Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சிரிக்க சிரிக்க | நேர்காணல்
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
அதையும் தாண்டி புனிதமானது
- கீதா பென்னெட்|ஜூன் 2001|
Share:
Click Here Enlargeபெட்டி, படுக்கையுடன் ஜானகி வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா, அம்மா, சீதா எல்லோரும் டெலிவிஷனில் மூழ்கியிருந்தார்கள்.

உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. அம்பயர் கைகள் இரண்டையுமே மேலே தூக்கி, 'அவுட்' கொடுக்க, ரசிகர்களின் கூச்சல் காதைப் பிளந்தது. காமிரா மெல்ல நகர்ந்து சில சந்தோஷ முகங்களைக் காட்டிவிட்டு, இரண்டு அரை நிஜார் பெண்களின் வெள்ளை வெளேர் ஆஸ்திரேலியக் கால்களில் போய்த் தயங்கி நின்றது.

ஜானகியை இன்னும் யாரும் கவனிக்கவில்லை. சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு, 'ம்..' என்று கனைத்தாள்.

''தாங்க் காட்! அம்பயர் இப்பவாவது அவுட் கொடுத்தானே!'' என்ற சீதாதான் முதலில் அவளைப் பார்த்தாள். ''அம்மா யார் வந்திருக் கான்னு வந்து பாரேன்...''

சீதாவின் குரல் கேட்டு அம்மா அடுக்களை யிலிருந்து வெளியே வர, ஈஸிசேரில் சாய்ந்திருந்த அப்பாவும் ஜானகியை வியப்புடன் பார்த்தார். ''வா கொழந்தே'' என்றார்.

''அட ஜானகியா? வா, வா என்ன இப்படித் திடுதிப்புனு லெட்டர் கூடப் போடாம வந்து நிக்கறே? மாப்பிள்ளை கூட வரலையா?'' அம்மாவின் முகத்தில் இப்போது தெரியும் அப்பட்டமான மகிழ்ச்சி, இன்னும் சில விநாடிகளில் அழிந்துவிடப் போகிறது. ''என்னடி, மொகமே சொரத்தாயில்லை? குளிச்சிட்டு இருக்கியோன்னோ? சாதாரண மாக இப்படி வர மாட்டியே? சண்டை போட்டுட்டு வந்திருக்கியா?'' அம்மா மறுபடி கேட்டாள்.

''எனக்குத் தெரியும் நீ ஏன் இங்கே வந்துட்டேன்னு. அத்திம்பேர் மேட்ச் பார்த்திட்டு உட்கார்ந்திருப்பார். நீ உன்னைக் கவனிக் கலைன்னு கோச்சிட்டு ஓடி வந்திருப்பே. மேட்ச் முடியற வரைக்கும் இங்கதானே டேரா'' சீதா சீண்டினாள்.

''மேட்ஸ் முடியற வரைக்கும் மட்டும் இல்லை. இனிமே என்னிக்குமே இங்கதான் டேரா.''

ஜானகி, சீதாவுக்கு பதில் சொல்ல, அம்மா திகைத்து நிற்க, அப்பாதான் ''மொதல்லே அவளை உள்ளே அழைச்சிட்டுப் போய் வயத்துக்கு ஏதாவது ஆகாரம் கொடு. கொழந்தை பசியாயிருப்பாள்'' என்று அம்மா விடம் சொன்னார்.

அம்மா தளிகை உள்ளுக்கு ஜானகியை அழைத்துப் போய் தோசை வார்த்துப் போட்டாள். காப்பியைக் கலந்து கொடுக்கும் போது மறுபடி கேட்டாள்.

''அவரோட சண்டை போட்டுட்டு வந்திருக்கியா என்ன? இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வைக்கணும்னு ஊரே அவரைக் கொண்டாடறது. அப்படி இருக்கும்போது நீ நிரந்தரமா இங்க வந்துட்டேன்னு சொல்லித் தலையிலே கல்லைத் தூக்கிப் போடறியேடி? நாலெழுத்துப் படிச்சுட்டா இப்படித்தான் திமிரெடுத்து அலையணுமா?''

