Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சிறுகதை
பொம்மலாட்டம்
- எல்லே சுவாமிநாதன்|டிசம்பர் 2002|
Share:
கவலையோடு உட்கார்ந்திருந்தார் தருமலிங்கம். நாளைக்கு கோயிலில் சூரசம்காரம் திருவிழா. பகலில் சந்தை கூடும். வழக்கமாக சந்தையில் தருமலிங்கம் நடத்தும் பொம்மலாட்ட நிகழ்ச்சி உண்டு. இன்னிக்கு பார்த்து வெளியூருக்கு போன மகன் இன்னமும் வரவில்லை. மகன் உதவி இல்லாமல் எப்படி சூர சம்காரம் பொம்மலாட்டம் நடத்துவது? தருமலிங்கத்தின் மகன் பொம்மலாட்டத்தில் அவருக்கு உதவியாக இருப்பது வழக்கம். தருமலிங்கம் சூரனை இயக்குவதில் வல்லவர். அவர் மகன் முருகனை இயக்குவது வழக்கம். புதிசாக ஒருவருக்கு சொல்லிகொடுத்து ஒத்திகை பார்த்து நடத்த நேரமில்லை.

"என்ன பெரியவரே, என்ன யோசனை?" கோயில் தருமகர்த்தாவின் குரல் கேட்டது.

"மாமியா வூட்டுக்கு போன எம் பையன் இன்னம் வரலே. நாளைக்கு பொம்மலாட்டம் நடத்த தொணைக்கு ஆளு இல்ல. கவலயா இருக்கு"

"அவனுக்கு அங்க என்ன பிரச்னையோ? மருமவன் வந்திருக்கான்னு வாய்க்கு ருசியா சாப்பாடு போட்டிருப்பாங்க. தின்னுட்டு வயிறு சரியில்லாம இருக்கோ என்னவோ?

ஏன் உங்க பங்காளி தங்கவேலுவை கேளுங்களேன். அவரும் உங்களமாதிரி பொம்மலாட்டக்காரருதானே? அவருக்கு வேலை வெட்டி இல்லாம வாய்க்கால் மதகுல உட்கார்ந்து வம்பு பேசிட்டுதானே இருக்காரு?"

தருமகர்த்தா போய் விட்டார். போயும் போயும் தங்கவேலுவைக் கேட்பதா? தங்கவேல் தன் பெண் வள்ளியின் திருமணத்துக்கு தருமலிங்கத்திடம் கடன் பட்டிருந்தார். அதை அவரால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. அதனால் அவர்களிடையே ஒரு சிறு மனத்தாங்கல் ஏற்பட்டு பேச்சு வார்த்தை அதிகம் இல்லாமல் இருந்தது.

இப்பொழுது வேறுவழியில்லை. தங்கவேலுவை உதவி கேட்டால் என்ன? இந்த சமயத்துல கெளரவம் பார்க்கமுடியாது, கேட்டு விடலாம் என்று தோன்றியது. தங்கவேலை அணுகியபோது, அவர் தனக்கு கண்ணில் சதை வளர்ந்து பார்வைக் குறைவு இருக்கிறதாலும், மூப்பில் விரல் மடிக்க இயலாமையாலும் உதவ முடியாது என்று மறுத்துவிட்டார். தருமலிங்கம் மிகவும் வற்புறுத்திக் கேட்டதில் தாங்கமுடியாமல் கடைசியில் சூர சம்கார பொம்மலாட்டத்தில் முருகன் பொம்மையை இயக்க சம்மதித்தார்.

