Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
கெங்கோபதேசம்
அக்னிக் குஞ்சு
- ரோகாந்த்|ஜனவரி 2003|
Share:
மார்பில் முகம் புதைத்து தோள் குலுங்கினவளை யாரோ மூர்க்கமாய்ப் பிடித்து இழுத்தார்கள்.

தலை விரிந்து கிடந்தது. ஸ்கூட்டர் தூக்கி எறிந்த கோரம் அவள் நெற்றியில் கட்டாய் இருந்தது. ''ராசா யென் ராசா..'' என்று அதன் மேல் விழுந்து புரளத் தூண்டியது. சுற்றிலும் அவளைப் பிடித்துக் கொண்டார்கள். ''பாடியைத் தொடாதீங்கம்மா...'' என்று நெருங்கவிடாமல் தடுத்தார்கள்.

''ஏதுடி... ஏதுடி..'' மேலே வாய் வராமல் பிள்ளையைப் பிரிந்த சோகத்தில் மீனாட்சியம்மாள் தவித்தாள்.

இந்த க்ஷணம் 'அது' வாகிவிட்ட அந்த வெள்ளைத் துணி உடல்; இன்று காலை வரை இப்பொழுது தன் நிலையே இல்லாமல் துடிக்கிற இந்துவுக்குப் புருஷன். தவிக்கிற மீனாட்சியம்மாளுக்கு மூத்த பிள்ளை.

அது இமைக்கிற நேரத்தில் நடந்தது.

திரும்பிய வேகத்தில் லாரியோடு முட்டி மோதிக் கொண்ட எரிச்சலில் அந்த ஸ்கூட்டர் தூக்கி எறியப்பட்டது. தவறி பல்லைக் கடித்ததும் மூளைக்குள் தட்டுகிற ஒரு மின்னல் வெட்டோடு சரி. விழுவதற்குள் ஆகாசத்தில் பறந்த இடைப்பட்ட நேரத்தில் உதிர்த்த 'அம்மா' என்கிற வார்த்தையோடு சரி, அதன் பிறகு இந்து மயங்கித்தான் போனாள்.

தெளிந்தபோது தலை இறுக்கமாய் இருந்தது. விபரீதம் நிழலாய் நெருடியது. இந்த விஷயம் காதில் திணிக்கப்பட்ட போது மனசு வாங்கிக்கொள்ள வேயில்லை. வாங்கி கொண்டபோது நிச்சயம் தாங்கிக்கொள்ளவில்லை.

மனசுக்குள் யாரோ கைவிட்டுப் பிசைந்தார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட இருதயம் பிடுங்கி எடுத்தார்கள். வெள்ளைத் துணி மூடி இருந்த உடலைப் பார்க்கப் பார்க்க அடிவயிற்றில் இருந்து என்னமோ பந்தாய்ச் சுருண்டது. என் புருஷன் என் சொத்து என் சொந்தம் என்றெல்லாம் அங்கங்கமாய் முகம் புதைத்த உடல் கூறாய்க் காட்சிக்கு வைத்து எட்டி நின்று பார்க்க குறுக்கே யாரோ கைநீட்டி நின்றபோது சகலமும் இருண்டுபோனது. சின்னச் சின்னதாய் அரவணைத்த புருஷன். மடியில் போட்டு தலைகோதி வாழ்வைக் கற்றுக் கொடுத்தவன். சுகவீனம் என்றபோது இரவெல்லாம் இமை கொட்டக் கொட்ட விழித்திருந்து கால் பிடித்துவிட்டு கதை பேசி அனுசரணையாய் தாங்கிக் கொண்டவன். நகக் கணுவிலும் நிரம்பியிருந்தவன், நாராய்க் கிடக்க, பார்த்தபோது ஓடிப்போய் மடியில் தூக்கிக்கொள்ள ஆவேசம் அவதரித்தது. தடுக்கக் தடுக்க அதிகரித்தது.

இந்து அல்லாடினாள். யாரோ இரண்டு தெரிந்த முகங்கள். ஆதரவாய் பிடிப்பதாய் இறுக்கியிருந்தது. ஆஸ்பத்திரி சடங்கு முடிந்து உறவு கையில் 'பாடி' ஒப்படைக்க இந்து உச்சத்துக்குப் போனாள்.

