Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
Tamil Unicode / English Search
சிறுகதை
வெளிநாட்டு வேலை
'X'
- காஞ்சனா தாமோதரன்|ஆகஸ்டு 2001|
Share:
Click Here Enlargeஅவனுக்கு வாழ்க்கை புரியவில்லை.

பன்னிரெண்டு வயதில் உலகமே பெரிய X (எக்ஸ்) குறியாகத் தெரிந்தது அவனுக்கு. அர்த்தத்தைத் தன்னுள் மறைத்துக் கொண்டு வெறும் எழுத்தாய், ஏளனமாய்ச் சிரிக்கும் அல்ஜீப்ரா X அவனைச் சிறையில் அடைத்து குறுக்குக் கம்பிகளாய்க் காவல் காக்கும் X. கூரிய கத்திரிக்கோலாய் அவன் சிறகுகளை நறுக்கும் X மூக்கு மேல் ப்ளாஸ்திரியாய் அவன் மூச்சை இறுக்கும் X அப்பாடி அடிக்கடி வெளியூர் போய்விடுவார். அவர் ஸா·ப்ட்வேர் என்ஜினியர் வேலை அப்படி. அம்மாவுக்குப் பிரவு பழக்கமானதுதான்.

ஆனால் இன்னும் பிரிவின் வேதனை பழக்கமாகவில்லை. அப்பா கிளம்பும்போது அவள் பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு சிரிப்பதைப் பார்த்து அவனுக்குப் பரிதாபமாய் இருக்கும். உள்ளூரிலேயே இருக்கும்படி ஒரு வேலை கிடைத்jது அப்பாவுக்கு. அவருக்கு அது பிடிக்கவில்லை. ''சம்பளம் சில நூறு குறஞ்சாலும் பரவால்ல. அஷ்வினுக்கு டீனேஜ் ஆகப் போகுது. இந்த வயசுல அப்பாதான் நல்ல ·பிரண்ட் ஒரு பையனுக்கு. அவனுக்காகவாவது நீங்க இனிமே இங்கேயே இருங்களேன், ப்ளீஸ்'' அம்மா இரவு நேரத்தில் போட்ட கிசுகிசுப்பு நிராகரிக்கப்பட்டது. அம்மாவின் அப்பீல் விசும்பல் ஏதோ ஒரு திடீர் நிசப்தத்தில் உறைந்து போனது.

சுவர்க்கோழிக்கும் இரவு முழுதும் தூங்கவில்லை என்பது தான் அவனுக்கு அன்று புரிந்த உண்மை. அப்பாவின் மனதில் என்ன நினைப்பு, அவனுக்குப் புரியவிலை, புதிரான X.

அம்மாவும், அப்பாவை மாதிரி ஸா·ப்ட்வேர் எஞ்ஜினியர் தான். ஆனால் பாதி நாள் மட்டும் தான் வேலை செய்கிறாள் இப்போது. அவனையும் ·ப்ளாட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டும். காலை எழுந்தவுடன் பரபரப்பு எல்லோருக்கும். இனம் தெரியாத எதையோ தேடி ஓடும் பரபரப்பு. ''அஷ்வின், ஏதாவது சாப்பிட்டியா?'' பெட்ரூமில் கண்ணாடி முன் மேக்கப்பைச் சரி செய்து கொண்டிருக்கும் அம்மாவின் அசரீரி. ''இதோ சாப்டுட்டேம்மா. ''பாலாபிஷேகம் செய்த சீரியலை டைனிங் ரூம் வாஷ்பேஸினில் கொட்டியபடி அவன் சொல்லும் தினசரிப் பொய். அவனுக்குப் பசிப்பதில்லை. அப்படியே பசித்தால் நேற்றிரவு மீந்து ·பிரிட்ஜில் தூங்கியது இன்று டி·பன் பாக்ஸில் மத்தியானச் சாப்பாடாய் மறு அவதாரம் எடுத்திருக்கிறதே.

அம்மாவும் அவள் பெர்·ப்யூமும் அவனை மெல்ல அணைத்து விடை கொடுக்கையில் நேற்று ராத்திரி அவனுக்காக விசும்பி அழுத அம்மாவா இவள் என்று நம்ப முடியவில்லை. இவளால் எப்படி இவ்வளவு நார்மலாக இருக்க முடிகிறது? அப்பா செய்வது சரி என்று ஒப்புக் கொள்கிறாளா? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, இன்னும் ஒரு X.