சூர சம்காரத்தன்று பகலில், சந்தையில் எட்டுப்பட்டி சனமும் கூடியிருக்கிறது. ஒரு சிறு கீற்றுக்கொட்டகை. தொங்கும் படுதாவில் ஒரு சதுர துளை வழியே தெரியும் ஒரு சிறு மேடை. கொட்டகைக்குள் சிறிசும் பெரிசுமாய் சுமாரான கூட்டம். தருமலிங்கமும், தங்கவேலும் பின்னால் மறைந்து நின்றபடி பொம்மையின் உடலில் இணைத்த நூல்களை கை விரல்களில் சுற்றி இயக்கத் தயாராய் இருந்தார்கள். பொம்மைகள் இயங்கும்போது வசனத்துக்கு பதிலாக இட்டுக்கட்டிப் பாட்டாக பாடுவார்கள். பாடல்கள் பொதுவாக கதையை ஒட்டி இருந்தாலும் சில சமயம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் அதில் தலை காட்டும். அரசியல், சினிமா பேசக்கூடாது என்று எழுதாத சட்டமும் இருந்தது. ஒருமுறை தருமலிங்கம் சூரனை இயக்கும்போது, "நம்பினாரை அணைக்கும், நம்பியாரை அடிக்கும், எம்சியாரு போலவே வந்தேனடா" என்று பாட, "அப்படிப் போடுரா அய்யம்பேட்டை அருவாளெ" என்று கூட்டம் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டி சூரன் பக்கம் சாய்ந்து, தேவைப்பட்டால் மேடைக்கு போய் தாங்களே சூரனுக்கு உதவி, முருகனை எதிர்க்கத்தயாரான அசம்பாவிதமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து சினிமா, அரசியல் கவனமாகத் தவிர்க்கப் பட்டது.

கூட்டம் சேருவதற்காக சிறிது நேரம் காத்திருந்தார்கள். "ஆரம்பிங்கய்யா, வேலை கெடக்கு" என்று கூக்குரல் வர பொம்மலாட்டம் தொடங்கியது.

"வரவேணும் வரவேணும்
வந்த சனம் குந்த வேணும்
வேலாதி வேலன் வடிவேலன்
வீராதி வீரன் சூரபத்மனை
வதம் பண்ணியது பாக்கவேணும்
பிந்தி நிக்கும் பேரெல்லாம்
முந்தி இருக்க வரவேணும்
முருகன் அருளை பெறவேணும்
தொந்திரவுகள் எதுவும் இன்றியே
தொட்டதெல்லாம் துலங்க வேண்டி
தொடங்குமுன் தொந்தி கணபதியை
தொழுது கும்பிடுவோம் நாமே"

என்ற உடுக்கொலி சூழ்ந்த தொடக்கத்துடன் சூர சம்காரம் தொடங்கியது. முதல் காட்சியில் தருமலிங்கம் இயக்கத்தில் பொம்மை சூரன் வந்து ஆடினான்.

"வந்தேன் வந்தேனடா
வீராதி சூரனும் வந்தேனடா
வந்தனமும் சபைக்கு தந்தேனடா"

என்று தருமலிங்கம் பாட சூரன் பொம்மை ஒரு சுற்றி தலை குனிந்து ஒரு வணக்கம் போட்டது. தத்தலாங்கு தாம், தத்தலாங்கு தாம் என்ற ஒலிக்கேற்ப மேடையை ஒரு வட்டம் அடித்து வந்தது. பிறகு தூரத்தில் இருப்பவரைப் பார்ப்பதுபோல் கையைக்குவித்து பார்த்தது. தலையைத்தூக்கி நடந்து முருகன் அருகில் வந்து குனிந்து பார்த்தது. தலையைக் காகம் போல பக்கவாட்டில் அசைத்தது. தருமலிங்கம் பாட்டெடுத்தார்

"பாரில் பெரிய போர்க்களத்தில்
வேர்த்து நிற்கும் குழந்தாய்
நீ யாரோ, யாரோ, யாரோ"

சூரன் பொம்மை கை அசைத்து கேள்வி கேட்பது போல இருந்தது.

ஜின் சிக்கிடி ஜின் ஜின் சிக்கிடி ஜின் என்ற ஒலிக்கு முருகன் குதித்தார். தங்கவேல் முருகனை இயக்கி பாடினார்.

"சிவசக்தி மைந்தனடா
சண்முகனும் என்பேரடா
சண்டைக்கே வந்தேனடா உன்
மண்டை உடைக்கவே வந்தேனடா"

சூரன் மண்டியிட்டு அமர்ந்து முருகனைப் பார்க்க தருமலிங்கம் பாடினார்.

"பாயில் தவழும் வயசில்
பாரில் போரிட வந்தீரோ
பெற்றவளும் அனுப்பத் துணிந்தாளோ
பரமனும் இதையே தடுக்கானோ
நல்ல வார்த்தை சொல்வேன் கேளும்
நாடியே நீரும் வீடுபோய்ச் சேரும்"

சர்..ர்.ர்.ர்ர்.ர்...

