Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
'ஈகையில் இன்பம்'
- கோம்ஸ் கணபதி|ஜூலை 2006|
Share:
Click Here Enlarge'ஈகையில் இன்பம்' - தமிழகத்தின் உயர்வு ஒன்றினையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் நாடு அறக்கட்டளை தன் 32வது நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு எடுத்துக் கொண்ட விழாப் பொருள்தான் 'ஈகையில் இன்பம்'. "அடேயப்பா, அறக்கட்டளைக்கு வயது முப்பத்திரண்டா? நேற்றுத்தான் பிறந்தது போலிருக்கிறது, எத்தனை வளர்ச்சி! "....உள்ளார்ந்த பூரிப்போடு வியக்கிறார்கள் அறக் கட்டளையைக் கூர்த்த மதியோடு உருவாக்கக் காரணமாயிருந்திட்ட உயர்ந்தோர் சிலர்.

இந்த முறை மிச்சிகன் தமிழ்ச் சங்கம், லேன்சிங் தமிழ்ச் சங்கம், ·ப்ளின்ட் தமிழ் மன்றம் இவையனைத்தும் அறக்கட்டளை யோடு கைகோர்த்துக் கொண்டு டெட்ராய்ட் பெரு நகர் - டியர்போர்னில் வனப்பு மிகு ·போர்ட் கலை அரங்கில் மெமோரியல் தினத்தை ஒட்டி மூன்று நாட்களுக்கு முத்தமிழை மொத்தமாய், முடிந்த மட்டும் தமிழகம் வரை எட்டும் வண்ணம் சற்றுச் சத்தமாய் வழங்கி மகிழ்ந்தனர். ஆனால் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் "ஈகையில் இன்பம்" என்னுமோர் தாரக மந்திரத்தை தமிழ் அமுது கலந்து ஊட்டியதோடு, விழாவுக்கு வந்திருந்தோர் அனைவர் நெஞ்சிலும் தருமத்தின் வலிமையை ஆழமாய் விதைத்தும் விட்டனர். சும்மாவா? நூற்றுக்கும் மேலான தொண்டு உள்ளம் கொண்டோர் எடுத்துக் கட்டிய கோபுர மாயிற்றே! இந்தத் தமிழ் விழாவைத் தன் தலைமேல் எடுத்துப் போட்டுக்கொண்டு கடந்த பல மாதங்களாய் மெய்வருத்தம் பாராது, கண் துஞ்சாது இத்தனைச் சிறப்பாக நடத்தித் தந்திட்ட டாக்டர் ஆதிநாராயண னுக்கு எடுத்த எடுப்பிலேயே அறக்கட்டளை தன் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிவிடுவது அவசியம். ஆதியின் நிழலாய் கீதா ப்ரதீப், சரவணன் சொக்கலிங்கம் - இந்த இரு இளவல்களும் பம்பரமாய்ச் சுழன்று வந்தனர் என்று சுருக்கமாய்ச் சொல்லிவிடலாம். ஆனால் கிட்டத்தட்ட மூன்று நாள் விழாவின் போது முகத்தைச் சுழிக்காமல் சிரித்த வண்ணமே வளைய வருவதென்பது... அதுக்கெல்லாம் ரொம்பப் பக்குவம் வேணும், சார்!

"ஈகையில் இன்பம்" - சொல்லுவதற்குச் சுவையான வார்த்தைகளாய் இருந்துவிட்டால் மட்டும் போதாது என்ற எண்ணம் அறக் கட்டளையினருக்கும் விழாக்குழுவினருக்கும் தோன்றியிருக்க வேண்டும் அதனால் விழாப்பொருளினைச் சிந்தையில் நிறுத்திச் செய்கையில் காட்டும் வண்ணமாய் "தாய் மண்ணுக்கு உதவுவோம், சேய் நலம் பேணுவோம்" என்ற மையக்கருத்தினையும் விழாவின்போது குன்றிலிட்ட விளக்காய் ஏற்றி வைத்திருந்தனர்.

மே 27, சனிக்கிழமை, புத்தம் புதுக் காலை, பொன்னிற வேளை... "முப்பதே ஒலிக்குள் முழு உலகும் அளந்திடும்" தமிழ்த் தாய் வாழ்த்துடன் உதித்திட, திரை இசைக் குயில்கள் சுசீலா, ஜமுனா ராணி குத்து விளக்கேற்றிட, விழா மலரைத் திரு.சாலமன் பாப்பையா அவர்கள் வெளியிட, திருமதி. ஷாரதா குமார் அவர்களின் துவக்க உரையோடு இனிதாய்ப் பிறந்தது.

