Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | பொது | சமயம்
Tamil Unicode / English Search
சிறுகதை
சிறகுபலம்
அன்னய்யாவின் மானுடவியல் ஞானம்
- ஏ.கே. ராமானுஜன், நாராயண் ஹெக்டே, திருவைகாவூர் கோ. பிச்சை|ஜூலை 2001|
Share:
Click Here Enlargeகன்னட மொழிச் சிறுகதை
ஆங்கில மொழியாக்கம் : நாராயண் ஹெக்டே
ஆங்கில வழி தமிழாக்கம் திருவைகாவூர் கோ. பிச்சை

மானுட இயல் பற்றிய அமெரிக்கரின் ஞானம் பற்றி அன்னய்யாவினால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த ·பெர்கூஸனைப் பாருங்கள். இவர் ஆதியில் நமக்கு சட்டங்கள் வகுத்தளித்த மனுவை கற்றதுமல்லாமல் நமது சடங்குகள், ஆபாசங்கள் பற்றியும் அவர் அறிந்திருக்கிறார். இங்கே வந்திருக்கிற நானே ஒரு பிராமணன்தான். ஆயினும் இந்த விஷயங்கள் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது'' என்று எண்ணினான்.

நீங்கள் சுயமாக அறிவு பெற விரும்புகிறீர்களா? அதற்கு நீங்கள் அமெரிக்காவிற்கு வரவேண்டும். தன் சுய வரலாறை வரைய காந்திஜி சிறைச் சாலை அறையை அடைந்ததைப் போல, அல்லது நேருஜி இந்தியாவைப் பற்றி புரிந்துகொள்ள இங்கிலாந்து சென்றது போல. தூரத்திலிருந்து பார்க்கும்போதுதான் விஷயங்கள் தெளிவாக புலப்படுகின்றன.

எண்ணைச்சிக்கு, விந்து, இரத்தம், மூளையில் உள்ள கொழுப்பு, சிறுநீர், மலம், மூக்குசளி, காதுக்குறும்பி, எச்சல், கண்ணீர், கண்ணின் பீளை, வியர்வை. இவை பன்னிரண்டும் மனித உடலின் ஆபாசங்கள் (அசுத்தங்கள்).

(மனு 5:135)

எண்ணிப்பார்த்தான். பல ஆண்டுகளாக அன்னய்யா சிகாகோவில் இருந்தாலும் கன்னடத்தில்தான் ஒன்று, இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று.... பதினொன்று..... பதினொன்று..... முதலில் எண்ணியபோது பதினொன்றுதான் வந்தது. மீண்டும் எண்ணியபோது பன்னிரெண்டு சரியாக வந்தது. இந்த பன்னிரண்டில் அவனுக்கு முன்பே எச்சில், சிறுநீர், facces. அவன் குழந்தையாக இருந்தபோது கண்ட இடத்தில் எச்சில் துப்பக்கூடாது என்றும், மலம், சிறுநீர் கழித்தால் தானே சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவனுக்கு சொல்லப் பட்டிருந்தது. அவனது அத்தை புழக்கடைப் பக்கம் போகும்போதெல்லாம் ஒரு கையில் ஒரு பிடி மண் எடுத்துச் செல்வது வழக்கம். அந்த மண்ணால் அவள் சுத்தம் செய்து கொள்வாள். அவள் உயிரோடிருந்த வரையில் அவள் மண் எடுத்த இடம் குழியாகவே இருந்துவிட்டது.

நாட்டின் தென் பிராந்தியங்களில் நாகசுரம் போன்ற வாத்தியங்கள் அசுத்தமானவையாக கருதப்பட்டது. ஏனென்றால் அவை இசைக்கப் படும்போது வாசிப்பவரின் வாயில் எச்சிலோடு தொடர்பு கொள்கிறது. ஆகவே அதை தீண்டத் தகாதவர்கள் மட்டுமே அதை வாசிக்கிறார்கள். ஆனால் தந்திகள் இணைக்கப்பட்ட வாத்திய மான வீணை பிராமணர்களுக்கு உரியதாகிறது. வாயில் வைத்து ஊதப்படும் மற்ற வாத்தியங்கள் கீழ் ஜாதிகளுக்கு என்றாகிறது.

மண் பாத்திரங்களை விட வெள்ளிப் பாத்திரங்கள் சுத்தமானவையாம். நூலாடையை விட பட்டுத் துணி தூய்மையானவையாம். ஏனென்றால் உடலின் பன்னிரண்டு அசுத்தங் களினால் இவை கறைபடுவதில்லையாம். பட்டுப் பூச்சி தன் உடம்பிலிருந்து வெளியே தள்ளும் பொருளிலான பட்டு மனிதர்களுக்கு மிகவும் தூய்மையானது தானாம். இதை சிந்தித்துப் பாருங்கள்!

இந்த அமெரிக்கர்கள் எவ்வளவு அரிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கின்றனர்! இவர்கள் நூலகங்களிலிருந்து கற்றும், கர்வம் பிடித்த பண்டிதர்களின் முன் அமர்ந்து அல்லது பனை ஓலைச் சுவடிகளின் தூசி தட்டி அவை களில் இருந்து ஆராய்ந்தும், சகல வித முயற்சி களும் செய்து விஷயங்களை சேகரித்து வடிகட்டி அறிவின் சாரத்தைத் திரட்டி இருக்கிறார்கள். அன்னய்யா இதையெல்லாம் ஆச்சரியமானவை யாகவே கருதினான். என்ன ஆச்சரியம்!

