Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2002 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
பொது
பாரதியார் பாடிய மணக்குள விநாயகர்
பாரதியாரின் விருப்பம்
அட்லாண்டா பக்கம்
அட்லாண்டாவில் கேட்டவை
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
கீதாபென்னெட் பக்கம்
இங்கே கொஞ்சிராம் யார்?
- டாக்டர். பத்மா ராஜகோபால்|செப்டம்பர் 2002|
Share:
'ஏன் 'ஸர்நேம்' என்ற இடத்தில் ஒன்றும் எழுதாமல் விட்டு விட்டீர்கள்? என்று பாதிரி என் சிநேகிதியைப் பார்த்துக் கேட்டார். பொதுவாக வடஇந்தியாவில் 'ஸர்நேம்' மிகவும் முக்கியம். ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு 'ஸர்நேம்' என்று தனியாக ஒன்றும் கிடையாது. தன் தந்தையின் பெயரின் முதல் எழுத்தையோ, அல்லது தன் சொந்த ஊரின் பெயரின் முதல் எழுத்தையோ அல்லது இரண்டின் முதல் எழுத்தையோ அதாவது இன்ஷியல் எழுதுவதுதான் வழக்கம் என்று இழுத்தாள் சிநேகிதி.

சிநேகிதியின் பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக அப்ளிகேஷன் பார்ம் எழுதும்பொழுது நடந்தது இது.

குஜராத்தில் 'ஸர்நேம்' என்பது மிகவும் முக்கியம். அது எழுதாமல் விடக்கூடாது. உங்களுக்குத்தான் இருக்குமே 'ஐயர்', 'அய்யங்கார்', 'மேனன்' என்று. அதில் உங்களுடையது எதுவோ அதை ஸர்நேம் என்ற இடத்தில் எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு மற்ற வேலைகளை கவனிப்பதற்காக வெளியே சென்று விட்டார் பாதிரி. பாதிரி சொன்னவைகள் எல்லாம் ஜாதியைக் குறிக்கும் பெயர்கள் ஆயிற்றே. எழுதுவதா, வேண்டாமா என்று சிநேகிதி சிந்தனை யில் ஆழ்ந்தாள்.

குஜராத்தில் (பொதுவாக வடஇந்தியாவில்) எங்கு சென்றாலும் ரேஷன் கார்டு பதிவு செய்யவோ அல்லது சாதாரணமாக உங்கள் பெயர்களைக் கேட்கும் முன் முதலில் அவர்கள் கேட்பது உங்கள் ஸர்நேம் என்ன என்றுதான். இந்தக் கேள்வி தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு சிறிது குழப்பத்தையும் சங்கடத் தையும் உண்டு பண்ணுகிறது.

ஸர்நேம் என்றால் என்ன? அது ஒருவனுடைய பாரம்பர்யத்தைக் குறிப்பதுதானே! புராதன காலத் தில் ஒருவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது அவன் எந்த ரிஷியின் புத்திரன் அல்லது சீடன் எந்த வேதத்தைச் சேர்ந்தவன் எந்த சூத்திரத்தைக் கற்றுக் கொள்கிறான். அவன் தந்தையின் பெயர், பிறகு தன்னுடைய பெயர் என்று சொல்லி எவ்வளவு அழகாக அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். (அபிவாதயே) இந்த அபிவாதயே என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை இந்தக் காலத்தில் யாராவது பெரியவர்கள் நமஸ்கரிக்கும் போதுதான் செய்கிறார்கள். பிறகு நாளடைவில் அந்த ரிஷிகளின் பெயரே கோத்திரப் பெயர்களாகிவிட்டது. ஒருவிதத்தில் ஒருவனுடைய கோத்திரமும் அவனுடைய பாரம்பர்யத்தை தானே குறிக்கிறது. எனவே ஸர்நேம் என்ற இடத்தில் கோத்திரத்தின் பெயரை எழுதினால் என்ன என்று தோன்றவே சிநேகிதியைப் பார்த்து உங்களுடைய கோத்திரம் என்ன? என்று கேட்டேன்.

அவள் என்னை ஒருவிதமாகப் பார்த்தாள். பிறகு என்ன நான் இப்பொழுதுதான் என் பிள்ளையைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்போகிறேன். இதற்குள் அவனுக்கு கலியாணத்திற்கு என்ன அவசரம்? (பொதுவாக கலியாணம் செய்வதாக இருந்தால் தான் கோத்திரம் கேட்பார்கள்) இன்னும் எத்தனை யோ வருடங்கள் இருக்கிறது என்றாள்.

