Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2003 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
பொது
தமிழ் சினிமாவில் பாட்டு
வசந்தமே அருகில் வா.....
ஏன்?
(இலவச) சுற்றுலா
தஞ்சை ஜில்லா வசனங்கள்
கீதா பென்னட் பக்கம்
சங்கீத ஸ்தித பிரஞ்ஞனுக்கும், பொன்விழா!
- அலர்மேல் ரிஷி|ஜூன் 2003|
Share:
பகவத்கீதை ''வாசுதேவன் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்கின்ற ஒருவனை 'ஸ்தித பிரஞ்ஞன்' என்று போற்றுகின்றது. இதைச் சற்று மாற்றி இசைக்காக மட்டுமே வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு இசை உலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை ''சங்கீத ஸ்தித பிரஞ்ஞன்'' என்று அழைத்தால் அது பொருத்தமானது தானே! அவர்தான் TRS என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் இசை உலக ஜாம்பவான் T. R. சுப்ரமணியன் அவர்கள். ஐம்பது ஆண்டுகளாக இசை உலகில் அவர் ஆற்றியுள்ள சாதனைகளைப் பாராட்டி 11.5.2003 அன்று சென்னையில் பொன்விழா கொண்டாடப்பட்டது. அவரிடம் இசை பயின்ற மாணவர்கள், உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்து ஒன்றாகக் கூடி சென்னை 'மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்' கிளப்பில் மிகப் பெரிய அளவில் குருவுக்கு மரியாதை செலுத்திய இந்தப் 'பொன்விழா' இசை உலக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதொன்று!

'இனிது இனிது மானிடராய்ப் பிறத்தல் இனிது' என்பேன். சாதனைகள் படைக்க மானிடர்களால் மட்டுமே முடியும். T.R.S. அவர்கள் இசை உலகில் செய்துள்ள சாதனைகள், அவருடைய குணாதிசயங்கள் பற்றி அன்றைய விழாவில் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்கள் பாராட்டிப் பேசியவற்றிலிருந்து சுவையான சில பாராட்டுரைகளின் தொகுப்பே இக்கட்டுரை.

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற TRS அவர்கள் இசைப் பரம்பரையில் வந்தவர். இவரது தந்தை இராஜகோபாலய்யர் இசைப்பிரியர். அத்தை வீணை பயின்றவர். இந்தப் பின்னணி TRS அவர்களையும் இசையில் நாட்டம் கொள்ளச் செய்தது. 1949ல் சென்னையில் இசைக்கல்லூரி தொடங்கப் பட்டபோது, செம்மங்குடி சீனிவாசஐய்யர் TRS அவர்களைக் கல்லூரியில் சேர்ந்து முறையாக இசையைப் பயிலுமாறு தூண்டினார். தனியார்துறையில் செய்து வந்த பணியிலிருந்து விலகி இசைக்கல்லூரியின் முதல் ஆண்டில் முதல் மாணவராகச் சேர்ந்து முதல்நிலையில் தேறி தங்கப் பதக்கம் பெற்றார். முசிறி சுப்பிரமணிய அய்யர் அவர்கள்தான் இவரது குரு. செம்மங்குடி அவர்கள் போட்ட விதை ஆலமரமாய் விரிந்து இசை உலகில் TRSயைப் பல சாதனைகளைப் புரியத் தூண்டுகோலாயிற்று.

மாணவன் திறமையைப் பாராட்டுவதில் குருவின் பாராட்டுக்குத்தான் மதிப்பும் பெருமையும் அதிகம். ஒருமுறை முசிறி அவர்கள் TRSயைப் பற்றிப் பாராட்டும்போது, ''சங்கீதம் பயின்றவர்கள் இருக்கலாம். சங்கீதம் கற்றுத் தருபவர்கள் இருக்கலாம். சங்கீதத்தில் வித்வத்வம் பெற்ற ஒரே மனிதர் TRSதான்'' என்று கூறியது எவ்வளவு பெரிய பாராட்டு!!

TRS கச்சேரியைக் கேட்டு அதே மேடையில் அவரைப் பாராட்டிய முசிறி அவர்கள் ''இங்கே பக்கவாத்தியம் வாசித்த லால்குடி ஜெயராமன் இருக்குமிடத்தில் நான் அமர்ந்து வாசிக்க நேரிட்டிருந்தால் எனக்குள் இரண்டே இரண்டு கேள்விகள்தான் எழுந்திருக்கும். வயலினை எடுத்துக் கொண்டு ஓடிப் போய்விடலாமா? அல்லது வயலினை வைத்துவிட்டு ஓடிவிடலாமா? என்றுதான் தோன்றியிருக்கும். அப்படிப்பட்ட அசரவைக்கும், திணறடிக்கும் இசைக் கச்சேரி'' என்ற பாராட்டு TRS அவர்கள் திறமைக்குக் கிடைத்த மணிமகுடம்.

இசைக் கல்லூரியில் TRS அவர்களோடு உடன்பயின்றவரும் திருப்பதி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பேராசிரியர் S.R. ஜானகிராமன் அவர்கள் தம்முடைய உரையில், ''TRS அவர்களோடு இசைக் கல்லூரியில் நான் எவ்வளவு போட்டியிட்டாலும் எப்போதும் அவர் முதல் இடத்தை வென்றுவிடுவார். எனக்கு எப்போதுமே இரண்டாம் இடம்தான்'' என்று மனந்திறந்து பாராட்டினார்.

TRS அவர்களது சிஷ்யர்கள் ஒன்றாகச் சேர்ந்து அளித்த பணமுடிப்பை வழங்கிப் பாராட்டி உரையாற்றிய லால்குடிஜெயராமன் அவர்கள், ''TRSக்குப் பலமுறை பக்கவாத்தியம் வாசித்துப் பல இசை நுணுக்கங்களை அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கின்றேன். அதேபோல் நான் வாசிக்கும் கச்சேரிகளைக் கேட்டு அவரும் தான் சுவைத்து மகிழ்ந்த இடங்களை மனந்திறந்து பாராட்டியிருக்கிறார். மற்றவர்களைப் பாராட்டும் பரந்த மனப்பான்மையைப் பொதுவாகப் பிரபல வித்வான்களிடம் பார்க்க முடிவதில்லை. TRS இதில் விதிவிலக்கானவர்'' என்று கூறியதோடு மேலும் பல சுவையான சம்பவங்களை மனநெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

TRS அவர்களின் வித்வத்தை டாக்டர் V.V. ஸ்ரீவத்ஸவா பாராட்டியபோது, ''எனக்கு முன்னால் பேசிய S.R. ஜானகிராமன் அவர்கள் TRSன் இசையைப் பாராட்டி அது classworthy, praise worthy, noteworthy (not worthy) என்றெல்லாம் பாராட்டினார்கள். இவற்றையெல்லாம் சுருக்கி ஒரே வார்த்தையில் 'இசைச் சக்கரவர்த்தி' என்று பாராட்டிவிடலாமே'' என்று கூறியபோது அவையே அதிரும் அளவுக்குக் கரவொலி எழுந்தது.

குத்துவிளக்கேற்றி விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசிய மைத்ரேயி இராமதுரை, ''தலைமை தாங்குவதில் நான் பெருமைப்படுவதாகக் கூற மாட்டேன். TRS அவர்களைப் பாராட்டும் இவ்விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதில்தான் பெருமைப்படுகிறேன்'' என்று கூறியதிலிருந்து TRS ன் சாதனைகளுக்கு மிக உயரிய பெருமை கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது.

TRS அவர்களின் இன்னொரு குண விசேஷத்தைச் செங்கல்பட்டு ரங்கநாதன் அவர்கள் குறிப்பிட்டது மிகவும் சுவையான ஒன்று. ''தான் பெற்ற மமதை இல்லாத மேதை TRS'' விஜயவாடாவில் முதல்நாள் கச்சேரியை முடித்த ரங்கநாதனை மறுநாள் ராஜமுந்திரியில் கச்சேரி செய்யும்படி செய்ய வேண்டும், அவரது இசைப் புலமையை மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, தான் பாட வேண்டிய அன்றைய கச்சேரியில் ரங்கநாதனைப் பாட வைக்க TRS அவர்கள், தனக்குத் தொண்டை சரியில்லை என்று கூறி ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் TRS அவர்களை வரவேற்க வந்த அன்பர்கள் கொண்டு வந்திருந்த மாலை மரியாதைகளை ரங்கநாதனுக்கு அளிக்குமாறு செய்தார். அன்றைய கச்சேரியில் TRS அவர்களை எதிர்பார்த்து வந்த கூட்டத்தின் முன்னால் தான் செய்த கச்சேரியைத் தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகக் குறிப்பிட்டார்.
திருமதி வேதவல்லி அவர்கள் அன்றைய விழா மலரின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு பாராட்டியபோது, மேடைக் கச்சேரிகளை ரசித்துக் கொண்டிருக்கும் அவையிலிருந்து ''கொடி'' என்று குரலெழுந்தால் அந்தக் குரல் வந்த இடத்தில் TRS தன் வலது கைக்கட்டைவிரலை உயர்த்திப் பாராட்டுகின்றார் என்று தெரிந்து கொள்ளலாம்'' என்றதொரு செய்தியைக் கூறி TRS அவர்களின் இசைக் கலைஞர்களைப் பாராட்டுகின்ற பண்பிற்கு விளக்கம் தந்தார்.

'பல்லவிச் சக்கரவர்த்தி' என்று பலராலும் பாராட்டப்பட்டு, இசை உலகில் 'ராகம் தாளம் பல்லவி'யில் பல்லவி பாடுவதில் தனக்கெனத் தனிப்பாணியை வகுத்துக் கொண்டவர் TRS என்று பாராட்டிய பிரசார் பாரதி டெபுடி டைரக்டர் ஜெனரல் B.R. குமார் அவர்கள் TRS எழுதியுள்ள 'பல்லவி பகுதி II' என்ற புத்தகத்தை வெளியிட்டார். பெங்களூர் 'லய-தாள மையத்தின் (Percusive Art Centre) திரு கே. வெங்கட்ராம் அவர்கள் அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு பாராட்டினார்.

டில்லி பல்கலைக்கழகத்தில் TRS வழிகாட்டி Ph.D பட்டம் பெற்ற 10 மாணவர்களில் முதல் Ph.D பட்டம் பெற்ற பெருமைக்குரிய டாக்டர் ராதா வெங்கடாசலம் இவ்விழா ஏற்பாட்டிற்கு சூத்திரதாரியாக இருந்து வெற்றிகரமாக நடத்தியதுடன் பாராட்டுரைகளுக்குப் பின் ஒரு மணிநேரம் இசைவிருந்து அளித்து அமர்க்களப்படுத்தி விட்டதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குருவிடம் காட்டும் பக்திக்குச் சிறந்த அடையாளமாக விளங்கினார்.

அமெரிக்காவில் கிளீவ்லேண்டில் தொடர்ந்து 27 ஆண்டுகளாக தியாகராஜ ஆராதனை விழா நடத்தி வரும் திரு சுந்தரம் அவர்கள் விழா மலரில் எழுதியுள்ள கட்டுரையில், ''இவ்விழா ஆரம்பித்த முதல் ஆண்டில் அங்குள்ள கலைஞர்களுக்குப் பஞ்சரத்ன கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்துத் தாமும் அவர்களோடு கலந்து கொண்டதைப் பாராட்டி, அவர் போட்ட விதைதான் இன்று செழித்து வளர்ந்து அமெரிக்காவின் எல்லா நகரங்களிலிருந்தும் கலைஞர்கள் விழாவில் கலந்து கொள்ளும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது என்று கூறியுள்ளார். விழா மலரில் இடம் பெற்றுள்ள 78 இசை உலக பிரமுகர்களின் கட்டுரை களில் மேலும் சில சுவையான செய்திகள் கூறப்பட்டுள்ளன.

சென்ற இடமெல்லாம் சபாக்கள் அமைத்து வித்வான்களை அழைத்து வாய்ப்பு கொடுத்து இசைக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ள இவருக்கு இவருடைய சிஷ்யர்கள் 'சங்கீத ஸ்தித பிரஞ்ஞா' என்ற பட்டம் கொடுத்துப் பாராட்டிப் பொன்விழா கொண்டாடியது மிகவும் பொருத்தமானதே!

சென்னை அடையாறிலுள்ள 'ஹம்சத்வனி' என்ற சங்கீத சபைக் காரியதரிசி திரு S. இராமச் சந்திரன் அவர்கள் விழா மலரில் தம்முடைய கட்டுரையில் TRS அவர்களைப் பாராட்டியுள்ள வார்த்தைகளை இக்கட்டுரைக்கு முத்தாய்ப்பு வாக்கியமாக்குகிறேன்.

''குறைகள் நிறைந்துள்ள மனிதர்களிடம் ஏதாவது நிறையும் இருக்கும். நிறைகள் நிறைந்துள்ள மனிதர்களிடம் ஏதாவது குறையும் இருக்கும். இந்த முதுமொழியைச் சற்று மாற்றி ''TRS அவர்களிடம் நிறைகளை மட்டுமே காண முடியும்'' என்று சொல்வேன்.

ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ள இம்மாமேதையை நாமும் பல்லாண்டு வாழ வாழ்த்துக் கூறுவோம்.

டாக்டர் அலர்மேலுரிஷி
More

தமிழ் சினிமாவில் பாட்டு
வசந்தமே அருகில் வா.....
ஏன்?
(இலவச) சுற்றுலா
தஞ்சை ஜில்லா வசனங்கள்
கீதா பென்னட் பக்கம்
Share: 


© Copyright 2020 Tamilonline