Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம்!
- கதிரவன் எழில்மன்னன்|ஜூன் 2002|
Share:
முன் கதை: Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முதலில் பொழுது போக்காகவும், பிறகு முழு நேரமாகவும் துப்பறிய ஆரம்பிக்கிறார். வக்கீல் நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவமனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். அவ்வப்போது தேவைப்படும் போது மட்டும் சூர்யாவுக்கு உதவுகிறாள்.

வரும் கதை: தான் வேலை புரியும் பயோ-டெக் நிறுவனத்தில் ஒரு சக விஞ்ஞானி மறைந்து விட்ட விஷயத்தை விசாரிக்க ஷாலினி சூர்யாவின் உதவியை நாடுகிறாள்...

கிரண் வழக்கம் போல காரை கிறீச்சென்று நிறுத்தினான்! சூர்யா முன் கண்ணாடியில் இடிக்காத குறைதான்! ஆனாலும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் வண்டியிலிருந்து இறங்கிய பின் அந்த பயோ-டெக் நிறுவனத்தின் வாசல் எங்கே என்று நிமிர்ந்து பார்த்ததும் சூர்யாவுக்கு ஒரு சோர்வே வந்து விட்டது! கிரண் வழக்கம் போல பக்கத்தில் எந்த வண்டியும் இடித்து விட முடியாத படி, கட்டிடத்திலிருந்து வெகு தொலைவில் நிறுத்தியிருந்தான்.

"சே, என்ன கிரண் இது, டிம்பக்டூ-வுல வந்து நிறுத்திட்டே?! ஷாலினி கூப்பிட்டு இருபது நிமிஷமாச்சு? இங்கேந்து நடக்கவே ரொம்ப நேரம் ஆகும் போலிருக்கே?!" என்றார் சூர்யா.

கிரண் களூக் என்று சிரித்தான். "பாஸ், என்ன வர வர நடக்க முடியலயா? உங்களுக்குக் கொஞ்சம் தொப்பை வருது, நடக்க வைன்னு, ஷாலினிதான் சொன்னா!" என்றான்.

சூர்யாவுக்கும் சிரிப்பு வந்து விட்டது. "சரி, சரி, ரீல் சுத்தினது போதும், சீக்கிரம் போகலாம் வா!" என்று சொல்லிவிட்டு, அவன் வருவதற்குக் காத்திராமல் அவரது நீளக் கால்களை வீசிக் கொண்டு வேகமாக வாசலுக்கு விரைந்தார்.

கிரண் அவருடன் இணையாகச் செல்லக் கிட்டத் தட்ட ஓட வேண்டியாதாகி விட்டது! முணுமுணுத்தான்! "ஆமாம், ஷாலினி கூப்புட்டுட்டாப் போதுமே, மனுஷன் ஐஸாக் கரைஞ்சு, வெள்ளமா ஓடறதப் பாரு?!"

சூர்யா அதை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, "என்ன? ஷாலினி என்ன சொன்னா?" என்றார்.

கிரண், "ஒண்ணுமில்லே பாஸ், அவ்வளவு அவச ரமா எதுக்குக் கூப்பிட்டான்னு யோசிச்சுக் கிட்டு இருந்தேன் அவ்வளவுதான்!" என்றான். மனத்துக்குள் "யப்பா, மனுஷனுக்கு பாம்பு செவி! தப்பித் தவறிக் கூட எதயும் பேசிடக் கூடாது! ஷாலினி நம்மள அப்புறம் பின்னி எடுத்துடுவா!" என்று எண்ணிக் கொண்டு ஓடாத குறையாக சூர்யாவைத் தொடர்ந்தான்.

நிறுவனத்தின் வாசலில் ஷாலினி காத்துக் கொண்டிருந்தாள். கார்மேகம் போல அலை அலையாகத் தவழ்ந்த அழகிய கூந்தலும், விரிந்தும் விரியாத தாமரை மொட்டுப் போலத் தோன்றி, பார்ப்போரின் மனங்களை உடனே கவர்ந்து விடக் கூடிய பளிச்சென்ற வதனமும், சிக்கென்று, பார்க்கும் வாலிபர்களின் மூச்சை ஒரு கணம் நிறுத்தியே விடக் கூடிய செழித்த ஒயிலான உடல் வாகும் கொண்ட தேவதை போல், வாசலறையின் மெர்க்குரி விளக்கு பின்னணியில் வீசிய ஒளி அவள் தேகத்தை அழகான ஒவியம் ஒன்று வெள்ளி விளிம்பால் சுற்றப் பட்டது போலக் காட்ட, வாசல் தூணில் நளினமாக சாய்ந்து கொண்டு ஆவலான புன்னகையுடன் ஷாலினி தந்த அன்பு வரவேற் பை... சூர்யா சிறிதும் கண்டு கொள்ள வேயில்லை!