அது இருக்கட்டும். இந்த ஸர்நேம்கள் பலவித காரணங்களால் ஏற்பட்டு இருக்கின்றன. உதாரண மாக யாக, யக்ஞம், ஹோமம், விரதம் போன்ற வைதீக காரியங்களில் ஈடுபட்டு அவைகளை முறையாக அனுசரித்து வந்தவர்கள் தீஷிதர் என்று அழைக்கப் பட்டனர். இதுபோன்று வேதங்களை நன்கு கற்று தேர்ந்தவர்கள் முறையே, நான்கு வேதங்களை அறிந்தவர்கள் சதுர்வேதி. மூன்று வேதங்களை அறிந்தவர்கள் த்ரிவேதி. இரண்டு வேதங்களை அறிந்தவர்கள் த்விவேதி. ஒரு வேதம் படித்தவர்களை தவே என்று அழைக்கப்பட்டனர்.

சில 'ஸர் நேம்'கள் அவர்கள் செய்யும் தொழிலி ருந்து வந்தவைகள் அவைகள் லுஹார் (கருமான்) மாசி (மீன் பிடிப்பவர்கள்). குஜராத்தில் பவஸார், பட்லா காப்படியா போன்ற பெயர்கள் ஒரு காலத்தில் அவர்கள் முன்னோர்கள் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில், மற்றும் நூல் நூற்று வியாபாரம் செய்து வந்தவர்களாகவும் இருந்து இருக்கின்றனர். பலசரக்கு கடை வைத்திருப்பவர்கள் 'காந்தி' (வெள்ளி, பொன் போன்றவைகளை மதிப்பீடுபவர்கள்) 'பரீன்' தர்ஜீ (தையல்வேலை செய்பவர்கள். ஷராவ் (அடகு வியாபாரம் செய்பவர்கள்.)

முகமதியர் காலத்தில் இருந்து சில ஸர்நேம்கள் தோன்றின. அவை முன்ஷி (கணக்குப்பிள்ளை) இனம்தா ஹோரா போன்ற ஸர்நேம்கள் ஹிந்துக் களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

குஜராத்தில் சில ஸர்நேம்கள் ஜீவஜந்துக்கள் பசு, பக்ஷ¢ போன்றவைகளின் பெயர்களிலும் இருந்து இருக்கின்றன. அவைகள் போபட் லால் (கிளி) மண்கோட் (கட்டெறும்பு), ஹாதி (யானை) போன்றவைகள்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் எண்ணில் அடங்கா ஸர்நேம்கள் இருக்கின்றன. ஒருவருடைய ஸர்நேமிலிருந்தே அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிவிடமுடியும். உதாரணமாக கோகலே, சித்லே, குல்கர்னி என்றும் சுதாகர், போன்று கர் என்று முடியும் பெயர்கள் என்றால் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சில ஸர்நேம்கள். தசபுத்ரா, அஷ்டபுத்ரா, நவாங்குல் போன்ற பெயர்களும் காணப்படுகின்றன. (ஒருவேளை இந்தப் பெயர்கள் காரணப் பெயர்களாக இருக் கலாம்) 'படேல்' என்று சொன்னாலே அவர்கள் குஜராத்திக்காரர்கள் என்று சொல்லிவிடலாம்.

ஹிங்குரானி, ஹீர்வானி, குகலானி போன்றவைகள் சிந்திக்காரர்களுக்கும், சில பஞ்சாபிகாரர்களுக்கும் இருக்கிறது. இன்ஜினியர், டாக்டர் போன்ற ஆங்கில தொழிற்பெயர்கள் பார்ஸிகாரர்களுக்கு இருக்கிறது.

முகர்ஜி, பேனர்ஜி, சட்டர்ஜி போன்றவைகள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். சுராஜ் மல் பொதுவான மல் என்று முடியும் பெயர்கள் ராஜஸ் தானைச் சார்ந்தவை. மஹா பாத்ரா, மொஹன்தே, தாஸ் போன்றவை ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந் தவை. மேனன், நாயர் என்ற ஸர்நேம்கள் கேரளாவைச் சேர்ந்தவை. கெளர், சிங் என்பவை சீக்கியர்கள் என்று சொல்லிவிடலாம். இதைப் போன்று எத்தனையோ ஸர்நேம்கள் எழுதிக் கொண்டே போகலாம்.

