ஸாண்ட்டா கிளாரா - மேடையேற்றி மகிழ்ந்த குரு மறக்க முடியாத தினம் மூன்று மணிநேரக் கனவுலகம் 'அபிநயா' நாட்டியக் குழுவின் இனிய சாதனை
|
|
அட்லாண்டாவில் தேர் கூட்டம் திருவிழா கூட்டம்!!! ஏன்? எதற்கு? |
|
- அட்லாண்டா கணேஷ்|ஜூன் 2002| |
|
|
|
பைத்தியக்காரக் (crazy) கூட்டம் என்று கூட சொல்லலாம். ஏனெனில் 2002 மே 18ம் தேதி அன்று கிரேஸி மோகன் குழுவின் இரண்டு நாடகங்கள் (ஜுராசிக் பேபி, மதில் மேல் மாது) (3 p.m. to 5 p.m. & 6 p.m. to 8 p.m.)
வழக்கம்போல் ஆரம்பித்தது மாலை மூன்று நாற்பதற்கு, முடிந்தது இரவு ஒன்பது இருபதற்கு. நமது இந்தியன் நேரம் தவறாமையை சரியாக கடைப்பிடித்தார்கள் நடத்தியவர்கள்.
முதன்முறையாக அட்லாண்டாவில் ஒரு ஹவுஸ் ·புல்ஷோ அந்த பெருமை இந்தக் குழுவிற்குத் தான். கிட்டத்தட்ட 550 பேர்கள் அந்த அரங்கத்தில். அட்லாண்டாவாசிகளுக்கு அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சி. நாடக கலைக்கு இத்தனை ஆதரவா என்று புருவத்தை உயர்த்தவைத்தது.
அட்லாண்டாவிற்கு நாடகம் வருவது முதன் முறை அல்ல. இதற்கு முன் Y.Gee. மகேந்திரன் (மூன்று தடவை), S. Ve. சேகர் மற்றும் விசு (தலா இரண்டு தடவை) அவர்கள் குழுவும் கிரேஸி மோகனே இரண்டு வருடங்களுக்கு முன்னால் இங்கு இரண்டு நாடகங்கள் போட்டவர்தான். அப்போதெல்லாம் அரங்கம் 70 சதவிகிதம் நிறைந்திருக்கும். ஆனால் இந்த முறை 100% ஹவுஸ் ·புல் ஷோ.
இத்தனை பார்வையாளர்களைக் கவர்ந்த தற்காக கிரேஸி மோகன் மற்றும் குழுவிற்கு தலை வணங்குகிறேன்.
சரி சரி போதுமைய்யா உன் அட்லாண்டா புராணம் விஷயத்திற்கு வா என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. வருகிறேன், வருகிறேன், வந்துவிட்டேன்.
மோகன் குழுவில் வந்திருந்தது 12 பேர்கள். அத்தனை பேரும் திறமைசாலிகள் என்பதில் நிச்சயமாக சந்தேகமில்லை. பெரிய பாத்திர மோ, சிறியதோ எல்லோரும் நன்றாக நடித் தார்கள். அதிலும் முக்கியமாக ஒரு சின்ன பாத்திரத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அதை கடைசியில் சொல்கிறேன்.
மோகனின் நகைச்சுவை வசனத்தைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. உலக மகா நடிகன் கமல் ரசித்து நடிக்கும் வசனங்கள் அவை. ஒவ்வொரு வசனமும் சிரிப்பு வெடி தான். அதுவும் "டைமிங்" மன்னர்கள் மாது பாலாஜியும், சீனு மோகன், ரமேஷ், வெங்கட் மற்றும் தி கிரேட் கிரேஸி மோகனும் மற்றும் பலரும் பிய்த்து உதரிவிட்டார்கள். ஒரே சிரிப்பு மழைதான் போங்கள்!!!
சிரித்தால் மட்டும் போதுமா? என்று கடைசி யில் கிளைமாக்சில் கொஞ்சூண்டு சீரியசாகவும் வசனங்கள். கிரேஸி நீங்கள் நிச்சயமாக இன்னும் முயற்சி செய்தால் இதிலும் பெரிய பெயர் வாங்குவீர்கள்.
நமது கிரேட் சங்கீத விமர்சகர் சுப்புடு போல இந்த இரண்டு நாடகத்தையும் விமர்சனம் செய்ய ஆசைதான். ஆனால் அமெரிக்காவில் இன்னும் பல இடங்களில் இந்த நாடகங் களைப் போட இருப்பதால் விஸ்தாரமாகக் கதையைச் சொல்ல விரும்பவில்லை.