முருகன் வேலால் சூரனைக் குத்த வர, சூரன் எழுந்து பின் தள்ளி நின்று கையால் மார்தட்டினான். த்தத்தலாங்கு த்தத்தலாங்கு டம் த்தத்தலாங்கு த்தத்தலாங்கு டம் என்று குதித்தான். தருமலிங்கம் பாடினார்.

"சூராதி சூரனாடா நான்
வீராதி வீரனடா நான்
சின்னக்குழந்தை முருகா உனக்கு
சண்டையும் சச்சரவும் ஏனடா
பால்மணம் மாறாப் பாலகா
வேலும் வீம்பும் ஏதுக்கடா?
பனைவெல்லமும் பாலும் தாரேன்
மனைக்குப் போய்ச் சேரடா"

அடுத்து தங்கவேல் முறை. முருகனை இயக்கவேண்டும். அதென்ன பாட்டு ? "சூறையாடிடும் சூராவா...", "துயர் மிகு சனமா..."
"ராமதூதன் நானடா"... இல்ல அது ராமாயணமில்ல... பாட்டு மறந்து போச்சு. சரி விடு. வாய்க்கு வந்தத பாடிடலாம் என்று பாடலானார்.

முருகன் குதித்தான்.

"ஆட்சிக்கு வந்த சூரா
ஆளவந்து அஞ்சு வருசமாச்சு
அநியாயம் அனைத்தும் பண்ணலாச்சு
அதனாலே நாட்டிலே பெரும்பஞ்சமாச்சு
அடுப்பில் பூனைகள் தூங்கலாச்சு
வெளச்சல் இல்லாம போச்சு
வெவசாயமும் வெளங்காம போச்சு
வெளைநில மெல்லாம் வீடுகட்டலாச்சு
வரிப்பணமும் வெத்துப் பாலங்களாச்சு
கடிக்க வாய்க்குப் பாக்கில்லே
பசிக்கும் புசிக்கப் பண்டமில்ல
அக்கிரமம் பெரிகியாச்சு உன்னோட
ஆச்சிய மாத்தவேணும் என்றே
ஆத்திரத்தோடு இங்கே வந்தேனடா
அடியோட ஒழிக்கவே வந்தேனடா"

தருமலிங்கமும் தங்கவேலும் வெவ்வேறு அரசியல் கட்சிகளை ஆதரிப்பவர்கள். ஆட்சியை மாற்ற வேண்டும் என்று சொல்லி அரசியல் பேசுகிறாரே என்று தருமலிங்கத்துக்கு கோபம் வந்தது. நாங்க வரிப்பணத்துல பாலமாவது கட்னோம். இவனுக பணத்தை பொட்டியோட முழுங்கி ஏப்பம் விட்டுட்டு.. இதற்கு சரியான பதில் சொல்ல வேண்டும்.

"மனிசன் மகிசமென மதியாமல் மிதித்தே
ஆத்திரம் கொண்டே அறிவை இழந்தே
அடாவடி தடாலடி செய்யும் உங்கள்
அம்மை ஆட்சியைக் கண்டோமே அதையினி
அம்மம்மா ஒருபோதும் நாங்கள் வேண்டோமே"

என்று பாடலாமா என்று நினைக்க, அப்பொழுது திடீரென தங்கவேல் இயக்கிய முருகனின் ஒரு கால் இயங்காமல் நொண்ட ஆரம்பித்தது.

தருமலிங்கம் அரசியலை மறந்து கேலியாக பாடலானார்.

"பாதிமதி நதிபோதுமணி சடைநாதன்
பெற்ற குழந்தை குமரேசா
பச்சைப் பாலகா முருகா
பாத்து நீயும்வர லாகாதா
ஒத்தக்காலில் ஓடிவரும் முருகா
ஒங்காலும் ஒடிஞ்சு மொடமாச்சோ
ஒய்யாரமயில் ஏறுகையிலே தடுக்கிச்சோ
ஒங்கண்ணன் காலால் மிதிச்சுச்சோ
ஒங்கப்பன் வாகனம் ஒதச்சிருச்சோ
ஒந்தொல்லை சற்றும் தாங்காமல்
ஒன்ஆத்தாளும் காலில் கிள்ளிருச்சோ
ஓடுகையிலே முள்ளும் தெச்சிருச்சோ
பாக்கும் சனம்சிரிக் குமுன்னே
பக்குவமாய் இதசரி செய்யவேணும்"

கையில் சுற்றிய நூல்களுடன் தங்கவேல் பாட்டில் பதிலளித்தார்.

"வேகப்பட்டு விசுக்கென இழுத்ததாலே
ஏகப்பட்ட நூலிலெது சிக்கிச்சோ
வெத்துப்பேச்சு பேசி நிக்காம
ஓத்தக்காலோடு உன்னை வெட்டுமுன்னே
உயிர்பொழச்சு ஓடிடு சூரா"

பொம்மையை இயக்கும் நூல்களைக் கூர்ந்து கவனித்தபின் பொம்மலாட்டக்கலையில் தேர்ந்தவரான தருமலிங்கத்துக்கு முருகன் பொம்மையின் கால் இயங்காத காரணம் புலப்பட்டுவிட்டது.

"கண்டு கொண்டேன் காரணத்தை
கண்டு கொண்டேன் காரணத்தை
நொண்டி நொண்டி நடக்கும் வல்லவா நீ
நொண்டுவதன் காரணமென்ன நான் சொல்லவா
நண்டுபோல சுண்டு வெரல்நூலே
சுண்டி சுண்டி இழுத்ததாலே"

"நன்றாய் இதைக்கண்டு கொண்டு
நொண்டல் நீங்க வேணும்
ரெண்டு காலில் வரவேணும்
நடை வண்டி இல்லாமல்
நல்லா நடந்து வரவேணும்"

பார்வையாளர்களில் சிலர் கைதட்டினார்கள்.

பலநாள் இந்த வேலை செய்யாததால் தங்கவேலுக்கு முருகனை இயக்குவது மறந்துவிட்டது. பொம்மலாட்டக் கலைஞரான தனக்கே, தருமலிங்கம் இயக்க சொல்லித்தருவது பிடிக்கவில்லை. கையும் வலிக்குது. இந்த அழகுல பாக்க வந்த பசங்க கைதட்டரானுக... சற்று வெறுப்புடன் சொன்னார்

"சுண்டுவெரலும் சோந்து போச்சு
ரெண்டுகையும் வெந்து போச்சு
முழிச்சுப் பாக்கும் சனங்க
முடிஞ்ச காசையும் அவுக்கலே
கையைவீசி வந்தசனமும்
காசு போடாமல் போகுமோ
இடிச்சபுளி போலவடஞ்சு கெடக்கும்
இளிச்சவா யனுகளுக்கு எதுவுமிங்கே
நொண்டி னாலென்ன நொடித்தென்ன
நொந்துகொள்ளா மலேநீரும் நேரேவாரும்
நாமுன்னை நன்றாக வெட்டவே"

தங்கவேலின் அலட்சியம் தருமலிங்கத்துக்கு சினத்தை வரவழைத்தது. 'ஏதோ கொஞ்ச நஞ்சம் பார்க்கவரும் சனத்தையும் இவன் அவமானப்படுத்தி தொழிலுக்கே வெடி வெச்சிருவானோ? தொழிலுலே ஒரு சுத்தம் வாணாம்? பங்காளி புத்தியக் காட்டறான் பாரு. இத இப்பவே கண்டிச்சிரணும்' என்று எண்ணிப் பாடினார்.

"வாங்கினதக் கொடுக்க வக்கில்ல
வாய்க்கொழுப்பும் ஏனுமக்கு முருகா
கம்புகஞ்சி குடிக்க வக்கில்லாம
வம்புபேசி வாய்க்கால் மதகில் நிக்காம
வாய்ச்ச வேலையை செஞ்சு போடும்
பேச்ச நிறுத்திப் போட்டு பெத்ததுக்கு
பட்ட கடனை அடைச்சு தொலையும்"

கஞ்சிக்கு வக்கில்லையா? தான் வாய்க்கால் மதகில் அமர்ந்து பேசுவதை கேலி செய்ய இவர் யார்? 'பெத்ததுக்கு பட்ட கடனை அடை' என்றதும் பிடிக்கவில்லை. என் பொண்ணுக்கு கல்யாணத்துக்கு இவனிடம் பட்ட கடனை இப்படிக் குத்திக் காட்டுகிறானோ? ஏன் இப்படி மானத்தை வாங்கறான்? அவர் பதிலுக்கு முருகனை ஆடவிட்டுப் பாடலானார்.

"சிங்காரமயில் மேலே ஏறிப்போய்
சீமைத்தேச மெல்லாம் சுற்றியவண்டா
ஊர்களும் ஒலகமும் பாத்தவண்டா
பேரும் பணமும் படைச்சவண்டா
அப்பன் உலகாளும் சிவனடா
அன்னையும் அருள்மிகு சக்தியடா
ஆனைமுகத்தோன் அண்ணனடா நானுமொரு
ஆறுபடை வீட்டுச் சீமானடா
குன்றுகள் பலவும் கொண்டவனடா
கூசாமல் பொய்யே கூறாதே சூரரே
ஏசியென் பழிசொல்லி திரியாதே
எங்கும் நிறைந்த என்அடியார்
ஏகமாய் எடுத்துவந்து என்காலிலிட
ஏதடா எனக்குக் கடனுமிங்கே"

தருமலிங்கத்துக்கு தூக்கிவாரிப்போட்டது. என்னது? கடன் வாங்கினதுமில்லாமல் சாதுரியப் பேச்சு வேறயா? சரி எப்ப கடன் வாங்கினார்னு சொல்லிடறது நல்லது. பொண்ணு கல்யாணத்துக்கு கடன் வாங்கினது மறந்துடுச்சா இந்த மனுசனுக்கு?
சூரன் தலையை ஆட்டி, அசக்கி, கையால் முருகனைச் சுட்ட வைத்து பாடலானார்.

"தங்கவேல் பிடிச்ச தங்கவேலா
அங்கமெல்லாம் தங்கம் பூட்டி
பொங்கிச் சிங்கமாய் சீறுறீரே
தங்கத்தாலி ஒன்று வாங்கிடவே
வள்ளிப் பொண்ணைப் கட்டிவிடவே
வெள்ளிப் பணமா வாங்கினீரே
வாணவேட்டு வேடிக்கை விருந்தில்
வாங்கின காசெல்லாம் விட்டீரே
மொட்டை பட்டை போட்டு
கொட்டை தரித்துக் கோவணத்துடன்
வெறுங்கையை முழம்போட்டு வெத்தாக
வேங்கை மரம்போல நின்னீரே
தள்ளிப்போன தவணை என்னாச்சு
சேர்ந்த வட்டியும் அசலுமென்னாச்சு
அடுப்புசட்டி பானையை அடமானம்வெச்சு
அஞ்சுபத்தாவது அசல்வட்டிய குடுக்க
வக்கில்லாம நீரும் போனீரே"
தங்கவேலுக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. 'என்ன மனுசன் இவன்? கடனைக்கேக்க ஒரு நேரம், இடம் கிடையாதா? சொந்த விசயத்தை இங்க வந்து பாடறது மொறையா?' முருகன் பொம்மையை குதிக்கவிட்டு, கோபத்துடன் பதிலாக பாடினார்,

"கத்தியெடுத்துச் சண்டை போடவந்தும்
கடனெழவைச் சொல்லிநிக்கும் சூரா
வட்டிக்கடை வைத்து மக்கள்
வயித்தில் அடிக்கநீ வந்தியா
மயிலை காளையை வித்தாவது
வீசியுன் மொகத்தில் எறிவேனடா
வீணாய்க் குலைத்து சாகாதே
அக்கப்போர் பேசியே அந்த
பக்கம் போகாமல் இங்கவா"

தருமலிங்கத்துக்கு, தங்கவேல், தான் குலைப்பதாக சொன்னது பிடிக்கவில்லை. என்னதான் பங்காளிப்பகை என்றாலும் "குலைத்து" என்று சொல்லி 'நாய்' என்றா குத்திக்காட்டுவது? தானே சூரனாக கற்பனை செய்து கொண்டார். தான் இயக்கும் சூரனை முருகன் பிடியில் அகப்படாமல் நகர்த்தி ஆட வைத்து பாடினார்.

"சூரங்கிட்ட செல்லாதும்ம வீரம்
நாயி வேசமது போட்டாலும்
நயமாயே கொலைக்க வேணும்
நாலுசனம் நம்பும்படி நடக்கவேணும்
பாக்குற சனம்பாக்கு வெத்திலைபணம்
பரிசாக கொடுத்திட வேணும்"

ஊரு சனம் முன்னால மரியாதை இல்லாம கடனைக் கேட்டுட்டு இப்ப நைசாப் பேசி ஐசா வெக்கப்பாக்குறான்? கோயில் முருகனுக்கு தங்கள் குடும்ப சார்பில் தங்கத்தில் வேல் பண்ணிப்போட்டது இவனுக்கு மறந்துவிட்டதா? தங்கவேல் பெருமையுடன்,

அப்பனுக்கே புத்தி சொன்னவனடா
தப்புத்தண்டா வழிக்கி போகாதவனடா
தளுக்கு போடும் தாண்டவராயா
அளுக்குபேச்சி பேசிஏசி நிக்காத
சுளுக்குவந்து காலுமளுக்னு முறுயும்டா
சுருக்கவந்து வெட்டுவாங்குடா சூரா"

தருமலிங்கத்தின் சூரன் ஆட்டத்தில் முருகனை தங்கவேல் பாதுகாக்க மறந்ததால் சூரன் கைபட்டு முருகன் பொம்மை கையிலிருந்த சிறு வேல் கீழே விழுந்தது. இதைக்கண்டு தருமலிங்கம் துணுக்குற்றார். என்ன ஆள் இவர்? முருகன் வேலைத் தவற
விட்டு விட்டாரே? அபசகுனமாயிருக்கே. முருகன் வேலை எறிஞ்சு சூரனை வதம் செய்யவேணும், அப்புறம் சூரன் இரண்டாகி கோழியாய் மயிலாய் வரவேணும் என்பது இவருக்கு மறந்து விட்டதா? வெட்டு வாங்குடாங்கறாரே. நினைவு படுத்தி தொலைப்போம் என்று பாடினார்,

"வெளயாட்டுப் புள்ள முருகா
வெளங்கிப் பாரு முருகா
வேலு விளுந்திருச்சி முருகா
வெனை வந்திரிச்சி முருகா
வேணாம் சண்டை முருகா
வேலில்லா பாலகனை நானுமிங்கே
வீசியே வெட்ட மாட்டேன்
வீட்டுக்கோடி தாயிடம் வேண்டி
வேறவேலும் விரைவாய் வாங்கிவாரும்
வேகமாய் வீசியே கொல்லப்பாரும்
கொன்றாலும் நானும் சாவேனோ
கோழியாய் மயிலாய் வருவேனோ
கொஞ்சம் திரையப் போடவா
கோடியில் தள்ளி நிக்கவா?"

தங்கவேலுக்கு எப்படி முருகன் கையில் இருந்து கீழே விழுந்த வேலை எடுப்பது என்று தெரியவில்லை. திரையை போடுவதா? என்ன இல்லாத வழக்கமாக இருக்கிறது? கைவலியோ தாங்கவில்லை. இந்த ஆட்டம் முடிய வரைக்கும் தாங்குமா கை? ஏன் இதில வந்து மாட்டினோம்? கோபத்துடன் பாடினார்,

"வம்புவார்த்தை பேசிநிக்கும் அசூரா
வடிவேலும் வண்ணத்தோகை மயிலும்
வீசுமிக் கொடியில் விளங்கும்
வண்ணச்சேவலும் வெறும் சின்னமடா
வீரச்சிங்க மடாநானு மிங்கே
வெட்டி உன்னை வீழ்த்தவே
வாளும் வேலும் வேணுமோடா
வெறுங்காலே எனக்கு போதுமடா
வீசி உன்னை உதைக்கவே
விழுந்து நீயும் சாவாயடா
அகமும் புறமும் அடக்கவேணும்
அறிந்து கொள்ளிதை அறியாமூடா"

என்று ஒரு நூலைச்சுண்டி இழுக்க, முருகன் பொம்மை ஓடிப்போய் சூரன் தலையை உதைக்க, சூரன் தலை கீழே விழுந்தது. தங்கவேல் சோர்ந்து அமர்ந்தார். வழக்கம்போல் நிகழ்ச்சி நடக்காதது தருமலிங்கத்துக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் தங்கவேலரினால் நிகழ்ச்சியை தொடர முடியாதது அறிந்து, திரையை மூடிவிட்டுப் பாடலானார். தங்கவேலரும் அவருடன் சேர்ந்து கொண்டார்.

