Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
2006 - 2007 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை செயற்குழு
FETNA நியூயார்க்கில் தமிழர் திருவிழா 2006
- |ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeவடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) யும் நியூயார்க் தமிழ்ச் சங்கமும் ஒருங்கிணைந்து, ஜுன் 30, ஜுலை 1-3 ஆகிய நாட்களில் 'தமிழர் திருவிழா 2006' மாநாட்டை நியூயார்க் மாநகரில், உலகப்புகழ் பெற்ற 'மேன் ஹாட்டன்' சென்டரில் மிக விமரிசையாகவும், கோலாகலமாகவும் நடத்தியது.

ஜுன் 30 வெள்ளிக்கிழமை மாலை நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில், இந்திய மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாஸ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர் திருவிழா மாநாட்டுக்குப் பெரும் அளவில் நிதி நன்கொடை வழங்கிய தமிழன்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஜுலை 1ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது, தொடர்ந்து அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதங்களும் பாடப்பட்டன.

சிறப்பு விருந்தினர் நடிகை ராதிகா, நியூயார்க் தமிழ்ச்சங்கத் தலைவர் காஞ்சனா பூலா உள்ளிட்ட மகளிர் அணியினர் குத்துவிளக்கேற்றி விழாவுக்கு ஒளிகூட்டினர்.

நியூயார்க் முக்தம்பர் ·பைன் ஆர்ட்ஸ் குழுவினரின் 'ஓசையும் ஒளியும்' என்ற நாட்டிய நடன நிகழ்ச்சியுடன் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. அதைத் தொடர்ந்து 'தமிழர் திருவிழா 2006' மாநாட்டுச் சிறப்புமலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. மாநாட்டுத் தலைவர் நடராஜன் ரத்தினம் சிறப்பு மலரை வெளியிட, தொழிலதிபர் ஜெகதீசன், இராதாகிருஷ்ணன், FeTNA வின் முன்னாள் தலைவர் நியூஜெர்ஸி சிவராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கடந்த ஆண்டுகளில் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடுகளின் சிறப்பு மலர்களை விடவும், நியூயார்க் மாநாட்டுச் சிறப்பு மலர் மிக்க வேலைப்பாடுகளுடனும் பயனுள்ள பல கட்டுரைகளைத் தாங்கியும் சிறந்த மலராக அமைந்திருப்பதைப் பெருமிதத்துடன் கூறிய ரத்தினம், மலர் ஆசிரியர் டாக்டர் அருள் வீரப்பனை பாராட்டினார். நியூயார்க் நகரின் சிறப்புமிக்க சுதந்திரதேவி சிலை, உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடம், விளையாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குக் கட்டிடமான மாடிஸன் ஸ்கொயர் கார்டன் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய வற்றின் பின்னணியில், தமிழகத்திலிருந்து ஒரு மாட்டுவண்டியில் தமிழர்கள் மேன் ஹாட்டன் வீதிகளில் உலாவந்து மேன் ஹாட்டன் சென்டருக்கு வருவது போன்ற காட்சியமைப் பைபைக் கொண்டு அலமேலு கேசவன் வரைந்த முகப்பு அட்டைப் படமாகக் கொண்ட மாநாட்டு சிறப்பு மலர் வேலைப்பாடும் கட்டுரைகளும் அருமையாக அமைந்திருந்தன.

மலர் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, தமிழ் இணைய பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ 'இணையத்தில் தமிழ்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் பயன்பெறத்தக்க வகையில், குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு இணையம் வழியே தமிழ் கற்றுக் கொள்ள வசதியாக தொழில்நுட்ப வசதிகள் இணையத்தில் இருப்பதை விரிவாக எடுத்துக் கூறினார் மிகவும் பயனுள்ள உரை.

தொடர்ந்து தாளவாத்தியக் கச்சேரி, ஜப்பானிய நாட்டியக்காரி மசாக்கோ ஓனோவின் நடன நிகழ்ச்சிக்குப் பிறகு மதிய உணவுக்கான இடைவேளை.

இடைவேளைக்குப் பின்னர், பிற்பகல் நிகழ்ச்சிகள் வாஷிங்டன் தமிழ்ச்சங்கத்தின் வானவில் கலைக்குழு வழங்கிய 'தமிழ்படும் பாடு' என்ற நாடகம், தொடர்ந்து பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் பக்திப் பாடல்கள் நிகழ்ச்சி, நியூஜெர்ஸி சுமத்ரா ராம்ஜியின் நாடகம் ஆகியவை நடைபெற்றன.

மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான பட்டிமன்றம், சிறப்பு விருந்தினர் முனைவர் அறிவொளி நடுவராக 'திரைகடல் ஓடிவந்து, பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா? என்ற தலைப்பில் நடைபெற்றது. அமெரிக்க வாழ் தமிழர்கள் தலைப்பை ஒட்டிய தமது கருத்துக்களை சுவைபட, அவையோர் ரசிக்க சிறப்பாக வாதிட்டார்கள். நடுவர் அறிவொளி, 'பெற்றதே அதிகம்' என்று தீர்ப்பளித்தார்.

மாலை நிகழ்ச்சி, தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் வாழ்த்துச் செய்தியை டாக்டர் மனோன்மணி வாசிக்க விழா இனிதே துவங்கியது. தமிழகப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கியதற்காக முதல்வரை பாராட்டி, நன்றிகூற, அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பாக, நியூயார்க் சுதந்திர தேவி சிலையை, தலைவர் நடராஜன் ரத்தினம் நினைவுப் பரிசாக வழங்கினார். முதல்வரின் சார்பில் கவிப் பேரரசு வைரமுத்து பெற்றுக் கொண்டார். தொடர்ந்துமத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸ் துவக்கவிழா உரையாற்றினார். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்துக் கூறியும் அமெரிக்கத் தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டதில் பெருமகிழ்வு கொண்டதையும் பகிர்ந்து கொண்டார். பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சாமி அறிமுகப்படுத்த நடிகை ராதிகா தனது உரையில் தனது திரைப்படத் தொழில் அனுபவத்தையும், தொலைக்காட்சியில் தொடர்களை வழங்கிவரும் தமது ராடன் நிறுவன வளர்ச்சி குறித்தும் பேசினார்.

"பல்வேறு சூழ்நிலைகளுக்கிடையேயும், வாக்களித்தபடி, பேரார்வத்துடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் நியூயார்க் தமிழர் திருவிழா விற்கு வந்து சிறப்பித்திருக்கிறார்" என்ற பிரகாஷ் எம். சாமியின் அறிமுகத்திற்குப்பின், தலைமையுரை வழங்கிய திரைப்பட நடிகர் சரத்குமார், தமது கல்லூரி, பத்திரிகைத் தொழில், திரைப்பட நடிகராக, அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பன்முக அனுபவங்களை சபையோரிடம் பகிர்ந்து கொண்டார். இந்தியா வளர்ந்து வருகிறது - தமிழகம் மேலும் மேலும் முன்னேறிவருகிறது அமெரிக்கா தங்கள் பங்களிப்பை இந்தியா விற்கு - தமிழகத்திற்கு மேலும் பெரிய அளவில் வழங்க வேண்டும் என்று சிறப்பு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து நியூயார்க் டாக்டர் M.N. கிருஷ்ணன், நியூயார்க் தொழிலதிபர் ஜெகதீசன் பூலா ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாப் பேருரை நிகழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து, இந்த மாபெரும் அரங்கத்தில் கூடவா இலங்கைத் தமிழர்கள் இருட்டில் இருக்க வேண்டும்? என்று தனக்கே உரிய கம்பீரமான குரலில் உணர்ச்சி ததும்ப கூறிய போது கரவொலி விண்ணைப் பிளந்தது! அரங்கமே எழுந்து நின்று, நீண்ட கரவொலி எழுப்பி, இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்ற இனவுணர்வை, தமிழுணர்வை எதிரொலித்தது எல்லோரையும் நெகிழ வைத்தது! 'உலகத்தமிழர்களுக்கு முகம் தந்தவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்றால், முகவரி தந்தவர்கள் 'இலங்கைத் தமிழர்கள்' என்ற உயர்வு நவிற்சியற்ற தீர்க்கமான தம் கருத்தை வைரமுத்து கூறிய போது அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது!

அமெரிக்கத் தமிழர்களின் திறம் பற்றியும், போருக்கு இலக்கணம் வகுத்தவன் தமிழன் என்றும் ஈழத்தில் மறுவாழ்வு தழைக்க வேண்டும் என்றும் கூறி இலக்கியமும் நிகழ்காலமும் கலந்த தமது பேருரையை நிறைவு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற கிருஷ்ணகுமாரியின் இயல் இசை நாட்டிய நிகழ்ச்சியுடன் முதல்நாள் நிகழ்வுகள் முடிவடைந்தன.

இரண்டாம் நாள் மாநாட்டு நிகழ்ச்சி ஞாயிறன்று காலை, மதுரைக் கல்லூரி பேராசிரியர் கு. ஞானசம்பந்தனின் சொற்பொழிவுடன் தொடங்கியது. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை கலந்து ஞானசம்பந்தன் ஆற்றிய சொற்பொழிவில் அரங்கில் இருந்தோர் சிரிப்பு மழையில் நனைந்தனர்.

தொடர்ந்து நியூயார்க் இலங்கைத் தமிழ் சங்கத்தின் 'கலைஞனின் கனவு' என்ற நாட்டிய நாடகம் பேராசிரியர் சண்முக சதாசிவத்தின் 'தமிழிசைக்கச்சேரி', இலங்கைத் தமிழர்கள் போராட்டம் பற்றிய கேரென் பார்க்கர் (Karen Parker) ன் உணர்ச்சிகரமான உரை ஆகியவை இடம் பெற்றன.

பிற்பகல் நிகழ்ச்சியில் டெலாவர் தமிழ்ச் சங்கத்தின் திருமறைப் பாடல்கள் கச்சேரியும், தொடர்ந்து முனைவர் அறிவொளி அவர் களின் பேருரை நிகழ்ச்சியும் நடைபெற்றன. மாலை நிகழ்ச்சியில், நியூயார்க் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த அருள் வீரப்பனின் 'முடிந்தால் முத்தமிடு' என்ற அவரது இரண்டாவது கவிதை நூலை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட முதல் பிரதியை விழாக் குழுத்தலைவர் நடராஜன் ரத்தினமும், இரண்டாம் பிரதியை காஞ்சனா பூலாவும் தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை வனஜா பார்த்தசாரதி, முன்னாள் FeTNA தலைவர்கள் சாக்ரடீஸ் மற்றும் சிவராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். அருள் வீரப்பன் ஏற்புரை கவிதை பாடிய பிறகு சிறப்பு வாழ்த்துரை வழங்க வந்தார் வைரமுத்து. புதுக்கவிதைக்கு வித்திட்ட அமெரிக்க ஆங்கிலக் கவிஞர் வால்ட் விட்மேன் பிறந்த இந்த நியூயார்க் மண்ணில் இளங்கவிஞர் அருள்வீரப்பனின் புதுக்கவிதைத் தொகுப்பு வெளியிடுவது மிகவும் சிறப்பு என்றார் வைரமுத்து. பல்வேறு அலுவல்களுக்கிடையில் இந்நூலுக்குத் தமிழக முதல்வர் கலைஞர் ஓர் அதிகாலையில் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்ததை நினைவுகூர்ந்தார்.

பின்னர் கவிமாமணி இலந்தை இராம சாமியின் தலைமையில் நடைபெற்ற 'தமிழால் முடியும்' என்ற கவியரங்கத்தைத் துவக்கி வைத்த வைரமுத்து, கவிதைதான் ஒரு மொழியின் நாகரிகம் என்றார். ஒரு சிலைக்குக் கண்திறப்பு எவ்வளவு முக்கியமோ அதைப் போல ஒரு கவிதைக்குக் கண்திறப்பு. அதன் கடைசி வரி என்று அவருக்கே உரித்தான இலக்கிய பாணியில் உவமைக் கவிதை கூறி அவையினரை கவர்ந்தார். பல கவிஞர் பெருமக்கள் கவிதைபாடி கவியரங்கத் திற்கும், தமிழுக்கும் எழில் சேர்த்தனர்.

