இன்னொரு ஜென்மம்
|
|
கவிதையிலே ஒரு சிறுகதை |
|
- செங்காளி|ஆகஸ்டு 2003| |
|
|
|
பவளாயி செய்த மரியாதை
கீழ்ச்சாரல் கிராமமன்று களைகட்டி இருந்தது. மணியக்காரர் வீட்டினில் மக்களெல்லாம் கூடிநின்றார், பவளாயி கணவனுடன் அமெரிக்கா போகின்றாள். அவர்களை வழியனுப்ப அனைவருமே வந்திருந்தார்.
அதிகாலைப் பூசை அம்மனுக்கு நடத்திவிட்டு மதியத்தில் எல்லோர்க்கும் மணக்க விருந்துமிட்டு வந்திருந்த உறவினர்க்கு வரவேற்பு நடந்ததுவே. சேரிமக்கள் உண்டுவிட்டுத் திரண்டிருந்தார் வாசலிலே, மாரியும் அவர்களுடன் மனைவியோடு நின்றிருந்தான்.
மணியக்காரர் வீட்டில் மாரியப்பன் வேலைசெய்தான். காலையில் எழுந்தவுடன் கழனிக்குச் சென்றிடுவான், மாலையில் வீட்டிற்கு மாடோட்டித் திரும்பிடுவான். தோட்டத்தில் வேலை துரிதமாய் முடித்துவிட்டு வீட்டிலுள்ள காரியமும் வேகமாய்ச் செய்திடுவான்.
என்னவேலை என்றாலும் ஏனென்று கேட்காமல் சொன்னபடி செய்வான்; சுறுசுறுப்பாய் இருந்திடுவான். அறுபதுக்கு மேல்வயது ஆகிவிட்டது என்றாலும் இருபது வயதுடைய இளைஞனைப் போலத்தான் விறுவிறுப்பாய்ச் செய்வான் வேலைகள் எல்லாமே.
பவளாயி சின்னஞ்சிறு பாப்பாவாய் இருக்கையிலே அவளை மாரியப்பன் அன்புடனே பார்த்துக்கொள்வான் தோட்டத்திற்குப் போகையிலே தோளில் சுமந்திடுவான், பாட்டெல்லாம் பாடித்தான் பரவசத்தை ஊட்டிடுவான். கேட்கச் சுவையான கதைபலவும் சொல்லிடுவான்.
அவளைத்தன் பேத்தியென்று அன்புடனே அழைத்திடுவான். பவளமும் தாத்தாவென்று பாசமாய் வலம்வருவாள். பள்ளியில் பவளாயி பாங்காகப் படிக்கையிலும் கல்லூரி சென்றுஅவள் கவனமாய்க் கற்கையிலும் எல்லாமும் பார்த்துமாரி இன்பமிக அடைந்திடுவான். |
|
கண்ணெதிரே வளர்ந்தபெண் கலியாணம் செய்துகொண்டு அன்பான கணவனுடன் அயல்நாடு போகின்றாள். அதைக்காண அவனும்தான் ஆவலுடன் காத்திருந்தான். புறப்படும் நேரம்; பவளாயி வந்தங்கே எல்லோரும் வியக்குமொன்றை எதிர்பாராமல் செய்தாள்.
வெள்ளித் தட்டொன்றில் வெற்றிலை பாக்குவைத்து பட்டுவேட்டி ஜோடியுடன் பளிச்சென்று சேலைகளூம் கட்டாகப் பணமும்கூடப் பவுனிரண்டும் வைத்துஅதனை மெள்ளக் கையிலேந்தி மெதுவாக நடந்துவந்து மாரியின் முன்வைத்து மண்டியிட்டு வணங்கிவிட்டாள்.
"என்ன தாயி செய்துவிட்டீர்!" என்றுமாரி பதறிவிட்டு பின்னால் நகர்ந்துநின்று பரிதாபமாய்ப் பார்த்தான். "வாழ்த்துங்கள் தாத்தா!"வென்று வணங்கினாள் பவளாயி. தேகமெல்லாம் துடிதுடிக்க, திரண்டுகண் ணீர்வழிய "மகராசியாய் இரு, தாயி!" மனமுருகி வாழ்த்திநின்றான்.
இதைப்பார்த்த அனைவருமே இதயம் படபடக்க மனங்குழம்பி பயத்துடனே மணியத்தைப் பார்க்க, கனிவான முகத்துடனே "கண்ணான தாத்தனுக்கு தக்கபடி மரியாதை தந்துவிட்டாள் பேத்தி"யென்று கண்ணாலே சொல்லிக் கசிந்துநின்றார் மணியக்காரர்.
செங்காளி |
|
|
More
இன்னொரு ஜென்மம்
|
|
|
|
|
|
|