''அம்மா ப்ளீஸ்... கொஞ்சம் தொண தொணக்காதேயேன். நான் உன் வயித்தில பொறந்த பொண்ணு. எது செஞ்சாலும் யோசிக்காத செய்யமாட்டேன்னு உனக்குத் தெரியாதா? நான் விவரமா எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன். இப்ப கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.''

அம்மா ஒன்றும் பேசாமல் புடவைத் தலைப்பால் கண்களை மட்டும் துடைத்துக் கொண்டாள். ஜானகி மாடிக்குப் போய் அறைக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்தாள்.

ஊரே மெச்சுகிற மாப்பிள்ளை! அம்மா பாராட்டுகிறாள். உண்மைதான். அப்பாவின் மீது அவளுக்கிருக்கும் பக்தியும் அன்பும் ராகவனுக் கும் இருக்கிறது என்று தான் உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது.

அப்பா தஞ்சாவூர் அருகே இருக்கும் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். பண வரவு எதிர்பார்க்காது தமிழுக்குத் தொண்டு செய்பவர் என்றால் அவர்தான் முன்னணியில் நிற்பார். இவர் பாடம் சொல்லித் தரும் நேர்த்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு ராகவன் வார இறுதிகளில் மதுரைக்கு அவரை வரவழைத்தான்.

ராகவன், மீனாட்சி சுந்தரம் என்று இரண்டு பேரோடு ஆரம்பித்த தமிழ் வகுப்பு, சில மாதங்களிலேயே குபுகுபுவென முப்பது பேராக வளர்ந்துவிட்டது. கம்பராமாயணம், தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருப்புகழ், காவடிச்சிந்து என்று வகுப்பு எடுத்து, பல மதுரை இளைஞர்களிடையே தமிழ் வெறியை வளர்த்தார். ரயில் செலவுக்கு மட்டும் ராகவன் பணம் கொடுத்துவிடுவான். அதற்கு மேல் ஒரு பைசா வரவு இல்லை.

அப்பாவோடு அடிக்கடி ஜானகியும் மதுரை போய் வந்ததில் அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். அதை அப்பாவும் நோக்கினார். பைசா குறைச்சலில்லாமல் வரதட்சணை கொடுத்து அவளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

ஆனால் ஏனோ தெரியவில்லை. அவர்கள் திருமணம் ஆகி ஒருமுறைதான் அப்பா வகுப்பு எடுக்க மதுரை வந்தார். ஜானகி மட்டும் அடிக் கடி தஞ்சாவூர் போவாள். ராகவன் எப்போதாவது கூட வருவான். கல்யாணம் ஆன பின் மாமனார் மாப்பிள்ளை உறவால் அவர்கள் நட்பு இன்னும் விரியும் என்று நினைத்தவளுக்கு இருவரிடையும் ஒரு திரை விழுந்துவிட்டது புரிந்தது.

''ஒரு வேளை மாப்பிளையானதுக்கு அப்புறம் முன் மாதிரி ·ப்ரீயாப் பழக முடியாமத் தவிக்கிறார் போல. எப்படியிருந்தாலும் மொதல் லே எனக்கு அவர் ஆசான். அப்புறம்தான் மாமனார்'' என்றான்.

அதற்கப்புறம் இரண்டு வருடங்களில் அப்பா ரிடையராகிச் சென்னை வந்துவிட்டார். வருடத் திற்கு ஒரு முறை ஜானகி அவரை வந்து பார்ப் பாள். நான்கு நாட்கள் தங்குவாள். அவ்வளவு தான்.
ஆனால் இந்த முறை?

அன்றிரவு எல்லோரும் படுத்துக் கொண்டாகி விட்டது. ஜானகிக்குத் தூக்கம் வரவில்லை. ஊரடங்கிவிட்டது. அம்மாவின் குரல் அவள் தலைமாட்டருகே ஒலித்தது. ''ஜானகி, அப்பா உன்னை மொட்டை மாடிக்கு வரச் சொல்கிறார்.

அவளும் சத்தம் போடாமல் எழுந்து மேலே போனாள்.

அங்கே ஓரிரு நிமிடங்கள் ஏதும் பேச்சு இல்லை. அம்மாதான் முதலில் திருவாய் மலர்ந்தாள்.

''பெர்மனென்டா இங்கியே வந்துட்டேன்னு இப்படித் திடீர்னு தலையிலே கல்லைத் தூக்கிப் போடறேயேடி ஜானகி...''

''ச்... அழாதே. ஜானகியைப் பேச விடு'' சொன்ன அப்பாவின் முகத்தையே ஓரிரு கணங்கள் உற்று நோக்கினாள் ஜானகி.

அவருக்குத் தெரியாதா நடந்தது என்ன என்று? இருந்தாலும் அவர் முகத்திலிருந்து என்றைக் குத்தான் அவர் உணர்ச்சிகளை அறிய முடிந்திருக்கிறது?

''அம்மா, காரணம் ரொம்ப சிம்பிள், ஊரே மெச்சற உன் மாப்பிள்ளை ஒரு ·ப்ராட். அப்படிப்பட்டவரோடு என்னால குடித்தனம் பண்ண முடியாது.''

''ஏன்? அப்படி என்ன ·ப்ராட் பண்ணிட் டாராம்?'' அம்மா அவசரப்பட்டாள்.

''அப்பாகிட்டே மதுரையிலே படிச்சாரே மீனாட்சி சுந்தரம்னு, ஞாபகம் இருக்கா?''

''ஆமாம். செக்கச் செவேல்னு, வக்கீல் புதுத்தெருவிலே இருந்தாரே? சமீபத்திலே கான்ஸர்லே போய்ட்டார் இல்லியோ?''

''ஆமாம். அவர்தாம்மா. போறதுக்கு ரெண்டு நாள் முன்னாலே என்னைப் பார்க்கணும்னு சொல்லியனுப்பினார். ஆஸ்பத்திரியிலே போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்தவுடன் 'ஓ'ன்னு அழுதுட்டார்.''

''என்னடி ஜானகி? இந்தக் கதையெல்லாம் எதுக்கு?'' அம்மா கேட்க, ஜானகி அவளைக் கையமர்த்தினாள்.

ஆஸ்பத்திரியில் உயிருக்குப் பேராடிக் கொண்டிருக்கும் ஒருவரது வாக்குமூலம்தான் ஜானகியை ராகவனைவிட்டு வரச் செய்தது, மீனாட்சிசுந்தரம் தன்னிடம் சொன்னதை அப்படியே சொன்னாள்.

உங்கப்பா எங்களுக்கெல்லாம் தெய்வம் மாதிரி ஜானகி. அவர் பத்து வருஷமா வெய்யில், மழை, பனி பார்க்காமே ரயில் பயணம் பண்ணி எங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார்.

ஒரு நாள் க்ளாஸ் முடிஞ்சு எங்கிட்டே வந்து தனியாப் பேசணும்னு சொன்னார். ''உங்ககிட்ட கேட்கிறதுக்கு வெட்கமா இருக்கு மீனாட்சி சுந்தரம். ராகவன் ஏதோ அவசரம்னு போயிட் டார். அதனாலே வழக்கம் போல ரயில் சார்ஜ் கொடுக்கலை. என்கிட்டே சில்லறை பத்தாது. அடுத்த முறை கொடுத்திடறேன்'' என்கிறார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். ''ஏன் சார்? ராகவன் உங்களுக்கு ரயில் சார்ஜ் மட்டும்தான் கொடுப் பாரா?'' என்று கேட்டேன்.

''ஆமாம். பத்து வருஷமா ஒருமுறை கூடத் தவறியதில்லை. இன்னிக்கு என்ன அவசரமோ,'' என்றார்.

''என்ன சார் இது அநியாயம்? நாங்க இருபத்து அஞ்சுபேரும் இத்தனை வருஷமா க்ளாஸ¤க்கு முப்பது ரூபாய்னு ராகவன்கிட்டே கொடுத்திட்டு வரோமே, உங்களுக்குத் தெரியாதா?'' என்று கேட்டேன்.

