிகைக்கு அனுப்பினார். அது பிரசுரமாகவில்லை. திரும்பி வந்துவிட்டது. மீண்டும் அக்கதையை 'கலைமகள்' பத்திரிகைக்கு அனுப்பினார். அது பிரசுரமானது. தொடர்ந்து சுதேசமித்திரன் (வாரப்பதிப்பு) சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிவரத் தொடங்கின. சிறுகதை படைப்பதோடு மட்டும் நிற்காமல் கவிதைத் துறையிலும் அதிக நாட்டம் கொண்டிருந்தார். தொடர்ந்து சிறுகதை, கவிதை உள்ளிட்ட இலக்கிய வகைமைகளில் தனது ஆளுமையை, தனித் தன்மையை வெளிப்படுத்தத் தொடங்கினார். தமிழ் நவீனமான காலகட்டத்தில் ந. பிச்சமூர்த்தியின் வகிபாகமும் முக்கியமானதாயிற்று. ''எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வின் தூண்டுதல் போல...'' என்று தன் இலக்கிய ஆர்வத்தின் தூண்டுதலை மெய்ப்பிக்கின்றார். |
|
ந. பிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஒரு வருட காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்திருக்கிறார். தன்னைத் துறவியாக வேண்டித் தனக்கு உபதேசம் செய்யுமாறு ரமணரிஷியிடமும், சித்தர் குழந்தைசாமியிடமும் அணுகி நின்றார். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கைதான் உசிதமானதென்று உபதேசித்திருக்கிறார்கள். பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு படைப்பிலக்கிய முயற்சிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வாழ்ந்து வந்து டிசம்பர் 4, 1976 இல் காலமானார்.
''பிச்சமூர்த்தியின் இலக்கிய வெளிப்பாடுகள் நிறைவேறாத துறவு மோகத்தின் இன்னொரு வடிகாலாக இருந்தது'' என்று கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன் குறிப்பிடுவதில் அர்த்தம் உள்ளது. ந. பிச்சமூர்த்தியின் படைப்புலகம் இதைத் தெளிவாக மெய்ப்பிக்கின்றது.
''எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன். ஆகையால் எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதவில்லை. உணர்வே என் குதிரையாகிவிட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப் பறப்பேன். ஒரு சமயம் வெறும் கட்டாந்தரையில் 'ஏபால்டில்' செய்வேன். என் மனதிலும் இந்த இரண்டு அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு பகுதி சிறகு விரித்து, சொல்லுக்கு எட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன. மற்றொரு பகுதி எல்லோரையும் போல் மண்ணில் உழலுகிறது. அப்பொழுதெல்லாம் உலகின் இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்''.
இவ்வாறு தனது எழுத்தைப் பற்றி ந.பிச்சமூர்த்தி கூறியிருப்பது ஆழ்ந்த புரிதலுக்கு உரியது. அவரை அவரது சொற்களாலேயே புரிந்து கொள்வதற்கான திறவுகோல் இது எனலாம். ஆக பிச்சமூர்த்தியின் படைப்புலகு அவரது வாழ்வின் இயக்கம் சார்ந்தது. அந்த வாழ்க்கையின் பாதிப்பால் தான் இலக்கியம் இயங்கியுள்ளது. இதற்கு அவர் எழுதிச் சென்றுள்ள சிறுகதை, கவிதை, நாடகம், நாவல் உள்ளிட்ட துறைகள் சாட்சி. குறிப்பாக சிறுகதைகள், கவிதைகள் தான் ந. பிச்சமூர்த்தியின் உள்ளுணர்வையும் அதன் அகத்தூண்டலின் அறிவுச்சாளரத்தையும் அவரது படைப்பு மனவெளிப்பாடாகப் பேசுகின்றன. இவையே தான் தமிழ் இலக்கியத்தில் ந.பிச்சமூர்த்திக்கான இடத்தை வழங்குகின்றன.
தெ.மதுசூதனன் |
|
|
|
|
|
|
|