இந்தியாவ¨ப் பற்றி விஷயங்களை அறிய விரும்பினால் நீங்கள், பிலடெல்பியா, பெர்க்லி, சிகாகோ போன்ற இடங்களுக்கு வரவேண்டும். இந்தியாவில் இம்மாதிரி அறிவுத் தேடலுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இடம் இருக்கிறதா? சுவாமி விவேகாநந்தா சிகாகோ வந்தார் அல்லவா? இங்குதானே அவர் நமது மதத்தைப் பற்றி தனது முதல் சொற்பொழிவை நிகழ்த் தினார்.

உடல் இயக்கத்தில் ஏற்படும் மூன்று வித அசுத்தங்களில் முதலாவது பெண்களின் மாதவிடாய் குழந்தைப் பெறுதல் அதிகமான அசுத்தத்தை உண்டாக்குகிறது. இவைகளை விட மிக அதிகமான கடுமையான அசுத்தம் மரணத்தால் உண்டாவது. பிரேதத்துடன் லேசான தொடர்பு கொள்வது கூட சில அசுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. தகனம் நடைபெறும்போது வெளிவரும் புகை பிராமண னை தீண்டிவிட்டாலும் அவன் குளித்து தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிரேதத்திலிருந்து நீக்கப்படும் துணியை கீழ் ஜாதிக்காரனைத் தவிர வேறு யாரும் உடுத்திக் கொள்ளக் கூடாது.

(மனு 10:39)

பிராணிகளிலேயே பசுதான் புனிதமானது. கீழ்சாதிக்காரர்கள் இறந்த பசுவின் மாமிசத் தைப் புசிப்பார்கள். இதே காரணத்தினால்தான் காகங்களும், கழுகுகளும் பறவைகளிலேயே இழந்தவைகளாகக் கருதப்படுகிறது. சில சமயங்களில் மரணத்திற்கும், தீண்டாமைக்கும் உள்ள உறவு மிக மெலிது. நுண்ணியமானது. உதாரணமாக வங்காளத்தில் எண்ணெய் தொழிலில் உள்ளவர்களில் இரண்டு உள்பிரிவு உண்டு. எண்ணெய் வியாபாரம் செய்பவர்கள் உயர்ந்த சாதி. செக்கில் எண்ணெய் பிழிந்தெடுப்பவர்கள் தாழ்ந்த ஜாதி. ஏனென்றால் அவர்கள் எண்ணெய் வித்துக்களை நசுக்கி உயிரைப் பிரிக்கிறார்கள். ஆகவே அவர்கள் மரணத்தால் அசுத்தமாகிவிடுகிறார்கள்.

(ஹட்டன் - 1946-77-78)

அன்னய்யாவிற்கு இவைகளில் எதுவுமே தெரியாது. அவன் அதிகமாகப் படிக்கவில்லை என்று சொல்ல முடியாது. மைசூரில் பல்கலைக் கழகத்தின் நூலகத்திற்கு தினமும் நடந்து சென்றதில் அவனது பல ஜோடி செருப்புகள் தேய்ந்து கிழிந்துவிட்டன. அங்குள்ள ஐந்தாறு எழுத்தர்களை அவனுக்குத் தெரியும். அவர்களில் ஷெட்டி முக்கியமாக அவனுடன் கல்லூரியில் பொருளாதாரப் பாடம் எடுத்து அவனுடன் படித்தவன். சென்ற தேர்வில் அவன் வெற்றி பெறாததால் ஷெட்டி இந்த நூலகத்தில் வேலையில் சேர்ந்துவிட்டான். அன்னய்யா நூலகத்தில் நுழைந்த உடனேயே அவன் பீரோக்களைத் தேடி திறந்து தனக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக்கொள்ள ஷெட்டி எல்லா சாவிக் கொத்துகளையும் அவனிடம் கொடுத்து விடுவான்.

சாவிக் கொத்து கனமானது. ஏனென்றால் அவற்றில் அநேக சாவிகள் இருந்தன. அதில் உள்ள இரும்பு சாவிகள் அதிக தடவைகள் கையாளப்பட்டதால் வழவழவென்று பளபளப் பாக இருந்தன. அவைகளுக்கு மத்தியில் சிறிய பிரகாசமான பித்தளை சாவிகளும் இருந்தன. பித்தளை சாவிகள் பித்தளைப் பூட்டுகளுக்கு; ஆண் சாவிகள் பெண் பூட்டுகளுக்கு. பெண் சாவிகள் ஆண் பூட்டுகளுக்கு. பெரிய சாவிகள் பெரிய பூட்டுகளுக்கு. சின்ன சாவிகள் சின்ன பூட்டுகளுக்கு. பலவிதமான திருமணங்களைப் பற்றி மனு தன் நூலில் கூறி இருப்பது போல அந்தந்த சாவிகளுக்கேற்ற பூட்டுகள். சில பீரோக்களின் பூட்டுகள் மிகப் பெரியவை. ஆகவே அவை திறக்கப்படாமலேயே இருந்தன. மற்றவை அநேகமாக திறக்க முடியாதவை. அதிலுள்ள ஒரு புத்தகம் சைகை செய்து ஆசை காட்டி அழைப்பது போலிருந்தால் பீரோவை உடைத்துதான் அதை எடுக்க வேண்டும். ஒரு புத்தகத்திலுள்ள நிர்வாணப் படங்களுக்கும், சமூகவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று யாருக்குத் தெரியும்?

