Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
அர்த்தம்
வழி
புலித்தோல்
கோவிந்தசாமியின் சரித்திரம்
- அட்லாண்டா கணேஷ்|ஜூலை 2002|
Share:
'கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்துக்கள் அல்ல' ஏதாவது கேள்விகள் இருந்தால் பதில் வாங்கவேண்டியது அவரிடமே - எங்களுக்கு அனுப்புங்கள் கோ.சாமியை பிடித்து, முடிந்தால் பதில் அனுப்புகிறோம்.

கோவிந்தசாமியின் சரித்திரம்

இவரின் அக்கா "நாக்கு நீ.....ளம்" நாகலட்சுமி, அவள் புருஷன் 'வயத்தெரிச்சல்' வரதராஜன். இவர்களுக்கு இரண்டு சூப்பர் ஹைப்பர் குழந்தைகள் 7 வயதிலும் 5 வயதிலும். கோ.சாமி கட்டை பிரம்மச்சாரி, அன்றும் இன்றும் என்றும் இவர்களோடு கூட இருப்பவன். ஊர் உலகில் நல்ல பெண்ணே கிடைக்க வில்லையாம் அவர்களது அந்தஸ்துக்கு ஏற்ற படி. இப்போது அவனுக்கு வயது 45. வாசம் அட்லாண்டாவில் 15 வருடமாக.

ஏதாவது ஒரு சிறிய விஷயம் கிடைத்தால் போதும். அதை எவ்வளவு பெரிதாக ஆக்க முடியுமோ ஆக்கி விடுவார்கள். ஆகவே ஓரளவு டீஸண்டாக இருப்பவர்களுக்கு இந்த மூவரையும் பார்த்தாலே ஒரு சிறிய பயம் கலந்த மரியாதை. இவர்களைப் பகைத்துக் கொண்டால் 'நிம்மதி அவர்கள் சாய்ஸ்' ஆகி விடுமே என்று வீட்டில் நடக்கும் எல்லா விழாக்களுக்கும் கூப்பிட்டுவிடுவார்கள்.

மூவரும் வந்தால் னோ கி·ப்ட். அது கெட்ட வழக்கமாம். நன்றாக இருந்து நல்லா சாப்பிட்டுவிட்டு அதை என்னவெல்லாம் குறை கூற முடியும் என்று வக்கணையாகச் சொல்லி ஊர்வம்பு அத்தனையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டுதான் போவார்கள். அந்த இரண்டு சூப்பர் ஹைப்பர் குழந்தைகள் அடிக்கும் லூட்டி தாங்காது. மற்ற குழந்தைகளை அடித்தும் உதைத்தும் நல்ல சாமான்களைத் தூக்கிப் போட்டு காட்ச் பிடித்து விளையாடியும் ஜுராசிக் பேபிஸ் போல படுத்தி எடுத்துவிடும்.

ஒரு வீட்டில் கிராண்ட் ஸ்வீட்ஸிலிருந்து ஸ்பெஷலாக கொண்டுவந்திருந்த சில ஐட்டம்களை அதுகள் இரண்டுமே காலிப் பண்ணிக்கொண்டிருக்க ·பங்க்ஷன் நடத்தியவர்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்க குழந்தைகள் நன்றாக மென்று கொண்டிருந்தனர். கடைசியில் அந்த அம்மா பொருக்கமுடியாமல் நாகலட்சுமியிடம் குழந்தைகளுக்கு வயிற்றுக்கு ஆகாது என்று சொல்லப்போக அவள் வெடித்து எழுந்து "பொல்லாத கிராண்ட் சுவீட்ஸ் நாங்க பார்காததா? எங்க வீடே அடையாறுல அதுக்கு எதிர்த்தாப்ல 5 கிரவுண்ட்ல. என்னவோ குழந்தைகள் இரண்டு சாப்பிட்டா உனக்கு மனசாகலையே. எல்லோரும் கிளம்புங்கோ இவா வீட்ல சாப்பாடை சாப்பிட்டா வயத்து வலிதான் மிஞ்சும்" என்று ரணகளப் படுத்தி பார்ட்டி வீட்டுக்கு கிளம்ப, கையில் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டியதாகியது. அதற்கு அப்புறம் அவர்கள் கடைசி வரை இருந்து அந்த ஸ்பெஷல் ஐட்டங்களை குழந்தைகள் காலிப் பண்ணி இவர்கள் சாப்பிட்டுவிட்டு போனது தனி கதை.

அந்தக் கூட்டத்தில் மூன்றே மூன்று பேர்கள் மட்டும் அந்த குழந்தைகளின் விளையாட்டை பயங்கரமாக ரசிப்பார்கள். அது மட்டும் இல்லாமல் அமெரிக்காவில் இந்த மாதிரி சமத்துக் குழந்தைகளைப் பார்பது மிகவும் கஷ்டம் என்று வேறு சொல்வார்கள்.

ஆனால் அவர்கள் மூவரும் அடிக்கடி கூறும் ஒரு வாக்கியம் "அடுத்தவங்களைப் பற்றி வம்பு பேசுவது ரொம்பத் தப்பு. அந்த பாவத்தை நாங்க செய்யமாட்டோம். ஏன்னா, எங்க வளர்ப்பு அப்படி" என்று. கேட்பர்வகளுக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியாமல் மண்டையை மட்டும் பூம் பூம் மாடு மாதிரி ஆட்டுவார்கள், ஒரு சிறிய பயம் கலந்த முகத்துடன். இவர்களிடம் நமக்கு ஏன் வம்பு என்று யாரும் அவர்களைப் பகைத்துக் கொண்டது இல்லை. பகைத்துக்கொண்ட ஒன்று இரண்டு பேர்கள் அட்லாண்டாவை விட்டே தள்ளி போகவேண்டியிருந்தது. தமிழர்களின் தைரியம் இங்கு கொடி கட்டிப் பறந்தது.

ஆனால் எப்போதாவது அவர்கள் வீட்டில் (அன்று அட்லாண்டாவில் மழைக் கொட்டும்) ·பங்க்ஷன் வைத்தால் யாராவது கி·ப்ட் கொண்டு போகவில்லையானால் தொலைந் தார்கள். அங்கேயே வார்தைகளால் சிலேடை யாகப் பேசிக் கொன்றுவிடுவார்கள். அதிலும் ஒரு முறை பிரட்டும் வத்தக் குழம்பும் கொடுத்து இதுதான் பெஸ்ட் காம்பினேஷன் என்று கூறி எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் 'பேய் முழி' முழித்தனர். கூப்பிட்டவர்களில் யாராவது வரவில்லை என்றால் தொலைந் தார்கள். அவர்களைத் தேடிப் போய் ஒரு ஈவனிங் திட்டிவிட்டு அப்புறம் அவர்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்புவார்கள். இதற்கு பயந்து பட்ஜெட்டை மீறி கி·ப்ட் வாங்கிப் போகிறவர்களும் உண்டு. எப்போதோ ஒரு முறைதானே என்று தன்னை சமாதானப் படுத்திக்கொண்டு.

'நாக்கு நீ...ளம்' நாகலட்சுமியிடம் ஒரு நல்ல வழக்கம். எப்போது என்ன சொன்னாலும் தம்பி கோவிந்தசாமியிடம் "ஏன்டா நான் சொல்றது கரெக்ட் தானே" என்று கேட்க அவள் புருஷன் 'வயித்தெரிச்சல்' வரது "என்னையாக் கேட்ட, சமயத்துல என்னையே டா போட்டு கூப்பிடுவா" என்று சொல்லி ஹா ஹா ஹா என்று சிரிக்க இவள் முறைக்க பெட்டிப் பாம்பு போல ஆவான். அதற்குத் தம்பி "அக்கா நீ சொன்னா தப்பா இருக்குமா" என்று தப்பாமல் ஒரு பதில் சொல்வான். இதைக் கேட்டுக் கேட்டு அட்லாண்டாவாசிகளுக்கு புளித்துப் போய் விட்டது. இருந்தாலும் அந்த குடும்பத்தின் மீது உள்ள 'அன்பு' காரணமாக யாரும் வாயைத் திறக்க மாட்டார்கள்.

ஒரு முறை ஒரு 10வது திருமண ஆண்டு விழா. மனைவி புருஷனுக்கு ஆசையாக ரோலெக்ஸ் வாட்ச் ப்ரெசண்ட் செய்ய இடமே களைக்கட்டி எல்லோரும் ஹாப்பியாக இருக்க திடீரென புகை அலாரம் சத்தம் வர எல்லோரும் பதறிப் போய் எங்கே தீ என்று பார்க்க 'வயத்தெரிச்சல்' வரதராஜன் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் புகையாய் வர மிளகாய் ஏதோ கடிச்சிட்டேன் போல எரியறது என்றான். உடனே நம்ம கோவிந்தசாமி ரோலெக்ஸை விட நம்ம HMT எவ்வளவு பெட்டர் என ஒரு லெக்சர் அடிக்க சபை களை இழந்தது.

அவர்கள் குடும்பத்திலேயே கோவிந்தசாமி தான் மிகவும் படித்தவன். மற்ற எல்லோரும் 12வது கிரேட் தாண்டாதவர்கள். தட்டுத் தடுமாறி யார் யாரையோ பிடித்து எப்படியோ B.E. பாஸ் பண்ணிவிட்டான். (அவன் கூடப் படித்த நண்பன் எனக்கும் ·பிரெண்ட். அவன் ஒரு முறை அட்லாண்டா வந்த போது என் காதோடு சொன்ன விஷயம் இது. இன்று வரை என் மனைவியிடம் கூட இதைச் சொன்ன தில்லை எதற்கு வம்பு என்று) அவன் அக்கா அடிக்கடி அவன் தான் யூனிவர்ஸிடி ·பர்ஸ்ட் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன், ஆகவே அவன் குடும்பத்தில் அவனைக் கேட்டுத் தான் எல்லா முடிவும். அக்கா எடுத்தாலும் இவன் முடிவில் ஓ.கே. சொல்லவேண்டும்.

இந்த கோவிந்தசாமி எந்த வீட்டிற்கு பத்து பேர் இருக்கும் இடத்திற்கு வந்தாலும் ஏதாவது ஒரு ஏடா கூட டாபிக்கை எடுத்து மற்றவர்களை இம்சை பண்ணிடுவான். ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் இவனுக்குத் தனி வழி. அடிக்கட் சூப்பர் ஸ்டார் ரஜினியை இவனோடு கம்பேர் செய்வான். எரிச்சல் பற்றிக் கொண்டு வரும் இருந்தாலும் குடும்ப பாரம்பரியத்தால் ஒருவரும் ஒன்றும் சொல்லாமல் இருப்பார்கள். இவன் இங்கு வந்ததே அமெரிக்காவை முன்னுக்கு கொண்டுவரத் தான் என்று அடிக்கடி சொல்லுவான். புதிதாக நியூயார்க்கில் இருந்து விசிட் வந்திருந்த ஒருவர் ஒரு முறை ஒர் கெட் டுகெதரில் "அமெரிக்கா தான் ஏற்கனவே முன்னுக்கு வந்தாச்சே, உங்க சேவை ரொம்ப ஏழை நாட்டுக்குத் தான் தேவை நீங்க படிச்ச இந்தியாவிற்கே உங்க இல்லாத மூளையை செலவு செய்யலாமே நீங்க இங்க இருக்கறது டாலருக்காகத் தான்" என்று சொல்ல அவர் காலரை இவன் பிடிக்க ஒரே ரசாபாசம் ஆகி அவர் பாதியிலேயே கிளம்பி ஊரைப் பார்க்க போய் சேர்ந்துவிட்டார். அவர் கிளம்பிய பிறகு இவன் "என் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாமல் ஓடி விட்டான் பார்" என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பெருமை பேசியது தனிக் கதை.

இப்படிப் பட்ட கோவிந்தசாமி குடும்பத்திற்கு நான் பத்திரிகையில் எழுதும் விஷயம் போன இதழைப் பார்த்து தெரிந்து நேரில் வந்து விட்டான் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு சனிக்கிழமை காலையில். நான் உடனே அவனுக்கு ராஜ உபசாரம் செய்து என்ன விஷயம் என்று கேட்க ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். "பல இடங்களில் வீட்டுப் பெண்களின் தாக்கம் தெரிகிறது" என்றான். புரியாமல் "எதைப் பற்றிச் சொல்றீங்க?" என்றேன். "நீ பத்திரிகையில் எழுதி இருக்கயே அதைத் தான்" (என்னை விட பத்து வயது சிறியவன். நான் அவனை வாங்க போங்க, அவன் என்னை நீ, வா, போ. எனக்கு பண்பு அதிகம் என்று நானே பெருமைப் பட்டுக்கொண்டேன் மனதிற்குள் பயந்துதான்). "ஒன்றும் புரியலியே" என்றேன் மறுபடியும். "தப்பான ஆட்களைத் தான் இந்தப் பத்திரிகைகளிலே பிடித்துப் போடுவாங்க, நீ எழுதியிருக்கிறது வீட்டுல உட்கார்ந்து வேலை இல்லாம இருக்கிறவங்க பொழுது போக கண்ட கண்ட பத்திரிகைகளைப் புறட்டுவாங்க டயத்தை கில் பண்ண அப்போ தோனறது எதையாவது எழுதிடுவாங்க அது அவங்களுக்குக் காவியம் மாதிரி தோணும் ஆனா நான் ஒரு சாதாரண லெட்டர் எழுதினாக் கூட இதை விட பெட்டரா இருக்கும்" என்றான். ரத்தக் கொதிப்பைத் தாங்க முடியாமல் ஈன சுரத்தில் "ஒன்று இரண்
டு பேர் நல்லா நியாயமாக எழுதி இருக்கேன் என்றார்களே" என்றேன் (எனக்கு வேலை வேறு லே ஆ·ப் ஆகி இருந்த சமயம் அது) "சில மடயங்க இப்படித்தான் எதையாவது சொல்லிட்டு போய்விடுவாங்க, கஷ்டப்படற்து நாங்கதானே?" என்று கேட்க திருவாய் மூடி உட்கார்ந்து இருந்தேன்.

அவனே "வந்தவாளுக்கு காபி கொடுக்கிற வழக்கம் உன் வீட்டில கிடையாதா? மாமி இல்லையா?" என்று கேட்க மாமி என்ற வார்த்தையை யாராவது சொன்னால் புலியாக பாயும் என் தர்ம பத்தினி மிக மரியாதையாக "சாரி, சுட வைக்க லேட் ஆயிடுத்து" என்று மன்னிப்புக் கேட்டு காபியை வைத்து குசலம் விசாரித்தாள். அதுவும் போக "நீங்களாவது சொல்லுங்கோ விடு விடுன்னு ஒரு வேலையைப் பாக்காம இப்போல்லாம் என்னமோ கம்ப்யூடர்ல உட்கார்ந்து எழுதிண்டே இருக்கார்" என்று வெந்த புண்ணில் வேலை சொருகினாள். "சொல்றேம்மா, அந்த பொருப்பை எல்லாம் நான் எடுத்துண்டு இவனை சட்டு புட்டுன்னு ஒரு வேலைக்கு அனுப்பிடறேன். நீங்க எல்லாம் நல்லா பழகின குடும்பம் ஆச்சே இது கூட பண்ணலேண்ணா எப்படி" என்று அடுத்த குண்டைப் போட்டான். சொன்ன என் மனைவியே பயந்துவிட்டாள் பாவம்.
நான் உடனே "இப்பதான் நானே ஆரம்பிச்சிருக்கேன் ஒரு இரண்டு மாதம் போகட்டும் நானே உங்களைப் பற்றி சொல்லி கொஞ்சம் எழுத சான்ஸ் வாங்கித் தரேன்" என்று சொல்ல "நீ என்னைய்யா வாங்கித் தரது என் கெபாசிடிக்கு நானே டைரெக்டா பேசிக்கிறேன் அதுதான் எல்லா போன் நம்பரும் அட்ரெசும் அந்தப் பத்திரிகையில் இருக்கே" என்று சொல்லி விட்டு வேகமாக சென்றுவிட்டான்.

