மனிதருக்குச் சேவை செய்வதே மருத்துவர் தொழில்: டாக்டர் வி.சாந்தா
|
|
|
அமெரிக்காவின் புகழ் பெற்ற தேசீய ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்த ஆண்டு ப்ரதீக் கோலி, காவ்யா சிவசங்கர், நித்யா விஜயகுமார் ஆகியோர் இறுதி 15 பேருக்குள் வந்து இந்தியர்களைப் பெருமிதம் அடையச் செய்துள்ளனர். E.W.ஸ்கிரிப்ஸ் நிறுவனத்தினரால் நடத்தப்படும் இந்தப் போட்டி அமெரிக்கா முழுவதிலும் உள்ள 16 வயதுகுட்பட்ட, 8ம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவியரின் ஆங்கிலச் சொல் உச்சரிப்பு, பயன்பாடு போன்றவற்றில் திறனை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் போட்டிகள் நடத்துகின்றது. இந்தப் போட்டி மிகக் கடினமானது ஆகும். முதலில் பள்ளியளவிலும், பின்னர் மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும் தேர்வு பெறுபவர்கள் இறுதிச் சுற்றுகளில் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் போட்டியில் மோதுகின்றனர். இவர்களில் ப்ரதீக் கோலி 3 இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எட்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்ட காவ்யா சிவசங்கர், நித்யா விஜயகுமார் ஆகியோருடன் ஒரு சிறிய பேட்டி...
காவ்யா சிவசங்கர்
காவ்யா சிவசங்கருக்கு வயது 11. கான்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஓலாதே நகரின் ரீஜென்ஸி ப்ளேஸ் எலிமெண்டரி பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறார்.
தென்றல்: எப்பொழுது ஸ்பெல்லிங் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது?
காவ்யா: நான் கிண்டர்கார்டன் படிக்கும் பொழுதே எனக்குச் சொல்லித் தரப்பட்ட ·போனோகிராம் முறையைப் புரிந்து கொண்டு வார்த்தைகளை ஒழுங்காக உச்சரிக்க ஆரம்பித்துள்ளேன். அதனால் என் பெற்றோர்கள் என்னை உற்சாகத்துடன் நிறைய வார்த்தைகளை உச்சரிக்கப் பழக்க ஆரம்பித்தனர். இரண்டாம் வகுப்பில் நான் முதன் முறையாக இந்திய மாணவர்களுக்காக நடத்தப்படும் நார்த் சவுத் ·பவுண்டேஷன் நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டேன். 4ஆம் வகுப்பில் அவர்கள் நடத்திய தேசிய அளவிலான போட்டியிலும் 5ஆம் வகுப்பில் மாவட்ட அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். 6ஆம் வகுப்பில் தேசியப் போட்டிகளில் கலந்து கொண்டேன். தேசியப் போட்டியில் கலந்து கொண்ட மிகவும் இளவயதுப் போட்டியாளர் நான்.
தெ: உங்களைப் போட்டிகளுக்குத் தயார் செய்வது யார்?
கா: என் தந்தைதான் எனக்குப் பயிற்சி யாளர். தனியாக வேறு பயிற்சியாளர்கள் எவரையும் வைத்துக் கொள்ளவில்லை. என் பெற்றோர் கொடுத்த உற்சாகத்திலும் உதவியிலும் நான் இந்த இடத்திற்கு வர முடிந்தது. நார்த் சவுத் ·பவுண்டேஷன் நிர்வாகிகளும் உற்சாகமும் பயிற்சியும் வழங்கினார்கள். என் பெற்றோரும், நார்த் சவுத் ·பவுண்டேஷனுமே எனது முக்கியமான ஊக்குவிப்பாளர்கள். ஸ்பெல்பவுண்ட் போன்ற படங்களும் எனக்கு உற்சாகம் அளித்தன.
தெ: ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் இதற்காகச் செலவிடுவீர்கள்?
கா: நான் தினமும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஸ்பெல்லிங் சரியாகச் சொல்லிப் பழகுவேன். என் பெற்றோர் புதுப் புது வார்த்தைகளாகக் கேட்டுக் கொண்டேயிருப் பார்கள். விடாமல் தினமும் இதற்காக நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பயிற்சி செய்து வார்த்தைகளைச் சரியாக ஸ்பெல் செய்து வருகிறேன்.
தெ: எல்லா வார்த்தைகளையும் மனப்பாடம் செய்வீர்களா?
கா: எல்லா வார்த்தைகளையும் மனப்பாடம் செய்ய முடியாது. செய்வதும் இல்லை. பெரும்பாலான வார்த்தைகளை அந்த வார்த்தைகளின் மூலத்தை அறிந்து கொள்வதன் மூலம் அதன் அடிப்படைக் கட்டமைப்பைப் புரிந்து கொண்டு சரியாக உச்சரித்து விடுவேன். ஒரு சில கடினமான வார்த்தைகளை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டி மனனம் செய்வேன். பெரும்பாலும் வார்த்தைகளின் கட்டமைப்பைப் புரிந்து கொள்வதே முறையான பயிற்சி. மனப்பாடம் ஓரளவுக்குத் தேவையே.
தெ: ஒரு புதிய ஆங்கில வார்த்தையைப் படிக்கும் பொழுது, அதன் ஸ்பெல்லிங் மட்டும் படிப்பீர்களா? அதன் அர்த்ததையும் அறிந்து கொள்வீர்களா?
கா: ஒவ்வொரு வார்த்தையைப் படிக்கும் பொழுதும் அதன் வேர்ச்சொல், அதன் வேர் எந்த மொழியில் வந்தது (லத்தீன், கிரேக்கம்), அதன் பொருள் என்ன என்பது போன்ற அனைத்து விபரங்களையும் சேர்த்துப் படித்து விடுவேன், அப்போதுதான் சரியாக உச்சரிக்க சொல்ல முடியும். உதாரணமாக ஒரு வார்த்தை லத்தீன் மூலத்தில் இருந்து வந்தால் ஒரு விதமாகவும், கிரேக்க மூலத்தில் இருந்து வந்தால் வேறு விதமாகவும் ஸ்பெல் செய்யப் படுகிறது. ஆகவே அது பற்றிய அறிவு மிகவும் அவசியம்.
காவ்யாவின் தந்தை சிவசங்கர்: இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லின் மூலமும் ஒவ்வொரு மொழியில் இருந்து வந்திருக் கலாம். அதனால் அதன் வேர்ச்சொல் பயன்பாடு தெரிந்தால் உச்சரிப்பு எளிதாகும். தமிழில் இருந்து சுருட்டு (Cheroot) என்றொரு வார்த்தை ஆங்கிலத்தில் இடம் பற்றிருக்கிறது. இது போன்ற வார்த்தைகளைப் படிக்கும் பொழுது பல்வேறு சுவாரசியமான தகவல் களும் அதன் உண்மையான அர்த்தத்தின் ஆதாரமும் வெளிப்பட்டு வார்த்தைகளைக் கற்பதை மிக சுவாரசியமான செயலாக மாற்றுகிறது.
தெ: இந்தப் பயிற்சிக்காக ஏதேனும் மென்பொருள், விளையாட்டுகள், உத்திகள், புத்தகங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினீர்களா?
காவ்யா: வெப்ஸ்டர் அகராதியின் எலெக்ட்ரானிக் வெர்ஷனை முழுக்கப் படித்தேன். அது சி.டி.யாகக் கிடைக்கிறது. வேறு உபகரணங்கள் எதுவும் பயன் படுத்தவில்லை.
தெ: இந்தப் போட்டிக்குத் தயார் செய்யும் பொழுது ஏற்படும் அதிகமான மன அழுத்தம், கவலை, படபடப்பு ஆகிய வற்றை எப்படிச் சமாளித்தீர்கள்?
கா: ஆம். போட்டிக்குத் தயாராவது மனதளவில் மிகவும் கடுமையானதுதான். நான் மனம் பதறாமல் இருந்தேன். பரபரப் பான தருணங்களில் இழுத்து மூச்சு விட்டுக் கொள்வேன். ஓரளவுக்கு தியானம் செய்து படபடப்பைக் குறைத்துக் கொள்வேன்..
தெ: இறுதிப் போட்டியில் மேடையில் தோன்றிய மன அழுத்தத்தை எவ்வாறு எதிர் கொண்டீர்கள்?
கா: மேடையில் நின்றவுடன் எனது படபடப்பு அடங்கிவிடும்.
தெ: எந்த வார்த்தையைச் சரியாகச் சொல்ல முடியாமல் போட்டியில் இருந்து விலகினீர்கள்?
காவ்யா: Cilice என்ற வார்த்தை.
தெ: அது ஏற்கனவே பரிச்சயமான சொல் இல்லையா?
கா: பழகியதுதான், இருந்தும் அந்த நேரத்தில் தவறி விட்டது. இது போன்ற தருணங்களில்தான் மனனம் செய்வது உதவியாக இருக்கும்
தெ: இறுதிப் போட்டி அனுபவங்கள் பற்றி?
கா: முதல் பத்துக்குள் வந்த போட்டி யாளர்கள் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். லாரா புஷ் அவர்கள் கையெழுத்து இட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள். ஏராளமான நண்பர்களைப் பெற முடிந்தது. மிகவும் சுவாரசியமான நாட்கள் அவை.
தெ: இந்தப் போட்டியில் கலந்து கொண்டதால் நீங்கள் அடைந்த பயன் என்ன?
கா: நான் மருத்துவருக்குப் படிக்க விரும்புகிறேன். மருத்துவத்தில் ஏராளமான லத்தீன் சொற்கள் உள்ளன. அவற்றை அறிவது மிகுந்த பயனளிக்கும். இந்தப் போட்டிக்குத் தயார் செய்தது மூலம் நான் அந்தச் சொற்கள் அனைத்தையும் அதன் பயன்பாட்டுடன் அறிய முடிந்தது. இது மிகப் பெரிய பயன். நிறையப் புதுச் சொற்களை அறிந்து கொள்வதன் மூலம் எழுத்துத் திறனும் பேச்சுத் திறனும் அதிகரிக்கும். நமது படைப்புகள் செழுமை பெறும். நினைவுத் திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வளரும்.
தெ: உங்களுடைய பிற ஆர்வங்கள்?
கா: வயலின் கற்று வருகிறேன். ஸ்பெல் பவுண்ட் போன்ற படங்களை உற்சாகத்துக் காக அடிக்கடி பார்ப்பேன். பரத நாட்டியமும் கற்று வருகிறேன். நேரம் கிடைக்கும் பொழுது பைக்கிங், நீச்சல், ஐஸ் ஸ்கேட்டிங் போன்றவற்றில் ஈடுபடுவேன்.
காவ்யாவுக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றோம். |
|
நித்யா விஜயகுமார்
நித்யா விஜயகுமாருக்கு வயது 13. மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கேன்டன் நகரின் டெட்ராயிட் கன்ட்ரி மிடில் ஸ்கூலில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார்.
தென்றல்: எப்பொழுது ஸ்பெல்லிங் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது?
நித்யா: எட்டு ஒன்பது வயதில் இருந்து பெற்றோர்கள் என்னை உற்சாகத்துடன் நிறைய வார்த்தைகளை உச்சரிக்கச் சொல்லி பழக்க ஆரம்பித்தனர். மூன்றாம் வகுப்பில் நார்த் சவுத் ·பவுண்டேஷன் நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டேன். பள்ளியில் இதுபற்றி கேள்விப்பட்டு இதில் ஆர்வம் செலுத்தலானேன்.
தெ: உங்களைப் போட்டிகளுக்குத் தயார் செய்வது யார்?
நி: என் பெற்றோர்கள்தான். அவர்கள் கொடுத்த உற்சாகத்திலும் ஆதரவிலும் நான் இந்த இடத்துக்கு வர முடிந்தது. எனது தாயார் ஒரு மருத்துவர். அவர் அத்துறைச் சொற்களில் என்னைப் பயிற்றுவித்தார். பிற கடினமான வார்த்தைகளில் என் தந்தை பயிற்சி அளித்தார்
தெ: ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் இதற்காகச் செலவிடுவீர்கள்?
நி: போட்டிக்கு 3 மாதங்களுக்கு முன்பு கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன். தினமும் குறைந்தது மூன்று மணி நேரமும் வார இறுதிகளில் இன்னும் அதிக நேரமும் எடுத்துக்கொண்டு தயார் செய்தேன்.
தெ: எல்லா வார்த்தைகளையும் மனப்பாடம் செய்வீர்களா?
நி: எல்லா வார்த்தைகளையும் மனப்பாடம் செய்ய முடியாது. நேரம் குறைவாக இருந்ததால் கடினமான பல வார்த்தைகளை மனனம் செய்து கொண்டேன். பெரும்பாலான வார்த்தைகளின் மூலத்தை அறிந்து கொண்டு மூலம் அதன் அடிப்படைக் கட்டமைப்பைப் புரிந்து கொண்டு மூலம் சரியாக உச்சரித்து விடுவேன். சில கடினமான வார்த்தைகளை மட்டும் மனனம் செய்து வைத்துக் கொள்வேன். வார்த்தைகளின் பாட்டர்ன் முக்கியம்.
தெ: ஒரு புதிய ஆங்கில வார்த்தையை படிக்கும் பொழுது, அதன் ஸ்பெல்லிங் மட்டும் படிப்பீர்களா? அதன் அர்த்ததையும் அறிந்து கொள்வீர்களா?
நி: ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் வேர் எந்த மொழியிலிருந்து வந்தது (லத்தீன், கிரேக்கம்), அதன் பொருள் என்ன போன்ற அனைத்து விபரங்களையும் சேர்த்துப் படித்து விடுவேன். அதன் உச்சரிப்பை நிர்ணயிக்க இந்த அறிவு மிகவும் அவசியம். நான் நிறைய மருத்துவ வார்த்தைகளைப் படித்தேன். அது மிகவும் உதவியாக இருந்தது.
தெ: இந்தப் பயிற்சிக்காக ஏதேனும் மென்பொருள், விளையாட்டுகள், உத்திகள், புத்தகங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினீர்களா?
நி: வெப்ஸ்டர் அகராதியிலுள்ள ஏறத்தாழ 450,000 சொற்களையும் படித்தேன். அது போக 'கன்சாலிடேட்டட் வோர்ட் லிஸ்ட்' என்ற புத்தகத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் கற்றேன்.
தெ: இந்தப் போட்டிக்குத் தயார் செய்யும் பொழுது ஏற்படும் அதிகமான மன அழுத்தம், கவலை, படபடப்பு ஆகியவற்றை எப்படிச் சமாளித்தீர்கள்?
நி: சில சமயம் படபடப்பாக இருந்தாலும் பொதுவாக நான் பதட்டப்படாமல் இருந்தேன். ஓரளவுக்கு தியானமும் ஆழ்ந்து மூச்சு விடுவதும் உதவியாக இருந்தன.
தெ: எந்த வார்த்தையைச் சரியாகச் சொல்ல முடியாமல் போட்டியில் இருந்து விலகினீர்கள்?
ந: Pelorus என்பதை Peloris என்று சொல்லி விட்டேன்.
தெ: அது ஏற்கனவே பரிச்சயமான சொல் இல்லையா?
நி: ஏற்கனவே பழகியதுதான், அந்த நேரத்தில் தவறி விட்டது. மனனம் செய்வது உதவி இருக்கும்.
தெ: இறுதிப் போட்டியில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள்?
நித்யா: முதல் பத்துக்குள் வந்த போட்டியாளர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். லாரா புஷ் எங்களுடன் உரையாடினார். நிறைய நண்பர்களைப் பெற முடிந்தது. இது புது அனுபவமாக இருந்தது நிறையக் கற்றுக் கொண்டேன். நிச்சயமாக மறக்க முடியாத அனுபவமும் ஆகும்.
தெ: இந்தப் போட்டியில் கலந்து கொண்டதால் நீங்கள் அடைந்த பயன் என்ன?
நி: நான் மருத்துவம் படிக்க விரும்புகிறேன். அதற்கு இந்தச் சொற்களைப் பயின்றது உதவும். நினைவாற்றலும் சொல்லாற்றலும் செழுமைப்படும். SAT பரீட்சைகள் தயார் செய்யவும், வரலாறு, புவியியல், பூகோள, மருத்துவத் துறைகளில் பல விஷயங்களை எளிதில் அறிந்து கொள்ளவும் இந்தத் தயாரிப்பு மிக உதவியாக இருக்கும். பல்வேறு விளையாட்டுக்களுக்கும் இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
தெ: உங்களுடைய பிற ஆர்வங்கள்?
நி: நான் அமெரிக்கன் ஒகினவான் கராத்தே அகடமியில் ஜூனியர் ப்ளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். இஷின்ருயு கராத்தே, பரத நாட்டியம் கற்றிருக்கிறேன். விஞ்ஞானத்திலும் ஆங்கிலத்திலும் நிரம்ப ஆர்வமுண்டு.
நித்யாவுக்குத் தென்றலின் வாழ்த்துக்களைக் கூறி விடை பெற்றோம்.
ச.திருமலைராஜன் |
|
|
More
மனிதருக்குச் சேவை செய்வதே மருத்துவர் தொழில்: டாக்டர் வி.சாந்தா
|
|
|
|
|
|
|