|
|
தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் 'குழந்தை இலக்கியம்' என தனியே வகைப்படுத்தி நோக்கு மளவிற்கு வளமான இலக்கியமாக குழந்தை இலக்கியம் வளர்ந்துள்ளது. நவீன இலக்கியப் பிரக்ஞையும் சமூக உணர்வும் கவிதையின் பாடு பொருளிலும் அதன் வெளிப்பாட்டு மொழியிலும் புதிது புதிதான பாடல்கள் உருவாவதற்கு சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தது.
எளிய சொற்களில் இனிய பொருள்களையும் உண்மைகளையும் நீதியையும், அறத்தையும், மொழிபற்றையும், நாட்டுப்பற்றையும் இசையோடு லயித்து இனிமையுடன் பாடக்கூடிய பாடல்களை இயற்றிய பெருமை பாரதியாருக்கு உண்டு. இவ்வாறு பாரதியார் தொடங்கிவிட்ட இந்தப் பாரம்பரியம், பாரதிதாசன், கவிமணி அழ. வள்ளியப்பா எனத் தொடர்ந்தது.
பாரதி, பாரதிதாசன், கவிமணி இந்த வரிசையில் அழ. வள்ளியப்பா (1922-1989) தனித்துவம் மிக்க கவிஞர். ஏனெனில் அழ வள்ளியப்பா குழந்தை கட்கென்றே பாடல்களை எழுதினார். இந்த எழுது முறையால் குழந்தை உலகத்துள்ளே சதாகாலமும் சஞ்சாரம் செய்து குழந்தையாகவே வாழ்ந்து வந்தவர். இந்த வாழ்வு குழந்தைகளின் மனவுலகு சார்ந்த அவர்களது ஆளுமைத்திறனுக்கு மொழிப் பயிற்சிக்குரிய கவிதைகளை ஆக்க முடிந்தது.
கவிஞர் வள்ளியப்பா தம் பாடல்கள் அனைத்தையும் வளரும் குழந்தைகளின் மலரும் உள்ளங்களுக்கே காணிக்கையாக்கியுள்ளார். "நீங்கள் பெரியவர் களுக்காக ஏன் எழுதவில்லை?" என்று கேட்டபோது, அவர்களுக்குப் பாடுவதற்காகத்தான் ஏராளமான பெருங்கவிஞர்கள் இருக்கிறார்கள். நான் எதற்காகப் பாட வேண்டும்? என்று வள்ளியப்பா பதில் கூறுவார்.
இவ்வாறு குழந்தைகளுக்காக மட்டுமே பாடிய ஒரு கவிஞரை தமிழகம் இதுவரை கண்டதில்லை. இதனலேயே குழந்தைப் பாடல்கள் என்று வரும் போது வள்ளியப்பா தனிச்சிறப்புக்குரியவராகிறார். குழந்தைகளுக்கென்றே பாடல் எழுதும் கவிஞர் களின் முன்னோடியாகின்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரம் என்ற ஊரில் 1922 நவம்பர் 7ம் தேதி வள்ளியப்பா பிறந்தார். தந்தை அழகப்ப செட்டியார். தாய் உமையாள் ஆச்சி. கவிஞரின் பள்ளிப்படிப்பு இராயவரம் காந்தி பாடசாலையிலும் இராமச்சந்திர புரம் பூமிசுவரசாமி உயர்நிலைப்பள்ளியிலும் நிறைவு பெற்றது.
இயல்பிலேயே கற்பனையும், கவிதை புனையும் ஆற்றலும் வாய்க்கப் பெற்றவரான வள்ளியப்பாவிற்கு பள்ளிச்சூழல் பாரதியார் கவிமணி ஆகியோரின் பாடல்களுடன் பரிச்சயம் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
வள்ளியப்பா தொடர்ந்து தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரிடம் தாமே விரும்பித் தமிழ் பயின்று தேர்ச்சி பெறத் தொடங்கினார். தமது 13ம் வயதிலேயே இலக்கியப் பணி ஆற்றத் தொடங்கினார். கவிஞ ரிடம் குழந்தைப் பாடல்கள் எழுதும்படி உள்ளுணர்வு தூண்டியது. இதனால் குழந்தை உலகுக்குள் பயணம் செய்யத் தொடங்கினார்.
