|
|
குழந்தைப் பருவம் என்பது ஒரு சுவையான அனுபவம். வேடிக்கையும் விளையாட்டுமாய்க் குதூகலிக்கும் பருவம். இதிகாசங்களிலும் புராணங்களிலும் குழந்தைப் பருவத் தொடர்பான கதைகள் நிறைய உண்டு. சூரியனை ஒரு பந்தாகக் கையில் வைத்து விளையாட முயன்ற பால ஆஞ்சநேயர் பற்றிப் புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. குழந்தை கிருஷ்ணன் நிகழ்த்திய அற்புதங்கள் கணக்கற்றவை. சித்திரங்களிலும் வெண்ணெய்த் தாழியை ஏந்திய தவழ்கின்ற வடிவமாகத்தான் கிருஷ்ணன் உருவம் தீட்டப்படுகின்றது. தவழ்கின்ற கிருஷ்ணன் உருவில்தான் கோவில்களில் சிலைகள் வடிக்கப்படுகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்குடியிலும் இராஜகோபால ஸ்வாமி கோவிலின் பிரம்மோத்ஸவத்தில் வீதி உலா வரும் 'வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன்' மிகவும் பிரஷித்தம். ஓராண்டு பூர்த்தியாகிப் பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைக்கும், மழலைச் செல்வம் வாய்க்கப்பெறவேண்டும் என்று வாழ்த்தித்திருமணப் பெண்ணுக்கும் வெள்ளியில் செய்த தவழ்கின்ற கிருஷ்ண விக்கிரகம் பரிசாகக் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
திருமாலின் பத்து அவதாரங்களில் கிருஷ்ணாவதாரத்திற்கு இருக்கும் அளவிற்கு இராமாவதாரத்திற்கும் பெருமை உண்டு. பன்னிரு ஆழ்வார்களும் பக்தகோடிகளான வைணவ அடியார்களும் இரண்டு அவதாரங்களையும் பாடிப் பரவசம் அடைந்திருக்கிறார்கள். ஆனால், குழந்தைப் பருவத்து இராமனின் திருவிளையாடல்களாக செய்திகள் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை. எந்த ஷேத்திரத்துக் கோவிலிலும் குழந்தை வடிவில் இராமனைக் கண்டதில்லை இராமனின் பால பருவத்து நிகழ்ச்சியாக, இராமாயணத்தில் விஷ்வாமித்திரர் தம் யாகத்தைக் காப்பதற்கு குழந்தை இராமனை அழைத்துச் சென்றார் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் ஒரே செய்தி. கோவில்களில் பார்த்தாலும் அயோத்தியில் உள்ள இராமன் ராம லாலா என்று குழந்தையாக அழைக்கப்பட்டாலும் 7 அல்லது 8 வயதுடைய உருவில்தான் சிலை வடிக்கப் பட்டுள்ளது. தஞ்சாவூருக்கு அருகில் நீடாமங்கலத்தில் உள்ள சந்தான இராமரும் குழந்தை வடிவில் இல்லை. சீதா, இலக்ஷ்மண, ஆஞ்சநேய சமேத இராமராகத்தான் காட்சி தருகின்றார்.
கோவிலில் இராமன் குழந்தை வடிவில் இடம் பெற்ற புதிய செய்தி இதோ! சென்னையிலுள்ள திரு. சத்திய நாராயணன் வேத விசாரங்களிலும், தத்துவார்த்தங்களிலும் ஈடுபாடு உடையவர், காஞ்சிப் பெரியவரிடம் பெரு மதிப்புடையவர். 'ஸ்ரீப்ரசாத வேத ஜோதி ஆய்வு மையம்' ஒன்றை நடத்தி வருகிறார். மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வானதிராஜபுரம் என்ற ஊரிலுள்ள கோபால கிருஷ்ணன் கோவிலில் உள்ள பெருமாள் தான் இவருடைய வழிபடு கடவுள். புராதனமான இந்தக் கோவில் மிகவும் சிதிலமடைந்து நிற்பது பற்றிக் காஞ்சிப் பெரியவரிடம் இவர் கூறினார். அதற்குப் பெரியவர் அவருடைய கையில் பதினோரு ரூபாயைக் வைத்து மேற்கொண்டு கும்பாபிஷேக முயற்சியை மேற்கொள்ளுமாறு பணித்தார். அத்துடன், குழந்தை வடிவில் இராமன் சிலை ஒன்றையும் வடித்துப் பிரதிஷ்டை செய்யுமாறு அருளாசி வழங்கினார். அந்தக் கோவிலில் கைகூப்பி நிற்கும் பால ஆஞ்சநேயர் சிலை ஒன்று முன்னரே காணப்படுகிறது. பழமையான இந்தக்கோவிலில் காணப்படும் பால ஆஞ்சநேயர் வரலாறு எதுவும் யாருக்கும் தெரியவில்லை. இந்த ஆஞ்சநேயர் சிலைக்கு நேர் எதிரில் இராமர் சிலையை வைப்பதென்று முடிவாயிற்று.