ஒரு கண் சிமிட்டும் நேரம் மட்டும் பதில் புன்னகை வீசிவிட்டு, "உம்... உள்ளே போய் பேசலாம் வா!" என்று கூறி ஒரு புயல் வேகத்தில் தன்னை சூர்யா தாண்டிச் சென்று விட்டதால் ஒரு கணம் ஷாலினியின் மலர்ந்த முகம் வாடி விட்டது. சுதாரித்துக் கொண்டு பழைய புன்னகையுடன் சூர்யாவின் பின்னால் விரைந்தாள்.

வேறு யாராக இருந்திருந்தாலும் ஷாலினியின் அன்புப் புன்னகையில் அனல் மேல் மெழுகு போல் உருகித்தான் போயிருக்க வேண்டும். ஆனால் தன் கடந்த கால சோகத்தால் இறுகிவிட்ட சூர்யாவின் இதயமோ ஷாலினி வெளிப் படையாகக் கூறாமல் காட்டிய நேசத்துக்கு இடம் தரவில்லை. அந்தப் பழைய கதையை பிறகு எப்போதாவது பார்க்கலாம்.

சில நொடிகளுக்குள் நடந்து முடிந்து விட்ட இந்தச் சிறு நாடகத்தை வேறு யாரும் கவனிக்கவில்லை-கிரணைத் தவிர! அவன் இதே காட்சியைப் பல முறைப் பார்த்தவன் தான். ஆனாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சூர்யாவின் புறக்கணிப்பு ஷாலினிக்கு விளை விக்கும் கண நேர முக வாட்டம் சகோதரப் பாசத்தால் அவன் மனத்தில் சுருக்கென்று குத்தியது. சிறு வயதிலிருந்து ஷாலினி தன் தம்பி கிரண் மேல் பாசம் கொட்டி வளர்த்திருந்ததால் அவனுக்கு அவள் வருத்தத்தைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

தம்பிக்கும் அக்காவுக்கும் ஒளிவு மறைவு கிடையாது. ஆனால் தன் மன விருப்பத்தைப் பற்றிச் சூர்யாவிடம் சொல்லக் கூடாது என்று ஷாலினி பலமுறை அழுத்திக் கூறி விட்டதால், சூர்யாவை உலுக்கி விழித்துக் கொள்ளச் சொல்ல வேண்டும் என்று பொங்கி எழும் ஆத்திரத்தைக் கிரண் அடக்கி வைக்க வேண்டியதாகி விட்டது. அந்தச் சமயங்களில் மட்டுமே எதற்கும் கலையாத கிரணின் புன்னகை மறைந்து போவதைச் சூர்யா கவனிக்கவில்லையா என்ன? எதையும் விடாமல் ஆராய்ந்து அறிந்து விடும் சூர்யா இந்த விஷயத்தை உணராமல் இருந்திருக்க முடியுமா? இருக்கலாம். அறிவுக் கும், மனத்துக்கும் தொலைதூரம் அல்லவா?! உண்மைகளை விடாமல் பிடித்து விடும் சூர்யாவுக்கு உணர்ச்சிகள் உறைக்காததில் அவ்வளவு ஆச்சரியமில்லை.

இந்த ஒரு தலை ராகம் தந்த ஊமை நாடகத்தின் பாத்திரங்கள் நம் நாயகர்கள் என்பதால் நாம் அவர்களின் ஊடலையும் உணர்வுகளையும் போகப் போக பல முறை பிறகு சந்திக்கலாம்! இப்போது விஞ்ஞானி மறைந்த விபரீத விஷயத்துக்கு திரும்புவோம்!

