Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | நூல் அறிமுகம் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
தீபாவளிப் பரிசு
K.M. கோவிந்தசாமியின் சரித்திரம் - 4
தீபாவளி?
- அலர்மேல் ரிஷி|நவம்பர் 2002|
Share:
டிரிங்...டிரிங்.. தொலைபேசி அந்த நேரத்தில் சிவாவுக்குத் தொல்லை பேசியாகத் தான் தோன்றியது. மணி எட்டாகப் போகிறது. இன்னும் 15 நிமிடங்களில் அவன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். 8.30 மணிக்கு conference call. அவன் ரிஸீவரை எடுக்கவேயில்லை. அது அடித்துப் பார்த்துப் பின் நின்று போயிற்று. கார் சாவியை எடுத்துக் கொண்டு பறந்தான்.

'சீ இதென்ன வாழ்க்கை ஒரு நாளைப்போல பறந்து பறந்து...? ஹைவேயில் போய்க் கொண்டிருந்த சிவாவின் மனத்தில் ஓடிய கேள்வி இது. அடுத்த மாதம் தீபாவளி. இது ஒன்றும் இந்தியாவில் கொண்டாடும் தீபாவளியில்லையே, கலிபோர்னியா தீபாவளி, எந்த சுவாரசியமும் கிடையாது. பணம் காசுக்கென்னவோ குறைவே யில்லை. மனைவியும் வேலைக்குப் போகிறாள். கண்ணான இரண்டு குழந்தைகள் 5 வயதும் 2 வயதும் ஆகிறது. சுகமான கார் சவாரி. இருந்தும்?! இல்லாததற்கு ஏங்குவதுதான் மனித இயற்கை.

27 பேர் ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தவன் சிவா. தஞ்சாவூர் ஜில்லாவில் 'கொல்லு மாங்குடி' அவன் பிறந்து வளர்ந்த ஊர். காவிரி நீரைக் குடித்து, ஆற்றின் வெள்ளத்தில் நீச்சலடித்து, மணற்பரப்பில் சடுகுடு விளையாடிக் கழித்த சுகமான இளமைக்கால நினைவுகள் பசுமையானவை. அங்கே கொண்டாடிய தீபாவளியை இப்போது நினைத்துப் பார்த்தான்.

விடியற்காலை நான்கு மணிக்கு ரேடியோவில் மங்களஇசை என்பதெல்லாம் சமீப காலம். நாதஸ்வர வித்வான்களை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரண்டு நிமிடம் மங்கல ஓசையை எழுப்பிவிட்டு, கொடுக்கும் புதுத்துணியையும் பட்சணத்தையும் பெற்றுக் கொண்டு போவார்கள். வீட்டுவாசலில் நாலு குருவிவெடி சீனவெடி என்று படபடவென்று வெடிக்கும். அப்படி வெடியை வெடித்துத்தான் பண்டிகை தொடங்கும். உள்ளே பூஜை அறையில் புத்தாடைகள் ஒரு பெரிய தாம்பாளத்தில் மஞ்சள் குங்குமம் தடவி அழகாக அடுக்கப்பட்டிருக்கும். இன்னொரு தாம்பாளத்தில் பூ, பழம், வெற்றிலை, தேங்காய் எல்லாம் இருக்கும். நான்கைந்து டப்பாக்களில் பக்ஷண வகைகளும், தீபாவளி மருந்தும் வைக்கப்பட்டிருக்கும். வெள்ளிப்பூண் அமைந்த அழகான மனையில் மாக்கோலம் இழைத்துத் தயாராக வைத்திருப்பார்கள். வீட்டிலே எள்ளைக் காய வைத்து செக்குக்கு எடுத்துப்போய் ஆட்டி எண்ணெய் எடுத்து வைத்திருப்பார்கள். சிக்கு நாற்றமில்லாத நல்ல மணம் வீசும் சுத்தமான நல்லெண்ணெயை வெண்கல வால்கரண்டியில் விட்டு அதில் மிளகு ஓமம் சேர்த்து காய்ச்சி ஆற வைத்திருப் பார்கள். நெல்லிக்காய் அளவிற்கு தீபாவளி மருந்தை உருட்டிக் கையில் கொடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடச் சொல்வார்கள். ப
ின்னால் பலவகைப் பட்சணங்களை ஜீரணிக்க முன்னெச்சரிக்கையாகக் கடை பிடிக்கும் உத்தி இது. வீட்டில் வயதில் மூத்த மூதாட்டி, ஒவ்வொருவராக அழைத்து மனையில் உட்கார வைத்து 'கெளரி கல்யாணம்' பாடி, தலையில் ஒரு கரண்டி எண்ணெயை வைத்து தேய்த்து விடுவார். ஷாம்பூ என்ற பெயரைக் கேள்விப்பட்டதில்லை. சீயக்காய் தேய்த்துக் குளித்துவிட்டு வரவேண்டும். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பேர். கிணற்றடியில் குளித்தாலும் கங்காஸ்நானம்தான். புத்தாடைகளை அணிந்து கொண்டு ஸ்வாமிக்கும் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்தல், பிறகு இட்லி சட்னி, கேசரி, பொங்கல் என்று பெரிய சிற்றுண்டி. அதை முடித்து விட்டு வாசலுங்ககு வந்தால் கையில் இருப்பது தீரும்வரை பட்டாசுகளை வெடிப்பது. தடபுடலாக சாப்பாடு. பின் உறவினர் களை தெரிந்தவர்களைப் போய்பார்ப்பது 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா?' என்று விசாரித்துவிட்டு வருவது. இப்படித் தொடரும்.

அந்த வருஷத்தில் கலியாணம் ஆகி முதல் தீபாவளி கொண்டாடும் தம்பதிகளுக்கு அது ஸ்பெஷல் தீபாவளி. தலை தீபாவளி என்று அதற்கு பெயர். மாப்பிள்ளையையும் அவருடைய உறவினர் எல்லோ ரையும் பெண் வீட்டிற்கு விருந்துக்கு அழைப்பார்கள். எல்லோருக்கும் புடவை வேஷ்டி வாங்கித் தந்து விருந்துபசாரம் செய்வதோடு சக்தியுள்ளவர்கள் மாப்பிள்ளைக்குத் தலை தீபாவளிக்கு வைரமோதிரம் வாங்கி கொடுக்கும் வழக்கமும் உண்டு. சிவாவிற்கு நினைவு தெரிந்து அனேகமாக எல்லா வருஷங் களிலும் அவன் வீட்டில் யாருக்காவது கலியாணம் நடந்து கொண்டே யிருக்கும். அதனால் எல்லா தீபாவளியும் தலை தீபாவளிதான்.

இப்படியாக கடந்த கால நினைவுகளில் மூழ்கி இன்பமான ஒரு மயக்கத்தில் மூழ்கியிருந்தவன் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தான். தன்னுடைய குழந்தைகளும் தீபாவளி கொண்டாடி மகிழ வேண்டும். அதற்காக அவர்களை இந்தியாவிற்கு அழைத்துப் போகவேண்டும் என்பதுதான் அந்த முடிவு. கொல்லுமாங்குடியில் கூட்டுக்குடும்பம் இப்போது இல்லை. படிப்பு, வேலை என்று எல்லோரும் பிரிந்துபோய்விட்டார்கள். அயல்நாட்டுத் தமிழர்கள் எல்லோரையும் போல அவனும் ஒரு ·ப்ளாட் வாங்கிக் கொடுத்து அவனுடைய பெற்றோர்களைச் சென்னைக்கு குடியேற்றி விட்டான். அவனும் இந்தியாவிற்கு போய் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டதால் குழந்தைகளோடு சென்னைக்கு போவதென்று முடிவெடுத்தான். அலுவலகம் சென்றவுடன் டிராவல் ஏஜென்சியோடு தொடர்பு கொண்டு டிக்கெட்டு களுக்கு ஏற்பாடு செய்துவிட்டான். தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே குடும்பத்தோடு சென்னையில் வந்திறங்கினான்.

துணிக்கடைகளில் தீபாவளிக் கூட்டத்தைப் பார்த்தான். ஆனால் அவனுடைய அம்மா சர்வ சாதரணமாக ''சென்னையில் வருஷம் பூராவும் துணிக்கடைகளில் எதாவதொரு பண்டிகை காரணத்திற்காக சலுகை, தள்ளுபடி என்ற பெயரில் கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இப்போது தீபாவளிச் சலுகை அவ்வளவுதான்'' என்றததும் சிவாவுக்கு சப்பென்று போய்விட்டது.
பட்டாசுக் கடைகளிலும் கூட்டம் இருந்த தென்னவோ உண்மை. ஆனால் ரூபாய் 300ம் 400ம் கொடுத்துவிட்டு உள்ளங்கை அகலப்பையில் கொண்டு வரும் பட்டாசுகளைப் பார்த்தவுடன் பக்கென்றது. அதற்கும் தாயார் விளக்கம் தந்தார். பல வீடுகளில் காசு கரியாகிறது என்ற விழிப்புணர்வு வந்துவிட்டது ஒரு காரணம், பல பள்ளிக் குழந்தைகள், ''பள்ளிக்குப் போய்ப் படிக்க வேண்டிய வயதில் ஏழை குழந்தைகள் பட்டாசு கம்பெனியில் வேலை செய்வதால் பட்டாசு களையே வெறுக் கிறோம்'; பட்டாசுகளை வெடிக்க போவதில்லை'' என்று சபதம் ஏற்க ஆரம்பித்திருக் கிறார்கள். இது இன்னெரு காரணம். இந்த விளக்கத்தைக் கேட்ட சிவாவிற்கு ஒரு பக்கம் இந்தியக் குழந்தைகளின் பரிவு உணர்ச்சியைக் கண்டு பெருமிதம். ஆனாலும் பட்டாசு இல்லாமல் ஒரு தீபாவளியை எண்ணிப் பார்க்கமுடியவில்லை. அவனுடைய காலத்தில் தெருவின் மத்தியில் ஆட்டம்பாம் வைத்து அதன் திரியை எற்றி ஒரு தகர டின்னைக் கவிழ்த்து விடுவார்கள். பட்டாசு வெடித்து டப்பா ஆகாயத்தில் பறந்து சிதறுவதைக் கண்டு ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.

தீபாவளிக்கு முதல் நள்ளிரவு. வடை பாயசத்தோடு அவனுக்கும் மனைவி கீதாவுக்கும் குழந்தைகளுக்கும் பலமான விருந்து. ஆனால் அவனுடைய அப்பாவும் அம்மாவும் விருந்தை சுவைக்கவில்லை. காரணம் கொலஸ்டிரால் என்பதால் எண்ணெய் வேண்டாம் என்றும் டயாபடீஸ் ஆரம்ப நிலையில் இருப்பதால் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர் அறிவுரை தந்திருக்கிறார் என்பதைக் கேட்டவுடன் சுருதி இன்னும் கொஞ்சம் இறங்கியது சிவாவுக்கு.

பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது. திடுக்கிட்டெழுந்த சிவா அரக்கப்பரக்க அம்மாவைத் தேடிப்போனான். உள்ளே மாக்கோலப் பலகை, எண்ணெய் எதுவுமில்லை. ஷாம்பு பழகிவிட்டதால் எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பழக்கமே போய் விட்டதென்று சீதா சொல்லியிருக்கிறாள். வழக்க மில்லா வழக்கத்தால் உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால்? சரி, தீபாவளி மருந்தும் கடையி லிருந்து வாங்கி வைத்திருந்தாள் அம்மா. காரணம் கேட்ட தற்கு ''இப்போதான் ரெடிமேடாக மருந்து கிடைக்கிறதே'' என்று பதில் வந்தது.

சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம் என்று எல்லா மருந்து சாமான்களையும் ஊற வைத்துக் கல்லுரலில் மையாக அரைத்து வெல்லம் சேர்த்து வெண்கல உருளியில் நெய்யைக் கொட்டி இரண்டுமணிநேரம் கைவிடாமல் கிளறி மணக்க மணக்க உருட்டித் தந்த தீபாவளி மருந்து எங்கே? இந்தக் கடையில் வாங்கிய மருந்து எங்கே! பண்டிகை விறுவிறுப்பு இன்னும் சற்று குறைந்தது. அடிக்கடி உள்ளே போவதும் கைநிறைய லட்டு மிக்சர் அள்ளிக் கொண்டு வருவதும் கூட்டமாக உட்கார்ந்து சிரித்துப் பேசியபடியே அவற்றைக் கொரிப்பதும் எப்படிப்பட்ட மகத்தான அனுபவம். இப்போது குழந்தைகளும் கேட்கவில்லை. பெரியவர்களும் வயிறு கெட்டுவிடுமென்று கட்டுப்பாட்டுடன் இருப்பதாகத் தெரிந்தது. எல்லாவற்றிலும் ஒரு வெறுமை. தீபாவளி இங்கும் ஒரு வெற்றுச்சடங்காகப் போய்விட்டது போன்று உணர்ந்தான்.

ஊருக்குத் திரும்பியவன் மிகவும் தெளிவாக இருந்தான். காலம் மாறிவிட்டது. கூட்டுக் குடும்பத் தில் அனுபவித்த இன்பங்களை எதிர்பார்க்க இனி வழியில்லை. இந்தியாவும் ஒரு விதத்தில் மேற்கத்திய நாடுகளைப் போல ஒரு வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. பழைய சம்பிரதாய பண்டிகை அனுபவங்கள். வருங்கால சந்ததிக்கு கதைகளாக மட்டுமே கிடைக்கும். இந்த உண்மை அவனுக்கு நன்கு புரிந்தாலும் மனத்தின் ஒரு மூலையில் மட்டும் ஏதோ ஒரு கசப்பு உணர்வை அவனால் விலக்க முடியவில்லை.

டாக்டர். அலர்மேலுரிஷி
More

தீபாவளிப் பரிசு
K.M. கோவிந்தசாமியின் சரித்திரம் - 4
Share: 




© Copyright 2020 Tamilonline