உன் அப்பா அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டார். ''அப்படியா?'' என்றார். அவ்வளவுதான்.

என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. ''வாரம் எழுநூத்து அம்பது ரூபாய்னா, மாசம் மூவாயிரம் ரூபாய். பத்து வருஷத்துக்கு எவ்வளவு ஆச்சு? அம்மாடியோவ்! அத்தனையையும் ராகவன் தன் பையிலே போட்டுக்கிட்டு, ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி தன் பாக்கெட்டிலிருந்து ரயில் சத்தம் கொடுக்கிற மாதிரி பாவனை பண்ணிக்கிட்டு இத்தனை வருஷம் உங்களை மட்டும் இல்லை சார். எங்களையும் இல்லே ஏமாத்திக்கிட்டிருக்கான்? அவனை மொதல்லே போலீஸிலே சொல்லணும்.''

துடித்த என்னைத் தடுத்தார் உன் அப்பா. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந் திருந்தார். அப்புறம் இது பத்தி யார் கிட்டேயும் பேச வேண்டாம்னு என்கிட்டே கேட்டுக் கிட்டார். அவனைத் திட்டலை. இப்படி நல்ல வனா நடிச்சு முதுகிலே குத்திட்டி யேடான்னு இன்னிவரைக்கும் அவனைக் கேட்கலை. அவர் என்ன மனுஷரா, இல்லை மகானா? அது மாதிரி மன்னிக்கிற குணம் எவ்வள உசத்தி? அவருக்கு மகளாப் பொறக்க நீ எவ்வளவு புண்ணியம் பண்ணியிருக்கணும்? நான் சாகறதுக்குள்ளே நடந்ததை உனக்குச் சொல்லணும்னு துடிச் சேன்.''

சமீபத்தில் இறந்து போன மீனாட்சிசுந்தரம் தன்னிடம் சொன்னதை ஜானகி மூச்சு விடாமல் ஒப்பித்தாள்.

''இப்ப சொல்லும்மா. நான் தெய்வமா நினைக் கிற அப்பாவை ஏமாத்தினவரோடு என்னாலே எப்படிம்மா வாழ முடியும்?''

அம்மா அதற்குப் பதில் சொல்லவில்லை. அப்பா இப்போது நிதானமாகப் பேசினார்.

''உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது இந்த விஷயம் எனக்குத் தெரியாதும்மா. நான் ஏதோ இலவசமாத் தமிழ் சேவை செய்யறேன்னுதான் நினைச்சுக் கிட்டிருந்தேன். ஆனா உண்மை தெரிஞ்சப்போ கதி கலங் கிட்டுது. சரி. ராகவனைக் கேட் கிறதாலே என்ன நடக்கும்னு யோசிச்சேன். இன்னிக்குக் கிரிக்கெட் மேட்சிலே பார்த்தோமே, அம்பயர் கொடுக்கும் தீர்ப்பைத் தானே நாம் ஏத்துக்க வேண்டியிருக்கு? அது மாதிரி நமக்கும் மேலே ஒரு அம்பயர் இருக்கான். அவன் தீர்ப்புக்கு விட்டுட்டேன்.''

''அப்பா, நீங்க அவருக்குத் தண்டனை தராம இருந்திருக்கலாம். ஆனா என்னாலே அது முடியாது. ராகவனைப் பிரியறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன். அதுதான் நான் அவருக்குத் தரக்கூடிய தண்டனை'' இப்போது அப்பாவின் மடியில் முகம் புதைத்து அழுதாள் ஜானகி.

அப்பா அவள் முடியைக் கோதிவிட்டார். வெகு நேரம் பேசாமல் இருந்தார். அவள் அழுது முடித்த பிறகு நிதானமாக, ஆனால் அழுத்த மாகப் பேசினார்.

''ஒவ்வொரு ப்ராப்ளத்துக்கும் ஒண்ணுக்கும் மேற்பட்ட தீர்வு உண்டு ஜானகி. உனக்கு எது சரியோ அதைத்தான் செய்யணும். என் நிலை யிலே யாருமே கோபத்தில் ராகவனோடு சண்டைதான் போட்டுருப்பாங்க. ஆனா நான் எதுவும் கேட்கலை. நடந்தது எனக்குத் தெரிஞ்சு போச்சுன்னு அவனுக்குத் தெரியும். சண்டை போட்டிருந்தா ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரத்தோடு அவன் அதை மறந்திருப்பான். ஆனா இப்போ அவனோட குற்றமுள்ள மனம் ஒரு நிமிஷமாவது அவனைச் சும்மா விடுமா? அதுவே தண்டனைதானே. யோசிச்சுப் பார்.''

அவள் பதில் பேசாமல் இருக்க, அப்பா தொடர்ந்தார்.

''எப்பவுமே எல்லாருக்கும் எது நல்லதோ அதைத் தான் செய்யணும். சுயநலமா உன்னை மட்டும் நினைச்சுப் பார்க்கக் கூடாது ஜானகி.'' அப்பாவின் பார்வை இப்போது அம்மாவிடம் இருந்தது.

அப்பா சொன்ன வார்த்தைகளையே அங்கே தங்கியிருந்த நான்கு நாட்களும் அசை போட்டு விட்டு ஒரு முடிவுக்கு வந்தவளாய் மதுரை திரும்பி னாள் ஜானகி.

''ஏன் திடீர்னு கிளம்பிப் போயிட்டே? என் மேலே ஏதாவது கோபமாடா? நான் என்ன தப்பு செஞ்சேன்னு சடுதியிலே என்னை விட்டுட்டுப் போயிட்டே?'' முகத்தில் நாலு நாளைய தாடியும், சரியான சாப்பாடில்லாமல் வற்றிப் போன முகமுமாய் ராகவன் கேட்டான்.

அவள் நேரடியாய் அதற்குப் பதில் சொல்ல வில்லை. ''இனிமே அப்பாவுக்கு மாசா மாசம் எழுநூத்தம்பது ரூபாய் அணுப்பனும். அதற்கான ஏற்பாடு செய்யுங்க'' என்றாள்.

''ஏன், ஏன்? எதுக்கு மாசம் அவருக்கு அவ்வளவு பணம்? நம்ம வீட்டுத் தோட்டத்தில் காய்ச்சு வீணாறதா?''

ஜானகி ஓரிரு கணம் அவன் முகத்தையே ஏறிட்டாள். பின் மெதுவான குரலில் சொன் னாள். ''உங்களுக்கு மனைவி என்கிற உறவை விட அவருக்கு மகள் என்கிற ஸ்தானத்தைத்தான் நான் புனிதமாக நினைக்கிறேன். ராகவன் நான் விரும்பினா, கோர்ட்டிலே மனு போட்டால் போதும். உங்களுடைய மனைவிங்கிற பட்டத் தை ரொம்பச் சீக்கிரம் இழந்துடுவேன். அதுக் கான தைரியமும் எனக்கிருக்கு. இவ்வளவு விளக்கம் உங்களுக்குச் சொன்ன போறும்னு நினைக்கிறேன்.''

ராகவன் அதற்கு மேல் பதில் சொல்லவில்லை. ஆனால் கொஞ்ச நேரத்தில் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

அவன் போகுமிடம் தபால் ஆபிஸ்தான் என்று ஜானகிக்குத் தெரியும்.

கீதாபென்னெட்

*****


கீதா பென்னெட் பற்றி...

கீதா நவ இந்தியப் பெண் என்று தான் சொல்ல வேண்டும். சம்பிரதாயமான கர்நாடக சங்கீதம் தோய்ந்த குடும்பத்தில் பிறந்து சாஸ்த்ரோக்தமாக சங்கீதம் கற்று பயில வந்த அமெரிக்க மாணவரை மணந்து அமெரிக் காவில் போய் அந்த வேக நாகரீகத்திற்கு ஈடு கொடுத்து தன்னுடைய வால்யூஸ் எதையும் இழக்காமல் குடித்தனம் செய்ய முடிகிற விந்தைப் பெண்.

எழுத்தாளர் சுஜாதா
Share: 




© Copyright 2020 Tamilonline