வடஅமெரிக்கத் தமிழ் இளைஞர் அமைப்பின் நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து 'நட்சத்திர இரவு' என்ற திரைப்பட நடன நிகழ்ச்சியில் தமிழர் திருவிழாவுக்கென, தமிழகத்திலிருந்து வருகை தந்த நடிகையர்கள் சுவாதி, விநோதினி, தேவிப்ரியா நடிகர்கள் மணிகண்டன், குட்டி ஆகியோரின் திரைப்பட பாடல்களுக்கான நடனங்கள் நடைபெற்றன. ஒற்றைக் காலில் மிகத் திறமையாக நடன மாடிய குட்டியின் நடனம் சபையோரை மகிழ்ச்சியில், வியப்பில், பிரமிப்பில் ஆழ்த்தியது. குட்டியின் நடனத்திற்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் அரங்கமே எழுந்து நின்று நீண்ட கரவொலி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிகர் சரத்குமாரிடம் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் சபையோரின் கேள்வி களுக்குப் பதிலளித்தார். மற்றும் சரத் குமாருடன் அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள் கலந்துரையாடல், மருத்துவம், வணிகம் தொடர்பான கருத்தரங்கங்கள் தனித்தனியே நடைபெற்றன. பின்னர் இந்த மாநாட்டிற்காக, கடந்த பல மாத காலமாக பல்வேறு வகையிலும் இரவு பகல் பாராது உழைத்த பேரவை மற்றும் தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டுத் தலைவர் நடராஜன் ரத்தினம் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். அரங்கமே எழுந்து நின்று நீண்ட கரவொலி எழுப்பி, அயராது உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி பாராட்டியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

பல்வேறு நிகழ்ச்சிகளின் நேரம் நீட்டலால் இரவு 9 மணிக்குத் தொடங்க வேண்டிய வாணி ஜெயராமின் இன்னிசை நிகழ்ச்சி 1மணி நேரம் தாமதமாக தொடங்கினாலும் ஹரீஸ் ராகவேந்திரா, மாதங்கி, மைக்கேல், அனில் ஆகியோரின் இன்னிசையில் தேனினும் இனிய தமிழ்ப்பாடல்களைக் கேட்டு சபையோர் மகிழ்ந்தனர். இன்னிசை மழையுடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

மூன்றாம் நாளான ஜுலை 3, திங்கட்கிழமை மாலையில் மாநாட்டுக்கு வருகைதந்த தமிழன்பர்கள் நியூயார்க் மேன் ஹட்டன் பகுதியைச் சுற்றுலாவர சிறப்பு சொகுசுக் கப்பல் ஒன்றை மாநாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்ததை அனைவரும் பாராட்டினர்.

மேன் ஹாட்டன் சென்டரில் ஏழாவது மாடியில் உணவு வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. அதே தளத்தில் மாநாட்டுச் சிறப்பு அங்காடிகள் மூலம் தமிழிசை ஒலிநாடாக்கள் மற்றும் பல பொருள்களின் விற்பனையும் நடைபெற்றது!

கோடைச் சூட்டின் உணவுக்காக வெளியே செல்லும் நிலையைத் தவிர்த்து, மேன் ஹாட்டன் சென்டரில் தரைத்தளத்தில் கண்ணுக்கினிய, காதுக்கினிய கலை நிகழ்ச்சிகளையும் ஏழாவது தளத்தில் வாயிற்கினிய உணவுவகைகளை பறிமாறி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும், இந்தியா விலிருந்தும் வந்த சிறப்பு விருந்தினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
Click Here Enlargeஉலகநாடுகள் பலவற்றிலிருந்தும் அன்றாடம் வருகைதரும் பல்வேறு மக்கள் நிறைந்த நியூயார்க் நகரில், குறிப்பாக உலகப்புகழ்பெற்ற எம்பயர்ஸ்டேட் கட்டிடம் மற்றும் மாடிஸன் ஸ்கொயர் கட்டிடங்கள் அருகே அவற்றுக்கு இணையாண - நவீன வசதிகள் கொண்ட நூற்றாண்டு பழமைமிக்க 'மேன் ஹாட்டன் சென்டரில் எந்தவித வணிக நோக்கமின்றி, மொழிவளர்ச்சிக்காக, ஒரு கலாசாரத்தின் வளர்ச்சிக்காக மாபெரும் பொருட்செலவில் நாடுதழுவிய தேசிய மாநாடு நடத்துவது என்பது உண்மையிலேயே 'இமாலயப் பணி' யாகும். அதிலும் குறிப்பாக, மாநாட்டு நிர்வாகிகள் அமெரிக்காவின் பல்வேறு நகர்களில் இருந்தபோதும் பலமாதங்கள் ஒருங்கிணைந்து திட்டங்கள் தீட்டி, இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினர்களை அழைத்தும், மாநாட்டுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான தமிழன்பர்களுக்கு இருப்பிட, உணவு வசதிகளை மாநாட்டுத் திடலுக்கு அருகிலேயே, பிரபலமான 'ஹோட்டல் நியூயார்க்கரில் ஏற்பாடு செய்வது, மாநாட்டின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அமைப்பாளர்களைத் தேர்வு செய்வது மற்றும் ஏராளமான தன்னார்வத் தொண்டர்களைச் சேர்ப்பது என்பதெல்லாம் நியூயார்க்கைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய சவாலான செயல்கள்.

பல்வேறு தடைகள், இடையூறுகளைத் தகர்த்து, தவிர்த்து உலகத்தின் முக்கிய, முன்னணி நகரான நியூயார்க்கின் மையப் பகுதியில் - மக்கள்திரள் நிறைந்த பகுதியில் - 'தமிழர் திருவிழா 2006' மாநாட்டை வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், நியூயார்க் தமிழ்ச்சங்கமும் இணைந்து சீரோடும் சிறப்போடும் பிரமிக்கத் தக்க வகையில் மிகவும் கம்பீரமாகவும் நடத்தியிருக் கிறார்கள். தமிழர்கள் ஒவ்வொருவரும் பாராட்ட வேண்டிய மகத்தான பணி.

இந்த விழாவை மேன் ஹாட்டனில் அதுவும் மேன் ஹாட்டன் சென்டரில் சிறப்பாக நடத்திட்ட விழாக்குழுவின் அசாத்திய துணிச்சலுக்கு உண்மையிலேயே ஒரு சபாஷ் போடலாம். அவர்களின் கரத்தையும் நெஞ்சுரத்தையும் வலுப்படுத்தும் வகையில் திரளாக ஒன்று கூடிய தமிழ் நெஞ்சங்களுக்கு இன்னொரு சுபாஷ் போடலாம். இந்த விழாவில் ஆங்காங்கே சிறுசிறு குறைகள் தென்பட்டாலும் பெரிய குறைகள் ஏதும் இல்லாமல் இருந்தது இந்த விழாவின் சிறப்பு.

இனிவரும் ·பெட்னா விழாக்களில் தமிழர்கள் அதிக அளவு கலந்து கொள்ளத் தூண்டும் வகையில் இந்த விழா அமைந்தது என்பது உறுதி.

சுருக்கமாக 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு' என்றெனப் பாடிய பாவேந்தன் பாரதி தாசனின் கவிதைகருவுக்கு அமெரிக்க மண்ணில், நியூயார்க் நகரில் செயல்வடிவம் தந்திருக்கின்றனர் FeTNA குழுவினர். வாழ்த்துக்கள்.

தொகுப்பு: சென்னிமலை சண்முகம், காவிரி வேந்தன்
படங்கள்: சோனா, மனோகர், ராம்ஸ்
மேலும் படங்களுக்கு
More

2006 - 2007 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை செயற்குழு
Share: 
© Copyright 2020 Tamilonline