அவன் மைசூரிலிருந்தபோது அவன் படித்த தெல்லாம் மேல் நாட்டு விஷயங்கள்தான். அவைகளும் அநேகமாக ஆங்கிலத்தில்தான். அவன் கன்னடத்தில் படித்ததெல்லாம் மூர்த்தி ராவ் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியரும், அன்னா கரினினாவும் மற்றும் அமெரிக்காவில் பயின்ற அறிஞர்களின் இனவியல் பற்றிய ஆய்வறிக் கைகளும் தான். ஆனால் அவனே இப்போது அமெரிக்காவில் இருக்கிறான்.

எளிமை, அக்னி, பிரசாதம், மண், புலனடக்கம், தண்ணீர், பசுவின் சாணத்தால் மெழுகுதல், காற்று, புனித சடங்குகள், சூரியன், காலம் இவைகள் மனிதர்களைத் தூய்மைப்படுத்துபவை.

(மனு 5:105)

அன்னய்யா ஷ்ரோத்ரியின் மகனான அன்னய்யா இவைகளைப் பற்றி கற்றறிய பத்தாயிரம் மைல்களும் கடல்கள், நிலப்பரப்பு, இவைகளை எல்லாம் கடந்து வெறுப்பூட்டும் குளிரான சிகாகோ வரவேண்டியதாயிற்று. மறைந்து கிடக்கும் நமது மர்மங்களை இந்த வெள்ளையன் எப்படி கற்றுக் கொண்டான்? இந்த சூத்திரங் களை இவனுடைய காதுகளில் ஓதியது யார்? இந்த மாக்ஸ் முல்லரையே எடுத்துக் கொள்ளுங் கள். ஜெர்மானியரான அவர் சம்ஸ்கிருத மொழியைக் கற்றுத் தேர்ந்து, இந்தியப் பண்டிதர்களால் 'மோட்ச மூல பட்டர்' என்று (பாராட்டப் பெற்றார்) அறியப்பட்டார். இந்தியர்களுக்கே வேதத்தை போதித்தார்!

அவன் இந்தியாவில் இருந்தபோது அமெரிக் கா, இங்கிலாந்து அல்லது ஐரோப்பியா பற்றிய விஷயங்களினாலேயே ஈர்க்கப்பட்டிருந்தான். முடிவாக அமெரிக்காவில், இந்தியாவைப் பற்றியே மேலும் மேலும் படித்துக் கொண்டிருந் தான்.

தன்னிடம் வருகிறவர்களிடம் எல்லாம் இந்தியாவைப் பற்றி அதிகமாகப் பேசினான். அமெரிக்கர்களுக்கு தனது காபியைக் குடிக்கக் கொடுத்தான். அவர்களுடன் பீர் பருகினான். கைரேகைகள் பற்றி சொன்னான். பெண்களின் கைரேகைகளை ஆராயும் சாக்கில் அவர்களது கைகளைத் தொட்டு ரசித்தான். தனது இந்திய பாரம்பர்யத்தை முற்றிலும் அறிய தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். மானுட இயல் பற்றி தன் கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் படித்தான். சிகாகோ நூலகத்தின் இரண்டாவது மாடியின் மேற்கில் 'கீழ்திசைக்கான' பகுதி இருந்தது. பீரோக்கள், பீரோக்களாக புத்தகங் கள் நிறைந்திருந்தன. மர ஏணியினால் ஏறிச் செல்ல வேண்டிய அளவிற்கு பெரிய பீரோக்கள். அவனுடைய அடையாள அட்டை பி.கே. 321, இந்தப் புத்தகங்களை எடுத்ததற்கான குறியீடுகளால் நிரம்பியிருந்தது.

'உங்கள் நாட்டுப் பெண்கள் நெற்றியில் ஒரு புள்ளி வைத்துக் கொள்கிறார்களே அது ஏன்?' சர்வதேச இல்லத்தில் அவனுடைய பெண் நண்பர்கள் கேட்டார்கள். ஆர்வத்தோடு அவர்களது வினாவிற்கு விடையளிக்க அவன் நூல்களை தேடி படிக்க வேண்டியிருந்தது. கீதையைப் படித்தான். (மைசூரில் கீதையைப் படிக்க மறுத்து தன் தந்தைக்கு ஆத்திர மூட்டினான்.) இங்கு அவன் பீர், விஸ்கி பருகி மாட்டிறைச்சி சாப்பிட்டான். மலங்கழித்துவிட்டு, தண்ணீரால் சுத்தம் செய்வதற்கு பதிலாக அதற்குரிய காகிதத்தால் துடைத்துக் கொண்டான். மார்பகங்களும், தொடைகளும், ஒரு ரூபாய் அளவு தொப்பூழ் தெரியும்படியான படங்கள் நிறைந்த 'Playboy' இதழை மடியில் வைத்துக் கொண்டிருந்தான். இத்தனைக்கும் மத்தியிலும் அவனுக்குப் படிக்க நேரம் வைத்துக் கொண்டான். பொருளாதாரம் படித்தபோதும், அவன் இந்து மதத் தத்துவங்களையும் படித்தான்.

அவன் கணிதமும் புள்ளி இயலும் படித்துக் கொண்டே ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட பட்டியலிலிருந்து தான் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை தயாரிக்கவும் அவனுக்கு நேரம் இருந்தது. 'இந்து நாகரீகத் தை அறிந்து கொள்ள விரும்பித்தான் நீ அமெரிக்கா வந்திருக்கிறாய்' என்று தன் மனத்திற்குள் சொல்லிக் கொண்டான். தன்னு டன் இருக்கும் இந்தியர்களுடன் பேசும்போது, 'நமது சிகாகோ நூலகத்தில் கன்னட செய்தித் தாளான 'பிரஜாவாணி' கூட வருகிறது' என்று சொன்னான். மூடிக் கிடக்கும் இந்திய நாகரீகத் தின் கதவைத் திறக்க சாவியை - அமெரிக்க சாவியைக் கண்டுபிடித்துவிட்டான்.

ஒரு நாள் சிகாகோ நூல் நிலையத்தில் புத்தகங்களைச் சுற்றி வந்தபோது ஒரு கனமான புதிய நீல அட்டையுள்ள புத்தகம் கண்ணில் பட்டது. அதன் முதுகுப்புறத்தில் அதன் தலைப்பு 'இந்து மதம் : வழக்கங்களும் சடங்குகளும்' என்று தங்க எழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்தது. அதன் ஆசிரியர் ஸ்டீபன் ·பெர்கூசன். அது மிக சமீபத்தில் வெளியான நூல். அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் புதிதாக சேகரிக்கப்பட்டவை. அதில் ஒரு டஜனுக்கு மேற்பட்ட மரபு முறைகளும், சடங்குகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. ஒரு பெண் முதல் தடவையாக கருத்தரித்த நிலையில் செய்ய வேண்டிய சடங்கு முறைகள்; குழந்தைக்கு பெயர் சூட்டும்போது செய்ய வேண்டிய சடங்குகள். முதல்முறை குழந்தைக்கு தலைமுடி இறக்கும்போது, முதல் முறையாக குழந்தைக்கு கெட்டியான உணவு அளிக்கும் போது, பூணூல் அணியும்போது திருமணத்தில் ஏழு அடி நடக்கும்போது எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிகள் இது போன்று இன்னும் பலவும். திருமணமான முதல் இரவில் புதுமணத் தம்பதியர் பாதாம் பருப்பு கலந்த பாலை பகிர்ந்துகொள்வது. அறுபது வயது நிறைவு கொண்டாடும் மரபு முறை, சடங்குகள், புண்ணியம் தேட தர்மம் செய்யும் சடங்குகள், புண்ணியவசன (சுத்திகரிப்பு) சடங்குகள், நீத்தார் கடன் சடங்குகள் மற்றும் பலவும், இந்தப் புத்தகத்தில் யாவும் விரிவாக விளக்கி சொல்லப்பட்டிருந்தது.

பக்கம் 163. பிராமண சமூகத்தில் நடைபெறும் தகன கிரியைக்கான சடங்குகள் படங்களுடன் விளக்கப்பட்டிருந்தன. இந்த மனிதர் ·பெர் கூஸன் எவ்வளவு வியக்கத்தக்க செய்திகளைக் கொடுத்திருக்கிறார்! ஒவ்வொரு பக்கத்திலும் மனுவின் மேற்கோள்கள் அச்சாகியிருந்தன. முன்னோர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் முறை; முன்னோர்களின் கோத்திரமே உங்களது கோத்திரமாகக் கருதவேண்டும். மரணத்தினால் ஏற்படும் தீட்டு சந்நியாசியையும் பல்முளைக்காத குழந்தையையும் பாதிக்காது. பல் முளைக்காத ஒரு குழந்தை போனால் அங்கிருந்து ஒரு நாள்தான் தீட்டு. முடி இறக்காத குழந்தை யானால் மூன்று நாள் தீட்டு அனுஷ்டிக்க வேண்டும். மரணம் ஏற்பட்டு ஓராண்டு திதி ஏழு தலைமுறையை உள்ளடக்கியது. மகன், பேரன், பேரனின் மகன், தந்தை, பாட்டன், முப்பாட்டன், இத்தனை பேரையும் சேர்த்துதான் ஒவ்வொரு ஆண்டு திதியும் கொண்டாடப் பட வேண்டும். திதி செய்கிறவன், மேலே மூன்ற தலைமுறைக் கும் கீழே மூன்று தலைமுறைக்கும் மத்தியில் இருக்கிறவன். இவ்வாறு ஏராளமான விவரங்கள் அந்நூலில் சொல்லப்பட்டிருந்தன. மரணம் சம்பந்தப்பட்ட துக்கத்தை வெவ்வேறு ஜாதியின ரும் அநுஷ்டிக்க வேண்டிய நாள்கள் பற்றியும் அட்டவணையில் விவரிக்கப்பட்டிருந்தன. தந்தை வழி உறவில் ஒருவர் வெளிநாட்டில் இறந்த செய்தி தெரியாத வரை நீ துக்கம் அநுஷ்டிக்க வேண்டாம். ஆனால் இந்த செய்தியை கேட்ட உடனேயே துக்கம் அநுஷ்டிக்க வேண்டும். இறந்தன்றிலிருந்து நாட்களை எண்ணி உரிய நாளில் குளித்து தூய்மைப்படுத்தி தீட்டைப் போக்கிக் கொள்ள வேண்டும். அந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க அன்னய்யா அதிலேயே கட்டுண்டுப் போனான்.

இரண்டு பீரோக்களின் இடையில் அமர்ந்து அந்தப் புத்தகத்தை படித்துக்கொண்டே இருந்தான். இறந்தவருக்கு செய்யும் தகனக் கிரியை சடங்கினை நான்கு நிலைகளும் அதில் விவரிக்கப்பட்டிருந்தது. இத்தனைக் காலமும் மரணச் சடங்கினை அவன் பார்த்தது கிடை யாது. தன் வீட்டிற்கு சில தெருவிற்கு அப்பாலிருந்து, சலவைத் தொழில் செய்யும் சாதியினர் இறந்து போன தங்கள் உறவினர்களின் உடலை அலங்கரிக்கப்பட்ட பாடையில் ஊர்வலமாக தூக்கிச் செல்வதை ஓரிரு முறை பார்த்திருக்கிறான். அவனது மாமா இறந்தபோது அவன் பம்பாயில் இருந்தான். அவன் அமெரிக்காவிற்குக் கிளம்பிய சமயம், அவனது தந்தை லேசான நீரிழிவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பதால் நிச்சயமாக உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர் உறுதியாக சொன்னார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் அவரது கைகள் பாதிக்கப்பட்டு முகமும் ஒருபக்கமாக சாய்ந்துவிட்டது. ஆனாலும் அவனது தாய் வழக்கமாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கை நடுக்கத்துடன் எழுதும் கடிதங்களில் தந்தை சுகமாக இருப்பதாகக் குறிப்பிடுவாள். அவளது கடிதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்குமாறு எழுதுவாள். இல்லாவிட்டால் உடம்பு உஷ்ணமாகிவிடும் என்று குறிப்பிடுவாள். குளிர் தேசத்தில் உடம்பு உஷ்ணம் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம். எண்ணெய் குளியலுக்காக சீயக்காய் தூள் அனுப்ப வேண்டுமா என்றும் கேட்டிருந்தாள்.

ஒரு பிராமணன் உயிர்விடும் தருவாயில் அவனை கட்டிலில் இருந்து இறக்கி தரையில் புனித நாணல் புற்களை பாய் போல் பரப்பி அதில் படுக்க வைத்துவிடுவார்கள். அவனது பாதம் தெற்கு பக்கமாக இருக்கும். அது பூமிக்குப் பிரியமானது. மரணத்தின் அதிபதியான எமனின் திசை தெற்கு. அது இறந்துபோன முன்னோர் களின் உலகமும் கூட.

அடுத்து இறந்து கொண்டிருக்கும் நபரின் காதில் வேதம் ஓதப்படுகிறது. பிறகு பஞ்ச கவ்யா (பசுவின் பால், தயிர், நெய், சிறுநீர், சாணம் கலந்த கலவை) அவனது வாயில் ஊற்றப் படுகிறது. இறந்த மனிதன் அசுத்தமானவன். ஆனால் உயிரோடு இருக்கும் பசுவின் சாணமும் மூத்திரமும் ஒருவனின் பாவத்தைப் போக்கி புனிதமாக்குகிறது. இதை சற்று யோசித்துப் பாருங்கள்!

எள், பசு, சிறு மண் கட்டி, நெய், பொன், வெள்ளி, உப்பு, துணி, தானியம், வெல்லம். இந்தப் பத்தும் தானமாகக் கொடுக்கப்பட வேண்டும். ஒருவன் இறந்த பிறகு அவனது புதல்வர்கள் குளிக்கும்படியாகிறது. மூத்த மகன் அமங்கல நிகழ்வின் அறிகுறியாக பூணூலை மாற்றி அணிகிறான். இறந்தவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அதன் மீது திருநீறு பூசப்படுகிறது. பூமி தேவியின் உதவி வேண்டி பாடல் இசைக்கப்படுகிறது.

எதிர்ப்பக்கத்தில் பளபளப்பான காகிதத்தில் ஒரு புகைப்படம் உள்ளது. மைசூரில் இருக்கும் மாதிரியில் வீட்டின் முன் தாழ்வாரம் உள்ளது. பின்புறம் உள்ள சுவரில் இரும்புக் கம்பியிலான ஜன்னல் உள்ளது. தாழ்வாரத்தின் பக்கமாக உள்ள தரையில் தகனத்திற்குச் செல்ல தயாராக ஒரு பிரேதம் வைக்கப்பட்டுள்ளது.

