Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல் - போகிற போக்கில்
பி.சுசிலாவுடன் ஒரு மாலைப்பொழுது
- சிவன்|ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeநம் வாழ்நாளில் மறக்க முடியாத குரல்களில் ஒன்று பீ.சுசீலாவினுடையது. ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்து, தமிழ் திரைபடங்களில் தன் பாடல்களினால் புகழின் உச்சியை அடைந்த அவர் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம் செய்தார். அவருடன் ஒரு மாலைப் பொழுதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். அவருடன் வாகனத்தில் பயணித்த அந்த ஒரு மணி நேரத்திற்காக, அவருடைய பாடல்கள் மட்டும் உள்ள ஒலி தகட்டை ஓடவிட்டு, அவருடைய நினைவுகளையும், அந்தப் பாடல்களை கேட்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியையும் சேர்ந்து களித்த கணங்கள், இதோ இங்கு தென்றலுக்காக. சில கேள்விகள்...

நீங்கள் பாடகியானது எப்படி?

என்னுடைய அப்பாவுக்கு இசையில் மிகவும் ஈடுபாடு உண்டு. அவர் காலை நேரங்களில் வீணை வாசிக்கும் போது நான் மிகவும் ரசித்துக் கேட்பேன். முதலில் துவாரம்காருவிடம் கர்நாடக இசையை முதலில் பயின்றேன். பிறகு சென்னையில் உள்ள இசைக் கல்லூரியில் கற்றேன், என்னை என் அப்பாதான் ஒரு பாடகியாக வரவேண்டும் என்று ஆசைபட்டார். அது அப்படியே நடந்தது.

முதலில் பாடியது எப்போது?

இயக்குநர் பிரகாஷ்ராவ் அவர்கள் என்னை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முதலில் பாடவைத்தார். பிறகு ஏ.வி.எம் நிறுவனம் மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து அவர்கள் படங்களில் பாடவைத்தார்கள்.

சிறுவயதில் யாருடைய திரைப்படப் பாடல்களை நீங்கள் ரசித்துக் கேட்பீர்கள்?

நான் திரைப்படங்களில் பாடும் முன், பி.லீலா, ஜிக்கி போன்றோரது பாடல்களை ரசித்துக் கேட்டிருக்கிறேன். என்றைக்குமே எனக்கு லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பிடிக்கும். என்னை மிகவும் கவர்ந்த பாடகியும் அவரே.

சில பாடல்கள்...

கங்கைக் கரைத் தோட்டம்...

நடிகை தேவிகாவுக்காக இதை பாடினேன். அதிகமாக நான் பாடிய நடிகைகளுள் ஒருவர் அவர். கிட்டத்தட்ட ஒரு பத்து நாள் இந்த பாடலை சாதகம் செய்திருப்போம். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது!

மாலைப் பொழிதின் மயக்கத்திலே...

வீணை மட்டும் இருந்தாலே போதும், இந்த பாடலை எங்கு வேண்டுமானாலும் பாடலாம். சிட்டிபாபு அவர்கள் இதில் மிக இனிமையாக வீணை வாசித்திருப்பார். இந்தப் பாடலை இப்போது கேட்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது... இந்தப் பாடலில் ஒளிந்திருப்பது ஒரு வகையான சோகம்!

மன்னவன் வந்தானடி...

வாத்தியங்களுடன் நன்றாக சாதகம் செய்து, அனைவரும் சிரமப்பட்டு செய்த பாடல் இது. அந்நாட்களில், இப்போது போல், தனித்தனியாக ஒலிப்பதிவு செய்ய மாட்டார்கள். வாத்தியங்களுடன் தாள, பாவத்தோடு, ஆரம்பம் முதல் கடைசிவரை சரியாகப் பாட வேண்டும். நான் விஜயநகரத்தில் கர்நாடக இசையை முறையாக பயின்றிருக்கிறேன். வீணையும் வயலினும் கற்றிருக்கிறேன். கர்நாடக இசையை ஒட்டிய பாடல் என்பதால், ரசித்துப் பாடினேன்.

ஒரு நாள் இரவு, பகல் போல் நிலவு...

எனக்கு மிகவும் பிடித்து பாடிய பாடல்களில் ஒன்று இது. ஹிந்தியில் சுசித்ரா சென்னும், தமிழில் காவியத்தலைவியில் செளகார் ஜானகியும் நடித்தனர். கேட்கும் பொழுது பழைய நினைவுகள் எல்லாம் வருகின்றன...
சில நினைவுகள்...

நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ஒரு பாடல்...?

மறக்க முடியுமா திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதி எழுதிய ‘காகித ஓடம் கடலலை மீது’ பாடலை பாடியதும் அழுதுவிட்டேன். பாடலுக்கு உரிய கதையை நன்கு மனதில் வாங்கிக் கொண்டு பாடவேண்டும் என்று நினைப்பதால், எந்த மொழியானாலும் என் பாடலுக்கு உயிர் இருப்பதாக சொல்வார்கள்...

எம்.எஸ் சுப்புலக்ஷ்மியை சந்தித்திருக்கிறீர்களா?

கடைசியாக அவரை சந்தித்த பொழுது, மீண்டும் கர்நாடக இசையைப் பாடேன், நான் சொல்லித்தருகிறேன் என்றார்! எம்.எஸ் பாடிய பிறகு சுப்ரபாதம் என்றால் அதுதான் என்பது போல் தமிழ் வணக்கம் (‘நீராரும் கடலுடுத்த...”) என்றால் ஒரே குரல்தான் என்றும் கூறியிருக்கிறார்.

என் சிந்தனை...

பல மொழிகளில் பாடியிருந்தாலும், தாய் மொழி தெலுங்கைத் தவிர, தமிழில் பாடுவதைத்தான் விரும்புவதாக சொன்னார் சுசீலா. நம்முள் பலர் இருப்பினும், தமிழ்தாய் வாழ்த்தையும், தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற பாட்டையளித்த சுசிலா நமக்கும் தமிழுக்கும் கிடைத்த வரமாகும்.

கர்னாடக இசை விமரிசகர் சுப்புடு, சுசீலாவைப்பற்றி குறிப்பிடும் போது, ஒரு ‘பர்வீன் சுல்தானா’ பாடினால் வாயை பிளக்கிறோம், அதை விட கஷ்டமான பாடல்களை சிறந்த முறையில் பாடும் சுசீலாவுக்கு இணையாக ஒரு வட இந்திய பாடகியை காண்பிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். கோடிக்கணக்கான ரசிகர்களின் வாழ்கையில் ஒன்றாகிப் போனவர் சுசீலா. பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். நமக்கு பழகிப்போன குரல் என்பதாலோ என்னவோ, பல நாட்கள் பழகிய நட்பை உணர முடிகிறது. பல விருது களை பெற்ற அவருக்கு, இனி இந்திய அரசாங்கம், லதா மங்கேஷ்கருக்கு கொடுத்ததை போல, மிக உயரிய விருதை கொடுக்க வேண்டும், விரைவில்!

சந்திப்பு: சிவன்
Share: 




© Copyright 2020 Tamilonline