தமிழ் இணையம் 2002 கனடியத் தமிழரும், தகவல் தொழில் நுட்பமும் சங்க இலக்கியம் என்ற புதையல் ஹையா! கொலு! அன்றும் இன்றும் இயக்குநர் விசு அடிமைகள் உலகத்தில்... அட்லாண்டாவில் கேட்டவை மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் கீதாபென்னெட் பக்கம்
|
|
|
சினிமா என்பது மேல் நாட்டிலிருந்து வந்த கலாச்சாரம் - மற்ற எத்தனையோ நவீன யுக மாற்றங்களைப்போல. ஆனால் நாம் மேல் நாட்டு சினிமாவை அப்படியே காப்பி அடிக்கவில்லை. உதாரணத்திற்கு திரைப்பட பாடல்களைச் சொல் லலாம். மற்ற நாட்டு சினிமாக்களில் பாடல்களுக்கு அனேகமாக இடமிருக்காது. நம் நாட்டிலோ சினிமா ரிலீஸாவதற்கு முன்னமேயே பாடல் காஸட்டுகள் வந்துவிடுகின்றன. அதை வாங்குவதற்குத்தான் எத்தனை அடிதடி கலாட்டா என்பதை சமீபத்தில் கண்கூடாக பார்த்தோம் அல்லவா? இந்தியாவில் பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் ஏராளமாக வெளிவருகின்றன. அந்த காலத்து சகுந்தலை, மீரா போன்ற படங்கள் முதல் சமீபத்திய அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண் டேன் வரை எல்லாவற்றிலும் இசைக்கு அளிக்கும் மரியாதை நம்மை மகிழ்விக்கும்விதமாக அமைந் திருக்கிறது. பாட்டே இல்லாத படங்கள் ஒன்றோ இரண்டோ தான் இதுவரை வெளிவந்திருக்கிறன.
இசை நம் வாழ்வில் மிகப்பெரிய இடத்தை பிடித்துக்கொண்டிருப்பதை நம்மில் பலர் அறிவதில்லை. வள்ளுவர் கூறியது போல் சின்னக் குழந்தையின் மழலைச்சொல்லிலும் இசையைப் பார்ப்பவர்கள் நாம். ஆனால் யதார்த்த வாழ்க்கையில் இசையின் மீது நமக்குள்ள இயற்கையான ஈடுபாட்டை மேலும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று எத்தனை பேர் நினைக்கிறோம்? இதற்கான பிரயாசை ஒன்றும் அதிகம் இல்லை. காஸட்டை போட்டுவிட்டு சற்று நேரம் கவனமாகக் கேட்டாலே போதும். அந்த பாடல் வரிகள் மற்றும் இசை நம் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.
கர்னாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையில் ராகங்களுக்கு முக்கிய இடமுண்டு. முக்கால்வாசி சினிமா பாடல்களுக்கு ராகங்களின் அடிப்படை யில்தான் இசையமைக்கிறார்கள். கண்ணதாசன் போன்ற மேதைகள் இயற்றிய பாடல்களின் நயம் பொருள் இவற்றை ரசித்தபடியே அவற்றின் ராகங்களையும் அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும். சொல்லுவது எளிது. எப்படி செயல் படுத்துவது என்றுதானே கேட்கிறீர்கள்? ஒரு பாடலைக் கேட்கும் போது இதே மாதிரி ராகத்தில் வேறு பாடலைக் கேட்டிருக்கிறோமா என்று யோசியுங்கள். இங்கே சில திரைப்பட பாடல்களை அவற்றின் ராகங்களுடன் இணைத்து நோக்கலாம்.
முதலில் 'இன்று போய் நாளை வாராய் என...' என்ற சம்பூர்ண ராமாயணப் பாடலை மனதிற்குள் சற்று அசை போட்டு பாருங்கள். சிஎஸ் ஜெயராமன் பாடியது. தோல்வி அடைந்துவரும் ராவணன் ரொம்பவும் நொந்து போன மனநிலையில் பாடுவதைக் கேட்கும் போது நாமும் நெகிழ்ந்து விடுகிறோம் அல்லவா? சரி. இன்னொரு பாடலையும் பார்க்கலாம். இதற்கு நேர் எதிரிடையான ரொமான்டிக் சூழ்நிலையில் பாடப்படுகிறது. 'நாளாம் நாளாம் திருநாளாம்...' காதலிக்க நேரமில்லை படத்தில் வருகிறது. இதையும் சற்று வாய் விட்டு பாடி பாருங்கள். 'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...' என்ற பாரதியார் பாடல் (வறுமையின் நிறம் சிவப்பு) இதையும் நினைவு கூறுங்கள். ஆம். இவை எல்லாமே ஒரே ராகத்தில் மெட்டமைக்கப் பட்டவைதான். திலங்க் என்ற ராகம்தான் அது. இதை நன்றாக மனதிற்குள் வாங்கிக் கொண்டால் இனி திலங் ராகப் பாடல் எதாக இருந்தாலும் எளிதில் அடையாளம் கொள்ள முடியும்.