வயிற்றுக்குள் ஒரு அக்னிக்குஞ்சு ஜனித்தது. தகித்தது. தீயாய்ச் சுட்டது. உடலெங்கும் பற்றி எரிந்தது. சுருண்டு போனாள்.

''அக்னிக் குஞ்சு மாதிரி ஒரு குழந்தை பெத்துக் கணும்... பாரதியோட அக்னிக்குஞ்சு மாதிரி. இங்கவெந்து தணிய வேண்டிய விஷயங்கள் ஏராளம். அதிகம்பேர் பல்லை வெள்ளையா வைச்சுக்கறதுலயே திருப்திப்பட்டுப் போயிடுறாங்க... மனசுக்குள்ள அத்தனையும் சாக்கடை... அத்தனை விஷக்கிருமியும் ஆரோக்யமாய் வளர்ந்து வர்ற சாக்கடை... இதெல்லாம் மீறி நிறைய சாதிக்கணும்னு ஆசை. ஆனா இதுவரை நா செஞ்ச காரியங்களோட நெட் ரிஸல்ட் ஸெல்· டெவலப்மெண்ட்தான்... இனியா வது நீங்க என் மனைவியா வந்த இந்த நல்ல நேரத்துலயிருந்தாவது நல்லபடியா நடக்கணும். அதுக்கு அக்னிக்குஞ்சு மாதிரி குழந்தை பெத்துக்ணும், நேசம் கற்றுக் கொடுக்கணும், மனிதனாய் வளர்க்க வேணும்..."

தலையணையில் சாய்ந்து நீளமாய்ப் பேசிப் போனவனைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாய் இருந்தது. இது என்ன ரகம்...? இது ·பர்ஸ்நைட்; எல்லாம் 'நா' கடித்து கை உதறி காதுக்குள் கிசுகிசுத்து ரூமுக்குள் தள்ளிப்போன ·பர்ஸ்ட் நைட். கொஞ்சம் படபடப்பாய் இருந்தது. நெஞ்சுக்குள் ஒருவிதமான வலி. "வெரிகுட்... நல்ல பொண்ணு. எப்பவும் இப்படியே ·பர்ஸ்ட் ரேங்க் எடுக்கணும்" என்று ஸ்கர்ட் பருவத்தில் மிஸ் செல்லமாய் கன்னத்தைத் திருகிவிட்ட மாதிரியான வலி.

நீண்ட மெளன இடைவெளிக்குப் பிறகு சட்டென "அக்னிக்குஞ்சு மாதிரி குழந்தை பெத்துக்கணும்" என்று சொன்னதைக் கேட்டபோது பட்டென்று யாரோ கையைப் பற்றிகொண்டு நந்தவனத்துக்குள் கூட்டிப்போன மாதிரி இருந்தது. சகஜமாய் முகம் பார்க்க முடிந்தது. கையைக் கன்னத்தில் தாங்கிக்கொண்டு பார்த்த பார்வையில் ஒரு அரவணைப்பு இருந்தது. 'மிரளாதே. நான் உன் புருஷன். சகலத்திலும் கைகோர்த்து நடை போடப்போகிறேன்' என்கிற மாதிரி இருந்தது.

இந்து அமைதியாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நெற்றியில் விழுந்த தலைமுடியை கைகளால் ஒதுக்கிக் கொண்டு மெதுவாய்ச் சொன்னான்:

"அநேகமாக குடும்பத்துல எல்லாப் பிரச்சனை யோட தீவிரத்துக்கும் மூலம் இந்த அந்தரங்கமான விஷயந்தான்... இது ரெண்டு பேருக்கும் எவ்வளவு நிம்மதி கொடுக்குமோ அதப் பொறுத்துத்தான் வாழ்க்கையும்..." சிறிது நேரம் மெளனித்தான்.

"இந்தக் காரியம் நேசத்தில் இருந்துவர வேண்டும். இயல்பான நேசம். நீங்க என்கிட்ட இயல்பாயிருங்க...

"வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு"

இந்த உறவுதான் உசத்தி. வீணை அதோட இயல்பாய் இருக்கும். அதேமாதிரிமீட்டுகிற விரலும் அதோட இயல்பாய்த்தான் மீட்டும். இந்த இயல் பில்தான் நல்ல சங்கீதம் பிறக்கும். வீணை பழுதானாலும், மீட்டுகிற விரலில் ஜீவன் இல்லை யென்றாலும் அபஸ்வரம்தான். இதுதான் ஆண் பெண் உறவுக்கு அடிப்படை... வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் ஆதாரம்; உங்களுக்குப் புரியறபடி சொன்னேனா..."

"புரியுது... நம்ம ரெண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் அவங்க அவங்க குறை நிறைகளோட ஏத்துக்கணும்னு சொல்றீங்க..."

"குட் நீங்க என்ன சரியாவே ரிஸீவ் பண்ணி யிருக்கீங்க..."

இந்து சந்தோஷப்பட்டாள். "நா உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா..."

"தாராளமா... நம்ம புத்தி, ரசனை, விருப்பு, வெறுப்பு இதெல்லாம் பகிர்ந்து ஒருத்தரப்பத்தி ஒருத்தர் தெளிவடையறதுக்குத்தான் இது... இந்த தெளிவு தான் நமக்குள்ள நல்ல நேசத்தை வளர்க்கும்."

"என்னை நீங்க நாங்கன்னு கூப்பிடறது அவஸ்யந் தானா..?"

"அவஸ்யத்துல கூப்பிடறதில்ல... அறிமுகமேயில் லாத ஒருத்தர பாத்தமாத்திரத்துல நீ நாங்கறது அபத்தம். அது ஆரோக்யமும் இல்ல. தாலி கட்டின மாத்திரத்துல நீங்க என்னோட மனைவிதான். அதுக்காக வாடினு இழுத்துப் போடறது மடத்தனம். இப்ப உக்காந்து பேசறமே, இந்த இடத்துல மனசுக்கு மனசு முடிச்சுப் போட்டுக்கணும். பேசப் பேச எதிராளியைப் புரிந்து போகும். புரிதலில் நேசம் உயர்ந்து நிற்கும். இந்த நேசத்தில் வாடிங்கறதோ வாங்கங்கறதோ முன்னாடி நிக்காது. நேசப் பிணைப்புதான் முன்னாடி நிற்கும். இப்ப எப்படி 'நீங்க நாங்க' ன்னு உங்கள கூப்பிடுறேனோ அந்த மாதிரி சட்டுனு 'நீ நா' ன்னு என் வாயில வரணும். அதுக்கு நீங்க இன்னும் நெருக்கமா எனக்குள்ள வந்து உக்காரணும். நெருக்கம்னா வெளி முகத்த தாண்டி சத்யமுகம் பார்க்கிற நெருக்கம். இந்த சத்யமுகம் பார்க்கிற தெளிவு கைபிடிச்ச நாலு நிமிஷத்லயும் ஏற்படலாம்... நாலு வருஷங்கூடப் பிடிக்கலாம்.

"எனக்கு நாலு வார்த்தை பேசினதுலயே தெளிவு ஏற்பட்டுருச்சு."

சத்தியமுக சந்தோஷம் மட்டுமே நிலையாகிப் போனது. சகலத்திலும் சாந்தப்படுத்தியது. சுழற்றி சுழற்றி அடிக்கிற துக்கத்தை தூவானம் ஆக்கியது. நெஞ்சுக்குள் ஏதோ அழுத்தமாய் மண்டிக் கிடந்தது. பழைய நினைவுகளே கண்முன் விரிந்து கொண்டி ருந்தது.

இந்து இருட்டுக்குள் உத்தரம் பார்த்துக் கிடந்தாள். இப்பொழுது அது முடிந்து வாரக்கணக்கானது. வீடு முழுக்க மனிதர்கள் இருந்தார்கள். நாளை சடங்குக் காய் குழுமியிருந்தார்கள்.

இத்தனை நாளும் இவர்கள் முன்னால் காட்சிப் பொருளானாள்.