நெஞ்சமும் back pack புத்தகப்பையும் கனக்க ·ப்ளாட்டின் ஒரு மாடி இறங்கி ரிக்ஷாவில் ஏறுகையில் முதுகு வளைந்து வலிக்கிறது. ரிக்ஷாவிலுள்ள மற்ற ஸ்கூல் பையன்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் சமீபத்திய ஹிந்தி - தமிழ் இசைச் சாதனைகள். நேற்றிரவு MTV - யில் பார்த்த வினோதமான அமெரிக்க நடன முத்திரைகள். பிஸினெஸ் விஷயமாக வெளியூர் சென்ற அப்பா அல்லது அம்மா வாங்கி வந்த விலை உயர்ந்த பரிசுகள். தங்கள் கீபோர்ட், ஸாக்ஸ·போன் பாடங்கள், உலக டென்னிஸ் ஹீநேராக்களின் காது வளையங்கள், வடக்கிலிருந்து இறக்குமாதியாகும் தமிழ்த்திரை நாயகிகளின் சின்மாஸ்கோப் வளைவுகள். இறக்குமதியின்றி இங்கேயே உற்பத்தியாகப் போகும் பிறநாட்டுக்காரர்கள் அரட்டைகள் தொடர்ந்தன.

இவ்வளவு தானா? வாழ்க்கையில் சந்தோஷத்தின் அடையாளங்கள் இவ்வளவுதானா? அப்படியானால் அவனால் ஏன் இன்று இவர்களைப் போல் சிரிக்க முடியவில்லை? மிகப் பெரிய X.

க்ளாஸ் ரூம் ஜன்னலுக்கு வெளியே மரப்பொந்தில் இரண்டு கிளிகள் பேசிக் கொண்டிருந்தன. டீச்சரின் குரல் வேறு கிரகத்திலிருந்து வந்தது. பாவம், இந்த டீச்சர் கஷ்டப்ட்டு தலையில் ஏற்றும் இந்தப் பாடங்களில் எத்தனை பர்ஸென்ட் அறிவை உண்மையிலேயே வளர்க்கப் போகிறது? X. எத்தனை பர்ஸென்ட் நிஜவாழ்வில் உதவப் போகிறது? X எத்தனை பர்ஸென்ட் வெறுமே புத்தகப்பையை நிரப்பி முதுகெலும்பை ஒடிக்கப் போகிறது? X.

பாடங்களில் செல்லாத மனம் மும்முரமாய்க் கனவுக் காட்சி எழுதி டைரக்ட் செய்தது.

ஸெளண்ட் ஆ·ப் ம்யூஸிக் படத்தின் முதல் ஸீனில் வருவது போல் பச்சைப் பசேலென்ற திறந்த பெரிய புல்வெளி. அதன் மத்தியில் ஜூலி ஆன்ட்ரூஸ் போல் அவன், முதலில் சிறு புள்ளியாய், பின் க்ளோஸ் அப்பில் முழு உருவாய். தெரியாத ராகத்தில் புரியாத ஒரு பாட்டைப் பாடிக் கொண்டே காற்றைப்போல் சுதந்தரமாய் சுழன்று கொண்டு. ஆனால் அவன் பின்னால் தெரியும் புள்ளிகள்....

இதுவரை அவன் சந்தித்த X-கள், அவன் பின்னாலேயே துரத்தி ஓடி வரும் X-கள், அவனைக் கட்டிப் போட்டுச் சுற்றி ஆர்ப்பரிக்கும் X-கள், புரிந்து கொள்ளாத அப்பாக்கள், புரிந்து கொள்ள முடியாத அம்மாக்கள், காரணமில்லாமல் சிரிக்கும் நண்பர்கள், காரணத்தோடு சிரிக்காத டீச்சர்கள், பிடிபடாத பாடங்கள். X-களில் எத்தனை வகை! காற்றில்லா மூச்சுத் திணறலில் கனவு ஸீனுக்கு டைரக்டரின் ''கட்'', ''கட்''.

சாயங்காலம் ஸ்கூல் முடியும் போது ஒரே மழை. அம்மாவே குடையோடு ஆட்டோவில் வந்து விட்டாள். ''ரிக்ஷாவில் நனைஞ்சு ஜலதோஷம் பிடிக்கும§ன்னுதான்''. சாலையில் கண் பதித்தவாறு அம்மா அவனிடம் பேசினாள். அவளைப் பார்க்க அவனுக்கு பிடிக்கவில்லை. வராத ஜலதோஷத்தைப் பற்றிக் கவலைப்படும் இவளுக்கு அவன் மூச்சுத் திணறல் புரியவில்லையா?

அம்மாவின் சிறு வயதுக் கதைகள் அவனுக்குத் தெரியும். அவள் அப்பா அடிக்கடி வெளியூர் போவதில்லை. வேலை விஷயமாக. அவள் அம்மா வேலைக்கே போனதில்லை. அவள் வளர்ந்தது ஒரு முழு வீட்டில். முன் பக்கமும், பின் பக்கமும் தோட்டங்களும் காற்றும் நிறைந்த ஒரு முழு வீட்டில். அடுக்கு மாடியில் உள்ள ·ப்ளாட் சிறையில் அல்ல. அவள் காலைச் சாப்பாடு சூடான இட்லி அல்லது உப்புமா. கலர்கலராக அட்டை டப்பாவில் வரும் சீரியல் இல்லை. அவனை மாதிரி சாயங்காலத்திலிருந்து ராத்திரி வரை முதுகை ஒடிக்கும் ஹோம்வொர்க் அவளுக்கு கிடையாது. பாண்டியும் சடுகுடுவும் விளையாட அவளுக்கு நேரம் உண்டு. நூறாயிரம் சானல் உள்ள சாட்டிலைட் டிவி அப்போது கிடையாது. எனிட் ப்ளைடனும் இந்துமதியும் எக்ஸ்ப்ரெஸ்ஸ¤ம் விகடனும் படிக்க அவளுக்கு நேரம் இருந்தது. இரவு முற்றத்தில் உட்கார்ந்து அவள் தம்பி தங்கையோடு கதை பேசிக் கொண்டு நிலாச்சோறு சாப்பிட முடிந்தது.

அம்மா வளர்ந்தது அவனுக்குத் தெரியாத ஓர் உலகத்தில். அது மறைந்து போனது ஒரு மாயாஜால மர்ம X.

நீண்ட பெருமூச்சு விடும் அவனை அம்மா ஓரக்கண்ணால் பார்த்தாள்.
இரவு படுத்துக் கொண்டு தன் பெட்ரூம் விட்டத்தில் ஒட்டிய இருளில் ஒளிரும் ·பாஸ்·போரஸென்ட் நட்சத்திர ஸ்டிக்கர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அமெரிக்க அத்தை ஆசையாய் அனுப்பியது.

டிவியில் பாரதி விழாவில் கேட்ட ''பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வைரம்'' கவிதை வரி சட்டென்று மனதில் ஓடியது. அவனுக்கு கவிஞனாக வேண்டும். மனதில் இப்போது குழம்பும் உணர்ச்சிகளை வரைந்து தள்ள.

''அஷ்வின், ஸ்கூல்ல ஏது¡வது ப்ராப்ளமா? ஏன் ஒரு மாதிரி இருக்கே?''

இவளுக்கு எப்படி புரிய வைப்பது? சொல்லிப் பார்க்கலாமா? புரிந்து கொள்ளத்தானே கேட்கிறாள்? அப்பா மட்டும்தான் ஒரு பையனுக்கு ·ப்ரெண்டா? அம்மா ·ப்ரெண்ட் இல்லையா?

''அப்பாவும் நம்ம கூடவே இருக்கணும். நம்ம எல்லாரும் சேர்ந்து சாப்டணும். வெளியே போய் விளையாட நேரம் வேணும். மத்த புக்ஸ் படிக்க நேரம் வேணும். பேசிச் சிரிக்கிறதுக்கு நேரம் வேணும். நீ சின்ன வயசுல ஜாலியா வளர்ந்த மாதிரியே நானும் இப்போ இருக்கணும். நிம்மதியா சில நாளாவது மூச்சு விடணும்மா''.

வார்த்தைகள் அலைகளாய் முட்டி மோதி உடைந்து சிதறின. கண்ணீரும் தான்.

அம்மா பனிக்கட்டியாய் உறைந்து போனாள். நெஞ்சில் வெடித்த விம்மல் தொண்டைக் குழியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

குழந்தை போல் அவனை வாரி அணைத்த கன்னத்தோடு கன்னம் இழைக்கையில், அம்மாவின் கண்ணீர்ப் பளபளப்பில் ஒரு ''X'' மிதந்தது.

காஞ்சனா தாமோதரன்
More

வெளிநாட்டு வேலை
Share: 
© Copyright 2020 Tamilonline