பகவான் நாமத்தின் மகிமை
|
|
|
''கோணமே கோணம் கும்பகோணம் இராமர் விட்டதே பாணம் அது எங்கு சென்றதோ காணோம்''
சின்னக் குழந்தைகள் வேடிக்கையாகப் பாடும் பாடல் இது. இராமருடைய பாணத்திற்கும் (அம்பு) கும்பகோணத்திற்கும் என்ன தொடர்பு!? இருக்கிறது. திருமால் ஏந்தியுள்ள சங்கு சக்கரம், வில், வாள், கதை ஆகியவை பாஞ்சசான்னியம் எனப்படும். இதில் அவர் ஏந்தியுள்ள வில்லுக்கு சாரங்கம் என்று பெயர். பாணி என்றால் 'கை' என்று பொருள். சாரங்கபாணி என்ற திருநாமத்துடன் வில்லேந்திய விஷ்ணு எழுந் தருளியிருப்பது கும்பகோணத்தில் என்பதுதான் காரணம். பாஸ்கர க்ஷேத்திரம், குடமூக்கு, திருக் குடந்தை, தண்டகாரணிய §க்ஷத்திரம், கலியாணபுரம் என்று பல பெயர்களைக் கொண்டது கும்பகோணம். இங்கு காவிரியாற்றுக்கும் அரிசிலாற்றுக்கும் இடையே எழுப்பப்பட்டிருக்கிறது சாரங்கபாணி கோயில்.
கோயில் தோன்றிய வரலாறு
108 வைணவத் திருத்தலங்களில் முதலாவது இடத்தில் வைத்துப் பேசப்படும் பெருமைக்குரியது திருப்பதி. இங்குள்ள பெருமாள் ஒரு சமயம் மகா லட்சுமியின் கோபத்திற்கு அஞ்சி, கும்பகோணத்தில் இப்போதுள்ள கோயிலிருக்குமிடத்தில் ஒரு பாதாளத்தில் ஒளிந்து கொண்டார். திருமகளும் பெருமாளைத் தேடி, பிறகு நீண்டநாள் தவமிருந்து முடிவில் இங்கு வந்து இறைவனை அடைந்ததாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் பாதாள சன்னிதியில் பாதாள சீனிவாசன் என்றே இறைவன் அழைக்கப்படுகிறார்.
108 திருத்தலங்களில் இரண்டாவது இடம் வகிப்பது திருவரங்கம். திருமகள் கும்பகோணத்தில் ஹேமபுகரிணியில் பொற்றாமரையில் தோன்றி ஹேமரிஷி என்பவரால் கோமளவல்லி என்ற பெயருடன் வளர்க்கப்பட்டார். அரங்கப்பெருமான் சாரங்கபாணியாய், யானைகளும் குதிரைகளும் பூட்டப்பெற்ற இரதத்தில் ஏறி கும்பகோணம் வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். பின்னர் கோமளவல்லியும், ஹேமரிஷி மற்றும் அன்பர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க அங்கேயே நிரந்தரமாகக் கோயில் கொண்டார் என்பது இத்தலத்தின் வரலாறு. இறைவனுடைய கர்ப்பக் கிரகம் அவர் ஏறிவந்த இரதத்தின் முன்னால் இரண்டு குதிரைகளும் (பக்கத்திற்கு ஒன்றாக) பின்னால் இரண்டு யானைகளும் சங்கிலிகளால் இரதத்தோடு பிணைக்கப்பட்ட வடிவ அமைப்பு காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தத்ரூபமான சிற்ப வேலைப்பாடு வார்த்தைகளின் வருணணையில் அடங்காது.
பெருமாளின் கர்ப்பக்கிருகத்தில் குழந்தை உருவத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் கிருஷ்ணவிக்கிரகம் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் பேரழகுடையது. குழந்தைக் கண்ணனை ஏந்திக் கொண்டு உளமாரப் பிரார்த்தனை செய்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது அன்பர்களின் உள்ள நம்பிக்கையாகும்.
இறைவி சன்னிதி
இறைவனுடைய கருப்பக்கிரகத்திற்குப் பக்கத்தில் கோமளவல்லித் தாயாருக்கத் தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் அன்பர்கள் முதலில் தாயார் சன்னதியில் சென்று சேவித்து விட்டுப் பின்னரே சாரங்கபாணியைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு நியதி இங்கு கடைப் பிடிக்கப்படுகிறது.
மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் ஏழுபேர், பெரியாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கை யாழ்வார், ஆண்டாள் என்றழைக்கப்பட்ட கோதை நாச்சியார். இவர்களில் திருமழிசையாழ்வார் இவ்வூரில் நீண்டகாலம் வாழ்ந்திருந்து பெருமானை வழிபட்டு இதே ஊரில் முக்தியடைந்தார். இறை வனோடு இவர் உரையாடியதும் இறைவன் இவருக்குக் காட்சி கொடுத்ததும் மிகவும் சுவாரசிய மான ஒன்று.
ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் கோலத் தைக் கண்டு திருமழிசை ஆழ்வார் கேட்கிறார்.
''நடந்த கால்கள் நொந்தவோ நடுங்குஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ விலங்குமால் வரைச்சுரம் கடந்தகால் பரந்தகா விரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு''
என்று பாடுகிறார். இவ்வாறு படுத்திருக்கக் காரணம் என்ன என்று கேட்டுவிட்டு இதுவா இதுவா என்று தானாகவே தனக்குத் தெரிந்த காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார். எழுந்திருந்து பேசு என்று இவர் கேட்டதற்கு இணங்கி, பெருமாளும் தலையைச் சற்று உயர்த்தி வலது கையை மடக்கி, தூக்கிய தலையைத் தாங்கிக் கொள்ளும் கோலத் தில் திருமழிசை பிரானுக்குக் கட்டுப்படுகிறார். சட்டென்று இறைவனை அப்படியே அர்ச்சாவ தாரமூர்த்தியாய்க் (சிலைவடிவம்) கிடக்குமாறு ''வாழிகேசனே'' என்று மங்களா சாசனம் செய்து விடுகிறார். இதனால்தான் இக்கோலம் 'உத்தான உத்தான சயனப்பெருமாள் என்றும் வழங்கப் படலாயின.
நாதமுனிகளின் வைணவத் தொண்டு
நாலாயிரத் திவ்யப்பிரபந்தத் திரட்டுக்கும் இக்கோயிலுக்கும் தொடர்பு உண்டு. நாதமுனிகள் இல்லையென்றால் நமக்கு நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் கிடைத்திருக்காது. நம்மாழ்வார் சாரங்க பாணியின் அழகில் சொக்கிப் போய், ஆராவமுதே என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள் நாத முனிகளுக்குக் கிடைத்து அதை அனுபவிக்கும் பேறு பெற்றார். இவற்றைப் பாடிப் பரவசமடைந்த நாதமுனிகள் சிதறிக்கிடந்த மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் தேடி அலைந்து ஒன்று திரட்டி நாலாயிரத் திவ்ய பிரபந்தமாக்கி வைணவத்திற்குப் பெருமை சேர்த்தார். இந்தப் பெருமைக்கு இக்கோயிலுக்குப் பெரும் பங்குண்டு. |
|
இறைவன் கருணை
இக்கோயிலில் தங்கி, தம் வாழ்நாள் எல்லாம் பெருமாள் கைங்கர்யத்திற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்தவர் லட்சுமி நாராயணசுவாமி என்ற ஒரு பக்தர். தம்முடைய இடைவிடாத உழைப்பைத் தந்து அதற்குக் கிடைத்த பொருளையெல்லாம் சேமித்து இக்கோயிலில் மிக உயரமான ஒரு ராஜகோபுரத்தைக் கட்டி முடித்தார். இத்தொண்டினை மேற்கொண்டவர் திருமணமே செய்து கொள்ளாமல் இல்லற இன்பமும் துறந்து தனித்து வாழ்ந்து மறைந்தார். அவருக்கு ஈமக்கடன் செய்வதற்கு வாரிசு இல்லாமற்போகவே, ஒவ் வொரு ஆண்டும் அவர் மறைந்த ஐப்பசி அமாவாசையன்று இறைவன் மனமிரங்கி, தாமே கர்த்தாவாக முன்னின்று சிரார்த்தம் செய்து வருகிறார் என்பது இறைவனது திருவருளை புலப்படுத்துகிறது.
''நாவிற்கினிய நாராயணா என்னும் நாமத்தை நான் கண்டுகொண்டேன்'' என்று திருமங்கை ஆழ்வார் பரவசப்பட்டுப் பாடியதும் இங்குள்ள சாரங்கபாணிப் பெருமாளைத்தான்.
தீர்த்தப்பெருமை
கும்பகோணத்திற்கும் அங்குள்ள மகாமகக்குளம் மற்றும் பொற்றாமரைக்குளம் ஆகியவற்றிற்கு புராதனமான வரலாற்றுச் செய்தி ஒன்று கூறப்படுகிறது.
ஏற்படவிருக்கும் பிரளயம் ஒன்றை முன்னரே அறிந்த சிவபெருமான் பிரம்மனுக்குக் கட்டளை ஒன்றை யிட்டார். அதன்படி பிரம்மன் ஒரு குடம் அமைத்து அதில் அமுதத்தை நிரப்பி, படைப்பிற்குரிய விதையையும் வேதங்களையும் அக்குடத்திலிட்டு அதை மேருமலையின் உச்சியில் வைத்துவிட்டார். பின்னர் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தில் அக்குடம் மிதந்து கொண்டே சென்று சோழநாட்டை அடைந்தது. வேடனாய் உருவெடுத்து வந்த சிவபெருமான் ஓரம்பை ஏவி குடத்தின் மூக்கை உடைக்க அதிலிருந்து வெளிவந்த அமுதம் இரண்டு பிரிவாகி மேலே கூறிய இரண்டு குளங்களாயின; ஊரும் குடமூக்கு என்றழைக்கப்பட்டது என்பது வரலாறு.
கங்கை, காவிரி, யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, சிந்து, சரயூ ஆகிய ஒன்பது புண்ணிய நதிகள் ஒன்று கூடும் தீர்த்தம் இந்த மகாமகக்குளம் எனப்படுகிறது. இந்த பிரசித்தி பெற்ற வரலாற்றுடன் மற்றொரு பெருமையும் இக்குளத்திற் குண்டு. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமகத்து மக நட்சத்திரத்தன்று குரு சிம்மராசியில் வரும்போது இக்குளத்தில் நீராடுவதைப் புண்ணியமாகக் கருதுகின்றனர்.
விழாக்கள்
வருடத்தின் தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆனிமாதம் தவிர மற்ற பதினோறு மாதங்களிலும் இக்கோயிலில் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமாக உள்ளது. இது வேறெந்தக் கோயிலிலும் இல்லாத புதுமை. தசமி போன்ற சில விழாக்களிலும் கும்பகோணத்திலுள்ள மற்ற கோயில்களிலுள்ள பெருமாளையும் வரவழைத்து வீதியுலா வரிசையில் சேர்த்துக் கொண்டு தரிசனம் அளிப்பதும் ஒரு புதுமையே!!
டாக்டர் அலர்மேலு ரிஷி |
|
|
More
பகவான் நாமத்தின் மகிமை
|
|
|
|
|
|
|