பெரியவர் ஆசியுடன் தன் கையிலுள்ள சேமிப்பையும், உற்றார் உறவினர், அண்டை அயலார், அயல் நாடுகளிலுள்ள நண்பர்கள் எல்லோரையும் அணுகி வெற்றிகரமாக நிதி திரட்டி விட்டார் சத்திய நாராயணன். சென்னையில் மேற்கு மாம்பலத்திலுள்ள இராமசமாஜம் வெளியிட்ட பழைய ஆண்டு மலர் ஒன்றில் குழந்தை இராமன் சித்திரம் ஒன்று அதிர்ஷ்டவசமாக அவருக்குக் கிடைத்தது. இதை மாதிரியாகக் கொண்டு பஞ்சலோகத்தில் ஒரு விக்கிரகம் செய்ய முடிவு செய்தார். கோவிந்தாபுரத்திலுள்ள கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஆதிசேஷ சயனமாக இருக்கும்படியாக இராமன் சிலையைச் செய்யும்படி ஒரு கருத்து தெரிவிக்கவே அப்படியே இராமன் சிலை வடிக்கப்பட்டது.
கோவிந்தாபுரத்தில் காஞ்சி ஆசார்ய குருபரம்பரையில் 59வது பீடாதிபதி பகவந் நாம ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தின் சன்னிதியில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கும் இராம நாமத்தின் ஒலியின் பின்னணியில் கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் திருக்கரங்களாலேயே சந்தானராமன் சிலை முதலில் இங்கேதான் ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வானதிராஜபுரத்தில் திறந்தவெளியில் நின்றிருந்த பால ஆஞ்சநேயருக்கு ஒரு மண்டபமும் கட்டப்பட்டு சென்ற ஆண்டு அதாவது 2001 நவம்பர் திங்களில் கோவில் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்து முடிந்தது. சந்தானராமன் சிலை கோவிந்தாபுரத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு பால ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆதிசேஷன் குடைபிடிக்க கையில் ஒரு பொம்மை வில்லுடன் தவழ்கின்ற வடிவில் சந்தானராமனாகக் காட்சி தரும் முதல் கோவில் என்ற பெருமையை இப்போது இக்கோவில் பெற்றிருக்கிறது. |
|
வானதிராஜபுரத்துப் பெருமாள் கோவில் புராதனமான கோவில் என்றாலும் நித்திய ஆராதனைகளும் வழிபாடுகளும் இடைவிடாமல் நடைபெற்றுக்கொண்டுதான் வந்திருக்கின்றன.
இக்கோவிலின் தனிச்சிறப்பு:
குழந்தைப் பேறில்லாத பெண்கள் சாதி பேதமேதுமின்றி யாராக இருந்தாலும் இந்த சந்தானராமனை மடியில் எடுத்துவைத்துக் கொண்டு மனதாரப் பிரார்த்தனை செய்தால் குழந்தைப் பாக்கியம் பெறுவர் என்று ஆதாரத்துடன் நம்பப்படுகிறது. திரள் திரளாக இங்கு வந்து கொண்டிருந்த அன்பர்களின் கூட்டம் இந்த நம்பிக்கையால் மேலும் கூடியிருப்பதில் வியப்பில்லை. பால ஆஞ்சநேயரின் வணக்கத்தை ஏற்றபடி எதிரே தவழும் குழந்தை இராமனாக சந்தானராமன் வீற்றிருக்கின்ற அதிசயமான புண்ணிய ஸ்தலமல்லவா!!!
அலர்மேலுரிஷி |
|
|
|
|
|
|
|