பொதுவாக இந்த மாதிரி விழாவின் போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிகழ்ச்சி களைப் பட்டியலிட்டு வைத்துக் கொள்வதும் குறிப்பிட்ட நேரத்துக்குள் நிகழ்ச்சிகளை முடிக்க முடியாமல் நெருக்கடி நிலைக்குத் தள்ளப் படுவதுவும், அதனால் உணவு நேரத்தை உண்டு விடுவதுவும், இரவு நடுநிசிக்கு மேலும் நிகழ்ச்சிகள் இழுத்து கொண்டு போவதுவும் உண்டு. கடந்த ஓரிரு ஆண்டுகளாக இது ஒரு கட்டுப்பாட்டிற்கு வந்திருப்பது கண்கூடு. இந்த ஆண்டு அதை இன்னும் பக்குவப்படுத்தியிருந்தார்கள். என்னைப் போல ஐம்பதைத் தாண்டிய பலருக்கு இந்தப் பந்தி வேளை இருக்கிறதே... கிட்டத்தட்ட கிண்டி பொறியியற் கல்லூரி யிலோ, கோவை அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரியிலோ, மதுரை மருத்துவக் கல்லூரியிலோ இல்லை அண்ணாமலை பல்கலைக் கழகத்திலோ விடுதியில் உணவு நேரத்தில் சந்தித்து, உரையாடி, ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டு, வயிறு வலிக்கச் சிரித்து... 'அந்தப் பசுமை நிறைந்த நினைவுகளுக்குத்' தள்ளும் இந்த உணவு வேளை. இந்த முறை அத்தகைய வாய்ப்பினைத் தந்திருந்த விழாக்குழுவினர் - நம் நன்றிக்குரியோர்.

மகா நதி ஷோபனாவின் இன்னிசையோடு மதிய நிகழ்ச்சி மலர்ந்தது. கர்னாடக இசையென்றால் தியாகராஜரும் தீக்ஷிதரும் மட்டுமில்லாமல் மகாகவி பாரதி, பாரதிதாசன், ஊத்துக்காடு... என்று எடுத்துக் கொண்டு ஷோபனா அவர்கள் பாடிய பாடல்கள் அத்தனையும் தமிழ் மலர்க்கொத்து. வள்ளலாரின் "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி.." பாடல் ஷோபனாவின் குரல் வளத்தை வானம் வரை தொட்டுக் காட்டியது, வனத்துக்கு நம்மை இட்டுக் கூட்டியது. எத்தனை அழகான தமிழ் உச்சரிப்பு!

சென்ற ஆண்டு டல்லஸில் தமிழ் விழா நிகழ்ச்சியை வடிவாக (இது யாழ் தமிழ், ஐயா!) தொகுத்து வழங்கிய இலங்கை வானொலி புகழ் திரு. அப்துல் ஹமீத் அவர்களே இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சொல்ல வேண்டுமா? நேரத்தின் மீது ஒரு கண், நிகழ்ச்சிகளைச் சீராகச் செல்ல வைப்பதில் மற்றோர் கண்... இது திரு. அப்துல் ஹமீதுக்கு கை வந்த ஒரு கலை.
Click Here Enlargeவிழாக் காண வரும் தமிழ்க் கூட்டம் அத்தனையும் வயது வித்தியாசமின்றி ரசிக்கின்ற நிகழ்ச்சி பட்டி மன்றம். நடுவரோ 'கிராமப்புறங்களில் பழமை மாறாமல் இழையோடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பண்பாட்டினை முற்றும் உணர்ந்தவரும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிப் பழுத்த அனுபவம்' பெற்றவருமான திரு. சாலமன் பாப்பையா. இதுவல்லாது வாதிட புதுப் புயல் திருமதி பாரதி பாஸ்கர், கட்டற்ற காட்டாறாய்க் கரை உடைத்துத் தமிழ் சுமந்து வரும் திருமதி உமையாள் முத்து இருவரும் ஒரு அணியென்றால் எதிரணியில் திரு. சாலமன் பாப்பையாவின் வாரிசும் நம்மைச் சென்ற ஆண்டுகளில் சிரிப்புக் கடலில் ஆழ்த்திய திரு. ராஜா மற்றும் டென்னசி குக்வில் கல்லூரி பொறியியல் துறை இணைத் தலைவர் பேராசிரியர் தெய்வ நாயகம். ஒரே அமர்க்களம் போங்கள்!

தமிழகத்திலிருந்து வந்து டாக்டர் சொக்கலிங்கம் 'உள்ளமும், இதயமும்' என்ற தலைப்பில் வழங்கிய பேருரை மருத்துவக் கண்ணோடு மட்டுமல்லாது மனோதத்துவ பொருளும் நிறைந்த, ஓடி ஓடி உழைத்துக் கொண்டி ருக்கும் நம்மில் பலருக்குத் தேவையான ஒன்று.