உயிர் துறந்த மனிதன் கடவுளாகிறான். அந்த உடல் மகாவிஷ்ணுவினுடையது. அது பெண்ணின் சடலமாக இருந்தால் தேவி லட்சுமியினுடையது. அதை தெய்வமாக எண்ணி சுற்றிவந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிறகு நெருப்பு, அதுதான் புனித அக்னி. தீ மூட்டப்பட்டு அதில் நெய் ஊற்றப்படுகிறது. சடலம் ஒரு நூலினால் தீயுடன் இணைக்கப் படுகிறது. பிரேதத்தின் இரண்டு கால் கட்டை விரல்களும் இணைத்துக் கட்டப்பட்டு, உடல் ஒரு புது வெள்ளைத் துணியினால் மூடப் படுகிறது.

இந்த நிலையில் எடுக்கப்பட்ட ஒரு படமும் அந்தப் புத்தகத்தில் உள்ளது. அதே மைசூர் பாணி வீடு; அதே படத்தில் நெற்றியிலும் கைகளிலும் பட்டையாக விபூதி பூசிய சில பிராமணப் பெண்களும் இருந்தனர். மேலோட் டமாகப் பார்த்தபோது அவர்கள் பழக்கப் பட்டவர்கள் போல் தெரிந்தது. ஆனால் இங்கு தொலை தூரத்திலிருந்து பார்த்தால் விபூதி அணிந்த மைசூர் பிராமணர்கள் அனைவரும் ஒன்றுபோல் தெரிவார்கள்.

நான்கு பேர் பிரேதத்தை எடுத்து வந்து பாடையில் வைத்து கட்டுகிறார்கள். முகம் வீட்டைப் பார்க்காமல் வேறு புறம் பார்க்க வைக்கப்பட்டுள்ளது. பிரேதத்தின் ஊர்வலம் தொடங்கிவிட்டது.
Click Here Enlargeபிரேதம் தகனம் செய்ய அடுக்கப்பட்ட சிதையில் தலை தெற்காக இருக்கும்படியாக வைக்கப்படுகிறது. சடலத்தின் மீதிருந்த வெள்ளைத் துணி எடுக்கப்பட்டு வெட்டியானிடம் கொடுக்கப்படுகிறது. மகனும் மற்ற உறவினர்களும் பிரேதத்தின் வாயில், வாய்க்கரிசி போடுகிறார்கள். பிறகு தங்க நாணயத்தால் சடலத்தின் வாயை மூடுகின்றனர். சடலத்தின் மேல் ஒரு துண்டு துணியோ அல்லது ஒரு வாழை இலையோதான் உள்ளது. பிறந்த மேனியாக உடல் கிடத்தப்பட்டிருக்கிறது.

அவர்களுக்கு தங்க நாணயம் எங்கிருந்து கிடைத்தது? இந்தக் காலத்தில் அவ்வளவு தங்கம் யாரிடம் இருக்கிறது? பதினான்கு காரட் தங்கம் தான் இருக்கும். வேத நூல்கள் இதை அங்கீகரிக்குமா? அவன் வியப்படைந்தான்.

மூத்த மகன் நீர் நிரப்பிய தோண்டியை தோளில் சுமந்து வருகிறான். தோண்டியில் துவாரமிடுகிறார்கள். துவாரம் வழியாக வெளிவரும் தண்ணீரை பிரேதத்தின் மீது தெளித்துக் கொண்டு சிதையை மூன்று முறை சுற்றி வருகிறான். பிறகு தோண்டியை தன் முதுகுப் புறமாக வீசி உடைக்கிறான்.

தகனக் கிரியை புகைப்படமும் கூட அந்த நூலில் உள்ளது. அந்தப் படத்தைப் பார்த்த அன்னய்யாவின் மனம் சஞ்சலப்படுகிறது. அதில் வரும் முகம் அவனுக்கு அறிமுகமானதாகத் தெரிகிறது. இந்தப் படம் மிகவும் விலை உயர்ந்த கேமராவினால் எடுக்கப்பட்டிருக்கலாம். தகனத் திற்காக விறகுக் கட்டையினால் அடுக்கப்பட்ட சிதை. அந்த பிரேதம், பிறைச் சந்திரன் போல் சவரம் செய்யப்பட்ட முன்புறத் தலையுடன் நடுவயது ஆள், தண்ணீர் தெளித்தபடி தோளில் உள்ள தோண்டி; சற்று தூரத்தில் மரங்கள், ஜனங்கள்.

சற்று பொறு! நடு வயது மனிதனின் முகம் அவனுக்குத் தெரிந்ததுதான்! அது அவனுடைய சித்தப்பா சுந்தரராயரின் முகம். புகைப்படம் எடுக்கும் ஸ்டுடியோ ஒன்று அவருக்கு சொந்தமாக ஹரின்சூரில் உள்ளது. இந்தப் புத்தகத்தில் அது எப்படி இங்கு வந்தது? இந்த மனிதர் இதில் எப்படி வந்தார்?

அடுத்த பக்கத்தில் கொழுந்துவிட்டு எரியும் சிதையின் படம் தெரிகிறது. அந்தப் படத்தின் அடியில் அக்னி தேவனைப் பிரார்த்திக்கும் பாடல் அச்சாகியிருக்கிறது.

