Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
முன்னோடி
ஈ.வே.ரா எனும் பெரியார்
- மதுசூதனன் தெ.|செப்டம்பர் 2003|
Share:
Click Here Enlargeஇருபதாம் நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஓர் நீண்ட தொடர்ச்சியை பேணிக்கொண்டு வந்த ஒரு நபர் ஈ.வே.ரா. தமிழ் பேசும் பகுதிகளில் நீண்டகாலமாக தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்தும் ஏதேனும் ஓர் இயக்கத்தின் தலைமையில் இருந்தவர் எனலாம். அவர் இறப்புக்குப் பின்னரும் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு இயக்கத்தில் அவரது தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பெரியாரின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் பெரியார் குறித்த ஒரே மாதிரியான பிப்பத்தையே கட்டமைக்கின்றனர். அதாவது நாத்திகர், பார்ப்பன எதிர்ப்பாளர், இட ஒதுக்கீட்டிற்காகவும் தனிநாட்டிற்காகவும் போராடியவர், பெண்விடுதலை பேசியவர் என்பவைதான் இந்த பிம்பத்தின் மூலம் வெளிப்படும் பெரியாரின் பரிமாணங்கள். இதுவரையான விவாதங்களும் சர்ச்சைகளும் இந்த அம்சங்களில் மட்டுமே சுருங்கிவிடுகின்றன. அல்லது சுருக்கப்பட்டுவிட்டன.

பெரியார் உருவான சூழலை, அவர் தீவிரமாக இயக்கிய தமிழ்ச்சூழலை பின்னோக்கில் பார்க்கும்போது பெரியாரை அவ்வளவு எளிதாக மேற்குறித்த அம்சங்களுக்குள் மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் கன்னட தேசத்திலிருந்து தமிழ்நாட்டில் குடியேறிய கன்னட பலிஜா நாயுடு வகுப்பினர் 'நாயக்கர்' பட்டப் பெயர்பூண்டு குடியேறிய இடத்தையே தாய் நாடாகக் கருதி வாழ்ந்து வந்தனர். இம்மாதிரி குடும்பத்தில் வந்தவர்தான் வேங்கடப்ப நாயக்கர். இவர் ஈரோடு நகரத்தில் வாழ்ந்து வந்தார். சிறுவயதிலேயே ரொம்பவும் சிரமப்பட்டு படிப்படியாக வாழ்க்கையின் உயரத்துக்கு வந்தவர். சிறந்த வியாபாரியாக எல்லோராலும் பாராட்டப்படும் நபராக வளர்ந்தார். இவரது மனைவி சின்னத்தாய் அம்மாள். இவர்களுக்கு மகனாக 1879 செப் 17இல் பெரியார் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஈ.வே. ராமசாமி. இவருக்கு ஓர் அண்ணன் மற்றும் இரண்டு சகோதரிகள் உடன்பிறந்தோர்.

திண்ணைப் பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அங்கு படிக்க வந்த பலதரப்பட்ட மாணவர்களுடனும் சாதிபேதமின்றி சகஜமாக பழகி வந்தார். மற்ற சாதிப் பையன்களுடன் சேர்ந்து விளையாடுவதை இவர் நிறுத்ததாதல், பெற்றோரின் தண்டனைகளும் நிறுத்தப்படவில்லை. எதையும் சகித்துக் கொள்ளும் மனவலிமையை சிறுவயது முதல் வளர்த்துக் கொண்டார். ஓருமுறை பிற்காலத்தில் சிறுவயது காலத்தை இவ்வாறு நினைவு படுத்தினார். "காலில் விலங்கு இடப்பட்டேன். ஒருதடவை பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டேன். இரு தோள்களிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்து கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாட போய் விடுவேன்''

12 வயதிலிருந்து 19 வயதுக்குள் அவரிடம் பகுத்தறிவுச் சிந்தனை தூண்டிவிடப்பட்டு வளர்ந்து வந்தது.. ஈ.வே.ரா சிந்தனையில் நாத்திகக் கொள்கை படிப்படியாக உருப்பெறத் தொடங்கியது. தந்தையின் வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார். தனது திறமையால் வியாபாரத்தில் நன்கு தேர்ச்சி பெற்றார். தனியே வியாபாரத்தை கவனித்து அதைப் பெருக்க ஆரம்பித்தார். அவரது மாமன் மகள் நாகம்மாளை திருமணம் செய்துக் கொண்டார்.

