"டி.கே. பட்டம்மாளை பாடவைத்தவர்" - வை.மு. கோதைநாயகி அம்மாள் சங்கீத பிதாமகர், செம்மங்குடி சீனிவாச ஐயர் மதச்சார்பற்ற அணிதிரட்டரை நோக்கி.... குளியல் நேரம் இசைப்பிரவாகம் - தலைமுறைகளைக் கடந்து நாதஸ்வரம் எழுத்தில் மணக்கும் இசை கீதாபென்னெட் பக்கம்
|
|
|
"எரி கற்கள் மழையாய்ப் பெய்கின்றன, இது போன்ற அரிதான காட்சி மீண்டும் வர 99 ஆண்டுகளாகும்" என்று தொலைக்காட்சியிலும், நாளேடுகளிலும், வலையிதழ்களிலும் பரபரப்பான செய்தி. ஓர் இலையுதிர் காலத்து இரவு. பச்சைப் பசேலென்ற இலைகள் பழுத்து, மஞ்சளாய், சிவப்பாய், மற்றும் விவரிக்கவியலாத வண்ணங்களாய் மாறி, மழையில் நனைந்து, குளிரில் நடுங்கி, உப்புக் காற்றில் உதிரத் துவங்கியுள்ளன. இன்னும் சில நாட்களில் மரங்கள் மொட்டையாய்க் காட்சி அளிக்கும்.
நள்ளிரவு. தொலைபேசியில் கம்ப ராமாயண இலக்கிய அலசலை முடித்தார் நண்பர். சி. என். என். இல் ஆ·ப்கான் செய்திகள். பேசினால் மட்டும் கன்னம் ஒட்டிக் கொள்ளும் மீன் முகத்தாள் ஐரோப்பிய ஆங்கிலத்தில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். உன்னித்துக் கேட்கும் பொறுமையில்லாமல் கொட்டாவி விட்டேன்.
"ஏதாவது தெரிகிறதா பாருங்கள்."
இல்லத்தரசியின் கட்டளை.
இரவு உடையோடு புழக்கடையில் வந்து நின்று எட்டிப் பார்த்தேன். பனித்துளிகள் கண்ணாடிச் சன்னல்களின்மேல் மொட்டு விட்டுக் கொண்டிருந்தன. அடிவானத்தில் பனிமூட்டம். நிலவில்லாத வானம். ஓக்லந்தை நோக்கி ஓவென்ற இரைச்சலோடு சென்று கொண்டிருந்த விமானத்தின் விளக்குகள் மின்மினிப் பூச்சி போல் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தன.
தொடர்பே இல்லாமல் இளம்பருவத்தில் கிறுக்கிய "கவிதை" ஒன்று மங்கலாக நினைவுக்கு வந்து தொந்தரவு கொடுத்தது.
'எண்ணமென்ற விண்ணிலே எண்ணிலா மேகங்கள்! ..... விண்மீனும் சிரிக்கவில்லை!'
"போடா, பொடிப்பயலே, மேகங்கள் நிறைந்த எண்ணமென்ற விண்ணைப் பற்றி உனக்கென்ன தெரிந்திருக்கும்" என்று என் இளமைப் பருவத்தைக் கடிந்து கொண்டே விண்மீன்களைத் தேடிப் பார்த்தேன்.
"என்ன, ஏதாவது தெரிகிறதா?"
உள்ளத்தரசி உள்ளிருந்து குரல் கொடுத்தாள். குளிரில் லேசான நடுக்கம்.
"இன்னும் இல்லை. பார்த்துக் கொண்டிருக்கிறேன்."
உள்ளறையின் விளக்கையும், தொல்லைக்காட்சியையும் அணைக்கச் சொன்னேன். சற்று நேரம் கழித்து விண்மீன்கள் கண்சிமிட்டிச் சிரிக்கத் துவங்கின. மெல்லிய காற்றில் குளிர் கூடியது. நடுக்கமும் கூடியது. பற்கள் சோம்பேறித்தனமாய்த் தந்தி அடித்து எச்சரித்தன. எரிகற்களைத் தேடத் துவங்கினேன். கருநீலப் புடவையில் வெள்ளிப்பூக்கள் பளிச்சிடும் இரவு அன்னையின் மடியில் உறங்கிய குழந்தைப் பருவ நாட்களின் நினைவு ஏதோ இனம் புரியாத இழப்பை நினைவூட்டியது.
"என்ன, நான் வரட்டுமா? கண்ணாடியை மறந்து வைச்சுட்டுப் பாத்துக்கிட்டிருக்கீங்களா?"
உண்மைதான், பள்ளிப்பருவத்தில் இரவின் மடியில் உறங்கிய நினைவுகள் பசுமையாய் வாழ்கின்றன. ஆனால் மூக்குக்கு மேல் கண்ணாடியிருக்கிறதா என்பதில் மறதி! கண்ணாடியைத் தொட்டுப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டேன்.
"கண்ணாடியை மறக்கலே, ஆனா இன்னும் ஏதும் தெரியலே!"
"சரி, சரி, அங்கே குளிருலே வெடவெடத்துக்கிட்டு நிக்காதீங்க. ஏதாவது போர்வை போத்திக்கிட்டுப் போய்ப் பாருங்க!" இல்லாளின் கரிசனம்.
"பரவாயில்லம்மா. ரெண்டு மணிக்குத்தான் உச்சக் கட்டம்னு சொன்னாங்க. அப்போ பாக்கலாமே?"
"ஆமா, அதுக்குண்ணு கடிகாரத்துலே நேரம் வச்சு எழுந்து பாக்கப் போறீங்களா, இல்லே, ரெண்டு மணி வரைக்கும் காத்திருக்கறேன்னு சாக்கு வச்சுக்கிட்டு கணினி முன்னாலே தட்டிக்கிட்டு இருக்கப் போறீங்களா?"
எனது மர மண்டையில்கூட எச்சரிக்கை மணி அடித்தது. |
|
"அதெல்லாம் இல்லேம்மா. இன்னைக்குப் பூரா கணினி பக்கமே போகலே, கவனிச்சியா? எனக்குக் களைப்பா இருக்கு. அதான். படுக்கை அறைச் சன்னல்லே வெனிசியன் திரையைச் சுருக்கிட்டுத் தூக்கம் வர்ற வரைக்கும் வானத்தைப் பாக்கலாம். என்ன சொல்றே?"
படுக்கை அறைச் சன்னல் வழியாக எத்தனையோ முறை நிலவு காய்வதைப் பார்த்த நினைவுகள் மலர்ந்தன. அதென்ன, நிலவு காய்வது? கதிரவன் காயலாம், நிலவு காயலாமோ என்றோர் இழை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது. எத்தனை நிலவுகள் பார்த்திருந்தாலும் "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்" என்று பாரி மகளிர் பார்த்த நிலவு பற்றிய எண்ணம் இன்னோர் இழையில் ஓடிக் கொண்டிருந்தது.
வெனிசியன் திரையைச் சுருக்கிப் பார்த்தாலும் ஏதும் தெரியவில்லை. சன்னலில் படிந்திருந்த பனிமொட்டுகளை நுனி விரலால் மேய்ந்தேன்.
"என்ன அங்கே, சின்னப் பிள்ளைங்க மாதிரிக் கண்ணாடியில கோடு போட்டு வெளையாடிக்கிட்டு இருக்கீங்க?"
ஓர் அழுக்குத்துணியைத் தேடி எடுத்து வந்து கண்ணாடிச் சன்னலை அழுத்தித் துடைத்தேன். பனித்திரை அகன்ற பின்னால் வான் ஒளி தூறத் துவங்கியது.
ஆரவாரமில்லாத பின்னிரவு. பக்கத்து வீட்டுக் கருப்புப் பூனையைக் கூடக் காணோம். விண்மீன் கூட்டங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். வான மகளின் பட்டு ஆடையின் பளபளப்பு கண்ணுக்குப் புலப் படவில்லை.
"சரி, சரி. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நகரத் தெருவிளக்குகளின் ஒளிச்சிதறல்களில் எரிகல் நாட்டியங்கள் கண்ணுக்குப் புலப்படாமல் போகலாம். பரவாயில்லை. நாளை தொலைக்காட்சியில் எல்லாவற்றையும் நன்றாகவே காட்டி விடுவார்கள்" என்று மனது ஆறுதல் சொன்னாலும், சிறு குழந்தையைப் போல் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
காலை வெய்யில் சுரீர் என்று அடித்து எழுப்பியது. திரையை மூடி விட்டு, மேலும் அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போடுவதற்காகப் போர்வையைத் தலைக்குமேல் இழுத்திப் போர்த்திக் கொண்டேன்.
மணி மு. மணிவண்ணன் |
|
|
More
"டி.கே. பட்டம்மாளை பாடவைத்தவர்" - வை.மு. கோதைநாயகி அம்மாள் சங்கீத பிதாமகர், செம்மங்குடி சீனிவாச ஐயர் மதச்சார்பற்ற அணிதிரட்டரை நோக்கி.... குளியல் நேரம் இசைப்பிரவாகம் - தலைமுறைகளைக் கடந்து நாதஸ்வரம் எழுத்தில் மணக்கும் இசை கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|