விரைவாக நடந்த சூர்யா, ஷாலினி ஒட்டமும் நடையுமாகத் தொடர்வதைக் கவனித்து, சற்றே வேகத்தை குறைத்துக் கொண்டு, அவளை வினாவும் வகையில் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தினார். ஷாலினி நிலவரத்தை சுருக்க மாகக் கூறினாள். "எங்க பயோ டெக் கம்பனி பெயர் சைபோஜென். ஷின் செங் (Xun Cheng) என்பவர் இங்க ரொம்ப நாளா ஆராய்ச்சி வேலை செய்யற ஒரு பெரிய விஞ்ஞானி. அவர் சமீப காலமா ஒரு ரொம்ப ரகசியமான ஒரு ப்ராஜக்ட் செஞ்சுகிட்டிருந்தார். மனுஷனுக்கு வேலையே கதி. ஆனா திடீர்னு இன்னிக்கு வேலைக்கு வரலை. நாங்க அவர் வீட்டுக்குக் கூப்பிட்டுக் கேட்டோம். அங்கேயும் இல்லை. ஆ·பீஸ¤க் குப் போறதாத்தான் சொல்லிட்டு வந்திருக்கார். ஆ·பீஸ்ல அவரோட ப்ராஜக்ட் ·பைல்கள், ஆராய்ச்சி சம்பந்தமான சாம்பிள்கள் எல்லாம் காணாமப் போயிடுச்சு! லேப் மேனேஜ்மென்ட் எல்லாம் ஷின் தான் எல்லாத்தையும் எடுத்துகிட்டு தலைமறை வாயிட்டாருன்னு சந்தேகிக்கிறாங்க. ஆனா எனக்கு நிச்சயமா அப்படித் தோணல. ஷின் ரொம்ப நல்லவர். நான் நிறைய அவரோட வேலை செஞ்சிருக்கேன். இதுல வேற எதோ மர்மம் இருக்குன்னுதான் தோணுது. பாவம் ஷின்னோட வை·ப். ஓன்னு அழறா! சூர்யா, நீங்கதான் எப்படியாவது நிஜத்தைக் கண்டு பிடிக்கணும்."

மூச்சு விடாமல், ஒரேயடியாகக் கொட்டித் தீர்த்து விட்ட ஷாலினிக்கு சூர்யா கையை உயர்த்திக் காட்டி, புன்னகையுடன் ஆறுதல் காட்டினார். "ஷாலினி, எனக்கு மனுஷங்கள உன்னால நல்லா எடை போட முடியுங்கற முழு நம்பிக்கை இருக்கு. என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணி கண்டு பிடிச்சிடலாம். கவலைப்படாதே. நான் இதை பத்தி விசாரிக்கப் போறது பத்தி லேப் சீ·ப்புக்குத் தெரியுமா?"

ஷாலினி ஆமாம் என்று தலையாட்டினாள். "நான் ஷின் அப்படி செஞ்சிருக்க மாட்டார், இப்படிப் பட்ட பல கேஸ்கள நீங்க தீர்த்திருக் கீங்கன்னு அவர் கிட்ட வாதாடினேன். அவர் ஏற்கனவே போலீஸைக் கூப்பிட்டுட்டார். ஆனா அவங்களோட நீங்களும் கூட வேலை செய்யறத் துக்கு ஏற்பாடு பண்றதாகச் சொல்லியிருக்கார். இதோ அவரும் போலீஸ் டிடெக்டிவும் வந்துட்டாங்களே!"

சைபோஜென் லேப் தலைவர் ஜான் கென்ட்ரிக்ஸ், கொஞ்சம் வயதானவர். தலை கிட்டத் தட்ட மொத்தமாக வழுக்கையாகி விட்டிருந்தது. கிட்டப் பார்வை, சாளேஸ்வரம் இரண்டும் சேர்த்த கண்ணாடி அணிந்திருந்தார். சாதாரண உயரம் தான். அவர் தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்ட நிலைமையில் இருப்பதை அவர் பார்வையும் முக பாவமும் உணர்த்தின. "வயதான காலத்தில் இந்த வம்பில் என் வந்து மாட்டிக் கொண்டு விட்டோம்?" என்று எண்ணி சோர்ந்து விட்ட பாவனை. கையில் ஒரு ·பைல் வைத்திருந்தார். அதிலிருந்த சில காகிதங்கள் தாறுமாறாக மேலே கொஞ்சமும் கிழே கொஞ்சமும் நீட்டிக் கொண்டிருந்தன.

கூட வந்த போலீஸ் டிடெக்டிவ் மார்க் ஹாமில்டன் அதற்கு நேர் எதிரானத் தோற்றம். இளவயதினன். எதற்கும் அஞ்சாத, அலட்சியமும் அகம்பாவமும் கலந்த முகத் தோற்றம். நல்ல உயரம். உடல் வாட்ட சாட்டம்! டிப் டாப்! கையில் ஒரே ஒரு சிறீய சுருள் கம்பியில் கோர்த்த நோட் புக். அழகாக வரிசையாக எதோ எழுதியிருந்தான்.

மார்க் கூட்ட அறையின் முன் நின்றிருந்த ஷாலினி, சூர்யா, கிரண் மூவரையும் பார்த்துவிட்டு புருவத்தை உயர்த்தி ஜானை வினாவும் வகையில் பார்த்தான். அவர் மன்னிப்புக் கோரும் தொனியில், "மார்க், இவங்க பேர் ஷாலினி. எங்க லேபுக்கு ஒரு மெடிக்கல் கன்ஸல்டன்ட். ஷின் செங் நிச்சயமா குற்றம் செஞ்சிருக்க மாட்டாருன்னு ஷாலினி நினைக்கிறாங்க. அதனால லேப் சார்பா உங்களோட சேர்ந்து விசாரிக்கிறத்துக்கு இவங்கள அழைச்சிருக் காங்க" என்றார்.

மார்க்கின் முகம் ஒரு எரிமலை வெடிக்காத குறையாக ஆகிவிட்டிருந்தது! சரியாக பேசுவதற்கே கஷ்டமாகிவிட்டது. திக்கிக் கொண்டு குமுறினான். "எ... எ... என்ன?! ல்.. ல்ல்.. லேப் சார்பா தனியா விசாரிக்கறதா?! இவங்களா?! நோ, நோ, நோ! நோ வே! நான் இதை அனுமதிக்க மாட்டேன்! இந்த மாதிரி கேஸ்களை ஆராயறத்துக்கு எங்களுக்கு எவ்வளவு ஆட்கள், எவ்வளவு கம்ப்யூட்டர் டேட்டா, நெட்வொர்க்ஸ், எவ்வளவு கருவிகள் எல்லாம் இருக்கு தெரியுமா? இந்த ரெண்டு பேரும் என்ன செய்ய முடியும்?! என் காலுக்குக் குறுக்கே குறுக்கே வந்து மாட்டிக்கிட்டுத் தொல்லை குடுப்பாங்க அவ்வளவுதான்!"

கிரணுக்கு கோபம் பொத்திக் கொண்டு வந்து விட்டது. அடக்கிக் கொள்ள முடியாமல் முன்னால் வந்து, "என்ன இது, போலீஸ்னா, எப்படி வேணும்னா பேசலாமா?! சூர்யாவைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? எவ்வளவு முறை போலீஸ் டிடெக்டிவ்ஸ் அவர் கிட்ட ஆலோசனை கேட்டிருக்காங்க தெரியுமா?..." மேலும் ஏதேதோ குமுறிக் கொட்டப் போனவனை சூர்யாவின் பார்வை அடக்கியது. ஷாலினியும் அவனை மெல்ல இழுத்து ஒரு புறமாக சற்று தள்ளி அழைத்துச் சென்றாள். மார்க்கை எரித்து விடுவது போல் முறைத்துக் கொண்டே சென்றான்.