இனி பொன் மாலைப் பொழுது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முந்திய இந்திய பாரம் பரியத்தை வானவில்லாய் வண்ணத்தில் குழைத்து, மந்த மாருதமாய் இசையில் தோய்த்து ஒஹையோ சின்சினாட்டி நகர் திரு. கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் குழுவினர் வழங்கிய 'சித்திரம்' நிகழ்ச்சியோடு புலர்ந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்களை மேடையில் எழுபத்தைந்து நிமிடங்களுக்கு மேலே ஆட்டுவித்து, பாட்டுவித்து நவ பாரதத்தைக் கூட்டுவித்துச் சித்திரம் பேசியது இந்த அற்புத நிகழ்ச்சி. வாழ்த்தி உரை செய்தார் திரு. சாலமன் பாப்பையா "இனம், மதம், மொழி கடந்தது மானிட வாழ்க்கை என்பதைத் தெளிவுறக் காட்டியதோடு, பாரதம் அமெரிக்கா என்ற இரு உலகங்களையும் இணைத்து அதற்குப் பாலமாய் 'இனி வருங்காலம் இளையோர் கையில்' என்ற கருத்தினையும் தீர்க்கமாய் உரைத்திட்ட இந்தச் சித்திரம் நிகழ்ச்சி வாழ்த்துக்குரியது". பின்னர், தொலைக் காட்சியில் மிகப் பிரபலமான திரு. அப்துல் ஹமீது அவர்களின் "பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சியோடு இரவு உறங்கப் போயிற்று.

ஞாயிறு காலை நிகழ்ச்சிகளை சிகாகோ குழுவினர் வழங்கிய குறுநாடகம், கவியரங்கம் நிறைத்திட்டன. பின்னர் பேசிய திருமதி பாஸ்கர் அவர்களின் உரை நம்மைச் சிந்திக்க வைத்ததென்றால் திரு. ராஜா அவர்களின் பேச்சு வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. இவர்கள் இருவர் உரையும் "இன்னும் கொஞ்சம் பேசமாட்டார்களா" என்று நாம் தவிக்குமளவுக்கு சிந்தைக்கும் சிரிப்புக்கும் விருந்து படைத்தன. பின்னர் ஜப்பானிலிருந்து மசாக்கோ ஓனோவின் ஒடிஸ்ஸி நடனம், ரோஜாக் கண்ணன் குழுவினரின் 'பாரத சமுதாயம் வாழ்கவே' நாட்டிய நாடகம், கபிலன் சகோதரிகளின் பரத நாட்டியம் இவையெல்லாம் கொஞ்ச நேரம் நம்மை பாரத மண்ணுக்குக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றது.

ஞாயிறு மாலை. ஒன்று தெரியுமோ? நமது குழந்தைகளில் பலர் இன்று மருத்துவம், பொறியியல் மற்றும் விளம்பரம் போன்ற எண்ணற்ற துறைகளில் தொழில் வல்லுநர்களாக வலுப்பெற்று வருவது நாமெல்லாம் எண்ணிப் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்கள் ஒன்று கூடித் தோற்றுவித்திருக்கும் 'தமிழ் அமெரிக்கத் தொழில் வல்லுநர் இயக்கத்தின்' தோற்றம், வளர்ச்சி, எதிர்காலம் இவற்றை ப்ரீதா பாலமோகன், ஸ்ரீதர் பழநிசாமி இருவரும் அரங்கில் பாங்கோடு எடுத்துரைத்திட்ட போது நிறைவாக இருந்தது மட்டுமல்ல, நம் இளைய தலை முறையின் வளர்ச்சியில் நெஞ்சை உயர்த்திக் கொள்ளும்படியும் இருந்தது.

2001ல் இதுபோலும் ஒரு விழாவினை டெட்ராய்ட் பெருநகர்த் தமிழ் நண்பர்கள் சிறப்பாக நடத்தித் தந்திருந்ததால் எனக்கு அவர்கள் மேல் ஒரு தனிப் பிரியமுண்டு. விழா நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, தொண்டுள்ளம் கொண்ட அன்பர்கள் உணவு வழங்கிய பாங்கு, முதல் நாளன்று நம்மை வரவேற்று வழி நடத்திய கனிவுடமை... அத்தனையும் "நம்மிரு காதருந்தும் கள்ளாம்" தமிழைப் போலவே திகட்டாமல் தித்தித்தது.

மாலை நிகழ்ச்சிகள் பி. சுசீலா, ஜமுனா ராணி, மகாநதி ஷோபனா, ஐங்கரன், கருணாஸ், கிரேஸ் ஆகியோர் வழங்கிய திரை இசை நிகழ்ச்சிகளோடு இனிதே நிறைவாயிற்று.

கோம்ஸ் கணபதி
Share: