கவிதையிலே ஒரு சிறுகதை
|
|
|
பச்சையிலை மாநாட்டில் பனிவிழும் பூக்காட்டில் வேர்நரம்பும் விட்டுவிடாமல் விதைகளுக்கு உள்ளேயும் தேடினேன் தேடினேன் ஏழு வண்ணமா என் வண்ணமா என்ற கேள்வியழகோடு அன்றலர்ந்த ரோஜா ஒன்று என்னையா தேடுகின்றாய் என்றது இல்லை இல்லை ஓடிப்போ உன் கவர்ச்சி வனப்பில் எனக்கொன்றும் விருப்பில்லையென்றேன் !
நீண்டு நிதானமாய் நந்நீர் சுழித்தோடும் நதியினுள் குதித்துத் துழாவித் துழாவித் தேடினேன் தேடினேன் வெள்ளிச் செதிள் சிவக்க விளையாடும் செங்கண் சிரிக்க கெண்டை மீனொன்று என்னையா தேடுகின்றாய் என்றது இல்லை இல்லை ஓடிப்போ உன் ஒய்யார ஆட்டத்தில் எனக்கொன்றும் விருப்பில்லையென்றேன் !
ஆழக் கடல் தொட்டு அடிச்சென்று மூச்சடக்கி அகண்ட கண் விரித்து அதுவீசும் சுடரொளியில் தேடினேன் தேடினேன் குட்டிப் பவளப் பேழைகளாய்க் கொட்டிக் கிடக்கும் சிப்பிகளின் கதவு திறந்த முத்தொன்று என்னையா தேடுகின்றாய் என்றது இல்லை இல்லை ஓடிப்போ உன் ஒளிரும் கர்வத்தில் எனக்கொன்றும் விருப்பில்லையென்றேன் !
மெத்து மெத்தென்ற மேகக் கூட்டங்களை முன்னும் பின்னுமாய் இழுத்திழுத்து விலக்கித் தேடினேன் தேடினேன் வானத்தின் வெண்பொட்டு வயதேறா குமரி மொட்டு வட்டநிலா ஓடிவந்து என்னையா தேடுகின்றாய் என்றது இல்லை இல்லை ஓடிப்போ உன் பகட்டுப் பேரழகில் எனக்கொன்றும் விருப்பில்லையென்றேன் !
அண்டப் பெருவெளியில் அயராத ராட்டினத்தில் இங்கும் அங்குமாய் இமை கழித்த விழிகளோடு தேடினேன் தேடினேன் சில்லென்ற மேனியதிரச் சுற்றிவரும் தித்திப்பாக செய்வாய்க் கோள் வந்து என்னையா தேடுகின்றாய் என்றது இல்லை இல்லை ஓடிப்போ உன் புதிரான விளையாட்டில் எனக்கொன்றும் விருப்பில்லையென்றேன்
தேடினேன் தேடினேன் அண்ட வெளி எங்கிலும் அக்கினியாய்த் தேடினேன் அகப்படா நிலையிலென் ஆழுயிர் துடித்தே வாடினேன்
அத்தனைக் காற்றும் ஓய்ந்தே போனதோ? அத்தனை ஓசையும் ஒடுங்கியே போனதோ? அத்தனை ஒளியும் ஒழிந்தே போனதோ? |
|
நம்பிக்கை யாவும் நஞ்சுக்குழி விழுந்து சுட்ட பிணங்களாகின தேடித் தவித்த விழிகள் இமைச் சுமை தாண்டி இதயச் சுமை தாண்டி உயிர்ச் சுமையாகி உதிர்ந்து உடைந்தன
தேடும் தவம் துறந்து தேடா வரம் பெற்று ஊனமுற்ற நாட்களுக்குள் உயிர்ப்பளு ஏற்றிக்கொண்டு விந்தி விந்தி நடக்கையிலே கிழிந்த விழிகளை மூடிக்கிடக்கும் என் நைந்த இமைகளின் மேல் ஒரு துளி உப்புக் கண்ணீர்
அடடா என் கண்களுக்குள் நீர் வற்றித்தான் நெடுநாட்கள் நகர்ந்துவிட்டனவே இதென்ன இது உள்ளிருந்து வாராமல் வெளியிலிருந்து விழிநீர் அதுவும் உள்விழி நீரின் அதே அடர்வு உப்போடு யார் உகுக்கும் கருணை நீர் இது ?
ஒரு பூர்வ ஜென்ம வாசனை என் நாசிக் குகைக்குள் நர்த்தனம் ஆடுகிறது நான் பிறந்த போதே இழந்துவிட்ட என் பிறப்பு வாசனையல்லவா இது ?
ஓர் இளஞ்சூட்டு ஈரம் என் இதழ்தொட்டு மூடுகிறது அப்பப்பா... காயங்கள் காயங்களோடு ரணங்கள் ரணங்களோடு ரகசிய ஒத்தடங்கள் படபடப்பாய்ச் சிறகடிக்கின்றன
காதுகளில் ஒரு கானம் இதுவரை இசைக்கப்படாத எனக்கான தாலாட்டாகத் தழுவுகிறது உணர்வுக்குள் உணர்வுகள் உட்கார்ந்து உரையாடுகின்றன உயிருக்குள் உயிர்கள் எழுந்து ஓடிவிளையாடுகின்றன
நானென்ன கனவு காண்கிறேனா? ஏக்க விழிகளுக்குக் கிடைக்கும் செங்கோலும் சிம்மாசனமும் கனவுகள்தாமே!
படக்கென இமைகள் வெடிக்கிறேன் நான் ஓ... நீதான் நீதான் அது நீயேதான் என்கிறேன் உயிருக்குள் மௌனித்துக்கிடந்த உள்ளுயிர்க் குரலில் !
ம்ம்ம்... நான் தேடியபோதெல்லாம் வராமல் தேடாதபோது ஏன் வந்தாய் என்றேன் 'தேடிக்கொண்டிருந்தேன்' என்ற பதில் எனக்குள் இன்னொரு ஜென்மத்தைப் பொசுக்கென்று விதைத்தது !
பி.கு: உடலுக்குப் பிறவி ஒரு முறைதான்.ஆனால் மனதுக்கோ பல்லாயிரம் முறை.நான் ஜென்மம் என்று குறிப்பிட்டது அதைத்தான்.
கவிஞர் புகாரி
******
கவிஞர் புகாரி: கனடா வாழ் கவிஞர். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில். மரபுக்கவிதையா, புதுக்கவிதையா என்ற கேள்விக்கு இவர் விடை இசைக்கவிதை. இவருடைய கவிதைகள் பெரும்பாலும் சந்தத்தின் சத்தத்தோடு தான் வலம்வருவன.
அண்மையில் இரண்டு கவிதைத் தொகுதிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட்டவர். 1. வெளிச்ச அழைப்புகள் 2. அன்புடன் இதயம். முதல் புத்தகம் சிறப்பாக விற்பனையாகி, பரிசும் பெற்றிருக்கிறது. |
|
|
More
கவிதையிலே ஒரு சிறுகதை
|
|
|
|
|
|
|