சுற்றம் சூழ வந்தார்கள். ஒரு பாடு அழுது தீர்த்து மூக்கு சிந்தி முகம் கழுவிப் போனார்கள். அத்தனை பேரும் துக்கம் பகிர்ந்துகொண்ட களைப்பில் கலைத்து போனார்கள். இது சடங்கு. கூடி நின்று கட்டிக்கொண்டு அழுகிற சடங்கு. மெய் துக்கம் கரைந்த பின்னும் இழுத்துப் பிடித்துக் கொண்டு அழுகிற கூட்டம். வேதனை பகிர்ந்துகொள்கிறேன் பேர் வழி என்று ரணப்படுத்துகிற கூட்டம். ஆறுதல் சொல்வதாய் தங்களை வெளிப்படுத்துகிற ரகம். எல்லோரும் அதைத்தான் செய்தார்கள். இழவு என்றால் ஒப்பாரி, ருசி பிரித்தாகிவிட்டது. மாரடிக்கிற ஒப்பாரியில் வேதனை தெரியாது. முடித்தலின் அவசரம் இருக்கும். வழக்கமாய் நடக்கும் ஒப்பாரிச் சடங்கு இன்றும் முடிந்தது.

"இந்து இங்க பாரும்மா குழந்தை அழுது."

அம்மா தட்டி உலுக்கினாள்.

சிந்தனை வீட்டிற்குள் அடி எடுத்து வைக்க எல்லோரும் வேடிக்கை பார்ப்பதாய்ப் பட்டது. நிறையப் பேர் தழையத் தழைய புடவை கட்டி வளைய வருகிறார்கள், சித்தி, அத்தைப் பெண்கள், அம்மா, அப்பா, மாமா... உறவு சூழ்ந்திருந்தது. "இந்தச் சின்ன வயசில்..." என்று பாடினார்கள். வயதுக்கும் அனுபவத்துக்கும் பாலமிட்டுப் பார்ப்பது அத்தனை ஆரோக்கியமில்லை. இந்தக் கொஞ்ச நாளில் ஆயுசு பரியந்தமும் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்த சுகம் இருக்கிறது. கண்மூடி மடியில் கிடக்கும் புருஷனை வருடச் சொல்கிறது.

குழந்தையை எடுத்து மடியில் போட்டுக் கொண்டாள். பொக்கை வாய் திறந்து சிரித்தது. மூக்கைக் கிள்ளியது. குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன விஷயம்" அவன் அமைதியாய்க் கேட்டான். "நா லேசா கோடிட்டு காமிப்பேன். நீங்கதான் புரிஞ்சுக்கணும்." இந்து கண் சிமிட்டினாள்.

"சொல்லு."

"பெட்டையினோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டை தருங்குஞ்சை காத்து மகிழ்வெய்தி
முத்தவுணவு கொடுத்தன்பு செய்திங்கு..."

"நிஜமா..." அவன் கண்கள் விரியக் கேட்டான்.

இந்து தலையாட்டினாள். "அக்னிக்குஞ்சு பெத்துக்க அடைகாத்துக்கிட்டிருக்கேன்."

குதித்தான். வீடு முழுக்கக்கூட்டிச் சொன்னான். பரபரத்தான். இரவு தூங்காமல் புரண்டான். "என்னம்மா..." என்று இந்து தலைகோதிக் கேட்ட போது, மொத்தமாய் அவளைக் கைகளுக்குள் வாங்கிக் கொண்டான். அவள் காதோரமாய் கலவரமாய்க் கேட்டான்.

"ரொம்ப பெயின் இருக்குமா"

"பெயின் இல்லாதது எது... குழந்தை பெத்துகிறது இத மீறுன விஷயமில்லயா? பெயின் எல்லாம் எப்படி இருக்குமோ தெரியாது... அந்த க்ஷணம் அன்வர நினைச்சுக்கப் போறேன்."

"யாரு..."
"நா உங்கிட்ட சொன்னதில்லையா... ஏழு இந்தியர்கள் படிச்சுருக்கீங்களா? கே.ஏ. அப்பாஸ் எழுதினது."

"கோவா சுதந்திரப் போராட்டம் பத்தினதா... சொல்லு."