நானும் என் மனைவியும் கவலையோடு ஒருவரை ஒருவர் பார்க்க, அவள் உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்பது போல என்னைப் பார்த்தாள்.

என்ன நடந்ததோ ஏது நடந்ததோ யாமறியேன் பராபரமே. இரண்டு நாளில் என்க்கு எடிட்டரிடமிருந்து ஒரு போன் வந்தது. உஙக் அட்லாண்டா ஏரியாவிலே ஒரு ரைட்டிங்க்லே டேலண்டட் மேன் கோவிந்தசாமி என்று இருக்கிறாராமே 5 அல்லது 6 பேர்கள் போன் பண்ணி சொன்னாங்க முடிஞ்சா அவரையும் கொஞ்சம் காண்ட்ரிபியூட் பண்ண சொல்லுங்க என்றார்.

அவரிடம் நான் விஷயத்தைச் சொல்ல அதில் அவர் பாதி கேட்டுவிட்டு "சரி சரி முடிஞ்ச வரைக்கும் அக்காமடேட் பண்ணுங்க" என்று சொல்லி போனை கட் பண்ணிவிட்டார். இப்போது கோவிந்தசாமி சொந்த செலவில் பத்திரிகை பிசினெஸ் கார்ட் போட்டுக்கொண்டு என்னிடமே வந்து "நான் தான் அபிஷியல் ரெப், போனா போகிறது என்று உன்னையும் கண்டின்யூ பண்ண சொல்லி இருக்கேன்" என்று சொல்லி மண்டையைக் குடைகிறான்.

ஆகவே எல்லா மாதமும் கோவிந்தசாமிக்கு ஒரு பக்கம் நான் ஒதுக்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் அவரது "வக்ர" புத்தி எனக்கு தெரிந்ததால் தான் இந்த மேட்டர் ஆரம்பத்தில் வாசகர்களுக்கு அந்த வார்னிங். "கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்து அல்ல" அவரை பற்றிய அறிமுகம் முடிந்ததால் அடுத்த இதழில் இருந்து அவரது அறிய கருத்துக்கள் வெளிவரும்.

நன்றி

அட்லாண்டா கணேஷ்

பின் குறிப்பு:

மேலே சொன்ன மேட்டரை கடைசி நிமிடத்தில் ஒரு வேகத்தில் எழுதி பத்திரிகை பிரிண்ட்க்கு போவதற்கு ஒரு மணி நேரம் முன்புதான் அனுப்பினேன். மிகவும் அசதியாக இருந்ததால் இரண்டு நாட்கள் இதைப் பற்றி மறந்து போய் விட்டேன். பிறகு பப்ளிஷர் போன் செய்து பிரிண்டிங் எல்லாம் முடிந்து வந்து டிஸ்ட்ரிப்யூஷன் ஆகிறது. உங்கள் காப்பிகள் 2 நாளில் வந்துவிடும் என்றபோது ஏதோ "சுளீர்" என மனதில் பட்டது. அப்போதுதான் உரைத்தது இவ்வளவு விஷயங்களை கோவிந்தசாமி குடும்பம் பற்றி எழுதி இருக்கிறோமே இந்த இதழ் அவர்கள் கையில் கிடைத்தால் என் கதியும் என் குடும்பத்தின் கதியும் என்ன ஆகும் என்று.

"ஐய்யையோ ஐய்யையோ யாராவது எங்களை காப்பாத்துங்கள் எந்த ஊரில் வேலை கிடைத்தாலும் போகத் தயார் அட்லாண்டா தவிர. தயவு செய்து உதவுங்கள்"

ஒரே ஒரு சான்ஸ் கோவிந்தசாமி இந்த இதழில் எழுதாததால் இந்த இதழைப் பற்றி ரொம்ப கவலைப்பட மாட்டார் என நினைக்கிறேன். கடவுளே காப்பாத்து. என்னைக் கைவிட்டு விடாதே.
More

அர்த்தம்
வழி
புலித்தோல்
Share: 
© Copyright 2020 Tamilonline