ஸஹானா என்ற ராகமும் எளிதில் மனதில் நிற்க கூடியதேயாகும். பழைய எஸ். பாலசந்தர் படமான பொம்மையில் 'எங்கோ பிறந்தவனாம் எங்கோ வளர்ந்தவனாம் எப்படியோ என் மனதில்....' என்ற பாடலும், 'பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர...' என்ற பாடலும் ஒரே மாதிரியாக இருப்பதை கவனியுங்கள். அவ்வை சண்முகியில் கமலஹாசன் மாமி வேஷம் போட்டுக்கொண்டு 'ருக்கு ருக்கு..' என்ற பாடலையும் இதே ஸஹானா ராகத்தில் அமைந்த பாடலுக் குத்தான் உதட்டசைக்கிறார். நீங்கள் TV சீரியல் அதிகம் பார்ப்பவரா? ரயில் சினேகம் என்ற கே. பாலசந்தர் சீரியலில் 'இந்த வீணைக்குத் தெரியாது..' என்ற டைடில் (title) பாடலும் ஸஹானா தான்.
பொதுவாக ராகங்களைத் தெரிந்துகொண்டு பாடல்களை அனுபவித்து ரசிக்க விரும்புவோர் எளிதில் கற்றுகொள்ள வென்றே சில பாடல்கள் உண்டு. திருவிளையாடல் படத்தில் பாலமுரளி கிருஷ்ணா குரலில் 'ஒரு நாள் போதுமா...' பாடல் வரிகளிலேயே ராகங்கள் பெயரும் வருவதை கவனிக்கலாம். தோடி, தர்பார், மோஹனம், கானடா போன்ற ராகங்களை நன்கு கிரஹித்துக் கொள்ள இப்பாடல் உதவும். டி.எம்.எஸ் பாடிய 'கற்பக வள்ளி உன் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்ற பாடல் ஆனந்தபைரவியில் தொடங்கி, நாயகி, கல்யாணி, பாகேஸ்ரி வாகேஸ்வரி, ரஞ்சனி போன்ற ராகங்களை அறிமுகப்படுத்தும். சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணன் சில ராகங்களின் ஸ்வரங்களை பாடியும் வீணையில் மீட்டுவதையும் இப்பொழுது கேட்டாலும் நம் கண்களில் நீர் பெருகும்.
மேலே சொன்ன தர்பார் ராகத்தை கொஞ்சம் மனதில் கொண்டால் சிந்து பைரவி பட பாடல் 'யோசனா கமல லோசனா' என்ற பாடலை நன்கு ரசிக்க முடியும். அதே போல கானடா ராகமும் ஜனரஞ்சகமானதுதான். சமீபத்தில் வெளிவந்த 'அலை பாயுதே' பட தலைப்பே ரம்யமாக உள்ளது அல்லவா? அதே வரிகளை கொண்ட பாடலையும் கானடா ராகத்தில் இம்மியும் பிசகாமல் கொடுத் திருக்கிறார்கள். 'முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே..'(உத்தம புத்திரன்), ஆஹா! என்ன அற்புதமான கானடா ராக பாடல். இதே ராகத்தில் இன்னும் ஒரு பாடல், 'பூமாலை வாங்கி வந்தான்...'(சிந்துபைரவி). இந்த இரண்டு ராகங்களையும் கலந்து தர்பாரி கானடா என்று ஓர் ராகம் உண்டு. கமலஹாஸன் குழந்தையாக இருக்கும் போது நடித்த படம் நினைவிருக்கிறதா? காத்திருந்த கண்கள். அதில் 'வளர்ந்த கதை மறந்து விட்டாய் கேளடா கண்ணா..' என்ற பாடலும், அவர் சில வருடங்களுக்கு முன் நடித்த 'சதி லீலாவதி' படத்தில் வரும் 'மாருகோ, மாருகோ' என்ற பாடலும் ஊன்றி கவனித்தால் ஒரே மாதிரியான ராகத்தில் அமைந் திருப்பது புரியும். அது தர்பாரி கானடா ராகமாகும். |
|
ராகங்களிலேயே எளிதில் எல்லோரையும் கவரக் கூடியது கல்யாணி ராகமாகும். அந்தக்காலத்தில் பேடண்ட் சட்டங்கள் கிடையாது. இருந்திருந்தால் இந்த ராகத்தை கண்டுபிடித்தவர் அமெரிக்க ராக்·பெல்லரை விட பணக்காரராக ஆகியிருப்பார். அந்த அளவிற்கு இந்த ராகம் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் கையாளப்பட்டிருக்கிறது. சில பாடல்களை மட்டும் பார்ப்போம். 'சிந்தனை செய் மனமே...'(அம்பிகாபதி), 'ஜனனீ ஜனனீ...'(தாய் மூகாம்பிகை), 'தொரகுணா...'(சங்கராபரணம்), 'அமுதும் தேனும் எதற்கு...'(தை பிறந்தால் வழி பிறக்கும்), 'கேட்டதும் கொடுப்பவனே...'(தெய்வ மகன்), 'துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே...'(தேவதாஸ்), முதலியன. எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காத பாடல்கள் ஆயிற்றே.
ஒரு சிலருக்கு ராகங்களை கண்டுபிடிப்பது சில சமயம் கஷ்டமாக இருப்பதற்கு ஒரு காரணம், தாளங்கள் மாறுபடுவதனால் இருக்கும். ஒரே ராகத்தில் அமையப் பெற்ற இரு பாடல்கள் ஆதி தாளத்திலேயே இருந்தாலும், ஒரு பாடல் திஸ்ரத்திலும் மற்றொன்று சதுரஸ்ரத்திலும் அமையப் பட்டால் சிறிது குழப்பம் ஏற்படுவது இயல்பு. மேலும் சமீப காலமாக வெளிவரும் பாடல்களில் ராகங்களின் சாயல் எங்காவது ஓரிரு இடங்களில் மட்டுமே தலை காட்டும். ஆகவே ஒரே பாடலை வெவ்வேறு ராகங்களைச் சொல்லி வாதிடுவோரும் உண்டு. உதாரணத்திற்கு ஜீன்ஸ் படத்தில் வரும் 'கண்ணோடு காண்பதெல்லாம்...' என்ற பாடலை ஆரபி, சுத்த தன்யாசி மற்றும் ஆபேரி என மூன்று ராகங்கள் சொந்தம் கொண்டாடும். நித்யஸ்ரீ பாடியது. சங்கீதத்தில் ரொம்பவும் பாண்டித்தியம் உள்ளவர்கள் மட்டுமே எந்த இடத்தில் எந்த ராகம் கையாளப் பட்டிருக்கிறது என்பதை அறிவர்.
'இஞ்சி இடுப்பழகி' என்ற பாடல் வரிகளில் அர்த்தமிருக்கிறதோ இல்லையோ அதன் ராகம் என்ன வென்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங் களேன். 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்...'(பாலும் பழமும்), 'ஒன்றானவன் உருவில் இரண்டானவன்...'(திருவிளையாடல்), 'நான் ஒரு சிந்து...'(சிந்து பைரவி) எல்லாம் இதே ராகம் தான். சிந்து பைரவி ராகம் தான் அது. இது சாமானியர்கள் ராகம். இதே போல் பாம்பாட்டிகள் (ஏன், அம்ரீஷ் பூரி போன்ற 'நாகின் சாமியார் களும்')மகுடி வாசிக்கிறார்களே' ஆடு பாம்பே நெளிந்தாடு பாம்பே' என்ற பாடல், அது புன்னாகராவளியில் அமைந்திருக்கிறது. 'நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே...' (திருவருட்செல்வர்), 'மாலை மயங்குகிற நேரம்...' பழைய படம் ஒன்றில் ராதா ஜெயலட்சுமி பாடிய பாடல், இவை இதே ராகத்தில் அமையப் பெற்றிருக்கின்றன. மிக எளிய ராகங்கள்.
இப்படி திரைப்பட பாடல்களையும் கர்னாடக அல்லது ஹிந்துஸ்தானி கச்சேரிகளையும் ரசிக்க கற்றுக் கொள்வோம். கவலையை மறந்து ரத்த அழுத்தம் நார்மலுக்கு வந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வோம் இன்னும் சில வாரங்களில் சென்னையில் தொடங்கும் சங்கீத கச்சேரிகளை கேட்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அல்லது திரைப்பட பாடல்களை கேட்டாலும் சற்று ஆழ்ந்து சிந்தித்து அவற்றின் ராகங்களை தெரிந்துகொண்டு ரசிக்க கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். திருமணங்களில் ரிஸப்ஷன் போது நடக்கும் சங்கீதக் கச்சேரிகளை அல்லது மெல்லிசை நிகழ்சிகளை சற்று நேரமாவது ரசிக்க முயல்வோம். சங்கிதம் என்பது ஏதோ ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கேட்டு, மறந்து விடுகிற சமாசாரமில்லை. காலம் பூராவும் கேட்க வேண்டும். நம் ரத்தத்தில் ஊற வேண்டும்.
என். எஸ். நடராஜன் |
|
|
More
தமிழ் இணையம் 2002 கனடியத் தமிழரும், தகவல் தொழில் நுட்பமும் சங்க இலக்கியம் என்ற புதையல் ஹையா! கொலு! அன்றும் இன்றும் இயக்குநர் விசு அடிமைகள் உலகத்தில்... அட்லாண்டாவில் கேட்டவை மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|