|
|
முன் கதை:
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முதலில் பொழுது போக்காகவும், பிறகு முழு நேரமாகவும் துப்பறிய ஆரம்பிக்கிறார். வக்கீல் நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர்.
கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவு டனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட் ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் எனத் தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கியிருப்பதை அவள் அறி வதால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.
தான் வேலை புரியும் ஸைபோஜென் என்னும் பயோ-டெக் நிறுவனத்தில், ஒரு சக விஞ்ஞானியான ஷின் செங் என்பவர் தலை மறைவாகி விட்ட விஷயத்தை விசாரிக்க ஷாலினி சூர்யாவின் உதவியை நாடினாள். இந்த விஷயத்தை விசாரிக்க வந்த போலீஸ் டிடெக்டிவ் மார்க் ஹேமில்டன் சூர்யா சேர்ந்து கொள்வதை விருப்பமில்லாமல் ஏற்றுக் கொண்டார். விஞ்ஞானியின் அறையில் கண்டுபிடிக்க ஒன்றுமில்லை என்று மார்க் கிளம்ப யத்தனிக்கும் போது, சூர்யா தடுத்து விஞ்ஞானியின் கம்ப்யூட்டரில் எதையோ பார்க்க வேண்டும் என்றார்...
காணாமல் போய் விட்ட விஞ்ஞானி ஷின் செங்கின் கம்யூட்டர் திரையில் ஸ்க்ரீன் ஸேவர் ஆடிக் கொண்டிருந்தது. ஷின் விஞ்ஞானி ஆதலால் அழகான மேண்டல்ப்ராட் வடிவங் களை வரையும் படியான ஒரு ப்ரோக்ராம் போட்டிருந்தார்.
சூர்யா கிரணை நோக்கி ஒரு புருவத்தை உயர்த்தினார். அவன் உடனே கம்ப்யூட்ட ருக்குத் தாவினான். கீ போர்டைத் தட்டியதும் ஸ்க்ரீன் ஸேவர் விலகி பாஸ்வேர்ட் கேட்டது. கிரண், "யாருக்காவது பாஸ்வேர்ட் தெரியுமா?!" என்றான். யாருக்கும் தெரியவில்லை.
லேப் தலைவர் ஜான், "ஒவ்வொருத்தரும் அவங்களேதான் ஸ்க்ரீன் ஸேவர் பாஸ்வேர்ட் வச்சுப்பாங்க ..." என்றார்.
கிரண், "கவலையே வேண்டாம். இதென்ன சுண்டைக்காய் பாஸ்வேர்ட். கண்டு புடிச்சி டலாம். இல்லன்னா, கம்ப்யூட்டரைத் திரும்ப பூட் பண்ணி நெட்வொர்க் லாக்-ஆன் பண்ணாப் போச்சு!" என்றான். ஆனால் சூர்யா, "இல்லை கிரண்! இதை இப்படியே பாக்கணும். கம்ப்யூட்டர் திரும்ப ஆரம்பிச்சிட்டா அதுல இப்ப என்ன ப்ரோக்ராம் ஓடிக்கிட்டிருக்குங்கற விஷயம், அப்புறம் ஸேவ் பண்ணாத டேட்டா எல்லாம் அழிஞ்சு போயிடுமே?!" என்றார்.
மார்க் "வெரி ஸ்மார்ட், சூர்யா!" என்று ஆமோதித்தான். எதையும் உடனே யோசித்துப் பார்ர்த்து விடும் சூர்யாவின் திறமை அவனை மேலும் மேலும் வியப்புக்கு ஆளாக்கி அவர் மேல் மதிப்பை வளரச் செய்து கொண்டிருந்தது. அவர் உதவியை மனத்துக்குள் மிகவும் வரவேற்க ஆரம்பித்து விட்டான்!
கிரண் தலையில் அடித்துக் கொண்டு, "சே, அ·ப் கோர்ஸ்! நானும் இருக்கேனே அவசரக் குடுக்கை! சரி, நான் ட்ரை பண்றேன். நல்ல வேளை, இது ஸ்க்ரீன் ஸேவர் பாஸ்வேர்ட்தான். எவ்வளவு தடவை தப்புப் பாஸ்வேர்ட் போட்டா லும் அக்கவுன்ட் lock-out ஆகாது. Log-on பண்ணணும்னா மூணே மூணு அட்டெம்ப்ட் தான், அப்புறம் அம்பேல்! Logout பண்ணணும் இல்லாட்டா reboot தான் பண்ணணும். சூர்யா கேக்கற டேட்டா எல்லாம் அதோ கதிதான்!" என்றான்.
சூர்யா, "அப்ப நல்லதாப் போச்சு, உன்னால கண்டு பிடிக்க முடியுமா?" என்றார்.
கிரண், "கண்டு... பிடிக்க... முடியுமாவா?!" என்று அலட்சியமாக இழுத்தான்! "சின்ன பசங்க எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்னு வேடிக்கை பாருங்க, மாஸ்டர் அட் ஒர்க்!" என்று சிரித்தான்.
ஷாலினி சிரித்துக் கொண்டு, "ஏ கிரண், ரொம்பதான் அலட்டிக்காதே, செஞ்சு காட்டிட்டு தோளில நீயேத் தட்டிக்கலாம்!" என்றாள்.
கிரண், தன்னுடன் படித்த ஒரு கம்யூட்டர் பாதுகாப்பு வல்லுனனைக் ·போனில் கூப்பிட்டு கொஞ்ச நேரம் பேசி, ஒரு தாளில் நிறைய எதோ குறித்துக் கொண்டான். பிறகு ஜான் கென்ட்ரிக்ஸ், ஷாலினி இருவரிடமிருந்தும் ஷின் செங்கின் வாழ்க்கையைப் பற்றி விவரங்களைக் கேட்டான். அவர் பிறந்த நாள், கார் லைசென்ஸ் ப்ளேட் எண், மனைவியின் பெயர், படித்த கல்லூரி, பிறந்த ஊர், பிடித்த விஞ்ஞானிகளின் பெயர், ஷின் முன்பு எப்போதாவது எந்த பாஸ்வேர்டாவது வெளிப் படுத்தியிருக்கிறாரா, இப்படிப் பலவிதமான விவரங்களையும் கேட்டுக் குறித்துக் கொண்டான். பிறகு ஷின்னின் மனைவியையும் ·போனில் கூப்பிட்டு இன்னும் அந்தரங்கமான செல்லப் பெயர்கள், குழந்தை கள் பெயர்கள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான்.
பிறகு கிரண் தன் காருக்கு ஓடி ஒரு சிறிய நோட்புக் கம்ப்யூட்டரையும், சில கேபிள் களையும் எடுத்துக் கொண்டு வந்தான். ஷின்னின் கம்ப்யூட்டரிலிருந்து கீ போர்ட் மற்றும் மவுஸ் இரண்டையும் பிடுங்கி விட்டு தான் கொண்டு வந்த கேபிள்களை சொருகினான். தன் நோட்புக் கம்ப்யூட்டரில் எதோ ப்ரோக்ராம் ஆரம்பித்து சேகரித்த பல விவரங்களையும் அதில் போட்டு அதன் மவுஸில் க்ளிக் செய்ய ஆரம்பித்தான். ஷின்னின் கம்ப்யூட்டர் திரையில் பாஸ்வேர்ட் கேட்கும் கட்டம் பல முறை வந்து, பல நட்சத்திரங்கள் அவற்றில் விளையாடின. கம்ப்யூட்டர் கிரணைத் "திருடா! திருடா!" எனத் திட்டிக் கொண்டே இருந்தது.
ஷாலினி, "ஏ கிரண் இது என்ன செஞ்சுகிட்டிருக்கு?" என்றாள்.
கிரண், "இது பாஸ்வேர்ட் ப்ளாஸ்டர் 5000! யாரோட பாஸ்வேர்டாவது க்ராக் பண்ண னும்னா
அவங்களோட அந்தரங்க விவரங்கள ஆதி யோட அந்தமா போட்டுட்டா, அவங்க எந்த மாதிரி பாஸ்வேர்ட் போட்டிருப்பாங்கன்னு நிறைய மாதிரி கெஸ் பண்ணி வெகு வேகமா ட்ரை பண்ணும்." என்றான்.
திடீர் என்று கம்ப்யுட்டர் திரை திறந்து விட்டது. "அடிடா அப்படி! ஐஸ்தலக்கடி கும்மா!" என்றான் கிரண்!