"ஆமாம். அதுல அன்வர்னு ஒரு கவிஞன் எதிரிங் ககிட்ட மாட்டிக்குவான். சித்ரவதையில அவனுடைய ரெண்டு பாதங்களையுமே கத்தியினால பாளம்பாளமா கீறிடுவாங்க. கடைசில என்ன செஞ்சும் அவன்ட்ட இருந்து ரகசியங்களை தெரிஞ்சுக்க முடியாதுங் கறப்போ அவன தூக்கிக் கொண்டு போய் கோவா பார்டர் 'நோ மேன்ஸ் லேண்ட்' ல போட்டுடுவாங்க. இந்த நோமேன்ஸ் லேண்டில் இருந்து இருநூறு அடி இந்தியா. அடிமைக்கும் சுதந்திரத்துக்கும் இடை வெளி இருநூறு அடி. அந்தப் பக்கம் இந்திய எல்லையில், போராடிய சக தோழர்கள். அந்த போர்த்துக்கீசிய அதிகாரி "இப்போது ஊர்ந்தவாறு இந்தியாவுக்கு போ" ன்னு உதைக்கிறான். அப்பவும் அன்வர் நிக்கமுடியாமல் தடுமாறி எழுந்து நின்னு 'இந்தியர்களான நாங்கள் ஊர்ந்து செல்வதில்லை' ன்னு சொல்லி நடக்கிறான். என்ன கொடுமை, ஒரு சின்ன முள் குத்தினாலே நாம பத்து நாள் நொண்டி நடக்கறோம். அன்வருக்கு பாதம் பூராப் பாளம் பாளமா அறுத்து கூறு போட்டாச்சு. நிக்கறதே நினைக்க முடியாத காரியம். அந்தக் காலோட ரத்தம் சொட்டச் சொட்ட மணல் குத்த வெயில் தகிக்க இரு நூறு அடி நடந்து தன் சக தோழர்கள் காலடியில் வந்து விழுவான். எத்தனை அழுத்தம் எத்தனை வெறி, எத்தனை லட்சியப் பிடிப்பு. படிச்சுட்டு நாலு நாள் சரியா சாப்பிடல. அன்னேல இருந்து எல்லாம் அன்வர்தான். என்ன கஷ்டம் வந்தாலும் அத நினைச் சுக்குவேன். எல்லாம் தூசாப் போய்டும்."

இப்பொழுதும் அன்வர்தான் தெம்பு ஊட்டினான். இந்த வீட்டில் அடித்த ஒப்பாரியும், "வாழ்க்கையே இருண்டு போச்சேடி" என்று துக்கம் திணித்த புலம்பல்களையும் செவியில் ஏற்றிக் கொள்ளாமல் இருக்க முடிந்தது. நாளை சடங்குக்காய் இங்கு குழுமியிருக்கிறார்கள்.

நிரம்பி வழிந்த கூட்டத்திற்குப் படுக்க இடம் இல்லை. விரிப்பு பத்தவில்லை. தலையணை காணவில்லை. எல்லோரும் நெருங்கிய சொந்தம் பார்த்து குழுக்குழுவாய்ப் பிரிந்து இருந்தார்கள். மொட்டை மாடி அமர்க்களப்பட்டது. இழுத்துப் பிடித்து அழுது தீர்த்ததற்கு ஈடுகட்ட குதூகலம் வரவழைத்தார்கள். ஒரு பொடியனை ஆட விட்டு வேடிக்கை பார்த்தனர்.

இந்த அரவத்தில் அரைத் தூக்கத்திலிருந்து இந்து விழித்தாள். மடியில் கிடந்த குழந்தையைப் படுக்கை யில் போட்டாள். அதையே பார்த்துக் கொண்டிருந் தாள். அப்பாவின் முகம் போட்டோவில் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான் இந்தக் குழந்தை. இந்த நர்மு குட்டி பிறந்த நேரம் சரியில்லையாம். நிறையப்பேர் சொல்லிப் போகிறார் கள். துக்கிரியாம். கொடுத்து வைத்தது அவ்வளவு தானாம்.

அமைதி சுகமாய் இருந்தது. மனசு அதையே சுற்றிச் சுற்றி வந்தது. திடுமென சின்னதாய் உடல் நடுங்கியது. நர்மு குட்டியை இறுக்கிக் கொண்டாள். கிச்சனின் லைட் வெளிச்சம் தெரிந்தது. மீனாட்சியம்மாள் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்து நன்றாய்ப் பார்க்க முடிகிற மாதிரி நகர்ந்து கொண்டாள். மீனாட்சியம்மாளின் முகத்தில் சோகம் ஆழமாய்ப் படிந்திருந்தது.

போய்த் தாங்கிக் கொள்ளலாமா... என் புருஷன் மட்டும் போகவில்லை. ஒரு குழந்தையும் போயிருக் கிறது. முகத்தில் மூத்திரம் அடித்ததில் இருந்து முப்பது வருஷ முகபாவம் காட்டிய குழந்தை போயிருக்கிறது.

பெரிய அடிதான். இந்த க்ஷணம் வரை ஒரு வார்த்தை பேசவில்லை. மார்பில் அறைந்து ஒருபாடு அழுது தீர்த்ததோடு சரி. யாரிடமும் எதுவும் பேசவில்லை.

இந்து எழுந்து மீனாட்சியம்மாள் பக்கம் போனாள். மீனாட்சியம்மாள் இறுக்கமாய்க் கைகளைப் பற்றிக் கொண்டாள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. மெளனமாய் இருந்தார்கள். நாக்கு கடிபட்டுப் போனதில் மேலும் கீழுமாய் தாடைகள் தவித்துப் போன அவஸ்தை...

யார் யாரைத் தாங்கிக் கொள்வது...

'போடி துக்கிரி' என்று புலம்பாமல் தவியாய்த் தவித்த பார்வையைப் பார்க்கையில் அம்மா என்று கட்டிக் கொள்ளத் தோன்றிற்று.

துக்கம் கலைக்காதே, கலைத்தல் நிரந்தரமில்லை. திளைத்து வரும். அது கரைய வேண்டும்.

இப்பொழுது மீனாட்சியம்மாள் பிடி தளர்த்தி யிருந்தாள். இந்து மெளனமாகவே தன் இடத்துக்கு வந்து உட்கார்ந்தாள். மீனாட்சியம்மாள் இந்து வையே பார்த்துக் கொண்டிருந்தாள். திடுமென என்னவோபோல் தன் வெறும் கழுத்தைத் தடவிக் கொண்டாள்.

இந்து கழுத்தைத் தடவி தாலியை இறுக்கிக் கொண்டாள்.

வெளியில் இன்னும் பனி மூட்டம் இருந்தது.

விடியல் நேரம்.

இது இறுதிச் சடங்கு.

பாட்டி, அம்மா, அத்தை, புடவைகளாய்த் கூடியிருந் தார்கள்.

எல்லோரும் பிரமித்துப் போனார்கள். நாள் தவறாமல் மாலை வேளை நீளநீளமாய் ஒப்பாரி வைத்து துக்கம் அனுஷ்டித்த கூட்டம் வாயடைத்துப் போயிற்று.

புத்தி பிசகிப்போச்சா இதுக்கு...?

"நல்லதோ கெட்டதோ வழிவழியா செஞ்சுட்டு வர்ற வழக்கம் மீர்றது அத்தனை யோக்யமில்ல... இப்படி யாராவது குழந்தை மாதிரி அடம் பிடிப்பாளா? வேதனைதான், அதுக்கு என்ன பண்ண முடியும்! இப்படி வந்து உக்காரு. எல்லாரும் கூடியிருக்க றப்போ ரகளை பண்ணாதே..."

சித்திதான் முதலில் வாய் திறந்தாள்.

சின்னதாய்ச் சலசலப்பு தொடங்கியது.

"புருசனே போனப்புறம் அவன் கட்டுன தாலியை இழக்கறதா பெரிசு. பாரேன் இது பண்ற அடத்தை."

இந்து மெளனமாய் உட்கார்ந்திருந்தாள். எல்லாரையும் பார்க்க எரிச்சல் பிடுங்கித் தின்றது. முன்னால் தட்டில் பந்தாய்ப் பூ இருந்தது. தாலி அறுத்துப் போட ஒரு பாத்திரத்தில் பால் இருந்தது.

இந்து கண்களை மூடினாள்.

நிறையப் பூ வந்து விழுந்தது. நாசிக்கு அருகே நெருக்கமாய் கரம் வந்து சுற்றி வளைத்து முகத்துக்கு நேராய்' மார்பு அகல இதைக் கட்டும்போது நெஞ்சுக்குள் குடைந்தது. நிறையக் கால்கள் தெரிந்தன. ஒரே இரைச்சல். சுற்றி வளைத்து நெருக்கமாய் நின்றவரின் முகம் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

கழுத்தில் முறுக்காய்க் கிடந்தது புதுக் கயிறு. இது புது உறவு. புதுப்பாதை. இதில்தான் உனக்குப் பயணம். ஆயுசு பரியந்தமும் துணையாய் கை கோர்த்தவனுடன் நடை பயில வேண்டும். ஒருத்தரை ஒருத்தர் தாங்கிக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். பெற்றதுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

அத்தனைக்கும் மூலமாய் இருந்த கயிற்றை அறுத்தெறி என்கிறபோது வேதனை பீறிடுகிறது. ஆவேசம் வருகிறது. என் புருஷன் கட்டியது, மனசு சம்பந்தப்பட்டது. இதை அறுத்தெறிந்துவிட்டு என்ன கிழிக்கப்போகிறார்கள்.

விதவை பாவம் என்று பரிதாபப்படபோகிறார்கள். சகுனம் பார்க்கிறபோது வயிறெரியப் போகிறார்கள். காஞ்ச நெலம், வெட்டிவிட்டா கப்புன்னு புடுச்சுக்கும்' - கொச்கையாய் சினிமாத்தன வசனம் பேசப் போகிறார்கள். எல்லோரும் அதைத்தான் செய்து வருகிறார்கள். என்ன செய்தால் எப்படி மசியும் என்று மூளை கசக்கிக் கொள்ளப் போகிறார்கள். இந்தக் குரூர சமூகத்தில் இந்தத் தாலி பாதுகாப்பாய் இருக்கிறது. மரியாதையாய்ப் பார்க்க வைக்கிறது. உண்மையிலேயே இங்கு வெந்து தணிய வேண்டி யவை ஏராளம். எடுத்ததற்கெல்லாம் சடங்கு! ஊரைக் கூட்டு! கொட்டடி! ஒப்பாரி வை! தனி மனசை நிம்மதியாய் விடாதே! போட்டு நசுக்கு! கூட்டம் கூடி மிதி! 'உனக்கு வாழ்க்கை அவ்வளவுதான்' என்று எல்லோரும் சேர்ந்து செய்கிற ஒவ்வொரு செயலிலும் அணு அணுவாய் அடிபட்ட மனசுக்குள் இருக்கிற கொஞ்ச நஞ்ச தெம்பையும் அழுது பிழிந்து எடுத்துவிடுங்கள்.

"முடியாது."

"வம்பு பண்ணாத"

"முடியாது."

"ஊர் வயித்தெரிச்சல் கொட்டிக்காத."

"சுதந்திரம் கொடுத்து வளத்த லட்சணத்தப்பாரு... அப்பவே கால ஒடிச்சு அடுப்படில போட்டிருக்கணும். வேலைக்குப் போய்ச் சொந்தமா சம்பாதிக் கிறாயில்லயா, அதான் திமிரு... இதச் சொல்லி குத்தமில்ல, இதோட அப்பனச் சொல்லணும்..."

அப்பா இந்த வார்த்தைக்கு பலியானார்.

"ஊர் கூடி நிக்கறப்போ பேத்தாதே..."

ஊர்... ஊர்... இந்த ஊர் எதுக்குக் கூடல! எல்லாத் துக்கும் கூடிச்சு. கல்யாணத்துக்குக் கூடிச்சு, அந்தக் கோர விபத்துக்கும் கூடிச்சு... கூடி நின்று கதை பேசியது. வேடிக்கை பார்த்தது. இப்பொழுதும் அதற்காகத்தான் நிற்கிறது.

"மரியாதையாய் வந்து உக்காரு."

அப்பா சீறினார்.

"உனக்கு என்னடி ஆச்சு."

அம்மா தலையில் அடித்துக்கொண்டாள்.

"இப்ப தாலி அறுத்து என்ன பண்ணப்போறீங்க."

இந்து அழுத்தமாய்க் கேட்டாள்.

தாலி கட்டியவன் புருஷன் என்ற ஸ்தானத்தில் மட்டும் இருக்கவில்லை. அவளின் ஒவ்வொரு ஸெல்லிலும் கலந்திருந்தான்.

"சுகமோ துக்கமோ சகலத்துலயும் கூட இருப்பேன் என்று கட்டிய தாலி; இப்ப கழட்டுன்னா முடியாது."

இந்த இடத்தில் அப்பா ஓங்கி அறைந்தார். வாய்க்கு வந்தபடி இரைந்தார். கூந்தல் பிடித்து இழுத்து உட்கார வைத்து குங்குமம் அழித்தார்.

இந்து எட்டித் தள்ளினாள். குங்குமம் எடுத்து அப்பிக் கொண்டாள்.

அந்த இடம் போர்க்களமானது. யாருக்கும் வேதனைப் படுகிற மனசு முக்கியமில்லை. ஊர்ப் பேச்சும், வழிவழி வருகிற சடங்கும்தான் முக்கிய மானது.

காரியம் தன் கைமீறிப் போய்விட அப்பா கத்தினார்.

"போ, இந்த க்ஷணமே வெளியே போ. இனி இந்தக் குடும்பத்துக்கும் உனக்கும் எந்த பந்தமுமில்ல சொந்தமுமில்ல..."

அம்மா அழுதாள்.

முதன் முதலாய் 'இந்த இடத்துல மனசுக்கு மனசு முடிச்சுப் போட்டுக்கணும்' என்று இறுக்கமாய் உட்கார்ந்து கொண்ட புருஷன் சிரித்தான். "அக்னிக் குஞ்சு மாதிரி குழந்தை பெத்துக்கணும். அதுக்கு நேசம் கத்துக் கொடுக்கணும். உண்மை தேட வைக்கணும். உருப்படியா சாதிக்கிற மாதிரி வளர்க் கணும்" என்றவன் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

நர்மு குட்டியை பார்த்தாள். இந்தக் குழந்தைக்கு எல்லாமாய் நிற்க வேண்டும். அப்பாவாய், அம்மா வாய், ஸ்நேகிதியாய், குருவாய், சிஷ்யனாய்... இந்தத் தழல் வீரத்தில் எல்லாம் பொசுங்கட்டும்! உண்மை தெரியட்டும்! உணர்வு புரியட்டும்! உன்னதம் பிடிபடட்டும்!

நர்மு குட்டியை எடுத்துக் கொண்டாள்.

அன்வர் பாதம் முழுக்க ரத்தம் சொட்டச் சொட்ட நடந்தான்.

இந்து தீர்மானமாய் நடந்தாள்.

அத்தனை நேரம் எதிலேயும் கலந்து கொள்ளாத மீனாட்சியம்மாள் வேகம் வந்தவளாய் எழுந்தாள்.

"போதும். எல்லாரும் சேர்ந்து சடங்கு வழக்கம்னு அந்தக் குழந்தையை சாகடிக்காதீங்க. இந்தத் தாலிய அறுத்திட்டு உங்க பொண்ணுக்கு இன் னொரு கல்யாணம் பண்ணி வைக்கப்போறீங்களா, இல்லியே... புருஷன் செத்தா மூளியா இருக்கணும்! அதான் சம்பிரதாயம்! எல்லாம் பார்த்தாச்சு! அது நிம்மதியா இருக்கவிடுங்க."

இந்து கையைப் பிடித்துக் கொண்டாள்.

"உனக்குப் புருஷன், எனக்குப் பிள்ளை... துக்கந்தான். அவன் சொல்லுவானே, அக்னிக் குஞ்சு மாதிரி... இந்த நர்மு குட்டிய வளர்த்து ஆளாக்கு வோம். அழாதடி நீ எனக்குப் பொண்ணில்லையா... அதுக்கு முதபடி இதா இருக்கட்டும். தாண்டிப் போவோம் வா..."

ரோகாந்த்
More

கெங்கோபதேசம்
Share: 
© Copyright 2020 Tamilonline