ஓ அக்னி! இந்த மனிதனின் உடலை விழுங்கிவிடாதே. இந்த மனிதனின் தோலை பொசுக்கிவிடாதே. இந்த மனிதனை அவனது மூதாதையர் உலகில் பத்திரமாக சேர்த்துவிடு.

ஓ அக்னி! நீ இந்த வீட்டுக்காரர்களின் தியாக வேள்வியில் நீ பிறந்தாய். உன் வழியாக அவன் மீண்டும் பிறக்கட்டும்.

இந்தப் பாடலின் இடையில் நிறுத்தி, சுந்தர ராயரின் முகத்தைப் பார்க்க பின்புறமாக ஏடுகளைப் புரட்டினான். அவர் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கவில்லை. வழக்கமான அவருடைய கிராப்பு தலையில் முன்புறம் பிறைச்சந்திரன் போல் முடி சிரைக்கப் பட்டிருந்தது, இந்த சடங்கு நிகழ்ச்சிக் காகத்தான் என்று தெரிகிறது. அவரது மார்பிலி ருந்த முடியும் கூட மழிக்கப்பட்டிருந்தது. தன் தொப்பூளுக்குக் கீழாக முன் தள்ளியிருந்த வயிற்றில் விசேஷமான மேல் கோட்டுத் துணியை உடுத்தி இருந்தார். ஆனால் அவர் ஏன் இந்தப் புத்தகத்திற்குள் வந்தார்?

அன்னய்யா முன்னுரைப் பக்கத்தை எடுத்தான். 1966-68ல் Ford Foundation Fellowship வேலை தொடர்பாக இந்த ஆள் ·பெர்கூசன் மைசூரில் இருந்ததாக முன்னுரையில் இருந்தது. சுந்தரராயாவும் அவரது குடும்பத்தினரும் மைசூரில், இந்த புத்தகத்திற்காக தகவல் சேகரிக்க பெரிதும் உதவியதாகவும் மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் ஒருமுறை படம் உள்ள ஏடுகளைப் புரட்டினான். இரும்புக் கம்பி ஜன்னல், அது அவனது பக்கத்து கோபியின் வீட்டு ஜன்னல்.

அதற்கு அடுத்த காலி வீடு செண்பக மரத்து கங்கம்மாவினுடையது. அவைகள் அவன் தெருவில் உள்ளவைகள்தான். அந்த தாழ்வாரம் அவன் வீட்டின் முன் உள்ளதுதான். அந்த பிரேதம் அவனது தந்தையினுடையதுதான். முகம் தெளிவாகத் தெரியவில்லை. அது ஒரு பக்கமாக சாய்வாக இழுக்கப்பட்ட முகம். உடல் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது. சுற்றி நின்ற பிராமணர்கள் அவனுக்குத் தெரிந்தவர் கள்தான்.

நூலின் ஆசிரியர் அவனது சித்தப்பா சுந்தர ராயாவுக்கு தன்னுடைய நன்றியறிதலை தெரிவித்திருந்தார்; அவர் ஆசிரியரை தனது உறவினர்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணம், பூணூல் அணி விழா, சீமந்தம், தகன நிகழ்ச்சி முதலிய விசேஷங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் இந்த சடங்குகளை படம் எடுக்கவும், சிலரை பேட்டி காணவும், புனித பாடல்களை ஒலிநாடாவில் பதிவு செய்யவும் உதவி இருக்கிறார். விசேஷங்கள் நடைபெறும் வீடுகளில் விருந்திற்கு அவரை அழைக்கவும் ஏற்பாடுகள் செய்தார். ஆகவே அன்னியனான இந்த ·பெர்கூசன் தாராளமாக மரியாதையோடு சுந்தரராயாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறான்.

இப்போது எல்லாம் தெளிவாகிவிட்டது. அன்னய்யாவின் தந்தை காலமாகிவிட்டார். அவருடைய மகன் தொலைவில் வெளிநாட்டில் அமெரிக்காவில் இருப்பதால் சுந்தரராயா ஈமச்சடங்குகளை செய்திருக்கிறார். தந்தையின் மரணத்தை அன்னய்யாவுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று உறவினர்களை அவன் தாய் கேட்டுக் கொண்டிருப்பாள். அவன் தன்னந் தனியாக தூர தேசத்தில் இருக்கிறான். துயர செய்தியை தெரிவித்து அவனை வருத்தப்படுத்த வேண்டாம். அவன் தன் படிப்பை முடித்துக் கொண்டு திரும்பி வரட்டும். பிறகு நாம் தெரிவிக்கலாம். இதெல்லாம் சுந்தரரயாவின் ஆலோசனையின்படிதான் நடந்திருக்கும். இரண்டு வருஷங்களுக்கு முன்பு அன்னய்யா அமெரிக்கா வந்து மூன்று மாதம் சென்றதும், அவனது தாய் தகப்பனாரால் இனி கடிதம் எழுத முடியாதென்றும். ஏனென்றால் அவரது கை பக்கவாதத்தால் பாதித்துள்ளது என்றும் எழுதி இருந்தாள். விதவையான அவனது தாயாரை வைதீகர்கள் இப்போது என்ன பாடுபடுத்தி இருப்பார்களோ யாருக்கு தெரியும்! சம்பிர தாயம், பழக்கம் என்று சொல்லி அவளது தலை முடியை மழித்திருப்பார்களாம். அவர்கள் ஜாதி விதவைகள் நீண்ட தலை முடி வைத்திருக்கக் கூடாது. சுந்தரராயரை நினைத்தபோது அவனுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது. அவன் இழிந்தவன், கீழ் சாதி சண்டாளன்! மீண்டும் ஈமச் சடங்கு நடைபெறும் படத்தைப் பார்த்தான். கம்பி, ஜன்னல், பிரேதம், பிறை போல சவரம் செய்யப்பட்ட சுந்தரராயாவின் தலை, அவனது தொப்பை வயிறு. மீண்டும் படத்தின் கீழ் உள்ள குறிப்பைப் படித்தான்.