"நான் தொடர்ந்து குழந்தைப் பாடல்கள் பலவற்றை எழுதினேன். எளிய நடையில் இனிய சந்தத்தில் கவிமணி அவர்கள் இயற்றிய பல பாடல்களையும் பார்த்துப் பார்த்து, படித்துப் படித்து அவர்கள் வழியைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசையுடனேயே எழுதி வந்தேன்'' இவ்வாறு கவிஞர் குறிப்பிடுவார். அவரது தொடர்ந்த ஈடுபாடும் விடாமுயற்சியும் பாரதி கவிமணி போன்றோர் வழியில் அவர்களது வழிகாட்டியில் பயணம் செய்தார்.
தனக்குள் உள்ளியங்கிய உள்ளுணர்வின் தூண்ட லை ஏற்று ஊக்குமொடு சலியாது உழைத்ததால் உயர்ந்த குழந்தை இலக்கிய எழுத்தாளராக உயர முடிந்தது.
1949ஆம் ஆண்டு சக்தி இதழில் அலுவலகப் பணிக்குச் சேர்ந்த பிறகு எழுத்தாளரானார். 1941ஆம் ஆண்டு முதல் இந்தியன் வங்கியில் பணியாற்றினாலும் இலக்கியப் பணிகளையும் இடையறாது தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். 1944 முதல் 1954 வரை தொடர்ந்து பாலர் மலர், டமாரம், சங்கு, பூஞ்சோலை ஆகிய குழந்தை இதழ்களில் கெளரவ ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து குழந்தை எழுத்தாளர் சங்கத்தை 1950களில் நிறுவினார். தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்கவும் எழுத்தாளர் பலர் உருவாகவும் இச்சங்கத்தின் செயலாளர் தலைவர் ஆலோசகர் ஆகிய பொறுப்புகளைப் பன்முறை ஏற்று பொறுப்பாக பணிபுரிந்துள்ளார். மேலும் தமிழ் எழுத்தாளர் சங்கத்திலும் செயலர், துணைத் தலைவர், தலைவர் ஆகிய பதவிகளில் சிறப்பாகவும் பணியாற்றியுள்ளார்.
தென்மொழிப் புத்தக அறநிலையில் 5 வருடங் களுக்கு மேலாக குழந்தைப் புத்தகத்துறையின் சிறப்பு அலுவலராகவும் பணியாற்றினார். பல்வேறு சிறப் பான நூல்கள் வெளியிடப்படவும் இவர் காரணமாக இருந்துள்ளார். குழந்தை இலக்கியத் துறையில் பாடல்கள் பிரிவில் மட்டுமன்றி கதை கட்டுரை ஆகிய துறைகளிலும் பல நூல்களை எழுதியுள்ளார். இவை சுமார் 25க்கு மேற்பட்டவை. இவையன்றி இவரது பெருமுயற்சியால் தமிழ் எழுத்தாளர் யார் - எவர்? தொகுப்பு நூல்கள் நான்கும், தமிழில் குழந்தைகள் படிக்கும் பழக்கம் பற்றிய ஆய்வுநூல் ஒன்றும், பதினான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்ட தென்னக ஆறுகள் பற்றிய நம் நதிகள் என்ற நூலும் இவரது இலக்கியப் பணிகள்.
குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா தம் நிலையில் இருந்து உலகத்தைப் பார்க்காமல் குழந்தை உலகத்துடன் குழந்தையாகவே இயற்கை சமூகம் மனிதன் பற்றிய பாடல்களை எழுதியுள்ளார். பாடல்களில் காணும் பொருளும், குழந்தைகள் விரும்பும் அடிக்கடி பார்த்துப் பழகும் விளையாடும் கண்டுவியக்கும் பொருள்களாகவே இருக்கும்.
வள்ளியப்பாவின் குழந்தைப்பாடல்கள் மலரும் உள்ளம் என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில் பொருள் அடிப்படையில் பாகுபாடு செய்து பதிப்பிக்கவில்லை. குழந்தைகளின் வயது வளர்ச்சிக்கு தகுந்தவாறு பாடல்கள் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. குழந்தை களின் வயது வளர்ச்சிக்கு ஏற்ப அன்பு, பக்தி, நன்மை, தீமை, இன்பம், துன்பம், வீரம், இரக்கம் முதலிய கருத்துகள் இவரது பாடல்களின் மையச் சரடாக உள்ளது.
மேலும் கவிஞரின் பாடல்களில் விழாக்கள், சான் றோர் இயல்புகள், தெய்வச் சிறப்பு, பக்தி, தத்துவம், நகைச்சுவை போன்றவையும் உள்ளன. ஆக குழந்தைகளின் ஆரோக்கியமான சிந்தனைக்கும் உளவிருத்திக்குமான உயர்ந்த இலட்சியங்களை தன்வயப்படுத்திய பாடல்களையே வள்ளியப்பா ஆக்கியுள்ளார்.
இயற்கையை நேசிக்கவும், பறவைகள் பூக்கள் ஆகியவற்றின் சிறப்புகளை தெரிந்து கொள்ளவும், பயின்று கொள்ளவும் சாத்தியப்படும் வகையிலேயே கவிஞரின் பாடல்கள் உள்ளன. குழந்தைகள் படிப்பதை நிரந்தரமாக விரும்புமாறும், புத்தகக்கடலில் தன்னிச் சையாய் நீந்தப் போவதற்கு ஒவ்வொரு குழந்தையும் தயாராய் இருக்குமாறும் அதற்குள் பயணம் செய்யவும் வள்ளியப்பாவின் பாடல்கள் நூல்கள் உரிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
வள்ளியப்பாவின் பாடல்கள் குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சிக்கு உரிய அடித்தளம் அமைத்துக் கொடுகின்றன. சொல்நயம், சொல் உச்சரிப்பு, கருத்து இசையுடன் கூடிய எடுத்துரைப்பு என பல்வேறு சிறப்புகளை இப்பாடல்கள் கொண் டுள்ளன.
வட்டமான லட்டு தட்டு நிறைய லட்டு லட்டு மொத்தம் எட்டு எட்டில் பாதி ப்¢ட்டு எடுத்தான் மீதம் கிட்டு
******
அப்பா வாங்கித் தந்தது அருமையான புத்தகம் அதில் இருக்கும் படங்களோ ஆகா மிக அற்புதம்
******
வெடிகள் தம்மை இன்று நாம் வீரர் போலக் கொளுத்துவோம் கொடிய எண்ணம் யாவையும் கொளுத்தி வீரம் காட்டுவோம்
****** |
|
திருவிழாவாம் திருவிழா தேரிழுக்கும் திருவிழா ஒருமுகமாய் மக்களெல்லாம் ஒன்றுகூடும் திருவிழா
இவை போன்ற பாடல்கள் வள்ளியப்பாவின் நோக்கும் போக்கும் எத்தகையது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. குழந்தை உலகு அதன் சாரளங்களை முழுமையாக அனுபவிக்க வேண்டுமென்ற தூண்டுதலால் தான் வள்ளியப்பா விடம் சாத்தியப்பட்டுள்ளன.
சுற்றியுள்ள உலகத்தை அறிந்து கொள்வதும் இயற்கையையும் சமுதாயத்தையும் பற்றிய அறிவைக் கற்றுக் கொள்வதும் குழந்தைகளுக்கு சலிப்பூட்டு வதாக ஒருபோதும் ஆகிவிடகூடாது என்ற அக்கறை வள்ளியப்பாவிடம் தெளிவாகவே இருந்தது. ஆடிப்பாடி, கூடி வாழ்ந்து பெற குழந்தைகளுக்கான உலகைப் படைத்துக் காட்டினார். இவை குழந்தை களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்பதிலும் வள்ளியப்பா தெளிவாக வே இருந்துள்ளார்.
அண்ணல் காந்தி, நேரு போன்ற சான்றோர்களைப் பற்றிக் குழந்தைகளுக்கு ஏற்ப கதைப்பாடல்களாகவும் தந்துள்ளார். இவற்றில் பல புதிய முறைகளை மேற்கொண்டார்.
குழந்தைகள் நலவாழ்வே சமுதாய உயர்வு தரும் என்ற நோக்கமும், ஏற்றத்தாழ்வு குறைந்த இனிய சமுதாயம் மலர வேண்டும் என்ற சமதர்ம சமுதாயக் கண்ணோட்டமும் இவர் பாடல்களில் காணப் படுகின்றன. அன்புணர்வும் அமைதியான வாழ்க்கை நெறிகளும் வள்ளியப்பாவின் பாடல்களில் பொது வாக இழையோடிக் கொண்டிருக்கும்.
வள்ளியப்பா வழியே குழந்தைப்பாடல்கள் எழுதும் பாரம்பரியத்தையும், எழுத்தாளர் பரம்பரையையும் தோற்றுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.
தமிழில் குழந்தை இலக்கியம் ஆழமும் அகலமும் பெற வள்ளியப்பாவின் இலக்கிய முயற்சிகளும் சிந்தனைகளும் வழிகாட்டலும் செயற்பாடுகளும் உரிய களங்களை வழங்கிச் சென்றுள்ளது. வள்ளியப்பா வாழ்ந்த காலத்திலேயே பல்வேறு பாராட்டுகளுக்கும், பரிசுகளுக்கும் பட்டங்களுக்கும் உரிய தகுதி வாய்ந்த வராகவே இருந்துள்ளார். குழந்தை இலக் கிய மாநாட்டில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஜாகீர் ஹுசைன் வள்ளியப்பாவை பாராட்டிக் கேடயம் வழங்கினார். மீண்டும் ஒருமுறை குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமத் குழந்தைக் கவிஞருக்குப் பொன்னாடை அணிவித்துப் போற்றினார்.
அனைத்திந்திய குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் தமிழில் குழந்தை இலக்கிய முன்னோடி என்று வள்ளியப்பாவுக்குப் பட்டமும் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன. இதுபோல் தமிழில் உள்ள பல்வேறு அமைப்புகளும் குழந்தைக் கவிஞரை பாராட்டி யுள்ளனர்.
இயற்கை விருப்பங்களையும் மனப்போக்குகளையும் தூண்டி விடுவது, படைப்பில் மகிழ்ச்சியைத் தருவது எதிர்காலத்துக்கு தேவையான திறமைகளையும் பழக்க வழக்கங்களையும் குழந்தைகளிடம் உருவாக்கு வது, கல்வி அளிப்பது என்ற நோக்கில் குழந்தை களுக்காக அவர்களில் ஒருவராக இருந்து பணியாற்றியுள்ளார்.
அத்தகைய சிறப்புக்கும் பெருமைக்கும் உரிய குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 1989 மார்ச் 16 இல் குழந்தைகள் உள்ளத்தில் நிரந்தரமாக நீங்காது இடம் பெற்றுவிட்டார். அவர் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்றுள்ள குழந்தை இலக்கிய மரபு செழுமையும் வளமும் நிரம்பியது. தமிழ் இலக்கியம் உள்ளவரை குழந்தைக் கவிஞரின் ஆளுமையும் படைப்புத்தூண்டுதலும் குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் வரலாற்றுக்கும் தளம் அமைத்துக் கொண்டிருக்கும்.
அழ.வள்ளியப்பா எழுதிய நூல்களில் சில:
பாடல்கள் 1. மலரும் உள்ளம் முதல் தொகுதி 2. மலரும் உள்ளம் இரண்டாம் தொகுதி
பாட்டிலே காந்தி கதை சுதந்திரம் பிறந்த கதை நேரு தந்த பொம்மை ஈசாப் கதைப்பாடல்கள் முதல் தொகுதி ஈசாப் கதைப்பாடல்கள் இரண்டாம் தொகுதி வெளிநாட்டுக் கட்டுரைகள் பாடிப்பணிவோம் பாமரமக்களின் பரம்பரைப் பாடல்கள் கதைகள் பர்மா மணி மணிக்கு மணி வேட்டை நாய் குதிரைச் சவாரி நல்ல நண்பர்கள் எங்கள் பாட்டி மூன்று பரிசுகள் கட்டுரைகள் பிள்ளைப் பருவத்திலே பெரியோர் வாழ்விலே கதை சொன்னவர் கதை எங்கள் கதையைக் கேளுங்கள் மிருகங்களுடன் மூன்றுமணி வாழ்க்கை விநோதம் என்பன சின்னஞ்சிறு வயதில் ஆய்வு நூல் வளர்ந்துவரும் குழந்தை இலக்கியம்
தெ.மதுசூதனன் |
|
|
|
|
|
|
|