தனது 25வது வயதில் ''தந்தையிடம் கோபித்துக் கொண்டு துறவறம் மேற் கொண்டார். காசியில் சில காலம் வாழ்ந்தார். இந்த வாழ்வு அவரது சிந்தனையில் பகுத்தறிவில் பலவித மாறுதல்களை ஏற்படுத்தியது. புராண இதிகாசங்களை ஆழ்ந்து படிக்கவும் விவாதத்தில் ஈடுபடவும் அவருக்கு கற்றுக் கொடுத்தது. பின்னர் ஒருவாறு வீடு திரும்பினார்.

முற்றிலும் வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். 1905-1919 வரையிலான காலம் ஈ.வே.ராவுக்கு 'வர்த்தகம்' சமூக ஊழியர் என்ற தகுதிகளை வழங்கியது. பல்வேறு பதவிகளும் பொறுப்புகளும் அவரைத் தேடி வரத்தொடங்கின. ஈரோட்டில் ஈ.வே.ரா முக்கியமான நபராக உயர்ந்தார், வளர்ந்தார். நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 24 பதவிகளில் ஈ.வே.ரா முக்கிய பொறுப்புகளில் இருந்தார். வர்த்தகம் பொதுத் தொண்டு இவற்றின் மூலம் ஈ.வே.ரா ஆக்கபூர்வமான தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.

காங்கிரஸ் கொள்கையில் படிப்படியாக ஆர்வம் கொண்டார். 1914ஆம் ஆண்டிலிருந்து ஈ.வே.ரா ஈரோட்டிலும் சென்னையிலும் காங்கிரஸ் கூட்டங்களில் பேசினார். சில கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். இதே நேரம் நீதிக் கட்சியினருடன் கூட ¦ருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். அக்கால முக்கிய மான தலைவர்கள் அனைவருடனும் நெருங்கி பழகி வந்தார். பிரமாணர் x பிரமாணரல்லாதார் என்ற சிந்தனை நீதிக்கட்சியினரால் ஆழமாகவே அன்று முன்வைக்கப்பட்டது. இது ஒரு கோரிக்கையாகவும் சிந்தனையாகவுமே இயங்கத் தொடங்கியது.

1919ஆம் ஆண்டில் சென்னை மாகாண சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் தலைவராக ஈ.வே.ரா செயல்பட்டார். மேலும் தேசிய அரசியலிலும் முக்கியமான நிகழ்வுகள் அன்றைய காலக்கட்டத்தில் நடைபெறத் துவங்கின. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. இது மக்களிடையே பலத்த கிளர்ச்சியை உருவாக்கியது. ஈ.வே.ரா ஈரோடு நகரசபை தலைவர் பதவி உட்பட 29 பதவிப் பொறுப்புகளிலிருந்து இராஜினாமா செய்தார். அதே போன்று சேலம் நகரசபைத் தலைவர் பொறுப்பை ராஜாஜியும் ராஜினாமா செய்தார்.

ஈ.வே.ரா காங்கிரசில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கினார். காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். தனது ஆடம்பர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு காந்தி பக்தராக மாறினார். கதராடை அணியத் தொடங்கினார். ஈ.வே.ரா குடும்பமே சமூக சேவைக் குடும்பமாக மாறியது. 1920ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வே.ரா கலந்து கொண்டார். இங்கு தான் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் முடிவை கிராம மட்டம் வரை கொண்டு செல்ல தீவிரமாக இறங்கினார். மேலும் கள்ளுகடை மறியலிலும் தீவிரமாக பங்குக் கொண்டார். ஒருமாத சிறைத் தண்டனையும் பெற்றார்.

இதன்பிறகு ஈ.வே.ரா தீவிர சமூக அரசியல் செயற்பாட்டாளராக மாறத் தொடங்கினார். அதற்கேற்ற மனவுறுதியையும் சிந்தனையும் வாய்க்கப் பெற்றவராக விளங்கினார். காந்திஜி , ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் பழகி தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தார். 1924ஆம் ஆண்டில் ஈ.வே.ரா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது ஈரோட்டு இல்லத்தை அலுவலகமாக்கிச் செயற்பட்டார். இதனால் ஈரோடு அரசியலில் முக்கிய இடம் பெறத் தொடங்கியது.

1924 மேயில் திருவனந்தபுரம் வைக்கம் நகரின் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் நடமாடவோ அவற்றை கடந்து செல்லவோ உரிமை கிடையாது. இதற்கு எதிராக இந்த மக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் ஈ.வே.ரா கலந்து கொண்டார். இந்தப் போராட்டம் வேகம் கொண்டது. ஈ.வே.ரா கைது செய்யப்பட்டார். இந்த வைக்கம் போராட்டம் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே உரிமை களுக்காக போராட வேண்டுமென்ற வேட்கையை வெளிப்படுத்தியது. இந்தப் போராட்டத்தில் ஈ.வே.ரா கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு இருந்த சமூகநீதி சமூக சமத்துவம் பற்றிய விருப்பமும் போராட்ட மனவுறுதியும் செயலாக வெளிப்பட்டது.

வ.வே.சு. ஐயர் காந்திய வழிப்படி நெல்லை மாவட்டம் சேரமாதேவியில் குருகுலம் நடத்தி வந்தார். இங்கு பிராமணப்பிள்ளைகளுக்கு தனிச்சாப்பாடு, பாயசம் என்றும் பிராமணர் அல்லாத பிள்ளைகளுக்கு சோறும், சாப்பாடும் மட்டும்தான் என்று தனிதனியாக பந்தி பரிமாறப்பட்டு வந்தது. இது ஒரு பெரும் பிரச்சனையாக காங்கிரசில் விவாதிக்கப்பட்டது.

வவேசு ஐயர் இப்பிரச்சனையில் தனது நிலையில் உறுதியாக இருந்தார். பாரபட்சம் காட்டுவது நியாயம் என்றே கருதிவந்தார். ஈ.வே.ரா, திருவிக உள்ளிட்ட தலைவர்கள் குருகுலத்தில் நடைபெறும் இந்த இழிச்செயல் கண்டு கொதித்தார்கள். இது வெறுமனே சமபந்தி போஜன விஷயம் மட்டுமல்ல, இது ஒரு சாதி இன்னொரு சாதியைவிட உயர்ந்ததென்ற பிரச்சனை. இந்த வேறுபாடு ஒழிய வேண்டும். பிராமணர், பிரமாணரல்லாத வரிடையே ஏற்றத்தாழ்வுகள் நீங்கினால் போதாது, அவர்களை பஞ்சமர்களும் தங்களைச் சமமானவர்கள் என்று ஏற்க வேண்டும் என ஈ.வே.ரா வாதிட்டார். ஆனால் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் இப்பிரச்சனையில் கொள்கை சார்ந்து செயற்பட பின்வாங்கியது.

இந்த குருகுலப் பிரச்சனை ஈ.வே.ரா வாழ்க்கையிலும் சிந்தனையிலும் அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் பாதையிலும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஈ.வே.ரா விலகிச் செல்லும் போக்கை துரிதப்படுத்தியது. மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்து வமும் ஓங்கி வளர வேண்டும். அதற்குத்தான் பாடுபட வேண்டுமென்ற வேட்கை அவரை உந்தித் தள்ளியது. வைக்கம் பேராட்டம், குருகுலப் போராட்டம் ஈ.வே.ராவின் சிந்தனையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.

தமிழ்நாட்டில் தன் கருத்துகளை வெளியிடுவதற்காக 1925 முதல் 'குடியரசு' என்ற பத்திரிகையை தொடங்கினார். 1926ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியிட்ட குடியரசு இதழில் ஈ.வே.ரா எழுதிய சுயராஜ்யமா? சுயமரியாதையா? என்னும் தலையங்கம் அவருடைய கொள்கைப் பிரகடன மாகக் கருதலாம். இதையடுத்து சுயமரியாதை இயக்கம் தொடங்கினார். 1927ஆம் ஆண்டில் 'நாயக்கர்' என்ற சாதிப்பெயரை ஈ.வே.ராமசாமி கைவிட்டதிலிருந்து ஈ.வே.ரா என்றே அழைக்கப்பட்டார். 1928லிருந்து சுயமரியாதைப் பிரச்சாரத்தில் இறங்கினார்.
"ஈ.வே.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாத தாலும் பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்'' என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்து சமுதாயத் தொண்டாற்ற வந்தவர்.

''நமது நாடு இன்றைக்கும் சாதி அமைப்பின் கீழ் இருந்து வருகிறது. அதுபோலவே நமது நாடு இன்னும் மத அமைப்பின் கீழ் இருந்து வருகிறது. அதுபோலவே நமது நாடு இன்னும் பொருளாதார பேத அமைப்பிலேயே இருந்து வருகிறது.

இதையெல்லாம்விட மோசம் மிகமிக் கீழ்த்தரமான மூடநம்பிக்கை அமைப்பிலேயே நமதுநாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் மக்களுக்குப் போதிய கல்வி இல்லாத அமைப்பில், கல்வியிலும் பேதநிலை உள்ள கல்வி அமைப்பிலும் நமது நாடு இருந்து வருகிறது.

இவ்வளவு பேதநிலை அமைப்பு உள்ள நாட்டில் ஜனநாயகம் என்றால் இதன் பொருள் என்ன? நாட்டில் ஒரு பெரும் சூதாட்டம் நடந்து வருகிறது. அதில் வலுத்தவன் ஆட்சியாக நடந்து வருகிறது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்?''

இவ்வாறு 'சமுதாய மாற்றம்', 'விடுதலை, சுதந்திரம்' பற்றிய சிந்தனைகளை உரத்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் மக்களிடையே பெரும் மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கியது. சுயமரியாதை இயக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் அதுவைர ஏற்படுத்தாத தாக்கத்தை ஏற்படுத்தியது.

1926-30 இடையிலான காலம் ராமசாமியின் அரசியல் சாதிஒழிப்பு பற்றிய சிந்தனை இலட்சிய வடிவம் பெற்றது. 1931-1937காலக்கட்டம் அவரது வாழ்க்கையில் வேறுபட்ட பரிமாணம் பெற்றது எனலாம். 11 மாதங்கள் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதில் சோவியத் ரஷ்யாவின் அனுபவங்களையெல்லாம் உள் வாங்கிக் கொண்டு பொதுவுடைமைக் கொள்கையின்பால் தீவிர ஈர்ப்புக் கொண்டவ ராகவும் அவரது சிந்தன¨யிலும் செயற்பாட்டிலும் அதன் தாக்கத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

13.11.1938இல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ஈவெராவுக்கு 'பெரியார்' என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்கள். பெண்ணினத்தின் விடுதலைக் காக அவரளவு சிந்தித்த சிந்தனையாளர் வேறுயாரும் இருக்க முடியாது. தீவிர பெண்ணியவாதிக்குரிய உத்வேகம் கலகம் அவரிடம் அன்றே இருந்தது. பெண் ஏன் அடிமையானாள்? என்ற அறிவியல் பூர்வமான நூலை 1934ல் எழுதி வெளியிட்டார். 1930ல் சுயமரியாதை இயக்க மாநாட்டுக் துண்டறிக் கையில் தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று அழைக்கப்படுவோர் சிறப்பாக இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று துணிவாக அழைப்பு விடுத்தவர். மேலும் கர்ப்பப் பைகளை எடுக்கச்சொல்லி பெண்களுக்கு அன்றைக்கே அறைகூவல்விடுத்த தீவிர பெண்ணிய வாதியாகவும் இருந்துள்ளார்.

1938இல் ராஜாஜி தலைமையில் நடந்த காங்கிரஸ் அரசு இந்தியை கட்டாய பாடமாக்க அதனை எதிர்த்து பெரியதொரு கிளர்ச்சியினை நடத்தினார்.. கிளர்ச்சியின் இறுதியில் தனிநாடுக் கோரிக்கையும் எழுகிறது. இரண்டாண்டு சிறைத்தண்டனை பெற்று 1939 டிசம்பரில் விடுதலை பெறுகிறார். தொடர்ந்து திராவிடக் கோரிக்கையை வலியுறுத்துகிறார். நீதிக்கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவரது செல்வாக்கால் சிறிது காலம் நீதிக்கட்சி உயிர்வாழ்கிறது. ஆனாலும் படிப்டியாக நீதிக்கட்சி தனது அடையாளத்தை இழக்கத் தொடங்குகிறது. இந்நிலையில் 1944இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெறுகிறது.

1947 சுதந்திரதினத்தை துக்கநாளாக அனுசரிக்கும்படி ஈவெரா கோருகிறார். ஆனால் இந்தக் கருத்தில் அண்ணாதுரை உடன்பாடு கொள்ளவில்லை. அவர் சுதந்திரத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டார். 1949ல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாவின் தலைமையில் திமுக தோன்றுகிறது. 1950இல் வகுப்புரிமையை வலியுறுத்தி ஈவேரா இயக்கம் நடத்துகிறார். 1952ல் ராஜாஜி தலைமையிலான ஆட்சி வருகிறது. அப்போது ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக்கல்வித்திட்டத்தை எதிர்த்து கடுமையான கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபடுகிறார். 1954ல் ராஜாஜி பதவி விலக வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகிறது.

1954ல் காமராஜர் முதல்வர் பொறுப்பை ஏற்கிறார். அப்போது ஈவெரா காமராஜருக்கும் காங்கிரசுக்கும் ஆதரவு தருகிறார். 1956ல் மொழிவாரி மாநில உருவாக்கம் நடைபெற்றமை யால் தமிழ்நாடே திராவிட நாடு என்கிற நிலைக்குச் செல்கிறார். தொடர்ந்து 1957ல் அரசியல் நிர்ணய சட்டத்தை எரிக்கும் போராட்டம் நடத்தி சிறைச்சென்றார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார். தொடர்ந்து பல்வேறு கிளர்ச்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு வந்தார். ஆனாலும் ஈவெரா 24.12.1973இல் மரணமுற்றார்.

பெரியாரது வாழ்வனுபவங்களும் அரசியல் செயற்பாடுகளும் எப்போதும் கலகத்தன்மைக் கொண்டதாகவே உள்ளது. ஆட்சி அதிகாரப் பதவிகளில் அமர்ந்து கொண்டு அயோக்கிய வானாக வாழ்வதை அடியோடு வெறுத்தார். அதனால் தான் அவர் கடைசி வரை தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. அனைத்து மூடநம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவு கொண்ட விளக்கம் கொடுத்தார். விடுதலையின் விரிதளம் நோக்கிய செயற்பாட்டுக்கு எப்போதும் தீவிரமாகவும் துணிவாகவும் உழைக்க வேண்டுமென்பதில் உறதியாகவும் தெளிவாகவும் இருந்தார்.

திராவிட அரசியல் வழிவந்த தலைவர்களுள் பெரியார் அவரது வாழ்வனுபவத்தாலும் சொல்-செயல் இரண்டாலும்கூட மற்றையவர்களில் இருந்து வேறுபட்டவராகவே இருந்துள்ளார். மொழிப்பற்று, நாட்டுப்பற்று, மதப்பற்று, சாதிப்பற்று ஆகியவற்றை விட்டொழிக்கச் சொல்லும் நபராகவே இருந்துள்ளார். விடுதலைக்கு மிகவும் அவசியமான பற்றாக ஒன்றே ஒன்று மட்டும் குறிப்பிடுகிறார். ''உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானம் தான் உண்மையாய் வேண்டும்'' என்று அவர் குறிப்பிடுவதில் இருந்து அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பது புலப்படும்.

தமிழ்நாட்டு சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஈவெ.ராமசாமி என்ற பெரியாரின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் பின்னோக்கிப் பார்க்கும் போது அவர் எளிதாக எந்தவொரு குறித்த வரையறைக்குள்ளும் சிறைபிடிக்கக் கூடியவர் அல்லர் என்பது நிதர்சனமான உண்மை.

தெ. மதுசூதனன்
Share: 
© Copyright 2020 Tamilonline