சூர்யா, "எக்ஸலன்ட், கிரண்! வெரி குட்! ஆமா, அது என்ன ஐஸ்தலக்கடி கும்மா? நீ எங்கேந்து புடிச்சே?!" என்றார்.
கிரணும், ஷாலினியும் சிரித்தனர். ஷாலினி, "அப்பா போன வீக் என்ட் எதோ பழையத் தமிழ்ப் படம் ரெண்டு மூணு போட்டு எங்களையும் உக்கார வச்சுட்டாரு. அதுலேந்து இவன் இப்படித்தான். எதேதோ மெட்ராஸ் பாஷை விளாசறான்! வீட்டுல எங்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்!" என்றாள்.
மார்க் புரியாமல் மூன்று பேரையும் பார்த்து விழித்தான்! "வாட் இஸ் மெட்ராஸ் பாஷ்?" என்றான்.
சூர்யா மலர்ந்த புன்னகையுடன், "மார்க், அது எங்க ஊர் விஷயம். அத பத்தி பேச ரொம்ப டைம் ஆகும்! வாங்க கம்ப்யூட்டர்ல என்ன இருக்கு பாக்கலாம்!" என்றார்.
திரையில் ஒரே ஒரு கட்டம் தான் திறந் திருந்தது. அதில் எம்.எஸ். வேர்டில் ஷின் எதோ எழுதிக் கொண்டிருப்பது தெரிந்தது. சூர்யா வுக்கு அதில் இருக்கும் விஷயம் தலைகால் எதுவும் புரியவில்லை. ஆனால், ஒரு மிகவும் முக்கியமான விஷயம் உடனே புலப்பட்டு விட்டது! "மார்க், இங்க பாருங்க, ஷின் திடீர்னு அவசரமா ஓடியிருக்காரு, இல்லன்னா யாரோ திடீர்னு இழுத்துட்டுப் போயிருக்கணும்" என்றார்.
மார்க், திரையைப் பார்த்து விட்டு, "நீங்க சொல்றது திரும்பவும் சரிதான், வெல் டன்!" என்றான்.
ஜான் தலையைச் சொறிந்து கொண்டார். "அதுலேந்து எப்படி சொல்றீங்க?" என்றார்.
மார்க் "நானே சொல்றேன். இங்க பாருங்க. ரெண்டு பாரக்ரா·ப்தான் இருக்கு. மூணாவது பாரக்ரா·ப் ஆரம்பிச்சு முதல் வாக்கியத்துல, ஒரு பாதி வார்த்தையில நிக்குது. அதுனாலதான் திடீர்னு எதோ நடந்திருக்குன்னு நினைக் கிறோம். அப்படித்தானே சூர்யா?!" என்றான்.
கிரண் புன்னகையுடன், "அப்படித்தான். இப்ப நீங்களும் சூர்யா ஸ்டைலுக்கு வந்துட்டீங்க!" என்றான்.
சூர்யா "ஷாலினி, அப்போ பாலிகீடைட்ஸ்னு எதோ சொன்னே, அப்பவும் ஒண்ணும் புரியல, இப்ப இந்த பேப்பர் ஆரம்ப அறிமுகமும் ஒரே லடினும், க்ரீக்குமா இருக்கு, தலை சுத்துது. கொஞ்சம் புரியறா மாதிரி இது என்னன்னு கொஞ்சம் சொல்லேன்!" என்றார்.
ஷாலினி புன்னகையுடன் தோளை போலி அலட்சியமாக உலுக்கி விட்டுக் கொண்டாள்! "உக்கும், ஸயன்ஸ்னா லடின் தான் இருக்கும். எனக்கும் உங்க கம்ப்யூட்டர் விஷயம் பாத்தா அப்படித்தான் மம்போ ஜம்போவா இருக்கு. சரி போகட்டும், சொல்றேன். ஷின் மைக்ரோபியல் நேச்சுரல் ப்ராடக்ட்ஸ் அப்படிங்கற துறையில ஒரு பெயர் பெற்ற ஆராய்ச்சியாளர். இயற்கை யில கிடைக்கிற ரசாயனப் பொருள்களை, மருத்துவத்துக்காக பயன் படறா மாதிரி செய்யற முயற்சி. பெரும்பாலும் மைக்ரோஆர்கனிஸம் எனப்படும் பாக்டீரியா போன்ற உயிர் வகை யறாக்களை அலசி ஆராய்ஞ்சு, அவை செயல் படற விதத்தைக் கொஞ்சம் மாத்தி மருந்து செய்யறாங்க. சிலது கான்ஸர் மருந்து, சிலது ட்ரான்ஸ்ப்ளான்ட் ஆனதும் நிராகரிப்பைப் குறைக்க வேண்டிய இம்யூனோசப்ரஷனுக்கு, அப்படிப் பல விதமா பயன் படுது. எல்லாருக்கும் தெரிஞ்ச உதாரணமா மோல்ட் வகைகளிலி ருந்து பெனிசிலின் தயாரிக்கறதைக் குறிப் பிடலாம்." பட படவென்று சொல்லிக் கொண்டே போனவள் மூச்சு வாங்கச் சற்றே நிறுத்தினாள்.
கிரண், "ஹ¥ம்! வெரி இன்டரெஸ்டிங்! திருடனை வச்சு திருடனைப் புடிக்கறா மாதிரி! கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளை வச்சே, அதுங்க கிளப்பற வியாதிக்கு ட்ரீட்மென்ட்!" என்றான்.
ஷாலினி தலையாட்டி ஆமோதித்து, ஒரு மென்மையான இனிய புன்னகையுடன் தொடர்ந் தாள். "பெனிஸிலின் ரொம்பப் பழையக் கதை. இப்போ ரொம்ப அட்வான்ஸ்டா, ஜெனடிக் எஞ்சினீயரிங் மூலமா இன்னும் பிரமாதமா செய்யறாங்க. ஷின் செங் வேலை செய்யறது பாலிகீடைட்ஸ் ஆராய்ச்சி. அது பாக்டீரியாக்கள் எப்படி அந்த என்ஸைம்களை செய்யுதுன்னு அலசி ஆராய்ஞ்சு புரிஞ்சுகிட்டு, அதைக் கொஞ்சம் கொஞ்சம் ஜெனடிக் என்ஞ்சினீயரிங் செஞ்சு மாத்தி நமக்கு ரொம்பப் பயன் படற மருந்துகளைத் தயாரிக்கறாங்க. உதாரணமா எரித்ரோமைஸின் அப்படீங்கற மருந்தைப் பத்தி சொல்லலாம்..."
கிரண் குதித்துக் கொண்டுக் குறுக்கிட்டான். "ஹே! எனக்கு அந்த மருந்து தெரியுமே! நான் சின்ன பையனா இருக்கச்சே எதோ இன்·பெக் ஷன் வந்து ரெண்டு வாரமா ஜுரம் போகவே இல்லை. அப்புறம் அந்த எரித்ரோமைஸின் குடுத்தப்புறம்தான் போச்சு!" என்றான்.
ஷாலினி, "கரெக்ட்! அதே எரித்ரோமைஸின் தான்! சக்கரோபாலிஸ்போரா எரித்ரீயா (Saccropolyspora erythraea) அப்படீங்கற ஒரு பாக்டீரியாவை வச்சு..." என்று தொடர்வதற்குள் கிரண் மீண்டும் குறுக்கிட்டான்.
"என்னது?! யாரு போலிஸ் போறா, எரிக்கறா?! நம்ம ஸ¥ப்பர் போலீஸ் மார்க் தான் இங்க இருக்காரே, கவனிச்சிடலாம்!" என்றான்.
சூர்யா தமிழிலேயே, "கிரண்! ரொம்பதான் அறுக்கறே! ரத்தம் வருது, அடக்கி வாசி!" என்றார்.
கிரண் பொய்க் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
மார்க் பேச்சு வார்த்தையில் தன் பெயர் அடி படுவது மட்டும் தெரிந்து, மீதி எதுவும் புரியாமல் கேள்விக் குறியுடன் பார்க்கவே, சூர்யா விளக்கினார். "ஒண்ணுமில்லே மார்க். கிரண் எதோ அசட்டு ஜோக் அடிக்கறான், அதுவும் தமிழில. உங்களுக்குப் புரியாது விட்டுத் தள்ளுங்க!"
