|
ஆகஸ்ட் 2003 : வாசகர்கடிதம் |
|
- |ஆகஸ்டு 2003| |
|
|
|
ஜூலை மாதத் தென்றலை அனுபவித்தேன். மிகமிகச் சுகமாயிருந்தது. தமிழ்நாட்டில் வெளிவரும் எத்தனையோ தமிழ்ப் பத்திரிக்கைகளைவிடச் சிறப்பாக இருக்கிறது. Home away from home. நான் இங்கு வந்து 3 வாரங்களாகின்றன. பெங்களூரிலிருந்து புறப்படும்முன் எல்லோரும் 'இப்பொழுது அங்கு கோடைக்காலம். ரொம்பக் கஷ்டப்படப் போகிறீர்கள்' என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இங்கு இப்படியொரு 'தென்றல்' வீசிக்கொண்டிருப்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? நான் போகும்பொழுது முடிந்த அளவு தென்றலைக் கொண்டு போகலாமென்றிருக்கிறேன்.
அடுத்த தென்றலுக்காகக் காத்திருக்கும், K. ராஜலக்ஷ்மி, ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
******
தங்கள் ஜூலை இதழில் இடம்பெற்ற ஸ்ரீமதி ஜெயகல்யாணி மாரியப்பன், பேரா. எம்.எஸ்.ஆனந்த் (ஐஐடி, சென்னை), மீரா சிவா, திருநாராயணபுரம், கணித மேதை ராமானுஜம் பற்றிய கட்டுரை, நேர்காணல் ஆகிய எல்லாம் மிகச் சிறப்பாக இருந்தன. அதே சமயத்தில் 'சண்டியர்' என்னும் தலைப்பில் தாங்கள் தற்சமயம் ஆட்சியில் இருக்கும் கட்சியைப்பற்றி சில குறிப்புகளை எழுதியிருக்கிறீர்கள்.
கணிசமான ஓட்டுகள் பெற்றுத்தான் அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. அவர்களும் ஒரு காரியம் செய்யுமுன் அதில் உள்ள நல்லது கெட்டதுகளை அலசிப்பார்த்துதான் முடிவு எடுத்திருக்க வேண்டும்.
சாதாரணமாக ஒரு குடும்பத்திலே ஐந்தாறு நபர்கள் இருந்தாலே எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. ஒரு மாநிலத்தில் ஆட்சி நடத்துவது சுலபமான காரியமில்லை. தங்கள் பத்திரிக்கை ஏதோ ஒரு கட்சியை மறைமுகமாக ஆதரித்து இன்றைய ஆட்சியாளர்களைக் கண்டனம் செய்வதாகத் தெரிகிறது. இந்த புனிதமான பத்திரிக்கையில் தீவிர அரசியல் வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ராஜன், அட்லாண்டா
******
அமெரிக்கப் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் எழுதப் படிக்கக் கற்றுக்கொடுங்கள். சிறுவயதில் புரிந்துகொள்ளும் சக்தி அதிகம். வீட்டில் தாத்தா பாட்டி இருந்தாலும் பேரக்குழந்தைகளுக்கு அன்போடு சொல்லிக் கொடுங்கள். நேரம் இல்லை என்று சொல்லாமல் சனி, ஞாயிறுகளில் ஒருமணி நேரமாவது ஒதுக்குங்கள்.
பழமொழிகளைக் கூறி விளக்குங்கள். கோவில்களுக்குக் குழந்தைகளைக் கூட்டிச் செல்லுங்கள். 'அறம் செய விரும்பு', 'ஆறுவது சினம்' என்ற ஔவைப் பாட்டியின் பாடல்களைச் சொல்லிக்கொடுங்கள். வேர் நன்றாகப் பிடித்துவிட்டால் மரம் நன்றாக வளர்ந்துவிடும்.
ஜெயக்கல்யாணி மாரியப்பன், கலிஃபோர்னியா
****** |
|
சென்ற இதழில் கணிதமேதை ராமானுஜம் பற்றி வெளிவந்ததைப் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்று பல மேதைகளின் வரலாறுகளைப் படிக்க நான் ஆவலோடு இருக்கிறேன். வெளியிடுவீர்களா?
அம்பா ராமநாதன், சன்னிவேல், கலிஃபோர்னியா
******
எனக்கு வயது 69. கேரளாவிலுள்ள கோட்டயத்திலிருந்து என் பேத்தி வீட்டுக்கு மகன், மாப்பிள்ளையோடு வந்திருக்கிறேன்.
வந்த இடத்தில் 'தென்றல்' ஜூன் இதழை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரியவர்களும் குழந்தைகளும் வாசிக்கும்படி ரொம்ப அருமையாக இருந்தது. ஆண், பெண் இருபாலருக்குமேதான்.
சமையல் குறிப்பு எளிதில் புரியும்படி இருந்தது. அப்படியே சமைத்துப் பார்த்ததில் நன்றாக இருந்தது. சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி. (இலவச) சுற்றுலா, கலி(·போர்னியா) காலம், இளம் தென்றல், விடுகதைகள், கீதா பென்னட் பக்கம், அன்புள்ள சிநேகிதியே, கீதா துரைராஜ் அவர்களின் அமெரிக்க அனுபவம் - எல்லாமே ரொம்ப அருமை.
விசாலம் பஹதூர், சான் ஹொசே, கலிஃபோர்னியா
******
சென்ற ஏப்ரல் மாதம் சென்னையிலிருந்து கலி·போர்னியா வந்த எங்களுக்கு 'தென்றல்' மாத இதழ்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன. சென்னையிலிருந்து வரும் சில வார, மாதப் பத்திரிக்கைகளைவிட மிகவும் தரம் வாய்ந்த இதழாகத் 'தென்றல்' வருவது பாராட்டத்தக்கது.
மேலும் இலவசமாக மாதத்தின் முதல் வாரத்திலேயே கிடைக்கிறது. பத்து தினங்கள் தாமதித்தால் கிடைப்பதில்லை என்பது அமெரிக்கத் தமிழர்களிடையே அதற்கிருக்கும் பெருமையையும் மதிப்பையும் குறிக்கிறது.
ஜூலை இதழில் சென்னை ஐஐடியைப்பற்றி அதன் இயக்குநர் பேரா. ஆனந்த் அவர்களது பேட்டியில், அதன் இயற்கை வளத்தை நேசிப்பது, மானினங்களுக்கு இடர் வராமல் கட்டிடங்கள் கட்டுவதும், மானுடம் செழிக்க அவர்கள் செய்யும் ஆராய்ச்சிகள் பற்றியும் குறிப்பிட்டது நன்றாக இருந்தது.
தியோடர் பாஸ்கரன் அவர்களின் தமிழ் சினிமாவின் வளர்ச்சிபற்றிய கட்டுரைகளும், கீதா பென்னெட் கட்டுரைகளும் நன்றாக உள்ளன. மேலும் பழைய கலைஞர்களும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தியக் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை நிகழ்வுகள் தலைப்பில் தருவதும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் ஆசிரியர் கடிதமும், மணிவண்ணனின் புழக்கடைப் பக்கமும் நல்ல செய்திகளையும், தகவல்களையும் தருவது மகிழத்தக்கது. ஆனால் தமிழக அரசியல் நெடி வீசும் அரசியல் பக்கங்கள்தான் சிறிது வருத்தமளிக்கின்றன.
V. ராஜாராமன், சான்டாகிளாரா, கலிஃபோர்னியா
****** |
|
|
|
|
|
|
|