பல பல நிறைகள்... சில குறைகள். நிறைகள்: அருமையான காமெடி சிச்சுவேஷன் மற்றும் வசனங்கள், இயற்கையான நடிப்பு. நடிகைகள் பார்ப்பதற்கு லட்சணமாகவும் நன்றாகவும் நடித்தார்கள். நல்ல காலம், மேடை நாடகத் திற்கு நடிகை பஞ்சம் இப்போது இல்லை போல் இருக்கிறது. |
|
முக்கியமாக கிரேஸி மோகனின் அருமையான பேச்சு ஆரம்பத்திலும் அவர்கள் குழுவை அறிமுகப்படுத்தும்போதும். கலக்கிவிட்டார் அவர்களது அமெரிக்க அனுபவங்களைச் சொல்லும்போது. அத்தனை பேரும் அரங்கில் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ரொம்ப லாவகமானப் பேச்சு. அதை அவர் ரசித்துச் சொன்னார். அதில் சூப்பர் பஞ்ச் - மேடையில் அனைவரும் (விழா அமைப்பாளர்கள்) ஆங்கிலத் திலேயே பேசினார்கள் நான் தமிழில் பேசினால் வெகு சிலருக்கு இங்கு புரியாமல் இருக்கலாம் ஆனால் நான் ஆங்கிலத்தில் பேசினால் எனக்கே புரியாது என்று சொல்லி கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டு போனார் மோகன். பொறி யியல் படித்த அவருக்கா ஆங்கிலம் தெரியாது? இருந்தபோதிலும் தமிழ் நாடகங்களை ஏற்பாடு செய்துவிட்டு அத்தனை தமிழர்கள் வந்திருக்கும் இடத்தில் எதற்கு இவ்வளவு ஆங்கிலம் என்று சிறிய குட்டு வைத்தார்.
குறைகள்: ஒரு சிலர் கதை எங்கே? எங்கே? என்று விழுந்து விழுந்து தேடினார்கள். அவர் களுக்கு அடி பட்டதுதான் மிச்சம். அரங்க நிர்மாணத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒன்று இரண்டு ப்ராப்ஸ் ஆவது கொண்டு வந்திருக்கலாம். அடிக்காத போனை எடுத்துப் பேசியது நடிகர்கள் ஜோசியத்தில் மன்னர்களோ என்று கேட்கத் தோன்றியது. ஓரத்திலிருந்து போன் மணி சத்தம் கொடுப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை யே. தயவு செய்து இதைக் கவனியுங்கள் குழுவினரே.
கிரேஸியும் குழுவும் ஒன்று புரிந்து வைத்திருக் கிறார்கள். கதை, கதை என்று கதையை வைத்து நாடகம் போட்ட குழுவெல்லாம் ‘கதை கந்தல்’ ஆகி விட்டது பார்த்து, அதனால் நகைச் சுவைதான் மக்களுக்கு பிடித்த விஷயமென்று கெட்டியாக 1976ல் இருந்து அதை பிடித்துக் கொண்டு ஓஹோ என்று முன்னேறி வந்திருக் கிறார்கள். வாழ்த்துக்கள்.
ஜுராசிக் பேபி நாடகத்தை 350 முறைக்கு மேல் மேடை ஏற்றி இருக்கிறார்களாம். அதே போல் மதில் மேல் மாதுவும் ஏறியிருக்கிறதாம். ஆகவே ஒன்று நன்றாக புரிகிறது. மக்கள் இவர்களை நிச்சயமாக ஆஹா ஓஹோ என்று ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று. ஆகவே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்லி விடை பெறுகிறேன். வணக்கம். (அடுத்த மாதம் மீண்டும் சந்திப்போம்)
பின் குறிப்பு: கடைசியில் சொல்கிறேன் என்று சொன்ன அந்த சிறிய பாத்திரத்தில் நடித்தது நான் தான். அட்லாண்டா வாசியான எனக்கு எங்கள் ரசிகர்கள் முன்னால் வாய்ப்பைக் கொடுத்து மூன்று நான்கு கைத் தட்டல்களை வாங்கிக் கொடுத்த மோகனுக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றி.
நீங்கள் புத்திசாலிகள், நான் மோகன் மற்றும் குழுவை விமர்சனத்தில் ஓஹோ என்று சொன்னதையும் இதையும் முடிச்சுப் போட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.
அட்லாண்டா கணேஷ் |
|
|
More
ஸாண்ட்டா கிளாரா - மேடையேற்றி மகிழ்ந்த குரு மறக்க முடியாத தினம் மூன்று மணிநேரக் கனவுலகம் 'அபிநயா' நாட்டியக் குழுவின் இனிய சாதனை
|
|
|
|
|
|
|