ஷாலினி தொடர்ந்தாள். "·பெர்மென்டேஷன் செஞ்சு ரொம்ப மெதுவா கொஞ்சமா இந்த எரித்ரோமைஸின் மருந்து கிடைச்சுகிட்டு இருந்தது. ஆனா, இந்த பாலிகீடைட்ஸ் ஆராய்ச்சி வழியா, எஷரிகியா கோலி (Escherichia Coli) என்கிற பாக்டீரியாவோட ஜீன்களை இணைச்சு ரொம்ப அதிக அளவில எரித்ரோமைஸின் உற்பத்தி செய்ய ஆரம்பிச் சிருக்காங்க. அதுனால உலகத்துல வளரும் நாடுகளில அந்த மருந்து குறைவு விலைக்கு மக்களுக்கு கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. இன்னும், ஸ்ட்ரெப் போன்ற பாக்டீரியாக்கள் நாம ரொம்பப் பயன் படுத்திட்ட ஆன்டி பையாடிக் மருந்துகளுக்கு இம்யூன் ஆகிக் கிட்டிருக்கறதுனால புதுப் புது விதமான மருந்துகளை பயோ-எஞ்சினீயரிங் மூலமா கண்டு பிடிச்சாகணும். அதெல்லாம் ஷின் செங் போன்றவங்க செய்யற பாலிகீடைட்ஸ் ஆராய்ச்சிதான்" என்றாள்.
கிரண், "அம்மாடியோவ்! நல்ல தொழில் தான்!" என்றான். |
|
சூர்யா சற்று யோசித்து விட்டு, "சரி, அதெல்லாம் முடிஞ்சு போன ஆராய்ச்சி. ஷின் செங் என்ன செஞ்சுகிட்டிருந்தார்? இந்த கம்ப்யூட்டர் டாக்யுமென்ட்ல இருக்கறது என்ன?" என்றார்.
ஷாலினி மீண்டும் தொடர்ந்தாள். "இது வரைக்கும் பாக்டீரியாக்களை அழிக்கறா மாதிரி மருந்துகள்தான் பொதுவா நிறையா பாலிகீடைட்ஸ் ஆராய்ச்சியில செய்யப் பட்டிருக்கு. நிறைய பேர் ரொம்ப நாட்களா வைரஸ்களுக்கு எப்படி மருந்து செய்யலாம்னு ஆராய்ச்சி செஞ்சு தோல்வி அடைஞ்சிருக் காங்க. ஷின் செங்கும் கூட பல வருஷமா அந்த முயற்சிதான் செஞ்சுகிட்டிருந்தாரு. போன வெள்ளிக் கிழமைதான் ஓடி வந்து என் கிட்ட ரொம்ப ஆனந்தமா 'யுரேகா! கண்டு புடிச்சிட்டேன், ப்ரேக்த்ரூ!' அப்படீன்னு குதிச்சார். ஷின் சாதாரணமா ரொம்ப சாதுவா படபடப்பே இல்லாம இருக்கறவர். என்ன அவ்வளவு பரபரப்புன்னு கேட்டேன். 'இல்லை, வீக் என்ட்ல இன்னும் கொஞ்சம் பாலிஷ் பண்ணிட்டு ஒரு மெமோ எழுதி அனுப்பறேன்' அப்படின்னு சொல்லிட்டு நழுவிட்டாரு. அதுக்குள்ளதான் ஆசாமி காணோம்!"
ஜான் புகுந்தார். "அது ரொம்ப விலை மதிப்புள்ள ஆராய்ச்சி. ஷின் உண்மையா வைரஸ் ட்ரீட்மென்ட்டுக்கு எதாவது கண்டு பிடிச் சிருந்தா எய்ட்ஸ், சளி, ·ப்ளூ இது போல பல வைரஸ்களால விளையும் வியாதிகளுக்கு மருந்து செஞ்சு பில்லியன், பில்லியனாக் குவிக்க முடியும். அதுனாலதான் ஷின் தானே நோட்ஸ் எடுத்து கிட்டு மறைஞ்சுட்டாரோன்னு ஒரு சந்தேகம்!"
ஷாலினி கோபமாக மறுத்தாள். "இல்லை ஜான்! எனக்கு ஷின் பத்தி நல்லாத் தெரியும். அவர் நிச்சயமா அப்படி செஞ்சிருக்க மாட்டார்!" என்றாள்.
சூர்யா, "ஷாலினி சொல்றதுதான் சரி. ஷின் தானா போகலை. கடத்தப் பட்டிருக்கார்னு தான் நான் நினைக்கிறேன்!" என்றார்.
மார்க்கும், ஜானும் ஒரே சமயத்தில் கோர ஸாக பாடினர்! "அது எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?"
சூர்யாவின் விளக்கினார். "நாம்தான் ஏற்கனவே கம்ப்யூட்டர்ல பாத்திருக்கோம் இல்லையா, ஷின் மெமோ எழுதச்சே பாதி வார்த்தைல நிறுத்திட்டுப் போயிருக்கார்னு? அதுவே ஒரு இன்டிகேஷன். தவிர, ஷாலினி சொல்ற படி பாத்தா, ஷின்னோட மனைவி நிஜமாவே அதிர்ந்து போய் இருக்கறா மாதிரிதான் தோணுது. ஒண்ணு அவ ரொம்பப் பிரமாதமான, ஆஸ்கர் வாங்கக் கூடிய நடிகையா இருக் கணும், அல்லது அவளுக்கு நிஜமாவே ஷின் காணாம போனது எதிர்பார்க்காத அதிர்ச்சி. ஷின் அவளுக்குக் கூடத் தெரிவிக்காம தானே தலை மறைவாயிருக்க மாட்டார். அவங்க ரெண்டு பேரும் ரொம்ப அன்னியோன்னியம்னு ஷாலினி சொல்றா..."
சூர்யா மூச்சு வாங்க ஒரு கணம் நிறுத்திய போது மார்க் இடையில் புகுந்தான். "மெமொ வையும், ஒய்·ப் விஷயத்தையும் மட்டும் வச்சுப் பார்த்தா ஷின் தானா தலைமறையலைன்னு அவ்வளவு பலமா சொல்ல முடியாதே, கொஞ்சம் வீக் பாயின்ட்ஸாத்தான் இருக்கு..." என்று இழுத்தான்.
சூர்யா ஆமோதித்தார். "நீங்க சொல்றது சரிதான் மார்க். அது ரெண்டு மட்டும் ஷின் தானாப் போகலைன்னு கொஞ்சம் சுட்டிக் காட்டுதே ஒழிய முடிவாக் காட்டலை. ஆனா இங்கப் பாருங்க." என்று கம்ப்யூட்டர் திரையைக் காட்டினார்.
மற்ற நான்கு பேரும் விரைந்து வந்து கம்ப்யூட்டர் திரையைச் சுற்றி நெருக்கிக் கொண்டு நின்று கூர்ந்து பார்த்தனர். ஒன்றும் விசேஷமாகத் தெரியவில்லை. திரும்பி சூர்யாவைப் பார்த்து விழித்தனர்.
சூர்யா சிரித்து விட்டு, "அவ்வளவு கிட்ட போய் கூர்ந்து பாக்கறா மாதிரி ஒண்ணும் இல்லை. அதுல டைப் அடிச்சிருக்கறதைத் தூரத்திலேந்து பாத்தாலே தெரியும்! அதுல கடைசி வாக்கியம் என்ன இருக்கு படியுங்க!" என்றார்.
நால்வரும் மீண்டும் திரையைப் பார்த்தனர்.
"Based on our analysis of the data we can conclude that iit Loks Lyke i Mary Bee Forc"
சூர்யா தொடர்ந்தார். "அது வரைக்கும் பிழையே இல்லாம டைப் அடிச்சுக்கிட்டிருந்த ஷின் திடீர்னு நடு வாக்கியத்துல ஒவ்வொரு வார்த்தையையும் ஸ்பெல்லிங் தப்பாவும் கேபிடலைஸேஷன் தப்பாவும் அடிப்பானேன்?! அந்தக் கடைசி வாக்கியத்துக்கு கவனம் ஈர்க்கத்தான்னு நினைக்கிறேன். ஸ்பெல்லிங் பிழைகள் இருக்கறதுனால, வார்த்தைகளுக்கு அடியில வளைவா அன்டர்லைன் கூட வந்திருக்கு. 'It looks like I may be Forced' அப்படின்னு எழுதறதை வேணும்னே தப்புத் தப்பா எழுதியிருக்கணும். அந்த வாக்கியத்தோட முதல் பாகமும் கடைசியும் சரியாப் பொருந்தியும் வரலை. அது நமக்கு ஒரு மெஸேஜ்".
கிரண், "பிரமாதம் பாஸ்! நான் அதை கவனிக்கவே இல்லை" என்றான்.
சூர்யா இன்னும் முடித்திருக்கவில்லை! "அது மட்டுமில்லை. இங்க பாருங்க. சேர் மேல லேப் கோட். ஷாலினி போட்டிருக்கறா மாதிரி பாக்கெட்ல எலக்ட்ரானிக் என்ட்ரி பேட்ஜ் க்ளிப் பண்ணியிருக்கு, விட்டுட்டு போயிருக்கார். மேஜை மேல பாக்கெட் சயன்டி·பிக் கேல்குலேட்டரும் இருக்கு. ஷின் தானா தலை மறைஞ்சிருந்தா இதெல்லாம் விட்டுட்டுப் போயிருக்க மாட்டார். பேட்ஜையாவது எடுத்துட்டுப் போயிருப்பார். அதுனால தான் கடத்தப் பட்டிருக்கார்னு நினைக்கிறேன்." என்றார்.
ஜானும் மார்க்கும் வியப்பால் வாயடைத்து நின்றனர். விஞ்ஞானியின் அறைக்குள் புகுந்த சில நிமிடங்களுக்குள் சூர்யா கோர்த்து விட்ட ஆதாரங்கள் ஷின் மேலிருந்த சந்தேகத்தைக் கலைத்து விட்டதை அவர்கள் உணர்ந்தனர். சற்று வெட்கமும் அவர்கள் முகங்களைத் தழுவியது. தீர யோசிக்காமல் ஷின் மேல் சந்தேகப் பட்டுவிட்டது அவர்களை உறுத்தியது.
ஜான், "ஹ¥ம்! நான் அதை பத்தி நினைச்சுப் பார்க்கலை. நீங்க சொல்றது சரியா தான் படுது. ஆனா இப்போ நிலைமை இன்னும் சீரியஸாத் தோணுது. ஷின்னுக்கு எதாவது ஆகறத்துக்கு முன்னால அவரைக் கண்டு பிடிக்கணும்." என்றார்.
மார்க்கும், "ஆமாமாம். நாம ரொம்ப வேகமா செயல்படணும். நான் ஒரு APB, ஆல் பாயின்ட் புல்லடின் அனுப்பச் சொல்லிட்டு வரேன்" என்று கூறிவிட்டு அவசரமாகப் போனான்.
ஷாலினியும் தான் சூர்யாவை வரவழைத்த நோக்கத்தை அவர் எளிதில் நிறைவேற்றி விட்டதால் பெருமிதம் கலந்த நன்றியுடன் புன்னகைத்தாள். ஆனாலும், ஷின்னுக்கு என்ன ஆயிருக்குமோ என்ற திகில் உடனே அவளை ஆக்கிரமித்ததால் அந்தப் புன்னகை உடனே ஆவியாகி, முகத்தில் கவலை படர்ந்தது. அதை உடனே உணர்ந்து கொண்ட சூர்யா ஆறுதல் அளித்தார். "ஷின் ஒரு ஆபத்திலும் இருக்க மாட்டார்னு நான் நினைக்கிறேன். ஏன்னா, அவரைக் கடத்தியவங்க, அவரோட திறமையைத் தங்களுடைய குறுகிய நோக்கத்துக்குப் பயன் படுத்தணும்னுதான் அப்படி செஞ்சிருக்கணும். அதனால கட்டாயப் படுத்துவாங்களே ஒழிய வேற உடலுக்கோ, உயிருக்கோ அவங்க நோக்கம் நிறைவேறும் வரைக்கும் அபாயம் இருக்காது. அதுக்குள்ள நாம கண்டு புடிச்சி மீட்டுடலாம்" என்றார்.
ஷாலினிக்கும் ஜானுக்கும் சூர்யாவின் ஆறுதல் வார்த்தைகள் சற்று தெம்பைக் கொடுத்தன. ஆனாலும், கடத்தியவர்களின் நோக்கம் தீர்ந்த பின் என்ன ஆகுமோ என்ற கெடு இன்னும் இருந்ததால் இன்னும் சற்று திகில் மனத்தில் தேங்கிக் கொண்டு தான் இருந்தது. அதற்குள் ஷின் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து காப்பாற்ற முடியுமா என்னும் கவலை ஆக்கிரமித்தது.
அப்போது திடீரென ஒரு பெண் அவசரமாக ஓடி வந்தாள். மார்க் அவளைத் தடுத்து நிறுத்தினான். "யார் நீ? ஏன் இப்படி ஓடி வரே? இது போலீஸ் விசாரணை நடக்கற இடம். இங்க உள்ளே தக்க அனுமதியில்லாம புகக் கூடாது!" என்றான்.
ஷாலினி, "மார்க், அவ ஷின்னோட செக்ரட்டரி. அவ பேர் மேரி. அவளை உள்ள விடுங்க" என்றாள்.
சூர்யாவின் கண்கள் ஒரு கணம் மின்னல் போல் ஒளி வீசின. பிறகு அவர் முகம் மீண்டும் சாதாரணமாக ஆகிவிட்டது.
மேரி, "ஷால்! என்ன ஆச்சு? ஷின் எங்கே? ஏன் இவ்வளவு பேர் இங்கே இருக்காங்க? ஷின்னுக்கு எதாவது ஆயிடுச்சா? ஓ மை காட்!" என்று பதறினாள்.
ஷாலினி ஆதரவாக அவளை அணைத்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள். "மேரி, ஷின் யார் கிட்டயும் இன்னிக்கு வேலைக்கு வரலை. அவருடைய லேப் நோட்ஸ், ஆராய்ச்சி சம்பந்தமான ·பைல்ஸ் எல்லாமே காணோம். வெள்ளிக் கிழமைதான் ஷின் என் கிட்ட ஒரே பரபரப்பா ஆராய்ச்சியில ப்ரேக்த்ரூ ஆயிட்டதா சொன்னார். ஓ! அப்ப தான் நீயும் அங்கே இருந்தியே, உனக்கு அந்த விஷயம் தெரியும். ஆனா வீக் என்ட்ல முடிச்சிட்டு இன்னிக்கு விவரமா சொல்றேன்னு சொன்னவர் இப்ப காணோம்" என்று நிலைமையை சுருக்கமாக கூறி விட்டு, சூர்யா, கிரண், மார்க் எல்லோரையும் அறிமுகம் செய்து கொடுத்தாள்.
ஷின் சந்தேகிக்கப் பட்டார் என்று கேட்டதும் மேரி கண்ணீருடன் தலையாட்டி மறுத்தாள். "இல்லை. ஷின் நிச்சயமா அப்படிச் செஞ்சிருக்க மாட்டார். ரொம்ப நல்லவர். பாவிப் பசங்க யாரோ அவருக்கு என்னமோ செஞ்சிருக்கணும். ப்ளீஸ் கண்டு புடிச்சிடுங்க!"
சூர்யா உடனே விசாரணையில் இறங்கினார். "நீங்க கடைசியா ஷின்னை எப்போ பார்த்தீங்க?"
"வெள்ளிக்கிழமை சாயுங்காலந்தான். நான் ஒரு பார்ட்டிக்கு போகறத்துக்கு ட்ரெஸ் அப் செஞ்சுக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் சீக்கிரமா வேலையை விட்டு கிளம்பினேன். அவர் கிட்ட எதாவது வேணுமான்னு கேட்டேன். ஒண்ணும் வேணாம், நீ சீக்கிரமா கிளம்பி அழகு பண்ணிக்கன்னு அன்பா சொன்னாரு. பாவம் இப்படி ஆயிடுச்சே..." மீண்டும் விசிக்க ஆரம்பித்தாள்.
ஷாலினி சூர்யாவை சற்றுக் கோபமாகப் பார்த்து விட்டு, மேரியை ஆசுவாசப் படுத்த வெளியில் அழைத்துக் போய் விட்டு சற்று நேரம் கழித்து திரும்பி கொண்டு வந்தாள்.
சூர்யா மேரியிடம் மீண்டும் கேள்விக் கணைகளைத் தொடர்ந்த போது அவருக்கு உதித்த ஒரு யூகம் பின்பு ஒரு பெரும் பர பரப்பையே ஏற்படுத்தி விட்டது!
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|