மஹாத்மா மஹாத்மா தான் ஏண்டா வருது தீபாவளி கீதா பென்னட் பக்கம் தமிழில் எழுதுவது வேடிக்கையும் கூட! இவரைத் தெரிந்துகொள்ளுங்கள் : 'Mostly Tamil' சுதா அமெரிக்காவில் ஒய்.ஜி. மகேந்திரன் மக்கள் நல மையம்: ஒரு வேண்டுகோள்
|
|
|
அக்டோபர் 11 இந்தியப் புகையிலை எதிர்ப்பு தினம்
கெட்ட பழக்கங்கள் விருந்தாளி மாதிரி நுழைந்து கடைசியில் எஜமானன் மாதிரி ஆகிவிடும். அதுகூடப் பரவாயில்லை. சில நேரங்களில் அவை சர்வாதிகாரியாகிவிடும் அபாயமும் உண்டு.
அடிமை வாழ்க்கை எவ்வளவு மோசமானது என்று தெரிந்தும் கூட பலர் பழக்கங்களுக்கு அடிமையாகி அல்லல்படுகின்றனர். சிலர் அதுவே நல்வாழ்க்கை என்று நம்பி விடுகின்றனர். மனிதர்களை அதிக அளவில் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பழக்கங்களில் முக்கியமானது புகைப் பழக்கம் - புகையிலை போதைப் பழக்கம்.
புகையிலையில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நான்காயிரம் வேதிப் பொருள்கள் இருக்கின்றன. அதில் தயாராகும் சிகரெட் புகையில் 4 ஆயிரம் விஷ வாயுக்கள் உள்ளன என்கின்றது மருத்துவ ஆய்வு அறிக்கைகள்.
இந்தத் தகவல் பத்திரிகைகளில், தகவல் தொடர்புச் சாதனங்களில் வெளிவந்து கொண்டுதானிருக்கிறது. புகை பிடிப்பவர்களும் அதைக் காணத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் அடிமை விலங்கை ஒடிக்க திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்.
சிகரெட் பெட்டியில் 'புகை பிடிப்பது உடலுக்கு தீங்கானது' என்று சிறிய அளவில் எழுதியிருக்கிறது. ஆனால் அதை யார் தேடிப் படிக்கிறார்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் 'மேட் பார் ஈச் அதர்' விளம்பரமும், முழுமையாகத் திருப்தி தருவது, களைப்பைப் போக்கி உற்சாகம் அளிப்பது, தேன் துளி மென்மை (ஹனி டிராப் ஸ்மூத்) போன்ற பிரம்மாண்ட விளம்பரங்கள்தான்.
ஆனால் பெரிய விளம்பரங்கள் எல்லாம் பொய். சிறிய அளவில் பெட்டியின் கடைசி ஓரத்தில் எழுதப்பட்ட வாசகம் மட்டும்தான் உண்மை.
புகையாக மட்டுமல்ல புகையிலையை எந்த வகையில் பயன்படுத்தினாலும் தீமைதான், உடலுக்குக் கேடுதான். புகையிலையைப் பயன்படுத்தும் ரசனைகள் மாறலாம். ஆனால் அதனால் விளையும் தீமையில் பெரிதாக வித்தியாசமில்லை. தஞ்சாவூர் வெற்றிலைச் செல்லத்தில் (பெட்டியில்) வாசனைப் பன்னீர் புகையிலையாக உட்கார்ந்திருக்கும் புகையிலை, ராஜஸ்தானில் 'பங்' எனப்படும் போதைக் கலவையிலும் உட்கார்ந்திருக்கிறது. ஹ¤க்கா, ஜர்தா, பான் பீடா எல்லாம் புகையிலையின் 'கிக்' சமாச்சார வேடங்கள்தான்.
இன்று உலகம் பூராவும் வேர் விட்டு நிற்கும் புகையிலை எனும் நச்சுக் கொல்லியின் பூர்வீகம் அமெரிக்காதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். கொலம்பஸ், அமெரிக்காவைக் கண்டுபிடிப் பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்குள்ள பழங்குடியினர் புகையிலை உபயோகிக்கும் பழக்கத்தைக் கைக் கொண்டிருந்தனராம்.
அமெரிக்காவைக் கண்டு திரும்பிய கொலம்பஸ் தன்னோடு புகையிலை விதைகளையும் ஐரோப்பாவிற்குக் கொண்டு வந்தார்.
1560இல் ஜேம்ஸ் நிகோட் என்பவர் நிகோடியானா எனும் தாவரயியல் பெயர் சூட்டி அதை ஃபிரான்சிலும் அறிமுகப்படுத்தினார். இதிலிருந்தே புகையிலைப் பழக்கம் பல நூற்றாண்டுகளாக மனித குலத்தை ஆட்டிப் படைத்து வருகிறது என்பது புலனாகும்.
ஆரம்பத்தில் புகையிலையில் மருந்து அம்சங்கள் இருந்ததாகவே நம்பப்பட்டது. ஓய்வெடுக்கும்போது புகை பிடிப்பது பழக்கத்திலிருந்தது. 1960இல்தான் முதன் முதலில் அதிகாரப்பூர்வமாகப் புகையிலையின் தீய விளைவுகளைப் பற்றி அமெரிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. 1988இல் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல், "புகை பிடிப்பது நம்மை அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. அது கொகேய்ன், ஹெராயின் போலவே கொடுமை யானது" என்று கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார்.
தொடர்ந்து புகையிலையின் தீமைகள் குறித்து மருத்துவ உலகம் ஆய்வு அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் 1999- ஆம் ஆண்டை புகைப்பதை நிறுத்துவதற்கான ஆண்டாக அறிவித்தது. 'நீங்கள் புகைப்பதை நிறுத்தத் தேதி குறித்து விட்டீர்களா?' என்றும் கூட விளம்பரங்கள் செய்தது.
புகையிலைக்கு எதிரான விளம்பரங்களை விட புகைக்கத் தூண்டும் விளம்பரங்கள்தான் மக்களை எளிதில் சென்றடைந்து விடுகின்றன.
அதுவும் அண்மைக் காலமாக இளைஞர்களை இப்பழக்கம் அதிகம் பிடித்து ஆட்டுகிறது. அது ஒரு கெளரவம் அல்லது ஆண்மையைக் காட்டும் விஷயமாகப் பரவுவதுதான் பெரும் சோகம். டெல்லி, மும்பை முதலிய இடங்களில் மட்டுமின்றிச் சென்னையிலும் பெண்கள் புகைபிடிப்பது நாகரிகமாகி வருகிறது. கருவுற்ற பெண் புகைபிடித்தால் கருவிலிருக்கும் சிசுவுக்கு அது அளவற்ற தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானம் சொல்கிறது.
உதட்டின் ஓரம் இடம் பிடிக்கும் அது உடலைக் கெடுத்து குட்டிச் சுவராக்கிவிடுகிறது. உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கிற ஒரு பொருளிருக்கிறது என்றால் அது புகையிலை தான். வாய், உணவுக் குழாய், தொண்டை, நுரையீரல், கணையம் இங்கெல்லாம் புற்று நோய் ஏற்படுத்தக்கூடிய சக்தி புகையிலைக்கு உண்டு. ஆஸ்துமா சம்பந்தப்பட்ட (OPD) எனப்படும் ஒரு நோய்க்கும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும் டி.ஏ.ஓ. (TAO - Thrombo Angitis Obliteran) என்ற நோய்க்கும் மூல காரணம் புகையிலைதான் என்கின்றனர் மருத்துவ அறிஞர்கள். |
|
டி.ஏ.ஓ.வினால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிது தூரம் நடந்தவுடன் கால் வலி தாங்காமல் உட்கார்ந்து விடுவார்கள். இவர்களுக்கு நோய் முற்றிவிட்டதென்றால் காலையே எடுக்க வேண்டியதுதான். இந்த நிலையை எட்டி விட்ட சிகரெட் அடிமையிடம் டாக்டர் கேட்பது என்ன தெரியுமா? உனக்குக் கால் வேண்டுமா? சிகரெட் வேண்டுமா? என்பதுதான்.
இவை மட்டுமல்ல; மாரடைப்பு நோய்களுக்கு வித்திடும் விஷயங்களில் முதலிடம் பிடித்திருப்பது புகை பிடிக்கும் பழக்கம்தான். புகையிலையிலிருந்து வெளிவரும் நிகோடின் என்ற ரசாயனம் மற்ற எந்தக் கொடிய நஞ்சுக்கும் சளைத்தது அல்ல. அது ஆரம்பத்தில் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்துகிறது என்றாலும், அதனாலேயே அது நம்மை அடிமை போல் நடத்துகிறது. ரத்தத்தில் நிகோடின் அளவு குறைந்தவுடன் நிகோடினுக்கான தாகம் அதிகரிக்கிறது. அடுத்த சிகரெட்டிற்காக புகைப்பவர்கள் படும்பாடு இருக்கிறதே அது கொடுமையானது. முக்கியமானவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அது எத்தனை தலை போகிற காரணமாயிருந்தாலும் வெளியே ஓடி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து விட உடலும் மனமும் பரபரக்கிறது. பல சமயங்களில் ஏதாவது சாக்குச் சொல்லிவிட்டு ஓடி விடுகிறோம். முடியாத பட்சத்தில் பேச்சை முறித்துக் கொண்டாவது ஓட முயல்கிறோம்.
இப்படி எல்லாம் பாடாய்ப்படுத்தும் நிகோடின் அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்து தொலைத்தால் என்ன?
நிகோடின்தான் இதயத் துடிப்பைச் சீராக இயங்கவிடாமல் அதிகரிக்கச் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் கூட்டி பதற்றத்திற்குள்ளாக்குகிறது. இதயம், நுரையீரல் கோளாறுகளுக்குக் காரணமாகிறது. புகை பிடிக்கும் பெண்கள் மலட்டுத் தன்மையை அடைகிறார்கள், கருச்சிதைவிற்கும் ஆளாகிறார்கள், பிறக்கும் குழந்தைகளின் பிறவிக் கோளாறுகளுக்கும் புகையிலை காரணமாகிறது. நிகோடின் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைப்பதால் தோலுக்கு வரும் ரத்த ஓட்டம் குறைந்து சருமம் கெடுகிறது. அதனால் இளமையிலேயே முதுமைத் தோற்றம் வருகிறது என்றெல்லாம் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆனாலும், புகையும் ஆறாவது விரல்காரர்கள் திருந்தியபாடில்லை. ''சரி அய்யா... நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். இத்தனை ஆண்டு காலம் புகை அடிமையாக இருந்துவிட்டேன். இனி நிறுத்தி என்ன பயன்? கெட்டது கெட்டதுதானே" என்கிறவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை. எப்போது வேண்டுமென்றாலும், இப்போதே வேண்டுமென்றாலும் புகைப்பதை நிறுத்தி விடலாம். நடு வயதில் சிகரெட்டை நிறுத்தினாலும் நன்மைதான். அதனால் ஆயுள் நீடிக்கும் என்கிறது ஒரு ஆய்வின் முடிவு. 35 வயதிற்குள் சிகரெட்டை நிறுத்தியவர்களின் வாழ்நாள், சிகரெட்டையே தொடாதவர்களின் வாழ்நாளுக்குக் கிட்டத்தட்ட சமமாகயிருக்கிறது. இது ஆறுதல் வார்த்தையல்ல. ஆதார பூர்வமான நிரூபணம்.
சிகரெட், புகைப்பவர்களை 75 சதவீதம் பாதிக்கிறது என்றால் உள்ளே இழுத்து வெளியே விடும் புகையைச் சுவாசிக்க நேரும் ஒரு பாவமும் அறியாத அப்பாவிகளையும் 25 சதவீதம் பாதித்து விடுகிறது. அதனால்தான் அயல்நாடுகள் பலவற்றில் பொது இடத்தில் புகை பிடிக்கத் தடை உள்ளது. இந்தியாவில் கேரள மாநில அரசு பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு மாநில அரசும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை விதிக்கலாமா என்று யோசித்தது. யோசித்துக் கொண்டேயிருக்கிறது.
பட்டென சிகரெட்டை விட முடியாதவர்கள் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, கடைசியாகக் கைவிடலாம். முடியவே முடியாது என்று அடம்பிடிக்கும் நிகோடின் அடிமைகளுக்கு நிகோடின் பட்டைகள் வந்துள்ளன. புகைப்பதை விட்டுப் பட்டையை உடலில் ஒட்டிக் கொள்ளலாம். இதனால்¢ன் நிகோடின் தேவையை நிறைவு செய்ய முடியும். இது சிகரெட்டை விடக் கொஞ்சம் ஆபத்து குறைவானது. பட்டை பழக்கத்திலிருந்து விடுதலையாவதும் எளிது.
சிகரெட்டை விடுகிறேன் பேர்வழி என்று வேறு போதைப் பொருள் பழக்கத்திற்கு அதுவும் பான் பராக், மாவா, கைனி புகையிலை, வெற்றிலை பாக்கு என்ற எதற்காவது தாவுவதும் தவறிலும் தவறு. புகையிலை எந்த ரூபத்தில் வந்தாலும் விஷம்தான்.
எதையும் வைராக்கியத்தால் சாதிக்க முடியும். சிகரெட், புகையிலை பழக்கத்தை விடுவது உள்பட... எதையும் சாதிக்க முடியும். உளப்பூர்வமாக உறுதி செய்யுங்கள், உங்கள் ரோஜா உதட்டை கரியாக்குவதில்லை என்று; ஆரோக்கியம் உங்களை முத்தமிடும்.
ரா. சுந்தரமூர்த்தி |
|
|
More
மஹாத்மா மஹாத்மா தான் ஏண்டா வருது தீபாவளி கீதா பென்னட் பக்கம் தமிழில் எழுதுவது வேடிக்கையும் கூட! இவரைத் தெரிந்துகொள்ளுங்கள் : 'Mostly Tamil' சுதா அமெரிக்காவில் ஒய்.ஜி. மகேந்திரன் மக்கள் நல மையம்: ஒரு வேண்டுகோள்
|
|
|
|
|
|
|