முன்னும் பின்னுமாக ஏடுகளைப் புரட்டினான். மனம் கிளர்ச்சியுற்ற நிலையில் புத்தகம் நூலகத்தின் தரையில் விழுந்தது. பக்கங்கள் மடித்துக் கொண்டன. புத்தகத்தின் பக்கங்களை சரியாக்கினான். இதுவரை அமைதியாக இருந்த இடம், முற்றத்தின் கீழே உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்தபோது வெளியேறிய தண்ணீர் பேரிரைச்சலை உண்டாக்கியது.

தண்ணீர் வெளியேறி முடிந்ததும் மீண்டும் அமைதி நிலவியது.

பக்கங்களைப் புரட்டியபோது சீமந்தம் என்று தலைப்பிட்ட அத்தியாயம் கண்ணில் பட்டது. அவனது சித்தப்பாவின் மகள் தமயந்தி இதிகாசத்தில் வரும் ராஜகுமாரி சீதை போல தலையில் முடி சூடியபடி திருமணமான பெண்கள் சுற்றி அமர்ந்திருக்க மேடையில் அமர்ந்திருந்தாள். இது அவளது முதல் கருத்தரிப்பு. இடுப்பைச் சுற்றி துருத்திக் கொண்டிருந்த வயிறு பிரசவ காலம் நெருங் கிவிட்டதைத் தெரிவித்தது. இந்த சடங்கும் அமெரிக்கரின் வருகையும் ஒன்று சேரும் சமயத்தில் அவன் படம் எடுக்க வசதியாக தேதியை நிச்சயத்திருக்கிறார். அவன் இந்த சடங்கை நேரில் பார்ப்பதற்காக இந்த ஏற்பாடு. அவனது சித்தப்பா தன் வீட்டிலேயே இந்த வசதியை செய்து கொடுத்துவிட்டார். 'அந்த ஆள் ·பெர்கூசன் அவருக்கு எவ்வளவு பணம் கொடுத்திருப்பான்' என்று அன்னய்யா ஆச்சரியப்பட்டான்.

படத்திலுள்ள பெண்களுக்கு மத்தியில் தன் தாயாரைத் தேடினான். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக அவனுக்குத் தெரிந்த செண்பக மரவீட்டு கங்கம்மா, பின்னல் வேலை செய்யும் லச்சம்மா ஆகியோரை கண்டுபிடித்தான். தெரிந்த முகம், பல்ப் போன்ற மூக்கு, காதில் தோடு, மூக்குத்தி. அவர்களது நெற்றியில் ஒரு பென்னி அளவு குங்குமப் பொட்டு. ஆக எல்லோரும் அவனுக்குத் தெரிந்தவர்கள்.

பரபரப்போடு அட்டவணை பக்கத்தை எடுத்தான். V என்ற தலைப்பில் உள்ளவற்றைப் படித்தான்

Veddas, Vedas, Vestments. அடுத்து W என்ற தலைப்பில் Weber, Westermarck, West Coast...

கடைசியில் Widowhood என்ற பகுதி, விதவைக் கோலம் பற்றியே ஒரு தனி அத்தியாயம். இது இயற்கைதான். அந்த அத்தியாயத்தில் 233ம் பக்கத்திற்கு எதிர்ப் பக்கத்தில் இந்து விதவை என்றிருந்தது ஒரு படம். இந்து சம்பிரதாயப்படி தலைமுடி மழிக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பு கீழே இருந்தது. நன்றி சுந்தரராவ் ஸ்டுடியோ என்றும் இருந்தது. இது அவனது அம்மாவின் படமாகத்தான் இருக்குமா? தெரிந்த முகம். தலை மழித்து முக்காடிட்டு உள்ளதால் அடையாளம் காண முடியவில்லை. அது கருப்பு, வெள்ளைப் படமாக இருந்தாலும், அந்த புடவை காவி நிறம் என்று தெரிந்து கொண்டான். சாயம் கரைந்த புடவை. விதவைகள் வழக்கமாக உடுத்திக் கொள்ளும் வகையான புடவை.

சுந்தரரய்யா இன்று உயிரோடிருக்கிறான் என்றால், அவன் பசிபிக் மகா சமுத்திரத்திற்கு அப்பால் பத்தாயிரம் மைல் தூரத்தில் ஹ¥ன்சூரில் செலுவம்பா அக்ரகாரத்தில் வசிப்பதால்தான்.

ஏ.கே. ராமானுஜன்
More

சிறகுபலம்
Share: 




© Copyright 2020 Tamilonline