லேப் தலைவர் ஜான், கொஞ்சம் அமைதிப் படுத்த முயன்றார். "மார்க், எனக்கும் சூர்யா உங்களோட உதவி செஞ்சா நல்லதுன்னு தோணுது. அவர் ரொம்ப சங்கடம் தரக் கூடிய புதிர்களை சந்திக்கு வராம சைலன்டா, விரைவில தீர்த்து வைக்கிறவர்ங்கற பெயர் பெற்றவர். இப்ப கூட சமீபத்துல ஹோலோ ஸ்டோர் கம்பனில ஏற்பட்ட ப்ராப்ளத்த எப்படிக் கண்டு பிடிச்சார்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக் கணுமே?! நாங்களும் இந்த விஷயத்தை ரொம்ப வெளியில வராம, சீக்கிரமாத் தீர்க்கணும்னு விரும்பறோம். அதுனால எனக்காக கொஞ்சம் அனுமதி கொடுத்தா நல்லா இருக்கும்" என்றார்.
அது வரை அமைதியாக இருந்த சூர்யாவும் புகுந்து, "மிஸ்டர் ஹாமில்டன், உங்களோட சேர்ந்து உதவி செய்யறதுல நான் ரொம்ப பெருமைப் படுவேன். உங்க கேப்டன் ராஜர் பில்லிங்ஸ் கிட்ட இன்னிக்குக் காலைல பேசும் போது, அவர் நீங்கதான் இந்த கேஸ் பாக்கப் போறதத் தெரிவிச்சு, உங்க புகழப் பாடினார்! அந்த ஷோர் லைன் பார்க் கொலை கேஸ்ல நீங்க செஞ்ச் வேலை பிரமாதம்! உங்க கிட்ட இந்த Fax லெட்டர் கொடுக்கச் சொன்னார்" என்று கூறி ஒரு கவரை மார்க்கிடம் கொடுத்தார்.

சற்று முன் வெடித்துக் கொண்டிருந்த கிரண், மீண்டும் குரங்குத் தன சுய பாவத்துக்கு வந்து, மார்க்குக்குத் தெரியாமல் ஷாலினியைப் பார்த்து கண்ணடித்தான்! தலையில் ஐஸ் வைப்பது போல் சைகை செய்து ஒரே குளிர்வது போல் நடுங்கி, தன் கோட்டை இழுத்து இன்னும் இருக்கிக் கொள்வது போல் காட்டினான்! ஷாலினியும் அடக்க முடியாமல் சிரிப்பு வர, வேறு புறம் திரும்பிக் கொண்டாள். ஜான் கூட கண்டு கொண்டு ஒரு மெல்லிய புன்னகை காட்டினார்.

மார்க் தன் கேப்டன் பேரைக் கேட்டு திடுக்கிட்டான்! மேலும் சூர்யாவின் புகழ்ச்சியால் அவனுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. கவரைப் பிரித்து விரைவாகப் பார்த்தவன், படாரென்று நிமிர்ந்து நின்றான். லெட்டரில் இருந்த விஷயம் அவனை ரொம்ப பலமாக அடித்ததோ என்னவோ?!

அது வரை கடுப்பாக இருந்த மார்க்கின் முகம் மிகப் பக்தி பூர்வமாகவே ஆகிவிட்டது! ஒரு பெரிய புன்னகையும் வந்து, மிகவும் கரிசனமான குரலும் சேர்ந்து விட்டது! பூனைக் குட்டிப் போல சாதுவான தோரணையில், "ஓகே மிஸ்டர் சூர்ய பாஸ்கர்! எனக்கு உங்களப் பத்தி விவரம் அவ்வளவாத் தெரியாது. அவசரமா வெடிச்சிப் பேசிட்டதுக்கு ரொம்ப சாரி! நான் இந்த ப்ரெசிங்க்ட் வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. கேப்டன் ரொம்ப ஸ்ட்ராங்காவே உங்களப் பத்திப் புகழ்ந்து எழுதியிருக்கார். உங்க உதவியை நான் வரவேற்கிறேன்! ·பார்மாலிடி தேவையில்லை, என்னை மார்க்னே கூப்பிடலாம்" என்றான்.

சூர்யா, "ரொம்ப தேங்க்ஸ், மார்க். என்னையும் சூர்யான்னு சொன்னா போதும். இவன் பேர் கிரண். சரி ரொம்ப இன்னும் நேரத்தை செலவழிக்காம விசாரணையை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு செகண்டும் ரொம்ப முக்கியம்!" என்றார்.

மார்க்கும் ஆமோதித்தான். "யூ ஆர் வெரி ரைட் சூர்யா! கேஸ் ஆரம்பத்துல உடனே உடனே மோப்பம் புடிச்சிடணும். கொஞ்ச காலம் தள்ளிப் போய் ஆறிப் போச்சுன்னா தடயங்கள் மறைஞ்சு கிடைக்காம போயிடலாம். லெட்ஸ் கெட் ரோல்லிங்!" என்றான்.

ஷாலினிக்கு மீண்டும் உயிர் மூச்சு வந்தது! சூர்யாவை எதோ ஒரு சங்கடமான சூழ்நிலையில் மாட்டி விட்டு விட்டோமோ என்று ஒரு விநாடி தவித்துப் போயிருந்தாள். மார்க்கைத் தட்டிக் கொடுத்து நிலைமையை சூர்யா சமாளித்த விதம் அவளுக்கு நிம்மதியை மீட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல் சூர்யாவின் மேல் அவளுக்கிருந்த மட்டில்லாத மதிப்பையும் நேசத்தையும் இன்னும் உயர்த்தியது!

சூர்யா மிகவும் சாதாரணத் தொனியில், "ஸோ, மார்க்! இங்க கம்பனில விசாரணை முடிஞ்சதும் ஸ்டேன்·போர்ட் யூனிவர்ஸிடிக்குப் போய் Prof. சங் யென் கிட்ட விசாரிக்கலாம்னு நினைக் கிறீங்க போலிருக்கு?!" என்றார்.

மார்க் வெலவெலத்தே போய் விட்டான்! "சூர்யா! நீங்க என்ன மனோதத்துவ மந்திர வாதியா?! நான் எக்ஸாக்டா அப்படித்தான் செய்யறதா இருக்கேன்! இப்பத்தான் நீங்க இங்க வந்திருக்கீங்க, நாம ஒண்ணுமே டிஸ்கஸ் பண்ணலயே! எப்படி நான் அடுத்தது எங்கே போகணும்னு நினைக்கறேன்னு கண்டு புடிச் சீங்க?!" என்று மித மிஞ்சிய ஆச்சரியத்தோடு கேட்டான்.

லேப் தலைவர் ஜானும் அசந்தே போனார்! "சூர்யா, இது நம்பவே முடியாத விஷயம். இதைப் பத்தி நாங்க பேசி முடிச்சி ஒரு ரெண்டு நிமிஷம் கூட ஆகலை. அத எப்படி உங்களுக்குத் தெரிஞ்சிருக்க முடியும்?!" என்றார்.

கிரணுக்கும் ஷாலினிக்கும் அது துளிக் கூட ஆச்சரியத்தை விளைவிக்கவில்லை! சூர்யா இது போன்று கண் சிமிட்டும் நேர ஊகங்களை எடுத்து வீசியதை அவர்கள் பல முறைப் பார்த்துப் பழகி விட்டிருந்ததால், ஆச்சரியத்துக்குப் பதிலாக, இம்முறை அவர் எவ்வாறு மார்க் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று ஊகித்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல்தான் உதித்தது!

சூர்யாவின் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை மலர்ந்தது! "இப்ப இவ்வளவு ஆச்சரியப்படறீங்க! ஆனா நான் சொன்ன வுடனே நீங்க 'சே, இவ்வளவுதானா?' அப்படீன்னு டுவீங்க! இது மந்திரவாதியின் காட்சிகள் போலத்தான். எப்படின்னு தெரியற வரைக்கும், மாயமந்திரம். தெரிஞ்சதும், வெறும் தந்திரம்! இருந்தாலும் சொல்றேன் பரவாயில்லை. ஜானுடைய ·பைலில் காகிதங்கள் நீட்டி கிட்டிருக்கு. அதுல ஸ்டேன்·போர்ட் பத்தியும், Prof. சங் யென் பத்தியும் குறிப்புகள் இருக்கு, பாத்தேன். ·பைல் மேல ஷின் செங் பேர் இருக்கு. நான் மார்க்குடைய கேப்டன் கிட்ட பேசும் போது, அவர் மார்க் காரியங்களை எப்போதும் நன்றாக முறைவழிப் படுத்தி செய்பவர் என்று புகழ்ந்தார். மார்க்கின் நோட் புத்தகத்தில் அவர் வரிசையாக ஒரு பட்டியல் போட்டிருப்பதைக் கவனித்தேன் - சாரி மார்க்! அதில் 'ஜானுடன் பேச்சு' என்பதற்குப் பிறகு 'Stanford - Prof Chung Yen' என்று எழுதி யிருப்பதைப் பார்த்ததும் இரண்டுக்கும் இணைப்பு மிகச் சுலபமாகிவிட்டது! ஒரு கொஞ்சம் விஷயம் தெரிஞ்ச ஊகம் அவ்வளவு தான்!" என்றார்.

மார்க் வாய் விட்டு சிரித்தான். "நீங்க நிஜமாவே ரொம்ப திறமைசாலிதான் சூர்யா! நான் உங்கள மிகவும் குறைச்சலா எடை போட்டுட்டேன், வெரி சாரி! இனிமே அந்தத் தவறைச் செய்ய மாட்டேன்! சரி வாங்க இந்த விசாரணையைத் தொடரலாம்" என்றான்.

ஷாலினி எல்லோரையும் ஷின் செங்கின் ஆராய்ச்சி அறைக்கு அழைத்துச் சென்றாள். போகும் போது சூர்யா ஷின் எதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார் என்று கேட்டார். மார்க்கும் அதில் ஆர்வம் தெரிவித்தான். ஷாலினி மருத்துவம், பயோ-டெக் இரண்டையும் பற்றி மருந்துக்கும் தெரியாதவர்களுக்கு எப்படிச் சொல்வது என்று சற்றுத் தயங்கினாள்!

"சரி, மிக மேல்படையாக சொல்றேன். ஷின் மைக்ரோபியல் நேச்சுரல் ப்ராடக்ட்ஸ் (Microbial Natural Products) விஷயமா ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கார். இயற்கைல இருக்கற பாக்டீரியா போன்ற மைக்ரோப்களை ஜெனெடிக் எஞ்சினீரிங் மூலமா மாத்தி புது மருந்துகளை உற்பத்தி செய்ய முயற்சிக்கற துறை. இது ரொம்ப நாட்களா, பல பேர் முயற்சி செஞ்சு தோல்வியடைந்த விஷயம். ஆனா போன வாரம் கடைசிலதான் ஷின் ரொம்ப பரபரப்போட எனக்குப் ·போன் செஞ்சு பாலிகீடைட்ஸ் (Polyketides) ஆராய்ச்சியில ஒரு பெரிய பிரமாதமான breakthrough முன்னேற்றம் கிடைச்சுட்டதாகவும் வீக் என்ட்ல இன்னும் வேலை செஞ்சப்புறம் இன்னிக்குப் பேசலாம்னும் சொன்னார். ஆனா..." என்றாள்.

அதற்குள் அவர்கள் லேப் அருகில் வந்து விடவே, சூர்யா, "சரி நாம அத பத்தி இன்னும் விவரமா அப்புறம் பேசலாம், இப்ப லேபைக் கவனிக்கலாம்." என்றார்.

ஷின் செங்கின் லேப் சிறியதாக, ஒரு தூசு கூட இல்லாமல், பளிச்சென்று மிக நேர்த்தியாகக் காட்சியளித்தது. ஒரு புறம் ஒரு சிறிய ஆராய்ச்சி மேஜை. அதன் மேல் ஒரு பெரிய மைக்ராஸ் கோப். அதன் பக்கத்தில் டிஷ்யூ சாம்பிள்கள் வைக்கப்பட்ட ஒரு குளிர் பதனப் பெட்டி. அது மூடியிருந்தது. மேஜையின் மேல் புறம், கண்ணாடிக் கதவுடன், அமிலங்கள் போன்ற ரசாயனப் பொருட்களும், பீக்கர், பிப்பெட், பர்னர் போன்ற கருவிகளும், வைக்கப் பட்ட காபினெட். ஒரு மூலையில் வாஷ் பேசின். மொத்தமும் சேர்த்து அந்த சின்ன அறையில் கால் பங்கு கூட இருக்காது! அறையின் மறு கோடியில் ஒரு கம்ப்யூட்டர் மேஜை. அதன் மேல் ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர், கீ போர்ட் மற்றும் மவுஸ் இருந்தன. ஒரு பேனா இருந்தது. அறையில் வேறு ஒன்றும் எந்த மேஜை மேலோ தரையிலோ இல்லை. குப்பைக் கூடை கூட சுத்தமாக இருந்தது!

கிரணின் முகத்தில் ஏமாற்றம் வழிந்தது. "சே! இவ்வளவுதானா? பயோ-டெக் லேப்னா எதோ பிரமாதமான எக்விப்மென்ட் எல்லாம் இருக்கும்னு நெனச்சேனே! எங்க அப்பா ஆ·பீஸ்ல கூட இத விட நிறைய சங்கதிங்க இருக்கும் போலிருக்கு?!" என்றான்!

ஷாலினி 'களுக்' என்று இனிமையான கிண்கிணி நாதத்துடன் சிரித்தாள். "சாரி டு டிஸப்பாயின்ட் யூ கிரண்! இப்பெல்லாம் பயோ-டெக் லேப் Frankenstein கதைல வர மாதிரி நிறைய கண்ணாடிப் பாத்திரத்திங்கள்ள கலர் கலரா கொந்தளிச்சு கிட்டிருக்கிற திரவங்கள் வச்சு செய்யறதில்ல. எப்பவுமே அப்படி கிடையாது, ஆனா இப்போ இன்னும் நிறைய வேலை கம்ப்யூட்டர் வச்சு சிமுலேஷன், மாடலிங், அனாலிஸிஸ் இப்படியே நடந்து முடியுது. எக்ஸ்பரிமென்ட் வேலைல ஒரு பகுதிதான். அதுவும் வெவ்வேறு இடங்கள்ள நடத்தறோம். இந்த மாதிரி குட்டித் தனி நபர் லேப்ல கொஞ்சம், அப்புறம், இந்த கம்பனிக்கு ஒரு பெரிய சென்ட்ரல் லேப் இருக்கு - அங்க கொஞ்சம், ரொம்ப விலை உயர்ந்த கருவிங்க வச்சு பல கம்பனிக்கு வேலை செஞ்சு தர தனிப்பட்ட லேப்கள்ள கொஞ்சம், அப்புறம் இன்னும் முக்கியமா ஹாஸ்பிடல்கள்ள கூட கொஞ்சம் இப்படி பல இடங்கள்ள நடத்தி அப்புறம் எல்லா ரிஸல்ட்ஸையும் சேர்த்து ஆராய்ச்சி செய்யணும். அதுனால, நீ இப்ப பாக்கிறது டிப் ஆ·ப் த ஐஸ்பெர்க்னு சொல்லுவாங்களே அதான்!"

கிரண் மலைத்துப் போனான். "அப்பாடியோவ்! அவ்வளவு விஷயம் இருக்கா இதுல?!" என்றான்.

சூர்யாவும் "வெரி இன்டரெஸ்டிங்! இந்த விஷயத்த மொத்தமா விசாரிக்கணும்னா, நாம அந்த வேற லேப்கள்ளயும் தேட வேண்டியிருக் கலாம். லக் இருந்தா கம்பனிக்குள்ளயே முடிச்சுடலாம். பார்க்கலாம்" என்றார்.

மார்க் தலை கிர்ரென்று சுற்றியது போல் ஒரு விதமான முக பாவம் கட்டினான். "ஹ¥ம், நான் எங்க கேப்டன் கிட்ட சொல்லி ஒரு ப்ளட்டூனயே இந்த விசாரணைக்கு ஒதுக்கச் சொல்ல வேண்டியதுதான் போலிருக்கு. இங்க எதுவும் அவ்வளவு இல்ல போலிருக்கே? சென்ட்ரல் லேப் போய் பார்க்கலாமா?" என்றான்.

சூர்யா தயங்கினார். "இங்க இன்னும் எதோ பாக்கணுமே.." என்றார். திடீரென உறைந்து நின்றார். அவர் முகத்தில் பளிச்சென்று ஒரு ஒளி வீசி விலகியது. "ஆ... சே! இது ஏன் எனக்கு முதல்லயே தோணலே? கம்ப்யூட்டர்! அது ஸ்க்ரீன் ஸேவர்ல இருக்கு. அதுல என்ன இருக்குன்னு பாக்கணுமே?!" என்றார்.

கம்யூட்டர் திரையிலிருந்து கிடைத்த விஷயம் விஞ்ஞானிக்கு ஏற்பட்ட விபரீதத்தைச் சற்று விவரித்தது!(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 


© Copyright 2020 Tamilonline