இந்த ஸர்நேமை எழுதுவதில் கூட ஒருமுறை இருக்கிறது. முதலில் ஒருவர் தன் பெயரை முதலிலும், தன் தகப்பனாரின் பெயரை இரண்டாவதாகவும், தன் ஸர்நேமை கடைசியிலும் எழுத வேண்டும். இப்படி எழுத தவறினால் ஆபத்துதான். இது சம்பந்தமாக ஒரு நண்பர் சொன்ன சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. வட இந்தியாவில் ரொம்ப அறிமுகம் ஆகாதவர்களையும், மற்றவர்களையும் மரியாதை யோடு அழைக்கும்போதும் ஸர்நேம் சொல்லித்தான் அழைக்கிறார்கள்.

ஒரு சமயம் ஒரு இண்டர்வியூவுக்குச் செல்ல நேர்ந்தது. இண்டர்வ்யூ பாரத்தில் ஸர்நேம் எழுதும் இடத்தில் காஞ்சிபுரம் (conjevara) இங்கிலீஸ் காரர்கள் இருக்கும் பொழுது இருந்த spelling இருந்தது. இன்டர்வியூவிற்கு நிறைய பேர்கள் வந்து இருந்தனர். ஒவ்வொரு பெயராக ஆபீஸ் ப்யூன் வெளியில் வந்து அழைப்பான். பிறகு வந்தவர்கள் தங்கள் பெயர் அழைக்கப்பட்டவுடன் இன்டர்வியூ விற்காக உள்ளே செல்வார்கள். ஓரிரண்டு தடவை ப்யூன் வெளியில் வந்து 'கொஞ்சிராம்' கொஞ்சிராம் என்று கத்திவிட்டுப் போவான். எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் எத்தனையோ ராமர்களின் பெயர் களைக் கேட்டு இருக்கிறேன். கோதண்டராமன், பட்டாபிராமன், ஜானகிராமன் என்று. ஆனால் இந்த மாதிரி கொஞ்சி ராம் என்ற பெயரைக் கேள்விப் பட்டதே இல்லை. ஆச்சர்யத்தில் மூழ்கி இருந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு என்னைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சென்று விட்டனர். என் பெயரை ஏன் கூப்பிடவில்லை என்று ஆச்சர்யத்தோடு தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்று விசாரித்ததில் அந்த 'கொஞ்சி ராம்' நான்தான். ஊர்ப்பெயரை ஸர்நேம் என்ற இடத்தில் எழுதியிருந்ததின் பலன் conjevaram (காஞ்சிபுரம்) கொஞ்சிராம் ஆகிவிட்டது.

தமிழ்நாட்டில் தங்களுடைய சொந்த ஊரின் பெயரைத்தான் தன் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. தங்களுடைய நற்செயலால் அவர்களுடைய ஊரின் பெயர்கள் பிரபலமாக்கப் பட்டிருக்கின்றன. பெரிய, பெரிய சங்கீத வித்வான் களை நாம் அவர்களுக்கு என்று ஒரு பெயர் இருந் தாலும், அவர்களை ஊரின் பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறோம். அரியக்குடி, செம்மங்குடி, லால்குடி என்று ஊரின் பெயரைக் கொண்டே அழைக்கிறோம்.

ஆனால் வேறொரு மாநிலத்திற்குச் சென்று ஸர்நேமில் தான் கூப்பிட வேண்டும் என்று இருந்தால் தமிழர் ஒருவரின் பெயருக்குப் பதில் வந்தவாசி, மானாமதுரை என்று கூப்பிட நேர்ந்தால் அது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆகையினால் தமிழர்கள் வெளி ஊருக்குப் போய் வசிக்க நேர்ந்தால் முதலிலேயே ஒரு அழகான ஸர்நேம் தேடி வைத்துக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.

டாக்டர். பத்மா ராஜகோபால்
More

பாரதியார் பாடிய மணக்குள விநாயகர்
பாரதியாரின் விருப்பம்
அட்லாண்டா பக்கம்
அட்லாண்டாவில் கேட்டவை
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
கீதாபென்னெட் பக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline