தமிழ் இணையம் 2002 ஒரு நாள் போதுமா? கனடியத் தமிழரும், தகவல் தொழில் நுட்பமும் சங்க இலக்கியம் என்ற புதையல் அன்றும் இன்றும் இயக்குநர் விசு அடிமைகள் உலகத்தில்... அட்லாண்டாவில் கேட்டவை மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் கீதாபென்னெட் பக்கம்
|
|
|
நவராத்திரி பண்டிகையைப் பற்றி யோசித்துப் பார்க்கும் பொழுது எத்தனையோ வியப்பான விஷயங்கள் இருப்பதை உணரலாம். எல்லா சக்தியும் உடைய அம்பாள் அசுரனை அழிக்க 9 நாள் ஏன் போர் செய்ய வேண்டும்? ஒரு நொடி போதாதா? என்று நினைப்பதுண்டு. நம் ஒவ்வொருவர் மனதிலும் நல்ல எண்ணங்களுக்கும் துர்புத்திக்கும் நிரந்தர யுத்தம் தான். மனதை கட்டுப்படுத்த முடியவில்லையே என்று நாம் வருத்தப்படும் பொழுது ''அம்பாளுக்கே ஒன்பது தினங்கள் ஆன பொழுது, சாதாரண மனுஷனான நான் எம்மாத்திரம்?'' என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொள்ளலாமே!
கொலுவில் வைக்கப்படும் ப்ளாஸ்டிக் பூனை, காகிதக் கூழ் காந்தி, செட்டியார் என்று எல்லாவிதமான பொம்மைகளும் கடவுள் என்று சொல்லி பூஜிப்பார்கள். இந்து மதத்தின் மிக அழகான 'அத்வைத' தத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. கடவுள் எனபவர் பிள்ளையார், லிங்கம், அம்பாள் என்று சில ரூபங்களில் மட்டும் இல்லாமல், அரூபியாக மட்டும் இல்லாமல், கோவில், பூஜை அறை போன்ற சில இடங்களில் மட்டும் இல்லாமல், எங்கும் எல்லா வடிவிலும் இருப்பதை நாம் உணர நவராத்திரி உதவுகிறது.
பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக பொம்மைகள் பாதுகாக்கப்படுகின்றன. என் கொள்ளு பாட்டி காசி யாத்திரை சென்ற பொழுது வாங்கிய கல்யாண ஊர்வலசெட் பொம்மைகளும், அம்மாவின் தலை நவராத்திரிக்கு மாமா சீர்வரிசையில் கொடுத்த பிள்ளையாரும் பழைய நினைவுகளை தூண்டும். பொம்மைகளுக்கு பின்னால் இருக்கும் கதைகளை சொல்லும்பொழுது குடும்ப வரலாறு மறக்காமல் பாதுகாக்கப்படுகிறது.
கொலு பொம்மைகளை இறக்குவது, படி அமைப்பது என்று அப்பா அண்ணாவுக்கு வேலையும், பூஜை பிரசாதம் செய்வது என்று அம்மா, அக்காவிற்கு வேலையும், வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் வேலை பாட்டிக்கு என்று குடும்பத்தினர் அனைவரும் ஒரு அணியாய் ஒன்றுபட்டு வேலை செய்யும் நேரம் இதுதான்.
உடல் நலத்தைக் கெடுக்கும் எண்ணெய் பண்டங்களும், சக்கரை இனிப்புகளும் செய்யப்படும் (மன்னிக்க, வாங்கப்படும்) தீபாவளி போல் இல்லா மல், உடலுக்கு புரதச் சத்தைத் தரும் பருப்பு வகைகள் எளிமையாக தானியங்களின் சிறப்பை உணர்ந்து பத்து நாட்கள் பிரசாதமாக செய்யும் பொழுது, ஆண்டு முழுவதும் அவற்றை உணவில் சேர்க்க வேண்டும் என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். |
|
'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்' என்ற விதிக்கு விலக்கு அளிக்கப்படுவது சரஸ்வதி பூஜை அன்று. புத்தகங்களை வெறும் காகித ஏடுகளாக பார்க்காமல், சரஸ்வதி தேவியின் உருவமாக பாவித்து சந்தன, குங்குமம் இட்டு பூஜை செய்யப்படுகிறது. வருடம் முழுவதும் அலுத்துக் கொள்ளாமல் சலிப்பு இல்லாமல் உழலும் அ·றினை பொருட்களான இயந்திரங்களுக்கு நன்றி தெரிவிப்பது நவராத்திரி இறுதியில் வரும் ஆயுத பூஜை தினத்தில்தான். 'தச்சன் உளியும், தையல்காரர் ஊசியும், தொழிற்சாலை மின் இயந்திரங்களும், கணினியும் பூஜிக்கப்பட வேண்டி யவை' என்று நினைக்க எத்தனை உயரிய எண்ணம் வேண்டும்!
அதெல்லாம் சரிதான், அமெரிக்காவில் ஆவதைச் சொல் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. சென்ற மூன்று ஆண்டுகளாக எங்கள் வீட்டில் கொலு வைக்கிறோம். எந்த புது இடத்திற்கு சென்றாலும் ஞாபகார்த்தமாக பொம்மை வாங்குவது என்று வைத்துக் கொண்டதால் சிறுக சிறுக திருவண்ணா மலை அர்த்தநாரீஸ்வரர், யோசிமிட்டி கரடி என்று பொம்மை சேர்கிறது. ''இந்த பத்து நாட்கள் வேலைக்கு தாமதமாய் வந்து சீக்கிரம் கிளம்பி விடுவேன்'' என்று முன்கூட்டியே மேலதிகாரிகளிடம் சொல்லி, கொலுவிற்கு அழைத்து, சுண்டலும் கொடுத்து விடுவோம். குளித்து சுண்டலும் பாயசமும் செய்து, கோலமும் போட்டு விளக்கேற்ற எத்தனை நேரம் ஆகும்? கொலு பார்க்க வருபவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் ஒரு எளிமையான பரிசுப் பொருள் கொடுப்போம். சின்ன குழந்தைகளை வைத்துக் கொண்டும், சிறு வாடகை வீடுகளில் வசித்துக் கொண்டும் விமரிசையாக நவராத்திரி கொண்டாடும் எங்கள் நண்பர்கள் பலரை பார்க்கும் பொழுது ''மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'' என்பது உண்மை என்று தெரிகிறது.
இரண்டு நிமிட உணவும், ஒளி வேக தகவல் தொடர்பும் உள்ள இந்த காலத்தில், ஒரு நாள் பண்டிகையே கொண்டாட பலரும் அலுத்துக் கொள்கிறார்கள். பக்தி என்று பெரிய பூஜை அறை வைத்துக் கொள்வது மட்டும் இல்லாமல், கோவிலுக்கு செல்வதோடு மட்டும் நில்லாமல், அனைவரும் நவராத்திரி போன்ற பண்டிகைகளை கொண்டாடு வதால் எத்தனையோ ஆயிக்கணக்கான வருடங்களாக வந்த தமிழ் கலாசாரமும் பண்பாடும் நம் காலத்தோடு அழிந்தது என்றில்லாமல், அடுத்த தலைமுறையினரும் இவற்றை அனுபவிக்க வாய்ப்பு இருக்கும்.
மீரா காசிநாதன் |
|
|
More
தமிழ் இணையம் 2002 ஒரு நாள் போதுமா? கனடியத் தமிழரும், தகவல் தொழில் நுட்பமும் சங்க இலக்கியம் என்ற புதையல் அன்றும் இன்றும் இயக்குநர் விசு அடிமைகள் உலகத்தில்... அட்லாண்டாவில் கேட்டவை மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|