"ஏறுமயிலேறி விளையாடும் முகமொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகமொன்றே
கூறுமடியார்கள் வினைதீர்க்கும் முகமொன்றே
குன்றுருவவேல் வாங்கி நிற்கும் முகமொன்றே
மாறுபடை சூரரை வதைத்த முகமொன்றே
வள்ளியை மனம் புணரவந்த முகமொன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளவேண்டும்
ஆதியருணாசலமமர்ந்த பெருமாளே"...

மக்கள் மகிழ்ந்து கை தட்டினார்கள். காசு போட்டு வெளியே போனார்கள். சூர சம்காரம் பொம்மலாட்டம் இனிது முடிந்தது.

தருமலிங்கம் ரூவாய் நோட்டு காசுகளை பொறுக்கி ஒரு தகர டப்பாவில் சேகரித்தார். தங்கவேல் பொம்மைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது தங்கவேல் சொன்னார், "தப்பா நெனச்சிக்காதீங்க. பாட்டும் மறந்து போச்சு. பார்வை மங்குது. என் கையும் விழுந்து போச்சு. என்னால இயக்க முடியல. அதான் சீக்கிரமா முடிச்சிட்டேன். நான் இந்த வேலைக்கு இனிம லாயக்கில்ல. பொழப்புக்கு வேற ஏதாச்சும்தான் பண்ணணும். இத்தினி நாள் உழச்சு என்னத்தை சாதிச்சேன்? கால், கை கூட தேறாது போல இருக்கு"

சூரன், முருகனை இயக்கும்போது அவர்களிடையே இருந்த பகை உணர்வு, பங்காளிக் காய்ச்சல் இப்பொழுது வெகுவாகக் குறைந்து சக தொழிலர்கள் என்ற மனித நேயம் வெளிப்பட்டது.

"அட..என்னத்த இன்னும் சாதிக்கணும். வாழ்நாளெல்லாம் வித்தை காட்டியே வயித்த ரொப்பி, புள்ள குட்டிய வளத்து ஆளாக்கினதே பெரிய சாதனைதான். அதிகமா அலட்டிக்காம சொச்ச நாளைத் தள்ளணூம்" என்றார் தருமலிங்கம்.

"ஆங்..சொல்ல மறந்திட்டனே..என் பொண்ணு வள்ளி உண்டாயிருக்குன்னு நேத்து சேதி வந்துது"

"நல்ல சேதி. நல்லாயிருக்கட்டும். புள்ளை பொறந்தா முருகன் பேரை வெய்யுங்க"

"புள்ளை பொறந்தா உங்க பேரைத்தான் வைக்க சொல்லப்போறேன். உங்களாலதான் வள்ளி கழுத்துல தாலி ஏறிச்சு. உங்க கடனை எப்படியாச்சும் தலய வித்தாவது அடைச்சிடுறேன் பொறுத்துக்கங்க" என்றார் தங்கவேல்.

தருமலிங்கம் ஒரு மனநிறைவுடன், சொன்னார்:

"அட அதைப்பத்தி கவலைப்படாதீங்க. பணமா பெரிசு. ஏதோ எனக்கு அப்ப கொடுக்க வசதிப்பட்டது. ஒரு நல்ல காரியத்துக்குத்தானே கொடுத்தேன். திருப்பி கொடுக்க உங்களுக்கு வசதி இல்லாம போயிருச்சு. போனா போவட்டும். பணம் திரும்ப வந்து இப்ப எனக்கு என்ன ஆகணும். தலையிலயா கட்டிட்டு போகப் போறேன்? நான், என்னுதுன்னு சொல்றது அகங்காரங்கள் போகணும்னு சொல்றதுதானே சூர சம்காரம்... கைக்கு மொதல்ல வைத்தியம் பண்ணிக்கங்க... இந்தாங்க இன்னிக்கு கெடச்ச பணம்... நீங்களே வெச்சுக்குங்க இதை... பொண்ணு வளைகாப்புக்கு பணம் வேணுன்னா கூச்சப்படாம கேளுங்க தாரேன்..."

எல்லே சுவாமிநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline