கடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு பாவம் பரந்தாமன் வீசாக் காதல்
|
|
|
நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல் கிடந்தது. அன்று மதியம் கல்யாண சத்திரத்திற்குக் கிளம்பு கிறார்கள். இரவு மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் கல்யாணம். வீட்டில் உற்வினர்கள் கூட்டமாய் கூடியிருந்தார்கள்.
ஆனால் நிவேதாவின் முகத்தில் சந்தோஷமே இல்லை. மாறாக மிகுந்த கவலையுடன் இருந்தாள். இந்தக் கல்யாணத்தில் அவளுக்குத் துளியும் இஷ்டமேயில்லை. அவள் அப்பா அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையைத்தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். நல்ல படிப்பு, நல்ல வேலையிலும் இருந்தான். ஆனால் அவளைவிட 9 வயது பெரியவன். பேரோ இளம்தேவன். அவளுக்கு அவன் பேரும் வயதும் சுத்தமாக பிடிக்கவில்லை.
அவள் அப்பாவோடு எவ்வளவோ வாதாடிப் பார்த்தாள், ஒன்றும் பலிக்கவில்லை. "நல்ல வேலை, நல்ல படிப்பு, பார்க்க நன்றாக இருக்கிறான், நல்ல குடும்பம், இதுக்கு மேல என்ன வேணும் நிவேதா. பேரும், வயசும் கல்யாணத்திற்கு ஒரு பொருட்டில்லை. வெறும் பேர்ல என்ன இருக்கு. பேருக்கு உள்ள இருக்கிற மனுசனைப்பாரு. வயதுங்கறது மனதின் முதிர்ச்சியைத்தான் குறிக்குது. உடலுக்குத்தான் வயசாகுதே தவிர மனதுக்கு இல்லை. இதை நீயே ஒரு நாள் புரிஞ்சுப்பே" என்றார்.
இதுதான் அப்பாவின் தீர்மானம். அதற்கு அவளால் மறுப்பு எதுவும் கூற முடியவில்லை. அதனால் இதோ மணமேடைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இன்னமும் அவள் மனதில் நெருடல் இருந்தது. அவள் வயதில் உள்ள பெண்கள் தங்களுடன் படிக்கும் சமவயது ஆண்களை காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் தான்மட்டும் இத்தனை வயது வித்தியாசத்தில் செய்து கொள்கிறோமே என்ற தவிப்பு அவள் மனதில் அரிப்பாக வளர்ந்திருந்தது.
எல்லோரும் கோலாகலமாகக் கிளம்பி கல்யாணச் சத்திரத்திற்குச் சென்றார்கள். மாப்பிள்ளை அழைப்புச் சடங்குகள் விமரிசையாக நடந்தன. அதன்பின் எல்லோரும் சாப்பிட்டு விட்டுத் தத்தம் தனி அறைகளுக்குச் சென்றனர். செல்லும் வழியில் நிவேதாவின் பெற்றோரும் மாப்பிள்ளை வீட்டாரில் சிலரும் வாதாடிக் கொண்டிருந்ததை நிவேதா பார்த்தாள்.
அருகில் சென்றபோது மாப்பிள்ளை வீட்டார் தங்குவதற்கு அறைகள் போதவில்லை என்றும், பெண் வீட்டாரின் வரவேற்பில் குறை இருந்ததென்றும், ஆளாளுக்கு ஏதோ குற்றம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பெண் வீட்டார் சொல்வதறியாது திகைத்து திக்கு முக்காடிக் கொண்டிருந்தனர். |
|
இதைக் கேட்ட இளம்தேவன் அருகில் சென்று என்ன ஏது என்று விசாரித்தான். பிறகு அவன் பெற்றோரை அழைத்துக் கலந்தாலோசித்து அறைகள் இல்லாதவர்களுக்கு கல்யாணசத்திரத்திற்கு பக்கத்திலேயே ரூம் போடச் சொல்லி உதவினான். மற்றவரைச் சமாதானம் செய்து எல்லோரையும் அவரவர் அறைக்கு அனுப்பினான்.
இதையெல்லாம் கவனித்தாள் நிவேதா. தன் ரூமிற்கு செல்லும் வழியில் இளம்தேவன் நிவேதாவிடம் வந்து "இங்கே என்ன நடந்தாலும் நீ கவலைப்படாதே! நாளைக்கு நாந்தான் உன் கழுத்தில் தாலி கட்டப் போகிறேன். நீதான் என் மனைவி" என்று சொல்லி கண்ணடித்துவிட்டுச் சென்றான்.
நிவேதா அப்படியே மலைத்து நின்றாள். அவள் மனம் பட்டாம்பூச்சியாய்ப் பறந்தது. எவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர். எத்தனை தன்னடக்கத்துடன் பெரியவர்களிடம் பேசினார். தன்னிடம் பேசும்போது சிரிப்பும் குறும்புமாக இருந்த அவன் முகம் அவள் மனதை விட்டு அகல மறுத்தது.
இப்போது அவள் மனதில் நெருடல் இல்லை. மறுநாள் மனம் நிறைய சந்தோஷத்துடன் மணவறை ஏறினாள் நிவேதா.
நந்தினிநாதன் |
|
|
More
கடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு பாவம் பரந்தாமன் வீசாக் காதல்
|
|
|
|
|
|
|